கோயிலில் விழா நடந்தால், தலையைத் தூக்கி...க் கொண்டு "நான் முந்தி,நீ முந்தி என தீபாராதனையைப் பார்க்க முண்டியடிப்பவர்களைப் பார்க்கிறோம்.
இப்படியெல்லாம் செய்தால் தான் கடவுள் அருள்வாரா என்ன! எங்கும் இருக்கிற கடவுளைக் காண மனம் மட்டும் போதாதா என்ன! ஒரு கதையைக் கேளுங்க!
காட்டில், ஒரு முனிவர் குடில் அமைத்திருந்தார். ஒருமுறை, அவ்வழியாக வந்த சிலர் முனிவரைப் பார்த்தனர். அவரது தேஜஸான முகம் அவர்களைக் கவர்ந்தது.குடிலை நோட்டமிட்ட அவர்கள், ""சுவாமி! நீங்கள் ஒரு ஞானப்பெருங்கடலாக இருந்தும், குடிசைக்குள் ஒரு சுவாமி சிலை கூட வைத்துக் கொள்ளவில்லையே. இது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது, என்றனர்.
முனிவர் சிரித்தார்.""நீங்கள் சொல்வது எனக்கு புதிராக உள்ளது. இந்தக் குடிசைக்குள் ஒருவர் மட்டுமே தங்க முடியும். இரண்டாவது நபருக்கு இங்கு இடமில்லை, என்றார்.வந்தவர்களுக்கு அவரது பதில் புரியல்லை.
தங்களுக்குள்,"" இவர் ஏதோ பைத்தியம் போல் தெரிகிறது. அளவுக்கதிகமாக தியானம், ஆன்மிகப்பயிற்சிகள் எடுத்து மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது போலும்! இவரிடம் இனியும் பேசி பயனில்லை. நாம் கிளம்பலாம், என சென்று விட்டனர்.
சில ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் அவர்கள் அந்தப்பக்கமாக வந்து, முனிவரை வணங்கினர். "இப்போதாவது அவருக்கு பைத்தியம் தெளிந்திருக்கிறதா என பார்க்கலாம் என்று பேச்சுக்கொடுத்தனர்.
ஆனால், வந்தவர்களுக்கே பைத்தியம் பிடிக்கும் அளவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த பக்தர்கள் தங்களுடன் ஒரு சிலையை எடுத்து வந்திருந்தனர்."
"சுவாமி! இந்த சிலையை உங்கள் குடிசையில் வைத்துக் கொள்ளுங்கள். வழிபாட்டுக்கு உதவும், என்றனர்.முனிவர் அவர்களிடம்,"" நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே! இந்தக்குடிலில் ஒருவர் தான் தங்க முடியும். இங்கே இறைவன் ஏற்கனவே குடியிருக்கிறான். நான் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, என்றார்.
வந்தவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர். ""சுவாமி! அங்கே எந்த சிலையும் இல்லை. நீங்களும் உயிருடன் இருந்துகொண்டே இறந்து விட்டதாகச் சொல்கிறீர்கள்? தெளிவாகப் பேசுங்கள். இல்லாவிட்டால், எங்கள் தலையே வெடித்து விடும், என்றனர்.
முனிவர் அவர்களை அமைதிப்படுத்தினார்.""நான் இறந்து விட்டதாக குறிப்பிட்டது, எனது உடலை அல்ல. எனக்குள் இருந்த"நான் என்ற எண்ணம் இறந்து போனது. "நான் என்ற எண்ணம், எப்போது மனதில் இருந்து விடுபடுகிறதோ, அப்போதே அந்த மனதை இறைவன் நிரப்பி விடுவான்.
எனவே, அவன் என் மனதில் நிறைந்திருக்கிறான். தூணிலும், துரும்பிலும் குடியிருக்கிறான் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இந்தக் குடிலுக்குள்ளும் அவன் நிறைந்திருக்கிறான்.
பார்த்தீர்களா! கடவுள் எங்கும் இருக்கிறார். அவரை நெஞ்சில் நிரப்பிக் கொண்டாலே போதும். நம்மோடு எப்போதும் இருப்பார்.
No comments:
Post a Comment