Wednesday, May 15, 2013

காலக் கணிதத்தின் சூத்திரம்!


கர்மவினை, காலம், முனிவர்களின் கணிப்பு ஆகிய மூன்றும் ஜோதிடப் பகுதியின் அடித்தளம். முனிவர்களது சிந்தனை, நாம் சந்திக்கப்போகும் அனுபவத்தை முன்னரே கோடிட்டுக் காட்டிவிடும். கிரகங்களுடன் இணைந்த காலம், முனிவர்களது சிந்தனையின் ஒத்துழைப்புடன், நமது கர்மவினையின் தரத்தை வெளிக்கொண்டு வரும். இன்ப-துன்பங்களுக்கு நமது செயல்பாடுகளே காரணம் (ஸ்வகர்மசூத்ரக்ரதிதோஷிலோக:). ஜோதிடம், கர்ம வினையின் அனுபவ வேளையைச் சொல்லும். காலம், முனிவர்கள் வாக்கு நமது இன்ப- துன்பத்தை மாற்றியமைக்காது.

சூரிய கிரணங்களின் தாக்கத்தில் ஏற்படும் மாறுதல், காலத்தின் அளவுகோல் என்கிறது வேதம் (தஸ்யா:பாகவிசேஷண ஸ்முருதம் காலவிசேஷணம்). கடிகார முள், சூரியனின் உதயாஸ்தமனம் ஆகியவற்றை காலத்தின் அளவுகோலாகப் பார்ப்போம். பரம்பொருள் கால வடிவில் முத்தொழிலை நடைமுறைப்படுத்துகிறார் என்கிறது ஜோதிடம் (கால:ஸ்ருஜதிபூதானி, கால:ஸம்ஹரதேப்ரஜா:). காலம் அனாதி அனந்தம்; அத்தனை செயல்பாடுகளுக்கும் காலம் ஆதாரம் (ஸர்வாதார:கால:). காலம், இயற்கை, கடவுள் மூன்றுக்கும் ஒரே இயல்பு. கண்ணுக்குப் புலப்படாத கடவுள், இயற்கை வடிவிலும் கால வடிவிலும் தோன்றுவார். தசாவதாரங்களில் கடவுள் மாற்று உருவில் தோன்றினார். உலகவியல் செயல்பாடுகளில் அவரது இணைப்பு மறைமுகமாக இருக்கும். கடவுளை நேரில் பார்க்க இயலாது. அவருக்கு உருவம் இல்லை. நிக்ரஹம், அனுக்ரஹம் இரண்டையும் காலத்தின் வடிவில் அவர் நடைமுறைப்படுத்துகிறார். இயற்கை நம்மை தண்டிக்கிறது; வாழ்த்துகிறது.

ஈச சக்தி பஞ்ச பூதங்களை இயக்கும். ஐம்பெரும் பூதங்களில் ஒன்று ஆகாசம். கிரகங்கள், நட்சத்திரங்கள், மின்னல், நெருப்பு (இடி) அத்தனையும் ஆகாசத்தில் இருக்கும். அவை, பரம்பொருளின் துணையில் இயங்குகின்றன. அவற்றுக்கு ஒளி தந்தது ஈசனின் ஒளி என்கிறது வேதம் (நதத்ரசூர்யோபாதிநசைந் திரதாரகம்...). பஞ்ச பூத சிந்தாந்தம், கர்ம சிந்தாந்தம், புனர்ஜன்ம சித்தாந்தம் ஜோதிடத்தின் உயிர் நாடி. அத்தனையும் இயற்கையின் விளைவுகள். இயற்கையின் ரகசியத்தை அறிய முடியாதவர்களுக்கு ஜோதிடம் புரியாது. தெரியாமல் தொட்டாலும் நெருப்பு சுடும். அதேபோன்று, தெரியாதவர்களிலும் ஜோதிடத்தின் தாக்கம் உண்டு. முனிவர்களின் சிந்தனை மனித குலத்தை உயர்த்த ஏங்கும். சிந்தனை வளம் பெற்ற மனிதன் அதை ஏற்று, உலகவியலிலும் ஆன்மிகத்திலும் உயர்வைப் பெற்று மகிழலாம்.

வாழ்வில் நிச்சயமாக அனுபவத்துக்கு எட்டும் பலன்களை, 'த்ருட பலன்’ என்று சொல்லும் ஜோதிடம். அவற்றை நட்சத்திரங்களின் தொடர்புடன் ஒட்டிவரும் தசாபலன்கள் வரையறுக்கும். சூழலை ஒட்டி மாறுபடும் பலன்களை, 'அத்ருட பலன்’ என்கிறது ஜோதிடம். அஷ்டவர்க்கம், சந்திரசாரம் ஆகியவற்றால் அது வெளிப்படும். சில பலன்கள், அதற்கு உகந்த சூழல் உருவாகாமல் இருந்தால் தென்படாது. அப்படியே உருவானாலும் கடைசி நிமிடத்தில் நழுவிவிடும். இன்னும் சில பலன்கள், காக்கை உட்காரப் பனம் பழம் விழுவது போன்று அனுபவத்துக்கு வந்துவிடும். இதை, 'த்ருடாதிருட பலன்’ என்கிறது ஜோதிடம். யோகங்கள் வாயிலாக அந்தப் பலன் வெளிப்படும்.

ராஜ யோகம், கஜகேஸரி யோகம், நீசபங்க ராஜயோகம் ஆகியவற்றின் பலன் நடைமுறைக்கு வரலாம்; வராமலும் போகலாம். அந்தந்த சூழலுக்கு தம்மை மாற்றிக்கொள்ளும். இப்படி, பலன் சொல்லும் பகுதியில் மாறுபாடுகளை ஜோதிடம் வரையறுக்கும். வேதம், சாஸ்திரம், புராணங்கள், இதிகாசங்கள், சம்பிரதாயம், நடைமுறைகள், மனவியல், வானவியல், உடற்கூறு, உயிரினங்களின் இயல்பு, தர்க்கம், ஆன்மிகம் ஆகியவற்றில் அறிவு வேண்டும். ஜோதிட சித்தாந்த நூல்கள், பலன் சொல்லும் பகுதிகளைக் கற்றுத் தெளிவு பெற்றிருக்க வேண்டும்; எந்தக் கோட்பாட்டை எங்கு இணைக் கலாம், எங்கு விலக்கலாம் என்ற பாகுபாட்டையும் அறிந்தி ருக்க வேண்டும்; தியானம், தவம் ஆகியவற்றால் மனம் மாசற்று இருக்க வேண்டும் என்று ஜோதிடம் கூறுபவனை வரையறுக்கிறது ஜோதிடம் (அகேஹோரா சாஸ்த்ரக்ஞ...).

கிரகங்களை துல்லியமாகக் கணித்து கிரக நிலையில் அதன் இருப்பிடத்தை சரிபார்க்க வேண்டும். மனித சிந்தனையில் விளையும் அத்தனைப் பலன் களையும் கிரகநிலையின் 12 கட்டங்களில் அமர்ந்த கிரகங் கள் முழுமையாக வெளியிடும். கால மாறுபாடு செயல்பாட்டின் தரம், விஞ்ஞானம், பொருளா தாரம் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றம் அத்தனையும் 12 கட்டங்களில் அடங்கும். மனித சிந்தனையின் அத்தனை மாற்றங்களையும் உள்ளடக்கிய பலன்களை, கிரகநிலையில் இருக்கும் கிரகங்கள் சொல்லி விடும்.

7-ஆம் பாவத்துக்குப் பலன் சொல்வதாக இருந்தால், 7-ல் இருக்கும் கிரகம், அதனுடன் இணைந்த கிரகம், அதைப் பார்க்கும் கிரகம், 7-ஆம் பாவாதிபதி நின்ற ராசிநாதன், அதன் அம்சக நாதன், லக்னாதிபதி, சந்திர லக்னாதிபதி, காரகக் கிரகம் ஆகியவற்றின் தொடர்பு, அத்தனை கிரகங்களில் ஷட்பலம், ஷோடசபலம் ஆகியவற்றால் அவற்றின் வலு ஆகிய அத்தனையையும் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும். ஒரு கிரகத்தின் பலன் மற்றொரு கிரகத்தின் பலனை இழக்க வைக் காது. வலுவுக்கு உகந்த வகையில் பலனில் மாறுபாடு இருக்கும். இருக்கிற கிரகம், பார்க்கும் கிரகம், பாவாதிபதி, அம்சகாதிபாதி ஆகியவற்றின் கூட்டுப் பலன் அனுபவத்துக்கு வரும். காடு என்றால், ஒரு மரத்தை மட்டுமே குறிக்காது. அதுபோல் ராசி (குவிப்பு) என்பதும் ஒரு கிரகத்தை மட்டும் குறிக்காது. இப்படி ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும். 'சூரியன் உச்சன். ஓஹோ என்று இருப்பான்...’, 'குரு உச்சன் வளமான வாழ்வு உண்டு...’ என்று சொல்ல இயலாது. மற்ற கிரகங்களின் இணைப் பில் அவர்களது தகுதி ஏற்றமும் இறக்கமுமாய் இருக்க வாய்ப்பு உண்டு.

நட்சத்திர பாதங்கள் நவாம்சகமாக உருப் பெறும். கிரக நிலையும் அம்சகமும் பிரிக்க இயலாத ஒன்று. தெளிவாகத் தெரிந்துகொள்ள தனித்தனிக் கட்டத்தில் போடுகிறோம். ஒரு கிரகத் தின் தசையில் 9 கிரகங்களுக்கும் பங்குண்டு. புத்தியிலும் அந்தரத்திலும் 9 கிரகங்களும் இரு முறை இணைந்திருக்கும். 9 கிரகங்களுடன் இணைந்த பலன் தசாநாதனில் தென்படும். இங்கும் கூட்டுப்பலனே கோலோச்சும். உடலுறுப்பு களில் தோன்றும் உபத்திரவம் ஒட்டுமொத்த உடலோடு இணைந்திருக்கும். தாக்கம் எங்கு இருந்தாலும் மனத்தையும் பாதிக்கும். பாதிப்பு லக்னத்துக்கு உடையவனில் தென்படும்.
கணிதம் கிரகங்களின் அமைப்பை வெளியிடும்; பலன் சொல்லாது. தற்போது விஞ்ஞானம் கணினி வழியாக அடிப்படை கணிதத் தகவல்களை திரட்டித் தருகிறது. ஆனாலும் பலன் சொல்லும் அளவுக்கு கணினி தற்போது முன்னேறவில்லை. சூழலுக்கு உகந்தவாறு, அந்த நொடியில் கிரகத்தின் செயல்பாடுகளை வைத்து ஊஹாபோஹங்களுடன் பலன் மாறுபடும். அதை கணினியில் திணிக்கும் முறை இன்னும் உருவாகவில்லை. திடீரென ஒரு பிரச்னையைச் சந்திக்கும் தருணத்தில், சிந்தனை செயல்பட்டு அதிலிருந்து விடுபட வழிகாண வேண்டும். இதை, 'ப்ரத்யுத்பன்னமதி’ என்கிறது சாஸ்திரம். இப்படிச் செயல்பட வேண்டுமெனில், கணினி மனிதனாக மாறினால் மட்டுமே இயலும்.

மனத்தின் போக்கு எப்படியெல்லாம் செயல் படும் என்பதை வரையறுக்க இயலாது என்கிறது சாஸ்திரம் (சிந்த்யம் மன:). 12 பாவ பலன்களும் லக்னத்துடன் இணைத்துச் சொல்லப்பட வேண்டும். இங்கும் கூட்டுப் பலன்தான் நடைமுறைக்கு வரும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய இயலும்; ஆயுள் இருந்தால் மட்டுமே கிரகங்கள் சுட்டிக்காட்டும் பலன்கள் அனுவத்துக்கு வரும் என்கிறது ஜோதிடம் (பூர்வம் ஆயு: பரீக்ஷேத பச்சாத்லக்ஷணமாதி சேத்). ஆயுள் இல்லாத வனுக்கு கிரக அமைப்பில் சொல்லும் பலன்கள், யோகங்கள் அத்தனையும் வீணாகிவிடும்.

நீச பங்கராஜ யோகம், பஞ்சமஹாபுருஷ யோகம், கஜகேஸரி யோகம், சசிமங்கள யோகம் - இப்படி நீண்ட பட்டியல் ஜாதகத்தில் தென்படுவதைப் பார்த்து, அத்தனை யோகங் களும் அனுபவத்துக்கு இருப்பதால், அவனுக்கு ஆயுள் இருந்தே ஆகவேண்டும் என்ற கோண லான முடிவு தவறு. 5-ல் குரு, 7-ல் சனி, 8-ல் செவ்வாய் - இப்படி எண்ணிக்கையை வைத்து பலன் சொல்லும்போது, ராசியின் தரத்தில் மாறுபட்ட பலனை வெளியிடுவது, முனிவர்களது சிந்தனையை அலட்சியப்படுத்துவதாகும். கேந்திரம், த்ரிகோணம், உபசயம், அபசயம், ஷஷ்டாஷ்டகம், தவித்வாதசகம், சத்ரு, மித்திரன், சமம், பாதகாதிபதி, யோக காரகன் போன்ற விஷயங்களை முனிவர்கள் வரையறுத்துக் கூறும்போது, அதில் நமது புதுச் சிந்தனையைப் புகுத்தினால், பலனை எட்டுவதில் தடுமாற்றம் ஏற்படும். முனிவர்கள் சிந்தனையை ஆராய்ந்து தெரிந்து கொள்ளும் தகுதி இருக்க வேண்டும். நாமே புதுச் சிந்தனையை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மனதின் சிந்தனை எப்படியெல்லாம் செயல் படும் என்பதை ஒட்டுமொத்தமாக அறிந்த பிறகே அவர்களின் சிந்தனை எழுந்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். தனிமனித னின் அனுபவத்தை வைத்துப் பலனை இறுதி செய்யக்கூடாது. ஒவ்வொரு மனிதனிலும் அனுபவம் மாறுபட்டு இருக்கும். பலனை வைத்துக் காரணத்தை இறுதி செய்யக் கூடாது; காரணத்தை வைத்து பலன் சொல்ல வேண்டும். ஒரு மகானின் ஜாதகத்தை வைத்து, அதற்குக் காரணத்தை இறுதி செய்வது பொருந்தாது. குழந்தை பிறந்ததும் இவன் மகான் ஆவான் என்று சொல்லத் திறமை இருக்க வேண்டும். ஜவஹர்லால் நேருவின் பெருமையை அனுபவ த்தில் உணர்ந்தபிறகு, அவரது ஜாதகத்தை ஆராய்ந்து பெருமைக்குக் காரணத்தை வெளி யிடுவது சுலபம். அவர் பிறந்தபோதே, அவர் இப்படி வருவார் என்று சொல்வது திறமை.

அனுபவ ஜோதிடம் என்பது ஜோதிடத்தின் தரத்தைத் தாழ்த்திவிடும். ஒரு நொடியில் பலன் சொல்லும் திறமை நம்மில் இன்னும் வளர வில்லை. குரு- சிஷ்ய பரம்பரையில் கற்க வேண்டிய கல்வி, ஜோதிடம். 'ஹாபி’யாக அதை அறிந்து அறிஞனாக இயலாது. புத்தகக் கல்வியும் முழு அறிவைப் புகட்டாது. பல நுணுக்கங்களை அறிந்து செயல்பட குருவிடம் பயில வேண்டும். ஆண், பெண்ணிடம் குடி கொண்டிருக்கும் நற்குணங்களையும், பண்பை யும் அறிந்த பிறகு, பொருத்தத்தில் இறங்க வேண்டும். வெறும் ஜாதகப் பொருத்தம் இணைப்பை உறுதி செய்யாது. செல்வச் செழிப்பு, குழந்தைச் செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றை உறுதி செய்ய லக்னாதிபதி, 2-ஆம் பாவாதிபதி, 5-ஆம் பாவாதிபதி இவற்றை மட்டும் பார்த்தால் போதாது. 12 பாவங்களையும், அத்தனை பாவங்களுக்கும் லக்னாதிபதியின் இசைவான இணைப்பையும், அதன் வலுவையும் ஆராய்ந்து சொல்லவேண்டியிருக்கும்.

'நான் யார்’ என்று புரிந்துகொள்ள ஜாதகம் உதவும். கல்வி மற்றும் முயற்சியால் கிடைக்க வேண்டிய பெருமைகளுக்கு ஜாதகம் உதவாது. படிக்காதவனுக்கு பாக்கியம் இருந்தாலும் உயர் பதவி மதிப்பளிப்பதில்லை. பேசாமடந்தையான அதிகாரிகளும் செயல் திறனற்ற பணியாட்களும் தென்படுவது உண்டு. எல்லாம் நிறைந்த மனிதனிலும் மனம் அமைதி பெறவில்லை; ஏழையிலும் மனம் தடுமாறுவதில்லை. ஆன்ம சோதனை செய்வற்கு ஜாதகம் பயன்படுகிறது. நிரம்பி வழியும் ஆசையில் மிதப்பவனுக்கு ஜோதிடம் பயன் தராது. தகுதி இல்லை என்றாலும், எப்படியாவது அந்த பலனைப் பெறுவதற்கு ஜாதகம் பயன்படாது.

நமது விருப்பத்தை நிறைவேற்ற ஜாதகம் பயன்படாது. குறைகளை அகற்றி நிறைவை எட்டி மகிழ்ச்சியைச் சுவைக்க ஜாதகம் பயன்படும். உலகவியல் சுகபோகங்களைச் சுவைத்து மகிழ ஜாதகத்தில் இடமில்லாத வேளையில், அதை எதிர்த்து பரிகாரம் வாயிலாக செயல்பட்டு வெற்றி பெறலாம் என்கிற பரிந்துரை மாயை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதப்பண்பில் உயர்ந்து, தேவனாக மாறி, உலகுக்குப் பயன்பட்டு நிறைவு பெறுவதுதான் ஜாதகத்தின் குறிக்கோள்.

No comments:

Post a Comment