Friday, September 11, 2015

தடை விதிக்கும் மூன்று மனநிலைகள்

தடை விதிக்கும் மூன்று மனநிலைகள்

ஆழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை மேலே வர விடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் மனதில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மூன்றும் உள்ள வரை ஆழ்மன சக்திகள் கைகூட வாய்ப்பேயில்லை. அவை -
  1. அவநம்பிக்கை
  2. அவசரம்
  3. அமைதியின்மை
அவநம்பிக்கை

அவநம்பிக்கையிலும் இரு வகைகள் உண்டு. ஒன்று ஆழ்மன சக்திகள் இருப்பது உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தால் ஏற்படுவது. மாயாஜாலக் கதைகளில் வருவது போலல்லவா இருக்கிறது, இது நிஜமாக இருக்க சாத்தியமில்லையே என்ற எண்ணத்தால் ஏற்படுவது. இந்த அவநம்பிக்கை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பல அற்புத சக்தியாளர்களைப் பற்றியும், அவர்களை வைத்தும், தனித்தும் செய்த ஆராய்ச்சிகள் பற்றியும் இவ்வளவு விவரமாகக் குறிப்பிடப் பட்டன. குறிப்பாக எட்கார் கேஸ், நினா குலாகினா, லியனாரோ பைப்பர் போன்றவர்கள் எல்லாம் எவ்வித பரிசோதனைக்கும் தயாராக இருந்தவர்கள் என்பதைக் கண்டோம். அமெரிக்கா, ரஷியா உட்படப் பலநாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. மேலும் இத்தொடரில் சொல்லப்படாத எத்தனையோ ஆழ்மன சக்தியாளர்கள் எல்லாக் காலத்திலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளிலும், பல காலமாக, ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாத பல மனிதர்கள் சேர்ந்து கூட்டு சதி செய்திருக்கிறார்கள் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும்.

என்ன தான் சொன்னாலும் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லையே என்று சிலர் சொல்லலாம். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போல நமக்குத் தோன்றுகிறதா? இல்லையே. பூமியில் வசிக்கும் நமக்கு பூமி சுற்றுவது சிறிதளவாவது தெரியவேண்டாமா? பூமி ஸ்திரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. நம் பார்வைக்கு சூரியன் அல்லவா பூமியைச் சுற்றுவதாகத் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்கில் போன சூரியன் சுற்றி வந்து மறுபடியும் கிழக்கில் அல்லவா எட்டிப்பர்க்கிறான். பள்ளிக் கூடத்திற்கே செல்லாதவன், எந்த விஞ்ஞானமும் அறியாதவன் அப்படி அடித்து அல்லவா சொல்லுவான். படித்ததை மறந்து விட்டுப் பார்த்தால் அவன் சொல்வது சரி என்றல்லவா நமக்கும் தோன்றும். எனவே புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதாலும், நாம் ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் என்பதாலும் ஆழ்மன சக்திகள் உண்மையிலேயே உள்ளதா என்று அவநம்பிக்கை கொள்ளவே தேவையில்லை.

இரண்டாவது வகை அவநம்பிக்கை நம் மீதே ஏற்படலாம். இதெல்லாம் பிரம்மாண்டமான சக்திகளாகத் தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்கு இதெல்லாம் வருமா? என்று தோன்றலாம். ஏகப்பட்ட பிரச்னைகள், பலவீனங்கள் எல்லாம் நம்மிடம் நிறைந்திருந்திருக்கிறது நமக்கல்லவா தெரியும். எத்தனையோ பலவீனங்களை அடுத்தவர் அறியாமல் நமக்குள் மறைத்து வைத்திருந்து அவற்றுடன் போராடி வரும் அவஸ்தையை நாமல்லவா அறிவோம். அப்படியிருக்கையில் ஆழ்மன சக்திகள் எல்லாம் நமக்கு கைகூடுமா என்ற அவநம்பிக்கை நமக்குள் எழலாம்.

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். படைப்பாளியின் விசேஷ குணங்களை அவன் படைப்பில் பார்க்காமல் வேறெங்கே பார்க்க முடியும்? நம் எல்லா பிரச்னைகளும் நமது இயல்பான தெய்வாம்சத்தை மறந்து சில்லறை ஆசைகளுடனும், விஷயங்களுடனும் நம்மை இணைத்து அவற்றையே நம் அடையாளமாகக் காண்பது தான். மேல் மனக் குழப்பங்களை வைத்து எடை போடாமல் ஆழமாகச் சென்றால் தான் நம் உண்மையான சக்திகளை உணர முடியும். அடிக்கடி ஆழமாக நமக்குள் போக முடிந்தால், அந்த சக்திகளை ஒரு வினாடியாவது தரிசித்தால் நமக்கு ஒரு போதும் சந்தேகம் வராது. (இது குறித்து பல நூறு பக்கங்கள் எழுதலாம் என்றாலும் தற்போதைய தலைப்பிற்கு இந்த அவநம்பிக்கை தேவையில்லை என்பது உணர்ந்தால் போதுமானது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்).

அவசரம்

அடுத்த பெரும் தடை அவசரம். இது இன்றைய காலத்தில் மிக நியாயமானது என்று நாம் நினைக்கும் சாபக்கேடு. இயற்கையைப் பொறுத்த வரை எதிலும் எப்போதும் அவசரம் கிடையாது. அவசரப்படுத்தினால் நல்ல இயற்கையான விளைவுகள் கிடைக்காது. ஒரு விதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும். விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு அரை மணி நேரத்தில் ”தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடி வரவில்லை, என்ன ஆயிற்று?” என்று தோண்டிப்பார்ப்பதோ, இந்த முயற்சியே வியர்த்தம் என்று அடுத்த நாள் முதல் தண்ணீர் ஊற்ற மறுப்பதோ முட்டாள்தனம். அது போலத் தான் ஆழ்மன சக்தி வளர்த்தலும்.

ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா? இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால் நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.

அமைதியின்மை

மனதை முழுவதுமாக அமைதிப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சுலபமான செயல் அல்ல என்றாலும் அவ்வப்போது சிறிது நேரத்திற்காவது மனதை அமைதிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆழ்மனதில் இருந்து வரும் செய்திகளைக் கேட்க முற்படுகிற நேரத்தில் உள்ளே மற்ற இரைச்சல்கள் அதிகம் இருக்குமானால் நம்மால் எதையும் அறிய முடியாது.
நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு ஆகியவை இருக்குமானால் மனம் அமைதியடைய மறுக்கும். முதலில் என்னைக் கவனி, இதற்கு எதாவது செய் என்று அந்த உணர்ச்சிகள் கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்குமானால் எவ்வளவு முயன்றாலும் ஆழ்மன செய்திகளை அறிந்து கொள்ள முடியாது. ஆழ்மன சக்திகளை பயன்படுத்தவும் முடியும்.

நல்ல இசை, நல்ல இலக்கியம், நல்ல புத்தகங்கள், ஆன்மீகம், தியானம், இயற்கைக் காட்சிகள் போன்றவை மனதை ஓரளவு அமைதிப்படுத்த உதவலாம். அவரவர் தன்மைக்கு எது உதவுகிறதோ அதை உபயோகித்து மன அமைதி கொள்ளலாம். பயிற்சிகளின் போதும் சரி, ஆழ்மன சக்திகளின் போதும் சரி மனம் அமைதியாக இருப்பது மிக முக்கியம். பல ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆழ்மனசக்தி பெற்றவர்கள் கூட வெற்றிகரமான முடிவுகளைத் தரத் தவறும் தருணங்கள் அவர்கள் அமைதியிழந்த தருணங்களாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்த மூன்று தடைகளை முறியடித்து விட்டால் ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சூழ்நிலையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள்.

No comments:

Post a Comment