ஜோதிட சாஸ்திரம் என்பது இந்துக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துவிட்ட ஒரு அம்சமாகும். அன்றாடம் நாள், நட்சத்திரம், திதி, ராகு காலம், எமகண்டம், சுபஹோரைகள் பார்ப்பதில் ஆரம்பித்து, எதை செய்ய வேண்டும் என்றாலும் ஜாதக கிரக நிலைகள் பார்ப்பது வரை கடைபிடிக்கப்படுகிறது. கிரக யோகங்கள் பெறவும், தோஷ, தடைகள், பீடைகளில் இருந்து விடுபடவும் விரதங்கள், ஹோமங்கள், வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள், கிரக பரிகார பூஜைகள் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. முறையாக இவற்றை செய்வதன் மூலம் தடைகள், தாக்கங்கள் குறைவதுடன், உடலும், உள்ளமும் தூய்மையாகி அமைதியும், சந்தோஷமும் கிடைக்கும். தோஷ நிவர்த்திக்கும், யோக பலன் உண்டாவதற்கும் நவக்கிரக வழிபாடு மிகவும் அவசியமாகும்.
ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவராவார். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று.. காசு, பணம் எனப்படும் பொருட்செல்வம். இன்னொன்று.. குழந்தைச் செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திர ஸ்தானங்களின் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும். ‘குரு இருக்கும் இடம் பாழ்.
பார்க்கும் இடம் விருத்தி’ என்பார்கள். அதன்படி, இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும். குருவுக்கு பல்வேறு ஆதிக்கம் உள்ளது. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி ஆகியவை குருவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.
சமூக அந்தஸ்து, அரசியல் பதவி, ஆன்மிக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், தர்ம ஸ்தாபனங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரி கட்டுதல், அறங்காவலர் பதவி, நீதிபதி, கவர்னர் போன்ற அரசு உயர் பதவியில் அமர்வதற்கு குருபகவானின் அருள்கடாட்சம் தேவை.
வழிபாடு - பரிகாரம்
குரு பகவானின் அருள் பார்வை கிடைக்க முருகன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குரு பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். குரு திசை நடப்பவர்கள், திருமண, குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் தினமும் ‘ஓம்பிம சிவய வசி குரு தேவாய நம’ என்று 108 முறை சொல்லி வரலாம். கோசார குரு சரியில்லாமல் இருப்பது, அதாவது ஜென்ம குரு, அஷ்டம குரு, விரய குரு உள்ளவர்கள் தினமும்
‘ஓம் குரு தேவாய வித்மஹே பிரம்மானந்தாய தீமஹி தந்நோ குரு பிரசோதயாத்’
என்ற காயத்ரி மந்திரத்தை 54 முறை சொல்லி வரலாம். குருபகவான் ஜெயந்தி- இந்நாளில் குருபகவானை வணங்கி அவரது அருள் கடாட்சம் பெறுவோமாக.
குருவின் அம்சங்கள்
கிழமை: வியாழன்
தேதிகள்: 3, 12, 21, 30
நட்சத்திரங்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நிறம்: மஞ்சள்
ரத்தினம்: கனக புஷ்பராகம்
தானியம்: கொண்டைக் கடலை
உலோகம்: பொன் (தங்கம்)
ஆடை: தூய மஞ்சள்
ராசி: தனுசு - மீனம்
உச்ச ராசி: கடகம்
நீச்ச ராசி: மகரம்
No comments:
Post a Comment