Monday, May 20, 2013

சுயமுன்னேற்றம்: 'ஈவண்ட் மேனேஜ்மெண்ட்'


நிகழ்ச்சிகள், விழாக்கள் குறித்த மக்களின் கண்ணோட்டம் வெகுவாக மாறியிருக்கிறது. ஒரு எளிய பிறந்த நாள் விழாகூட பலருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு கொண்டாட்ட அனுபவமாக இருக்கவேண்டும் என்று பலர் இன்று விரும்புகிறார்கள். நிறுவனங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு புதிய தயாரிப்பு அல்லது சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றால் அது விமரிசையாக, பலருடைய கவனத்தைக் கவரும் வகையில் இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவது மிகவும் கடினமானது.

இந்தச் சூழலில்தான், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் எனப்படும் தொழில் வாய்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துறையில் ஈடுபட விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, நல்ல பேச்சுத் திறமை வேண்டும். சோஷியல் நெட்வொர்கிங் எனப்படும் சமூக தொடர்புகளை நல்லவிதமாக ஏற்படுத்திக்கொள்ளும் திறன் வேண்டும்.

சினிமா துறை (ஒலிநாடா வெளியீடு), கல்லூரி, பள்ளி ஆண்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீட்டு விழாக்கள், திருமணம், விளையாட்டுப் போட்டிகள், கோவில் விழாக்கள், சமூக ஆர்வலர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் என்று பலதரப்பட்ட வாய்ப்புகள் கொடடிக்கிடக்கின்றன.

முதலில் ஒரு பெயரைப் பதிவு செய்து நிறுவனமாக உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். சிறுசிறு நிகழ்ச்சிகளை வடிவமைத்து நடத்தவேண்டும். மக்கள் தொடர்புகளை அதிகப்படுத்திக் கொண்டே வரவேண்டும். எங்கே, எந்த இடத்தில், எந்தப் பொருள், சேவை கிடைக்கும் போன்ற தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். இணையம் இதற்குக் கைகொடுக்கும்.

எந்தெந்த நிகழ்ச்சிகள் எங்கெங்கே நடக்கவிருக்கிறது போன்ற தகவல்களை சிறிது சிறிதாகச் சேகரிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை நடத்த நினைப்பவரை தொடர்புக்கொண்டு, உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு வடிவம் இருக்கும். நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கென்று பிரத்தியேக குணங்கள், ரசனைகள் இருக்கும். இவற்றை நன்கு அறிந்துவைத்துக்கொண்ட பிறகே நிகழ்ச்சிக்கான திட்டமிடல்களைத் தொடங்கவேண்டும். அதே போல், நிகழ்ச்சி நடத்த இருப்பவரின் பட்ஜெட் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒரு சிலர் விழாக்கள் எளிமையாகவும் நளினமாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புவர். வேறு சிலரோ நல்ல ஆடம்பரத்துடன் விழா நடைபெறவேண்டுமென்று விருப்பப்படுவர். இடத்துக்கு ஏற்ப, நீங்கள் அளிக்கபோகும் சேவைகளைப் பகுதிவாரியாகப் பிரித்துக்கொண்டு பணியாற்றவேண்டும்.

நிகழ்ச்சியை நடத்துவதற்கு நல்ல கற்பனை வளம் தேவை. நிகழ்ச்சி நடக்கவிருக்கும் அரங்கம், வரும் விருந்தாளிகளின் எண்ணிக்கை போன்றவற்றை மனதில் கொண்டு முடிவு செய்ய வேண்டும். உணவு வழங்கப்படும் நிகழ்ச்சியாக இருப்பின் எத்தகைய உணவு, அதில் பரிமாறப்படும் வகைகள் என்னென்ன ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

குழந்தைகள் பங்கு கொள்ளும் நிகழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில், குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், பரிசுகள் என்று பலவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். நுழைவு வாயில் அலங்காரம், மேடை அலங்காரம், அரங்க அமைப்பு, விழா அழைப்பிதழ், நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்கும் நபர்கள் என்று ஒவ்வொன்றையும் கவனத்தோடு முடிவு செய்ய வேண்டும்.

பல நபர்களை ஒருங்கிணைப்பதன் மூலமே ஒரு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடியும் என்பதால் பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களுடைய குணாதிசயங்களையும் அறிந்து கொள்ளவேண்டும். மதம் மற்றும் சமூகத் தொடர்பான நிகழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில், மற்றவர்கள் மனம் புண்படாதவாறு நிகழ்ச்சி நிரலை அமைத்தல் மிக அவசியம்.

உதாரணத்துக்கு, ஒரு திருமண நிகழ்ச்சியாக அல்லது பிறந்த நாள் விழாவாக இருக்கும் பட்சத்தில், அதை நடத்துபவரின் விருந்தாளிகளில் சைவம் உண்பவர்களும் அசைவம் உண்பவர்களும் இருப்பார்கள். அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தனித்தனியே ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

நிகழ்ச்சி நடப்பதற்கு முதல் நாளோ அல்லது நடக்கும்போதோ ஒருசில தடைகள் உருவாகலாம். குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்த்த பொருள்கள் வந்து சேராமல் இருக்கலாம். அல்லது தகுந்த நபர்கள் ஒரு வேலையைச் செய்வதற்கு கிடைக்காமல் போகலாம். எப்படி இருப்பினும், எந்த ஒரு சிக்கலிலும் மாற்று ஏற்பாடுகளை யோசிக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். அந்த மாற்று ஏற்பாடுகளை குறித்த நேரத்தில் சரியாக செய்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் மனம் கோணாதவாறு முடிக்க வேண்டும்.

எழுத்துப்பூர்வமாக தான் செய்யும் ஏற்பாட்டை நிகழ்ச்சி நடத்துபவரிடம் கொடுத்து அவர்களின் சம்மதத்தை எழுத்துப்பூர்வமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதன்மூலம் விழாவை நடத்துபவருக்கும் நடத்த முன்வரும் தொழிலதிபருக்கும் கருத்து வேற்றுமையைத் தவிர்க்க முடியும். இத்தொழிலில் உள்ள ஒரு பெரிய அனுகூலம் என்னவென்றால், முதலில் நான்கைந்து நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தி கொடுத்துவிட்டால், ஏனைய நிகழ்ச்சிகள் தாமாகவே தேடிவரும். நிறைவடைந்த வாடிக்கையாளர்களே மக்கள் தொடர்பு அதிகாரிகளாக மாறிவிடுவார்கள்.

ஒரு விழா சிறப்பாக நடைபெறும்போது, விருந்தாளிகளின் கவனத்தைக் கவர்ந்துவிட்டால் யார் இதை நடத்துவது என்று விசாரிதது நிச்சயம் உங்களைத் தேடி அவர்களே வருவார்கள். பெரும் செல்வந்தர்களின் வீட்டில் நிகழ்ச்சிகளும் கேளிக்கை விருந்துகளும் எப்போதும் நடந்துகொண்டே இருக்கும்.

கணினி தொழில்நுட்பத்திலும், கணினி மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் டாகுமெண்ட் ரைட்டிங் எனப்படும் தொழில் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்று பல சிறிய/பெரிய நிறுவனங்கள் தங்களைப் பற்றி குறுந்தகடு அல்லது டாகுமெண்டரி படம் உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

விற்பனைப் பிரிவு அதிகாரிகளை வைத்துக்கொண்டு பல மணி நேரம் தங்கள் நிறுவனத்தைப் பற்றியும், தாங்கள் விற்பனை செய்யும் பொருள்களைப் பற்றி பேசுவதை விட, PPT எனப்படும் பவர் பாயிண்ட் பிரஸென்டேஷன் மூலம் பல வாடிக்கையாளரைக் கவரமுடியும்.

வேண்டிய கருத்துக்களை நறுக்கென்று, எளிமையாக ஆனால் புதுமையாக எடுத்துச் சொல்ல இப்படிப்பட்ட முறைகள் பெரிதும் பயன்படுகின்றன. சுயதொழில் செய்ய நினைப்போர் கற்பனைத்திறன் உள்ளவர்களாக இருந்தால் இத்தொழிலில் மிக நல்ல முறையில் இறங்க முடியும்.

சிறு முதலீட்டில் இத்தொழிலை ஆரம்பிக்க முடியும் என்பது இதன் மிகப்பெரிய பலமாகும்.

விளம்பரங்களுக்கான வாசகங்களை எழுதுதல், விளம்பரப் படங்களுக்கான உட்கருத்துகளை வடிவமைத்தல் போன்றவையும் சுயத் தொழிலுக்கு ஏற்றவையே. அதேபோல் பல நிறுவனங்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை அந்த நிறுவனம் கடந்து வந்த பாதை, சந்தித்த சவால்கள், பெற்ற விருதுகள், தொழிலில் செய்த சாதனைகள் போன்றவற்றை ஒரு திரைப்படத்துக்குரிய நேர்த்தியோடு, வடிவமைக்க முன்வந்தால் அதுவும் நல்ல தொழிலாக அமையும்.

இத்தொழிலில் இறங்குவோர்க்கு மொழிகளின் ஆளுமை, நல்ல தேர்ச்சி போன்றவை மிக அவசியம். இதுவும் மக்கள் தொடர்புடைய தொழிலென்பதால், மக்களின் உணர்வுகளை, விருப்பங்களை, ரசனைகளை எடைபோடத் தெரியவேண்டும். எளிதாக மாநில எல்லைகளைத் தாண்டி நாட்டின் எல்லைகளைத் தாண்டித் தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்புகளும் மிக அதிகம். மேலும் செல்வத்தோடு சேர்த்து பெரும் புகழும் உங்களை வந்தடையும்.

No comments:

Post a Comment