ஓர் அரசனுக்குஅரச போகங்கள் அலுத்துப் போனது.வாழ்வின் நிலையாமை,ஆன்ம விழிப்புனர்வு இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.
யாராவது ஒரு குருவைத் தேடிக் கண்டுபிடித்து இதற்கான உபதேசம் பெற வேண்டும்,ஞானம் பெற வேண்டும் என்றெல்லாம் அவனது மனமானது அலைபாய்ந்தது.
அப்போது ஒரு ஜென் குருவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அரசன் அவரிடம் என்னிடம் எல்லாம் இருக்கிறது.
ஏவல் செய்வதற்கு ஆயிரம் பேர் உள்ளனர்.
மற்றும் நான் பல கலைகள் கற்று இருக்கிறேன்.எனக்கு தெரியாததது ஏதும் இல்லை.
ஆனாலும்,
மனதில் அமைதி இல்லை.
அதனால் நான் ஞானம் அடைய வேண்டும்.
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்..? என்ற தன் உள்ளடக்கையை அவரிடம் அவன் வெளியிட்டான்.
ஆனால் அவரோ,
ஞானம் அடைவது கிடக்கட்டும்,முதலில் அதற்கு நீ உன்னைத் தகுதி உடையவனாக ஆக்கிக் கொள் என்றார்.
அரசனுக்கு அவர் சொன்னது விளங்கவில்லை.தனக்கு ஞானம் பெறுவதற்கான எல்லாத் தகுதிகளும் இருப்பதாக நினைத்தான் மன்னன்.
அவன் மனதில் ஓடிய எண்ணங்களை புரிந்து கொண்ட ஜென் குரு,
மன்னா,
ஒரு நிலத்தில் பயிர்கள் விளைவிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும்.அதுபோல் உன் மனமும் ஞான உபதேச பெறுவதற்கு தகுந்த வகையில் பண்படுத்தப்பட வேண்டும் என்றார்.
ஆனால் ,
குருவின் இந்த பதிலால் மன்னன் சமாதானம் அடையவில்லை.
அந்தச் சமயத்தில் ஒரு சீடன் ஒருவன் நின்று பேசிக்கொண்டு இருந்த இடத்தைப் பெருக்கிக் கொண்டு வந்தான்.
அதனால் அங்கு ஏற்ப்பட்ட புழுதிப் படலத்தில் இருந்து தூசுகள் பறந்து வந்து அங்கு நின்று இருந்த மன்னனின் அழகிய ஆடைகளின் மீது படிந்தன.
மன்னன் மிகுந்த கோபத்துடன் அதை குருவிடம் சுட்டிக் காட்டி,சீடனை கண்டித்து வையுங்கள் என்றான்.
குரு அதைப் பார்த்து சிரித்தபடி,
உன்னிடத்தில் நிறைய பாம்புகள் நிறையக் குடி கொண்டு உள்ளது.
நீ முதலில் அதை அப்புறப்படுத்திவிட்டு என்னிடம் வா.
இப்போது நீ போகலாம் என்றார்.
பாம்புகளா,என்னிடத்திலா என்ன சொல்கிறார் இந்த குரு என்று மன்னன் சிந்தித்தபடி அந்த இடத்தைவிட்டு சென்றான்.
சில ஆண்டுகள் கழித்து மீண்டும் குருவை பார்க்க வந்தான் அரசன்.
அப்போதும் அதே சீடன் பெருக்கிக் கொண்டு இருந்தான்.
இந்தத் தடவையும் குப்பை,கூளங்கள் அரசரின் ஆடையின் மீது ஒட்டிக் கொண்டன.
இந்த தடவை மன்னன் குருவிடம் செல்லாமல் நேராக சீடனிடம் சென்று,
நான் யார் என்று தெரியுமா..?
நான் இப்போது நினைத்தால் உன் தலையை சீவிவிடுவேன் என்று சீடனைப் பார்த்து கடுஞ்சொல்லால் திட்டினான்.
இப்போது குரு அரசனைப் பார்த்து,
உன்னிடம் நிறைய நாய்கள் உள்ளன.
அதை முதலில் விரட்டிவிட்டு என்னிடம் வா என்றார் குரு.
மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆனால் மன்னன் யோசித்தபடி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான்.
இரண்டு ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன.
மீண்டும் மன்னன் குருவை தேடி வந்தான்.
இந்த முறையும் சீடன் அந்த மன்னனை விட்டுவைக்கவில்லை.
இந்த தடவை சீடன் ஒரு வாளியில் சாணக் கரைசல் கொண்டு தொளித்துக் கொண்டு இருந்தபோது சீடனின் கை தவறுதலாக மன்னன் மீது பட்டு சாணக் கரைசல் முழுவதும் அரசனின் ஆடை முழுவதும் சிந்திவிட்டது.
ஆனால்,
இந்தத் தடவை மன்னன் கோபமும் படாமல்,
சீடனை பார்த்து முக மலர்ச்சியுடன்,
நான்தான் தவறு இழைத்துவிட்டேன்,
நீங்கள் வேலை செய்யும்போது கவனிக்காமல் குறுக்கே வந்துவிட்டேன் என்றான் அமைதி தவழ..
இதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டு இருந்த குரு மன்னன் இருக்கும் இடம் தேடி வந்து மன்னனைப் பார்த்து,
மன்னா,
நீ ஞானம் பெற இப்போது முழுத் தகுதியும் அடைந்துவிட்டாய் இந்த கணம் முதல்.
உனக்கு நான் சொல்லித் தருவதற்கு ஒன்றும் இல்லை என்றார் குரு.
அரசனும் குருவை வணங்கிவிட்டு,மனம் தெளிவு அடைந்தவராய் சென்றார்.
இந்த கதைமூலம் நாம் உணர்ந்து கொள்வது....
ஆரம்பத்தில் மன்னன் குறைவான அறிவை உடைய ஒரு புல்லனைப் போல் நடந்து கொண்டான்.
அரசன் குருவை சந்திக்க வந்த இரண்டு முறையும் அப்போது தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் இருந்தது.
பேச்சிலும் அதிகார திமிர் இருந்தது.
ஆனால்,
இவைகள் அனைத்தையும் அறிந்த குருவும்,சீடனும் அப்போது அமைதி காத்தார்கள்.
மூன்றாவது தடவை மன்னன் வந்தபோது மன்னனிடம் அறிவு குடி கொண்டு இருந்தது.
ஆணவமும்,அதிகாரமும் இல்லாமல் முகத்தில் அன்பு தழும்பியது.
ஒருவன் மிகுந்த செல்வாக்கு உடையவனாக இருந்தாலும்,
மிகுந்த புத்திக் கூர்மை உடையவனாக இருந்தாலும்,
ஆற்றல்,அதிகாரம் படைத்தவனாக இருந்தபோதிலும்,
நல்ல குணங்கள் மிகுதியாக இருந்தாலும்,
அவன் இடத்தில் அதிகார போதையும்,அகம்பாவமும்
தலைதூக்குமானால் அவன் மீது யாருக்கும் மதிப்பும்,மரியாதையும் ஏற்படாது.
மற்றும் எல்லா நற்பண்புகள் ஒருவனிடத்தில் இருந்தும்,
அகந்தை,கர்வம் தோன்றிவிட்டால் அவனது ஆற்றலும்,அறிவும் பயனற்று போய்விடும்.
என்ன நண்பர்களே,
சரிதானே..?
No comments:
Post a Comment