புதிய நூற்றாண்டின் நிர்வாக ஆளுமைகள் பிரித்து மேய்ந்து வருகிற கேள்வி, இந்தக் கேள்விதான். ஏன் தெரியுமா? ஓர் அலுவலகத்திலோ, ஒரு குடும்பத்திலோ, ஒரு தொழிற்சாலையிலோ முன்பெல்லாம் தவறு நேர்ந்தால் உடனே இரண்டு கட்சிகள் தோன்றிவிடும். “தவறு நிகழ்ந்தது ஏன்?” என்று குற்றம் சாட்டுகிற கட்சி. “தவறு நிகழ்ந்தது ஏன்?” என்று சமாதானம் சொல்கிற கட்சி.
இன்றைய நவீன நிர்வாகக் கோட்பாடுகள் இதற்கு மாற்றாக புதிய அணுகுமுறையை முன்வைக்கின்றன. வேலை செய்கிறபோது எத்தனை குழுக்களாகப் பிரிந்திருந்தாலும் சரி. ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால், குழுக்கள் தங்களின் வேலைகளையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு, ஒன்றுகூடி உட்கார்ந்து, எதனால் தவறு நிகழ்ந்தது? எங்கே – எப்படி – ஏன் – நிகழ்ந்தது? அதற்கு என்ன தீர்வு என்று யோசித்து, கூட்டாகப் பொறுப்பேற்று, கூட்டாக முடிவெடுத்து கூட்டாகத் தீர்வு நோக்கி நடைபோடுவதுதான் அந்தப் புத்தம்புதிய அம்சம்.
“எதனால் தவறுகள் நிகழ்கின்றன” என்ற கேள்வி எழுந்தவுடனேயே, அந்தக் கேள்வியால் குற்றவுணர்வு தூண்டப்படுவதோ, வீண் சமாதானங்களை வேகவேகமாய் உருவாக்குவதோ, குற்றம் சாட்டப் பயன்படுமே தவிர தீர்வுக்கு வழிவகுக்காது.
எங்கெல்லாம் இந்தக் கேள்வி திறந்த மனதுடன் எதிர்கொள்ளப்படுகின்றதோ அங்கெல்லாம் மிக நிச்சயமாகத் தீர்வுக்கு மட்டுமின்றி வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வாய்ப்பிருக்கிறது.
ஒரு தவறு நேர்கிறதென்று வைத்துக் கொள்வோம். அதுகுறித்த விவாதங்களையோ விமர்சனங்களையோ விரும்பாதவர்கள், “துரதிருஷ்டம்தான் காரணம்” என்று சமாதானம் சொல்கிறார்கள். ஆனால், உண்மையைக் கண்டறிவதில் அக்கறை உள்ளவர்கள், அது குறித்துத் தீர விசாரித்து, தவறான முடிவுகள் அல்லது தவறான நடவடிக்கைகள்தான் காரணம் என்று கண்டறிகிறார்கள். கண்டறிந்த சூட்டோடு தவறுகளைக் களையவும் முனைகிறார்கள். நிறுவனங்களிலோ, நிர்வாகங்களிலோ தவறுகள் ஏற்படுவதற்கென்று சில பொதுக்காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
தவறான தேர்வுகள்:
மிக வேகமாக வளர்ந்துவந்த நகை நிறுவனம் ஒன்று கலையுலக நிகழ்ச்சிகளுக்கும் நட்சத்திரங்களுக்கும் நிறைய செலவிட்டது. பிற்காலத்தில் அந்நிறுவனம் சரிவை சந்தித்த போது, கலையுலக ஈடுபாட்டில் விட்ட பணம்தான் காரணம் என்று பொதுமக்கள் பேசிக் கொண்டார்கள். உண்மையில், கலையுலகுக்கு செலவு செய்த பணம் பலமடங்கில் திரும்பக் கிடைத்தது. தங்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத புதிய தொழில் ஒன்றில் அவர்கள் பணத்தை முதலீடு செய்ததே சரிவுக்குக் காரணம் என்பது அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாலேயே பின்னர் தெரிவிக்கப்பட்டது.
தவறான கண்ணோட்டம்:
மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க நினைப்பவர்கள் மாறவும் வேண்டும் என்பது வெற்றியின் விதிகளில் ஒன்று. ஆனால் பல நிறுவனங்கள், பரிசோதித்துப் பார்த்த – பழகிப்போன – பழைய விதிகளையே பிடித்துக்கொண்டு, அவற்றை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதே பாதுகாப்பு என்கிற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக காலமாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னடைவைச் சந்திக்கின்றன.
தவறான இயங்குமுறை:
குறிப்பிட்ட மாற்றம் நிகழவேண்டுமென்றால் ஒருமித்த கருத்தின் மூலமாக நிறுவனத்தில் அதனை ஏற்படுத்தலாம். அல்லது எல்லாத் துறையினரும் மாற்றத்தை ஏற்பதைக் கட்டாயமாய் ஆக்கலாம். நிறுவனத்தின் ஒரு வரிசை மாற்றத்திற்குத் தயாராக, மற்றொரு வரிசை ஒத்துழைக்க மறுத்து, பழைய போக்கிலேயே போய்க் கொண்டிருந்தால் அங்கே மாற்றத்திற்கும் வழியில்லை. ஏற்றத்திற்கும் வகையில்லை. மாற்றத்திற்கான நடவடிக்கைகளை நூறு சதவிகிதம் நடைமுறைப்படுத்த உரிய ஏற்பாடுகள் செய்யாத போது தவறுகள் ஏற்படும்.
தவறான முடிவுகள்:
மாற்றம் வரவேண்டும் என்பதில் காட்டுகிற தீவிரம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதற்கான வழிமுறைகளை முடிவு செய்வது. தவறான முறைகளாலோ குறுக்கு வழிகளிலோ முயன்று வெற்றியைப் பெறுவதென்று முடிவு செய்தால் அந்த நிறுவனத்தின்மீது அதில் பணிபுரிபவர்களே நம்பிக்கை இழக்கநேரும். இதன் விளைவாக நிர்வாகம் எடுக்கிற எந்த முடிவையும் சந்தேகத்துடன் பார்க்கும் அலுவலர்கள், தங்கள் எதிர்காலம் கருதி ஒத்துழைக்க மறுப்பார்கள்.
இவையெல்லாம் பொதுக் காரணங்கள். எந்த நிறுவனமும் தெரிந்தே தவறுகளைத் தொடர்வதில்லை. ஆனால் எல்லாத் தரப்பினரும் பங்கேற்கும் விதமாக நிறுவனத்தின் வளர்ச்சிக் காலங்கள் அமையாதபோது, எதிர்பார்த்த வெற்றிகள் தாமதமாவதோடு, எதிர்பாராத தடைகளும் ஏற்பட்டுவிடுகின்றன.
தவறு நேர்வதைத் தடுப்பதே அரைப்பங்கு ஆதாயம் அடைந்தமைக்கு சமம். அவசரமாக எடுக்கும் முடிவுகளை அதைவிட அவசரமாக நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான் பல நிறுவனங்களில் நடக்கும் தவறு.
அதே நேரம், வளர்ச்சிக்காகத் தீட்டிய திட்டம் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், நிறுவனத்தின் எல்லாத் தரப்பினராலும் புரிந்துகொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதே முக்கியம். புதிய மாற்றங்கள் சரியாக செயல்படுத்தப் படுகின்றனவா என்று கண்காணிப்பது அதைவிட முக்கியம்.
தடுக்கப்படுகிற தவறுகளே வெற்றிகளுக்கு வாசல் திறக்கின்றன. எனவே தவறுகளைக் கண்டறிவது, தண்டிப்பதற்கல்ல, திருத்திக்கொள்வதற்கு என்கிற கோட்பாடு, தனிமனிதரில் தொடங்கி நிறுவனங்கள் வரை நடைமுறைக்கு வரவேண்டும். உலகமயமான தொழிலுலகில் உயர்வதற்கு இதுதான் உகந்த வழி.
No comments:
Post a Comment