Wednesday, May 22, 2013

உண்மையான மூலதனம் எது?


அந்தப் புகழ் பெற்ற எழுத்தாளரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று அந்த இளைஞன் வந்திருந்தான். வந்தவன் ரொம்ப நேரம் எதுவும் பேசாமல் மவுனமாக உட்கார்ந்திருந்தான். எழுத்தாளர் என்ன விஷயம் என்று வற்புறுத்திக் கேட்கவே, ""அய்யா! நான் உங்களிடம் யாசகம் கேட்டு வரவில்லை. உழைத்து முன்னேறவே விரும்புகிறேன். அதற்குத் தொழில் துவங்க கொஞ்சம் மூலதனம் தேவைப்படுகிறது. நீங்களோ புகழ் பெற்ற எழுத்தாளர். உங்கள் எழுத்தின் மூலம் நிறையச் சம்பாதித்தும் இருக்கிறீர்கள். கொஞ்சம் பணத்தைக் கடனாக எனக்குக் கொடுத்தால் அதன் மூலம் தொழில் செய்து உங்கள் கடனையும் அடைத்துவிடுவேன்'' என்றான்.

எழுத்தாளர் சிரித்தபடி, ""உழைத்து முன்னேற நினைக்கிறாய் என்பது மிகப்பெரிய விஷயம்தான். ஆனால் உனக்குக் கடன் தர வேண்டுமானால் ஏதாவது நீ அடமானம் வைத்தால்தான் அது முடியும். உன்னிடம் அடமானம் வைக்க என்ன இருக்கிறது?'' என்று கேட்டார்.

""அது இருந்தால் உங்களிடம் கடன் கேட்டே வந்திருக்க மாட்டேனே'' என்றான் அந்த இளைஞன்.

""சரி உன்னிடம் இருப்பதையே கேட்கிறேன். அதைக் கொடு. பணத்தைப் பெற்றுக்கொண்டு செல். உதாரணத்திற்கு உன் சுண்டு விரலைக் கொடு'' என்றார் எழுத்தாளர்.

""சுண்டு விரலா?'' என்று திகைத்தான் இளைஞன்.

""சரி. சுண்டு விரலைக் கொடுக்க இஷ்டப்படாவிட்டால் ஒரு கண்ணைக் கொடு'' என்றார் எழுத்தாளர்.

எழுத்தாளர் நம்மைக் கிண்டல் செய்கிறார். இவரிடம் பணம் பெயராது என்று எண்ணிய அந்த இளைஞன் கிளம்பினான்.

""தம்பி பொறு. உன் உறுப்புகளைப் பெற்றுக்கொண்டு உன்னை ஓர் ஊனமுள்ளவனாக ஆக்க வேண்டும் என்பது என் ஆசையில்லை. உனக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிக் கேட்டேன். உன்னிடம் விலை மதிக்க முடியாத எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. அவைதான் உனக்கு மூலதனம்! அவற்றைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற நீ முயற்சிக்க வேண்டும். கண், காது, கை, கால், அறிவு என்று எத்தனையோ மூலதனம் உன்னிடமிருந்தும் அதன் அருமை தெரியாமல் பணம் என்ற மூலதனத்தைத் தேடி அலைகிறாய். நம் மூதாதையர்கள் அத்தனை வெற்றிகளையும் பணத்தைக் கொண்டு அடையவில்லை. அதை நீ புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் அந்த எழுத்தாளர்.


உண்மையான மூலதனம் எது என்று புரிந்துகொண்ட அந்த இளைஞன் பிரகாசமான முகத்துடன் அவருக்கு நன்றி கூறி விடை பெற்றான். அந்த எழுத்தாளர் புகழ்வாய்ந்த டால்ஸ்டாய்!

("சரித்திரம் பேசுகிறது' என்ற நூலில் ஜீவபாரதி)

No comments:

Post a Comment