Sunday, May 12, 2013

அட்சய திரிதியை அன்று குபேரனை வணங்குங்க!


குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. குபேரனின் தந்தை விச்ரவசு, கேகசி என்ற அரக்கியை மணந்து கொண்டார். அவர்களுக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை ஆகிய பிள்ளைகள் பிறந்தனர். இவர்கள் குபேரனுக்கு சகோதர உறவு. குபேரனின் மனைவி சித்ரலேகா. நரனை (மனிதனை) வாகனமாககொண்டவர். சங்கநிதி, பதுமநிதி ஆகிய இருநிதிகளுக்கும் அதிபதி. அளகாபுரி என்னும் பட்டணத்தை ஆள்பவர். 800 ஆண்டுகளாக சிவனைநோக்கி தவமிருந்து அவருக்கு நண்பரானார்.

இவரை வணங்கினால் செல்வம் கொட்டும்

சிவந்த மேனி, குள்ளமான உருவம், பெரிய வயிறு, சிரித்த முகம், சிறந்த சிவபக்தர், சிவனுடைய இனிய நண்பர், வடக்கு திசை அதிபதி, அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர். இவர் வேறு யாருமல்ல, அனைவருக்கும் தெரிந்த குபேரர் தான். லட்சுமியின் அன்பிற்கு பாத்திரமான இவர், செல்வத்திற்கும், தனதான்யத்திற்கும் அதிபதியாக உள்ளார். குபேரரை வணங்குவதன் மூலம் இந்த செல்வங்களை பெறமுடியும் என்பது நம்பிக்கை. குபேர வழிபாட்டின் போது லட்சுமியையும், குபேரøனையும் சேர்த்து வழிபடுவது சிறப்பு. இருவரையும் சேர்த்து, வழிபடும் பட்சத்தில் முழு பலனும் உடனே கிடைக்கும். ஏனெனில் லட்சுமியின் அன்பிற்கு பாத்திரமானவர் இவர்.

குபேர பூஜைக்கு உகந்த நாட்கள்

லட்சுமியை வணங்கிய பின்னர் குபேரனை வழிபடுவது சிறப்பு. குபேர வழிபாட்டுக்குரிய கிழமை வெள்ளி. அவர் அவதரித்த வியாழக்கிழமையும், பூசநட்சத்திரமும் கூடிய நாளில் வழிபடுவதும் நன்மை தரும். அஷ்டமி, நவமி திதி இல்லாத நாளாக இருப்பது நல்லது. நாள் முழுவதும் அமிர்த,சித்தயோகம் அமைய வேண்டும். லட்சுமி குபேரரை வழிபடும் வீட்டில் கடனோ, பழைய பொருட்களை வாங்க வேண்டிய நிலையோ வராது. பணப்பற்றாக்குறை நீங்கிவிடும். தண்ணீர் கஷ்டம் விலகி விடும். சத்துள்ள சுவையான உணவு கிடைக்கும். சமூகத்தில் கவுரமான வாழ்வு ஏற்படும். செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும் என்பது நம்பிக்கை.

தங்கம் கொட்டும் விமானம்: இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை வெளியேற்றிய ராவணன் இலங்கையின் மன்னன் ஆனான். குபேரனிடம் புஷ்பக விமானம் இருந்தது. அது செல்லும் இடமெல்லாம் தங்கத்தையும், நவமணியையும் கீழே கொட்டிக் கொண்டே செல்லும். அந்த விமானத்தை ராவணன் பறித்துக் கொண்டான். குபேரனின் புஷ்பக விமானத்தில் தான், சீதையை இலங்கைக்கு கடத்தியதாக ராமாயணம் கூறுகிறது.

நவநிதி என்றால் என்ன?

உலகிலுள்ள செல்வம் அனைத்துக்கும் அதிபதி சிவன். அவர் தனக்கு ஏதுமே வேண்டாமென உடலில் திருநீறும், புலித்தோலை ஆடையாகவும் உடுத்திக் கொண்டார். அவரது மனைவி பார்வதிதேவி தாயுள்ளம் கொண்டவள். அம்மா, நான் சிரமப்படுகிறேனே, என்று அவளை நம்பிக்கையுடன் வணங்கிவிட்டால் போதும். கணவரிடம் சிபாரிசு செய்து அருளும், பொருளும் பெற்றுத்தருவாள். மகன் சுப்பிரமணியனோ ஒரு கோவணமே போதுமென தண்டாயுதபாணியாக இருக்கிறார். பானை வயிறோனான விநாயகரோ அருகம்புல், எருக்கம்பூ மாலை என எளிமையானவர். எனவே அவர் செல்வம் முழுவதையும், தன் பக்தன் குபேரனுக்கு அளித்து அவனை செல்வாதிபதி யாக்கி விட்டார். அவர் சங்கநிதி, பதுமநிதி,நீலநிதி, நந்தநிதி, முகுந்தநிதி, கஸ்யபநிதி, காமதேனு, கற்பக விருட்சம், மச்சநிதி ஆகிய பிரதிநிதிகளை நியமித்து, யாருக்கு எவ்வளவு தருவது என நிர்ணயிக்கிறார். கெட்டவர்களுக்கு பெருநிதியும், நல்லவர்களுக்கு குறைந்த நிதியும் தரக்காரணம், அவர்களின் முன்வினைப் பயன் காரணமாகவே ஆகும்.

நவநதி அதிபர்களின் பணிகள்

குபேரனுக்கு நவநதிகளாகிய பிரதிநிதிகள் உண்டு. தாமரை ஏந்திய பதுமநிதி இடப்புறமும், சங்கு ஏந்திய சங்கநிதி வலப்புறமும் குபேரனுக்கு அருகில் வீற்றிருந்து ஒட்டுமொத்த கணக்கையும் கவனிக்கிறார்கள். நீலநிதி கடல்வளத்தைப் பெருகச் செய்பவர். நந்த நிதியால் பசுஅபிவிருத்தி உண்டாகும். முகுந்த நிதி தயிர், வெண்ணெய், நெய் ஆகியவற்றின் உற்பத்திக்கு அதிபதி. கஸ்யபநிதி செல்வச் செழிப்புடன், அதை நல்வழியில் செலவிட அருள்புரிவார். தேவலோகப் பசுவான காமதேனுவின் அருளால் லட்சுமி கடாட்சம் பெருகும். கற்பக விருட்சம் மனதில் விரும்பிய அனைத்தும் தரும். மச்சநிதியால் மீன்வளம் பெருகும். லட்சுமி குபேரரை வழிபட்டால் நவநிதிகளும் நம்மை வந்தடையும்.

குபேரக் குறிப்பு: சம்பா அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழைகளால் ஆன அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம். குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வச்செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள் உருவாகும். விஷ ஜந்துக்களை கீரி விரட்டுவது போல, நம் இடையூறுகளை நீக்குவதைக் குறிக்கும் விதத்தில் கீரியைத் தாங்கியிருக்கிறார். புதனுக்குரிய அதிதேவதையாக குபேரர் விளங்குகிறார். புதனுக்குரிய பச்சைநிறம் குபேரருக்கு விருப்பமானது. பச்சை வஸ்திரம், பாசிப்பயறு, நாயுருவி இலை, வெண்கடுகு போன்றவற்றை குபேர ஹோமத்தின்போது இடுவர். குபேரருக்குரிய திசை வடக்கு. தொழில், வியாபார இடங்களிலும், வீட்டிலும் பணப்பெட்டியை வடக்குநோக்கி வைப்பது சிறப்பு. குபேரரின் அருளால் தொழிலில் லாபமும், செல்வவளமும் பெருகும்.

குபேரனுக்கு மீன் ஆசனம்: குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை தன் குணத்தின் மூலம் மனித சமுதாயத்துக்கு உணர்த்துகிறார். அடுத்தவனைப் பார்த்து அவனைப் போலவே பணக்காரன் ஆக வேண்டும் என நினைத்தால் முடியாது, அந்த பணக்காரனின் பின்னணியில் எந்த அளவிற்கு உழைப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதன்மூலம் அவர் உழைப்பின் பெருமையை உணரச் செய்கிறார். தேவலோகத்திலுள்ள குபேரபட்டினம் இவரது ஊர். இங்குள்ள அழகாபுரி அரண்மனை மண்டபத்தில் தாமரைப் பூ, பஞ்சு மெத்தை மீது மீனாசனத்தில் குபேரன் அமர்ந்தார். ஒரு கை அபயமுத்திரை காட்டும். சிரமமான நேரத்தில், செல்வத்தைக் கொடுத்து உதவுவதே அபய முத்திரையின் நோக்கம். அவரது தலையில் தங்கி கிரீடம் சூட்டப்பட்டிருக்கும், முத்துக்குடையின் கீழ் அமர்ந்திருப்பார். இவரது பிரதிநிதியான சங்கநிதியின் கையில் வலம்புரி சங்கு இருக்கும். இது செல்வத்தின் அடையாளமாகும். இன்னொரு பிரதிநிதியான பதுமநிதியின் கையில் தாமரை இருக்கும். இவர் பரந்து விரிந்த கல்வி அறிவை தருபவர். கல்வியும் செல்வமும் இணைந்து இருக்க வேண்டும் என்பதே குபேர தத்துவம்.

லட்சுமிக்குரிய ஐந்து: பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று குறிப்பிடுவர். இவற்றை தானமாக அளித்தால் திருமகள் மனம் குளிர்ந்து அருள்புரிவாள். பாலை குழந்தைகளுக்கும், தாமரையை ஆலய வழிபாட்டுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தைப்பறவைகளுக்கும், நாணயத்தை ஏழைகளுக்கும் தானமாக வழங்கவேண்டும்.

வலம் தரும் குபேர லட்சுமி: செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்நாளில், வடமாநிலங்களில் வியாபாரிகள் லட்சுமிபூஜை செய்வர். வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை சுக்கிர ஓரை நேரத்தில், குபேரலட்சுமியை பூஜிப்பது மிகுந்த நன்மை தரும். மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலைபாக்கு, வெள்ளை நிற வாசனை மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, சாம்பிராணி, நவதானியம் ஆகிய பொருட்களை லட்சுமி பூஜையின் போது படைப்பர். ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ ஆகிய மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். லட்சுமி அஷ்டோத்திரத்தைப் பாராயணம் செய்யலாம். வேதமந்திரமான ஸ்ரீ சூக்தத்தின் ஏழாம்பாடலில், லட்சுமி குபேரனோடு வீற்றிருந்து செல்வவளம் அருள்வது பற்றி கூறுவதைப் படிக்கலாம்.

விவசாயிகள் வழிபாடு: குபேரர் நிலதானியங்களுக்கு அதிபதி. விவசாயிகள் தங்கள் விவசாய விளைப்பொருட்களை குபேரர் முன் வைத்து வழிபட்டு, பின் விவசாயத்தை துவக்குகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் விவசாயம் செழிப்படைவதாகவும் நம்பிக்கையுள்ளது. அறுவடை காலங்களில் குபேரனுக்கு காணிக்கையாக விளைபொருட்களை வழங்குகின்றனர்.

வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லட்சுமிகரம்

வாசலில் பசுஞ்சாண நீரைத் தெளித்து, மாக்கோலம் இட்டால் வீட்டில் திருமகள் நித்யவாசம் செய்வாள். கோலத்தில் மாக்கோலம், இழைக்கோலம், புள்ளிக்கோலம், ரங்கோலி என்று எத்தனையோ வகை உண்டு. கோலத்திற்கு சித்ரகலா என்றும் பெயருண்டு. வேதகாலத்திலேயே கோலமிடும் பழக்கம் இருந்தது. யாகசாலையில் குண்டங்களை அமைக்கும் முன் கோலமிடுவர். 
குபேர ஸ்லோகம்

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே
நமோ வயம் வைஸ் ரவணாய குர்மஹே
ஸ மே காமாந் காமகாமாய மஹ்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாது
குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நமஹ:

என்ற ஸ்லோகத்தை பக்தியுடன் சொல்லி, குபேரனை வணங்கினால், தேவையானதை வாங்க குபேரன் பொருள் தந்து உதவுவார் என்பது ஐதீகம்.

குபேர மந்திரம்

ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய
தனதாந்யாதி பதயே
தநதாந்ய ஸம்ரும்திம்மே,
தேஹி தபாயஸ்வாஹ!

No comments:

Post a Comment