Thursday, May 9, 2013

சாதனை புரிய கனவு காண்போம்‘நமது இன்றைய செயல்களுக்கு நேற்றைய கனவுகளே பொறுப்பு’ என்பது ஆங்கிலக் கவிஞர் கீட்ஸின் அழகான கவிதை வரிகள். இவ்வரிகளின் தாக்கம்தான் உலக அழகிப்ட்டம் வென்ற இந்திய அழகி, டயானா ஹைடனை மற்ற போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. போட்டியின் இறுதிச்சுற்றில் நீதிபிதிகள் உலகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்பும் கருத்து என என்று கேட்டபோது, கனவுகள் கடமைகளின் வேர்கள். கனவுகளிலிருந்துதான் கடமைகள் தொடங்குகின்றன. எனவே சாதனை புரிய கனவு காணுங்கள் என்று தெளிவாக பதில் உரைத்து, மனங்களையும், மனம்கவரும் அழகிப்பட்டத்தையும் ஒருங்க பெற்றுச் சென்றார்.

இந்த கனவு காணும் விஷயத்தில் நாம் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். முயற்சியற்ற, வேட்கையற்ற பகல்கனவு ஒருபோதும் பலன் தராது. பாரதி கூற்றுப்படி கனவு மெய்ப்பட வேண்டுமெனில் காரியத்தில் உறுதி வேண்டும். நமக்கு என்ன தேவை என்பதில் தெளிவும் அதைப் பூர்த்தி செய்வதில் உறுதியும், செயல்படுத்த தெளிவான திட்டமும், நிறைவேற்றுவதில் கால அட்டவணையுடன் கூடிய விடா முயற்சியும் தேவை. எந்தத் துறையில் நாம் உன்னத நிலையை அடைய விரும்புகிறோமோ, அந்த நிலையை அடைந்துவிட்டதாக கனவு காண்பது, வெற்றி நிலையை அடைவதற்குத் தேவையான உறசாகத்தைக்கொடுக்கிறது என்பது உளவியல் ஆராய்ச்சியாளர் கருத்து. மேலைநாடுகளில் இதற்காக பிரத்தியோகமாக கனவு காணும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெறுபவர், தாம் எண்ணிய சாதனை நிலையை எய்துகின்றனர் என்பது நிரூபிக்கப்பட்ட வியத்தகு உண்மையாகும். இது சாத்தியமா என்றால் நிச்சயமாக சாத்தியம்தான்.

மனதில் நாம் விதைக்கும் நம்பிக்கை வார்த்தைகள் உற்சாக உணர்வை ஏற்படுத்தி, திறமைகளை புடம் போடுகின்றன. வெற்றிகளை கனவு காணுங்கள். அவை தானாக உங்களைத் தேடிவரும் என்ற வார்த்தைகள் எவ்வளவு அர்த்தம் பொதிந்தவை வெற்றிகளை கனவுகளாய்க் காண்பது எப்படி?கனவுகளை எவ்வாறு நனவாக்குவது? இதுபோன்ற கேள்விகளுக்கும் உளவியல் வல்லுநர்களால் சான்றுரைக்கப்பட்ட வழி ஒன்று உண்டு. நாம் அடைய நினைக்கும் உயர்நிலையை நம் எண்ணங்களை வாக்கியங்களாய் அமைத்து நம் பார்வையில் படும்படி வைப்பது நல்ல பலனைத் தரும். ஏனெனில் எது கண்களில் படுகின்றதோ அது மனதில் ஆழமாகப் பதிகின்றது. மனம், தொடர்ந்து எதை நினைக்கின்றதோ அதுவாகவே நாம் ஆகிறோம். வெற்றியின் முதல் கட்டம் நம்மை நாமே வெற்றியாளராக பார்ப்பதுதான். இதுமட்டும் வெற்றிக்கான காரணி ஆகிவிடாது. கனவில் கண்டு மகிழ்ந்த காட்சியும் கண்முன்னே தெரியும் வாசகங்களும் நிஜம் பெற சரியான திட்டம் தேவை.

வெற்றிக்கான மூன்று முக்கிய காரணிகள்

1) தெளிவான குறிக்கோள், 2) நேர நிர்வாகம் 3) உறுதியான செயல்பாடு

இவையே வெற்றியின் முப்பரிமான நிலைகளாகும். சாதனையாளரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டும் களமும் இதுதான்.

செயல்படத் தொடங்கும்போது நம் பலங்கள் மற்றும் பலவீனங்கள் கருத்தில் கொள்வது நல்லது. நம் பலங்கள் பல சமயங்களில் நமக்குத் தெரியாமல் போகலாம். பலவீனங்களை அசட்டுத் துணிச்சலில் நாம் அலட்சியப்படுத்திவிடலாம். எனவே பாரபட்சமற்ற சுய ஆய்வு தேவை. எத்தகைய உயர்நிலையை அடைவதாக இருந்தாலம் ஒவ்வொருவரும் தங்களது பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள் இடையில் எதிர்கொள்ள வேண்டிய இடர்பாடுகள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து செயல்படுவது மிக அவசியம். மேலேண்மையில் இதை SWOT analysis என்று மிக முக்கியமாகக் குறிப்பிடுகின்றனர்.

S – Strengths
W- Weaknesses
O- Opportunites
T- Threats

தனிமனித வெற்றியாக இருப்பினும் சரி, நிறுவனத்தின் வெற்றியாக இருப்பினும் சரி, இந்த SWOT analysis பலன் தருவதாகும்.

‘ஒவ்வொரு செதுக்கப்படாத கல்லிலும் நன்றாகச் செதுக்கி வடிவமைக்கப்பட்ட ஒரு அழகான முழுமையான, அப்பழுக்கற்ற சிலையை நான் காண்கிறேன். அந்த அழகுச் சிலையை அழகு கண்களுக்குப் புலப்படும்’ என்கிறார மைக்கேல் ஏஞ்சலோ, நம் வாழ்க்கைச் சிலையும் அத்தகையதே.

கனவுகள் காண்போம்.. அவற்றில் காணும் உயர்நிலையை விருப்பமாக்க் கொள்வோம். விருப்பங்களை எண்ணங்களாக்கி, அவற்றிக்கு வடிவம் தந்து வார்த்தைகளாக்குவோம். வார்த்தைகள் நம் வாழ்க்கையின் தாரக மந்திரமாகட்டும். ஒலி அலைகளுக்கு செயல்வடிவம் உழைப்போம். நம் கனவுகள் நிச்சயம் மெய்ப்படும்.

No comments:

Post a Comment