அட்சயதிரிதியை அன்று தொடங்கிய செயல்கள் இனிதே நிறைவேறும் என்பதற்கு மகாபாரதமே உதாரணம். வேதவியாசர், விநாயகரின் உதவியுடன் பாரதத்தை எழுதத்தொடங்கியது இன்று தான். அட்சய என்றால் வளர்தல். அதனால் தான் இந்த காவியம் இலக்கியங்களிலேயே மிகவும் பெரியதாக உள்ளது. அன்று தொடங்கி இன்றுவரை அழியாத காவியமாயும் மக்கள் மனதில் நீகா இடம் பெற்று விட்டது. இதனால் தான், அட்சய திரிதியை அன்று வாங்கும் எதுவும் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை வந்தது. மேலும், எந்தச் செயலையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கவேண்டும் என்பர். அந்த விநாயகரே மகாபாரதத்திற்கு பிள்ளையார்சுழி போட்டு ஆரம்பித்து வைத்தார். அதனால், அட்சய திரிதியை அன்று லட்சுமி கணபதி வழிபாடு செய்வது மிகுந்த பலன் தரும்.
அட்சய! அட்சய!
தர்மர் கவுரவர்களுடன் சூதாடி நாட்டையும், மனைவி திரவுபதியையும் இழந்தார். துரியோதனன் திரவுபதியை மானபங்கம் செய்ய உத்தரவிட்டான். பிதாமகர் பீஷ்மர், ஆச்சாரியார்கள் அவையில் இருந்தும் இந்த அக்கிரமம் அரங்கேறியது. செய்வதறியாத திரவுபதி ஆபத்பாந்தவனான கிருஷ்ணனை பிரார்த்தித்தாள். சங்கு சக்ரகதாபாணி ஸ்ரீமத் துவாரகா நிலய அச்சுதா! ஹே கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்!! என்று சரணடைந்தாள். இந்த சமயத்தில் துவாரகையில் கிருஷ்ணர் தேவியருடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். ஒரு கணம் தாமதித்தாலும் திரவுபதியின் மானம் பறிபோகும் என்பதால் தன் கையை உயர்த்தி அட்சய! அட்சய! என்றார். அட்சய என்றால் வளர்வது என்பது பொருள். திரவுபதியின் ஆடையை வளரச் செய்தார் கிருஷ்ணர். அபலையின் மானம் காத்த அந்தநாளே அட்சயதிரிதியை.
துரியோதனனின் சூழ்ச்சியினால், பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்ட போது, ஆகாரத்துக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க அவர்களின் முக்கிய ஆலோசகரான கண்ணன், திரவுபதியிடம் இருந்து அந்த அட்சய பாத்திரத்தை வாங்கி அவர்களிடம் கொடுத்தார். அவர்களுக்குத் தேவையானபோது அந்த அட்சய பாத்திரத்தின் மூலம் அள்ள அள்ளக் குறையாத அன்னங்களை, அவர்கள் விருப்பப்பட்ட உணவுப்பொருட்களைப் பெற்று சந்தோஷமாகப் புசித்து வந்தார்கள். இதை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
அள்ள அள்ள தானம்: கோவலன், மாதவி இருவருக்கும் பிறந்த பெண் மணிமேகலை. மணிமேகலை என்பது கோவலனின் குலதெய்வம். மாதவி தன் பெயரில் அமைந்திருக்கும் தெய்வத்தைக் காண மணிபல்லவத்தீவுக்குப் புறப்பட்டாள். மணிமேகலா தெய்வத்தை வழிபட்டு அதனிடமிருந்து அட்சயபாத்திரத்தைப் பெற்றாள். கற்புக்கரசியான ஆதிரை யிடம் முதல்பிச்சை ஏற்றாள். அதில் அள்ள அள்ள குறையாமல் உணவு வந்தது. அதன் மூலம் மணிமேகலை பசித்தவர்களுக்கெல்லாம் உணவிட்டு சேவை செய்தாள். இதைப் போலவே, திரவுபதியிடமும் அட்சயபாத்திரம் இருந்தது. அதைக் கொண்டு அவளும் அன்னதானம் செய்ததாக மகாபாரதம் கூறுகிறது.
செல்வம் தரும் காணிக்கை: கிருஷ்ணரும், குசேலரும் பால்ய வயதில் குருகுலத்தில் ஒன்றாக படித்தவர்கள். அதன்பின் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. கிருஷ்ணர் ருக்மணியைத் திருமணம் செய்து கொண்டு துவாரகை மன்னராக இருந்தார். குசேலரோ திருமணமாகி பல குழந்தைகளுடன் வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். தன் நண்பரான கிருஷ்ணரைச் சந்திக்கச் சென்றார் ஒரு கந்தை துணியில் கொஞ்சம் அவல் வைத்திருந்தார். குசேலர் கொடுத்த அவலை வாயில் போட்டுக் கொண்டார் கிருஷ்ணர். அவலை அவர் சுவைத்தவுடன், குசேலர் குபேரரின் மாளிகை போல மாறியது. நவரத்தினமும், பொன், மணியும் நிரம்பி வழிந்தன. அந்த நாளே அட்சய திரிதியை என்ற நம்பிக்கை உள்ளது. இந்நாளில், கடவுளுக்கு வழங்கும் சிறுகாணிக்கை கூட நமக்கு பல மடங்கு செல்வத்தை தரும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது.
No comments:
Post a Comment