Sunday, May 12, 2013

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?


பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி  திருதியை.சித்திரை  மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.   சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.    எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர்.  அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது. பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாளான திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. அதிலும் தமிழ் மாதத்தில் , சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். (அதனுள் காசுகளைப் போடுவது, காசுகளைப் பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம்.) கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வையுங்கள்.

நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடிவந்துவிடும். முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணுலட்சுமி, சிவன்பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது. அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள். அதன் பின்னர் மீண்டும் தூப தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். உண்ணாவிரதம் இருப்பது, எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தைப் பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காய், மற்ற பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்: இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே. வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும்.  தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.  அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியும் அதன் வழிபாட்டு அமைப்பும்: அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில்  முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

உடல் ஊனமுற்றவர்கள் மிகவும் குண்டாக இருப்பவர்களுக்கு அருளும் விசேஷமான அட்சய திருதியை பூஜை!  ஸ்ரீ சனீஸ்வரர் மானுட ரூபத்தில் விளங்குளத்தில் அட்சய திருதியை அன்று பிட்சை ஏற்று. அன்னதானம் அளித்துத் தனக்கு ஏற்பட்ட ஊனக் குற்றங்களைப் போக்கிக் கொண்டார். எனவே, உடல் ஊனமுற்றவர்கள். மிகவும் குண்டாக இருப்பவர்கள் திருதியைத் திதி நாட்களில் மேற்கண்ட அட்சயத் திரிதியைத் தலங்களில் மற்றும் ஸ்ரீ சனீஸ்வரர் தனிச் சன்னதி கொண்டுள்ள இடங்களில் ஸ்ரீ சனீஸ்வரர் தனிச் சிறப்பு கொண்டுள்ள இடங்களில் ஸ்ரீ சனீஸ்வரருக்கு நவதானியங்களும் ஏனைய பருப்பு வகைகளும் பதித்த சந்தன அட்சயக் காப்பும் சார்த்தி முழு முந்திரி பாதாம் பருப்புகளால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் உடல் வகைத் துன்பங்கள் தணியலாகும். வழிபாட்டிற்குப் பிறகு தான்யங்களையும் முந்திரிகளையும் தானமாக ஏழைகளுக்கு அளித்திடுக!

அட்சய திரிதியை தினத்தன்று 27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய கடவுள் விவரம்:

அஸ்வினி, மகம், மூலம்: விநாயகர்
பரணி, பூரம், பூராடம்: ரங்கநாதர்
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்: சிவன்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்: துர்க்கை
திருவாதிரை, சுவாதி, சதயம்: பைரவர்
புனர்பூசம், விசாகம், பூராட்டாதி: ராகவேந்திரர்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி: சிவன்
ஆயில்யம், கேட்டை, ரேவதி: பெருமாள்

அட்சய திரிதியையன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்:

அஸ்வினி  கதம்ப சாதம் தானம்; ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்
பரணி  நெய் சாதம் தானம், ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்
கிருத்திகை  சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்
ரோகிணி  பால் அல்லது பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்
மிருகசீரிஷம்  சாம்பார் சாதம் தானம், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்
திருவாதிரை  தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம்
புனர்பூசம்  தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்
பூசம்  மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்
ஆயில்யம்  வெண்பொங்கல் தானம்; பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலாம்
மகம்  கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்
பூரம்  நெய் சாதம்; மன நோயாளிகளுக்கு உதவலாம்
உத்திரம்  சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம்
ஹஸ்தம்  பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்
சித்திரை  துவரம்பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்
சுவாதி  உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம். 
விசாகம்  தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்
அனுஷம்  மிளகு கலந்த சாதம்;வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம்
கேட்டை  வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு கொடுக்கலாம்
மூலம்  கதம்ப சாதம் தானம்; ஏழைகளுக்கு உதவலாம்.
பூராடம்  நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம். 
உத்திராடம்  சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்
திருவோணம்  சர்க்கரை கலந்த பால் தானம்; வறுமையிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்
அவிட்டம்  சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்
சதயம் உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்
பூரட்டாதி  தயிர் சாதம் தானம்; பிறகுக்கு இயன்ற உதவி செய்யலாம்
உத்திரட்டாதி  மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது. 
ரேவதி வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது. பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.

பொதுவாக அட்சயதிரிதியை நாளில் தானம் செய்வது சிறந்தது. ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் செல்வவளம் பெருகும். பழவகைகளை அளித்தால் உயர்பதவி கிடைக்கும். வெயில் வெம்மை தீர குடை, விசிறி, காலணி வழங்கினால் இன்பவாழ்வு உண்டாகும். ஆடை தானம் செய்ய ஆரோக்கியம் கூடும். தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வி வளர்ச்சி பெருகும். தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும். தானியங்களை வழங்கிட விபத்து, அகாலமரணம் நேராது. அன்று, பசுவிற்கு உணவளித்தால்  சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.

அட்சய திரிதியையன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளைப் போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தைக் கொண்டு வரும் அம்சமாகும். இது சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும். சாபம் பெற்று தேய்ந்துபோன சந்திரன், அட்சய திரிதியை தினத்தன்று அட்சய வரம் பெற்று மீண்டும் அட்சய திரிதியை தினத்திலிருந்து வளரத் தொடங்கினான். பகீரதனின் கடுந்தவத்தால் ஆகாயத்திலிருந்து இறங்கிய கங்கை, அட்சய திரிதியை நாளில்தான் பூமியைத் தொட்டது. பாண்டவர்கள் வனவாசத்தின்போது அட்சய பாத்திரம் பெற்றதும், மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றதும் அட்சய திரிதியை நாளில்தான். திருமால் மார்பில் என்றும் நீங்காமலிருப்பதற்கான வரத்தை அட்சய திரிதியை தினத்தன்று தான் மகாலட்சுமி பெற்றாள். அட்சய திரிதியை தினத்தன்றுதான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

கும்பகோணம்பட்டீஸ்வரம் அருகிலுள்ள முழையூர் பரசுநாதர் ஆலயத்தில், அட்சய திரிதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அச்சமயம் சிவனை தரிசித்தால் செல்வம் பெருகுமென்பது நம்பிக்கை.  அட்சய திரிதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய்ச் சேருமென்பது ஐதீகம். எனவே அன்றைய தினம் செய்யப்படும் பித்ருக் கடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பராசக்தியின் அம்சமான சாகம்பரிதேவி இவ்வுலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. ஒரு அட்சய திரிதியை தினத்தன்றுதான் அவர் இவற்றை உருவாக்கினாராம்.

அட்சய திரிதியை அன்று ஆல இலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபித்து கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். அட்சய திரிதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும். அன்றைய தினம் மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கலாம் பிறகு நாள்தோறும் 108 முறை சொல்லிவந்தால் பார்வதி பரமேஸ்வரரின் பூரண அருள் கிட்டும்.

அட்சய திரிதியை வழிபாடு!

*செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிக்குரிய நாளாக இருப்பதால் லட்சுமி சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி செந்தாமரை மலரால் அர்ச்சிப்பது நன்மை அளிக்கும்.
*கிருஷ்ணருக்கு குசேலர் அவல் அளித்த நாள் என்பதால், காய்ச்சிய பாலுடன் அவல், வெல்லம் சேர்த்து கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்வது சிறப்பு.
*பிதுர்வழிபாட்டுக்குரிய நாளாக அட்சய திரிதியை திகழ்கிறது. இந்நாளில் பிதுர்தர்ப்பணம் செய்வதும், பசுவிற்கு கீரை,பழம் கொடுப்பதும் நல்லது. 
*
*லட்சுமி நாராயணருக்கு துளசியும், யவை என்னும் தானியத்தையும் (கோதுமை போல் இருக்கும்) படைத்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். யவை பூஜை சாமான் கடைகளில் கிடைக்கும்.

எல்லா பொருளும் வாங்குங்க!
அட்சய திரிதியை நாளில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது சிறப்பு. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும், புதிதாக தொழில் தொடங்கவும், புது முயற்சிகளில் ஈடுபடவும், கட்டடப்பணி துவங்கவும் இந்நாள் உகந்ததாகும்.  தங்க ஆபரணங்களை அட்சய திரிதியை நாளில் விருப்பத்துடன் வாங்குவர். மஞ்சள், உப்பு, பலசரக்கு சாமான்கள்,வழிபாட்டுக்குரிய பூஜை சாமான்கள், புத்தாடை, புத்தகம், டி.வி., வாஷிங்மிஷின், ஏ.சி., போன்ற மின் சாதனங்கள், டூவீலர், கார் போன்ற வாகனங்கள், செங்கல், டைல்ஸ் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், கலைபொருட்கள் இப்படி எதையும் வாங்கலாம். இதன் மூலம் ஆண்டு முழுதும் சுபிட்சமாக அமையும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment