Thursday, May 9, 2013

வெற்றிக்கு ஒரு புத்தகம் - தலைமைக் கண்ணாடி


சச்சின் டெண்டுல்கருக்கும் மகேந்திர சிங் தோனிக்கும் என்ன ஒற்றுமை? என்ன வித்தியாசம்?இருவருமே பிரமாதமான கிரிக்கெட் வீரர்கள், நல்ல திறமைசாலிகள், உலக புகழ் பெற்றவர்கள், ஏகப்பட்ட ரசிகர்களைக் கொண்டவர்கள். ஆனால் ஒரு விஷயத்தில் இவர்கள் இருவரும் வித்தியாசப்படுகிறார்கள்.சச்சின் தன்னுடைய தனித்திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியதோடு நிறுத்திக் கொண்டுவிட்டார். ஓர் அணியைத் தலைமை தாங்கிப் பலரை அரவணைத்துச் சென்று வெற்றிகளைக் குவிக்கவில்லை. சிறந்த தலைவராகப் பெயர் வாங்கவில்லை.

இந்த விஷயத்தில் தோனி வெகு சமர்த்தர். ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், 20:20 போட்டிகள், ஐ.பி.எல். என்று அவர் கை வைத்த இடமெல்லாம் வெற்றி. "எங்க கேப்டன்' என்று பொதுமக்களும் அவரை அன்பாகக் கூப்பிடுகிறார்கள்.கிட்டத்தட்ட இதே கதையை நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் பார்க்கலாம். சிலர் தங்களுடைய வேலையை மட்டும் மிகச் சிறப்பாகச் செய்வார்கள். வேறு சிலர், மற்றவர்களையும் உடன் அழைத்துச் சென்று சாதிப்பார்கள். இரண்டாவது தரப்பினருக்குத்தான் நிறையப் பாராட்டுகளும் மரியாதையும் சமூக அந்தஸ்தும் சாத்தியப்படும்.அது சரி, இந்த முதல் வகையில் உள்ள அப்பாவிகள் இரண்டாவது வகைக்குத் தாவுவது எப்படி? இந்த ரகசியத்தைச் சொல்லித்தரும் எளிமையான புத்தகம் ஒன்று இப்போதுதான் சுடச்சுட வெளியாகியிருக்கிறது. அதன் பெயர் "தி ஷிஃப்ட் ஃப்ரம் ஒன் டு மெனி'. எழுதியவர் க்ரிஸ்மன் நஃப்சிங்கர். 

நம்மில் பலர் நல்ல தலைவர்களாக ஜொலிக்காமல் இருப்பதற்கு க்ரிஸ்மன் நஃபசிங்கர் சொல்லும் முக்கியமான காரணம், அவர்கள் சரியான நேரத்தில் கண்ணாடியை மாற்றுவதில்லை!கண்ணாடியா? அதென்ன?பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மூக்குக் கண்ணாடிகளை அணிவது வழக்கம். இந்தக் கண்ணாடிகள்தான் அவர்களுடைய விழித்திரையின் லென்ஸ் பிரச்னைகளை சரி செய்து, பார்ப்பதற்கோ படிப்பதற்கோ வழி செய்கின்றன. ஒருநாள், கண்ணாடியை மறந்து வெளியே சென்றுவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது இவர்களால் பார்க்க விரும்பிய பொருள்களைப் பார்க்க முடியாது, படிக்க விரும்பிய விஷயங்களைப் படிக்க முடியாது.இதே விஷயம் தலைவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் க்ரிஸ்மன் நஃப்சிங்கர். 

தனிப்பட்ட முறையில் நல்ல திறமைசாலியாக இருக்கிற ஒருவர் தலைவராக விரும்பினால், மனதளவில் அதற்கென்று ஒரு விசேஷக் கண்ணாடியை அணிய வேண்டும். தங்கள் பார்வையையே மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவரை தங்களுடைய சொந்தச் செயல்பாடுகள், திறமைகள், தகுதிகள், அனுபவத்தை மட்டும் யோசித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது எல்லோருக்காகவும் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.அதற்காக இந்தப் புத்தகம் நான்கு ஸ்டெப்களை விளக்கி சொல்கிறது. இவற்றை ஒவ்வொன்றாகக் கடந்து வந்தால், யார் வேண்டுமானாலும் வெற்றிகரமான தலைவராக முடியும்! 

Step 1: 

நான் என்பதை உணர்வது. அதாவது, என்னுடைய தனிப்பட்ட திறமைகள் என்ன, அவற்றை நான் எப்படிப் பயன்படுத்துகிறேன், எப்படி ஜெயிக்கிறேன் என்பதை உணர்வது. இது நான் எப்போதும் இழக்க மாட்டேன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது. 

Step 2: 

நான் என்பதில் இருந்து மெல்ல நகர்ந்து நாம் என்று நினைக்கத் தொடங்குவது. அதாவது நான் இதைச் செய்தேன் என்று பெருமைப்படுவதற்குப் பதிலாக, அதற்கு மற்றவர்கள் என்ன உதவி செய்தார்கள் என்று யோசிப்பது, அதன்மூலம் நாம் சேர்ந்து இதைச் செஞ்சோம் என உணர்வது. 

Step 3: 

எல்லாப் பொறுப்புகளையும் நம்மிடம் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பகிர்ந்து தருவது. அவர்களுடைய வேலையைக் கவனித்து உற்சாகப்படுத்துவது. இதன்மூலம் முதல் ஸ்டெப் (அதாவது நான் என்கிற உணர்வு) மெதுவாக மங்கத் தொடங்கும். 

Step 4: 

இந்த நிலையில் நம்முடைய தனிப்பட்ட முக்கியத்துவம் என்பது கிட்டத்தட்ட மறந்தே போயிருக்கும். வெற்றிகரமாகத் தலைமைக் கண்ணாடியை அணிந்து கொண்டிருப்போம். நிரந்தரத் தலைவர்களாக மாறியிருப்போம்!ஒரு நாளும் கண்ணாடியை மறக்காதீர்கள்! 

No comments:

Post a Comment