வாழ்க்கையின் ஒரு புறம் நீங்கள் நிற்கிறீர்கள். மறுபுறம் வெற்றி நிற்கிறது. இரண்டிற்கும் இடையே இடைவெளி. இடைவெளியை நிரப்பி வெற்றியை அடைய உறுதுணை புரிவது எது? தலைவிதியா? கடின உழைப்பா?
பெரும்பாலானோர் வெற்றி என்பது தலைவிதியையும், கடின உழைப்பையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை அனுபவத்தை வைத்துப் பார்த்தால் வெற்றி பெறபல தன்மைகள் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய பல தன்மைகள் என்னவென்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆயிரம் மைல் தூரப் பயணம் கூட ஒற்றை, முதல் அடியுடன் தான் தொடங்கும் என்பதைப்போல முதல் அடியை எடுத்து வையுங்கள் உங்கள் வெற்றிக்காக….
பில்கேட்ஸும் கற்பனை சக்தியும்:
நிஜத்தில் உணர்ந்திடாத ஓர் அனுபவத்தை மனக்கண்ணால் காண்பதே கற்பனை. பில்கேட்ஸ், மிகப்பெரிய அளவில் சிந்திக்கவும், தான் அடைய வேண்டிய இலக்கை முன் கூட்டியே மனத்திரையில் காணவும் ‘கற்பனையின் சக்தி’ தான் உதவியது. பள்ளிக்குப் போவதே கசப்பான விஷயமாக இருந்த கேட்ஸுக்கு ஒரு கணினியை கண்டது வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய 13 வயதில் நண்பர்களுடன் இணைந்து ‘புரோக்ராமர்ஸ் குரூப்’ என்றகுழுவைத் தொடங்கினார். அதன்பிறகு ‘ஒவ்வொரு மேஜையிலும் கணினி. ஒவ்வொரு கணினியிலும் மைக்ரோசாஃப்ட்’ என்றலட்சியத்தை கற்பனை செய்து கொண்டார். அந்தப் பார்வையுடனே மைக்ரோசாஃப்ட்டைத் தொடங்கினார். இன்று அவரது லட்சியம் நிறைவேறி இருக்கிறது.
இச்சாதனைக்குப் பின்னால் அபரிமிதமான கற்பனை சக்தியும், விடாமுயற்சியும் நிறைந்திருந்த கேட்ஸின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:
உங்களது விருப்பம் எதில் என்பதை சீக்கிரமே கண்டுகொள்ளுங்கள். பிறகு தேவையான திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். மனக்கண்ணில் எதிர்காலத்தைக் காண கற்பனை சக்தியைப் பயன்படுத்துங்கள். இலக்குகளை அடையும்வரை கடுமையாக உழையுங்கள்.
ஒபாமாவும் சொற்களின் சக்தியும்:
உணர்வின் வெளிப்பாடு சொல். உங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதன் காரணமாக சொற்கள் சக்தி வாய்ந்தவையாகின்றன. உள்ளுணர்வை வெளிப்படுத்துவதில் சொற்களே முக்கிய பங்காற்றுகின்றன. பராக் ஒபாமா பல்வேறு இணங்களைக் கொண்ட அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும், மகத்தான வெற்றி பெறவும் ‘சொற்களின் சக்தி’ முதன்மை வகித்தது எப்படி? 2009 ஜனவரி 20ல் அமெரிக்காவின் 44வது அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட ஒபாமா தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘நமக்குத் தேவை மாற்றம்’ என்றகோஷத்தை எழுப்பினார். அந்த சக்தி வாய்ந்த மந்திரச் சொல் தான் அமெரிக்க ஆப்பிரிக்கத் தலைவர் ஒருவரை முதன்முறையாக வெள்ளை மாளிகையில் குடியமர்த்தியது. ஒபாமாவிடம் இருந்து அன்பு, பலம், உறுதி என்று நேர்மறையான சொற்களே வந்தது. வெறுப்பு, பலவீனம், சந்தேகம் என்று எதிர்மறைசிந்தனை பேச்சில் தலைகாட்டவே இல்லை.
ஒபாமாவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த நேர்மறைசொற்களே உதவும். மனோபாவத்தை மட்டுமின்றி தலைவிதியையும் சொற்கள் நிர்ணயிப்பதால் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. நீங்கள் பயன்படுத்தும் நேர்மறைச் சொற்கள் பிறருக்கு எழுச்சியூட்டுவதற்கும், உங்களது வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கவும் உதவும்.
ஏ.ஆர். ரஹ்மானும் தன்னம்பிக்கையின் சக்தியும்:
மனப்போராட்டத்திற்கும், சந்தேகக் கண்ணோட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இலக்கை நோக்கி ஆர்வத்துடன் பயணிக்க வழிவகுத்து, வாழ்க்கையின் அற்புதமான மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பதுடன் கனவுகள் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருக்கும் சக்தி ‘தன்னம்பிக்கை’.
உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வர ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘தன்னம்பிக்கையின் சக்தி’ உறுதுணை புரிந்தது எப்படி? ஜனவரி 6, 1966ல் சென்னையில் ஒரு இசைக்குடும்பத்தில் திலீப் குமாராகப் பிறந்தார். 4 வயதிலேயே பியானோ வாசிக்கத் தொடங்கினார். 9 வயதில் தந்தையை இழந்தார். 11 வயதில் குடும்பத்துக்குத் துணை நிற்கவேண்டும் என்ற நிர்பந்தத்துடன் கீ-போர்ட் வாசிப்பவராக இளையராஜாவிடம் இணைந்தார். சிறுவயதில் அதிக வெட்கத்தின் காரணமாக, தனிமையில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டே பாடி பார்த்த அவர் இன்று மக்களின் முன் ஒளிவீசும் விளக்குகளுக்கு மத்தியில் பாடுகின்றார். 2008ல் இரண்டு ஆஸ்கர் விருதுகளை ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்கு பெற்றரஹ்மான் உலகப் புகழ் ‘மொஸார்ட் ஆப் மெட்ராஸ்’ன் பிரதிநிதியாக உள்ளார்
ரஹ்மானின் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்: உங்களுக்கும் உங்களது இலக்குகளுக்கும் இடையில் இடையூறாக இருப்பது உங்களது அச்சமே. அதை ஊக்கத்துடன் எதிர்கொண்டு வெல்ல கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
நீங்கள் இன்று எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல. தன்னம்பிக்கை சக்தி உடனிருக்கும் பட்சத்தில் எந்த உயரத்தையும் எட்ட முடியும்.
குறிக்கோள் சக்தியும் ஸ்ரீதரனும்:
வாழ்வின் திசைக்கு ஓர் அர்த்தத்தைத் தருகிறஎழுத்துப்பூர்வ வாக்குமூலங்களே ‘குறிக்கோள்’. சாதனைக்கான பாதையில் இருந்து விலகாமல் கவனத்துடன் பயணிக்க உதவும் எழுத்துப் பூர்வமான குறிக்கோள் குறிப்பிட்ட கால எல்லை மற்றும் உங்கள் மனதின் ஆசையை விவரிக்கிறது. கொங்கண் ரயில்வே மற்றும் டெல்லி மெட்ரோ திட்டங்களின் மூலம் அறியப்பட்ட தொழில்நுட்ப அறிஞரான திரு. ஸ்ரீதரன் அவர்களுக்கு தனது இலக்குகள் அனைத்தையும் குறித்த காலத்தில் அடைய குறிக்கோளின் சக்தியே உதவியது.
1963ல் கடல் சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை 6 மாதங்களில் பழுது பார்த்துவிட வேண்டும் என்று இந்திய ரயில்வே துறையும், 3 மாதத்தில் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று ஸ்ரீதரனின் மேலதிகாரியும் கட்டளையிட்டிருந்தனர். பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஸ்ரீதரனோ வெறும் 46 நாட்களில் வேலையை முடித்துக் கொடுத்தார். 760 கி.மீட்டர் தூர கொங்கண் ரயில்வே திட்டம், 150க்கும் மேற்பட்ட பாலங்கள், 82 கி.மீட்டர் மலையைக் குடைந்து இருப்புப்பாதை அமைத்தல் போன்றதிட்டங்களில், இலக்குகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் முடித்துக் கொடுத்தவர். திட்டப் பணியில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களை நாள்தோறும் ஆய்வுசெய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்த திரு. ஸ்ரீதரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்,
முன்னேற்றத்திற்கு உகந்த, தெளிவான, கால எல்லை வரையறுக்கப்பட்ட குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். சரியான இடைவெளிகளில் குறிக்கோளை ஆய்வு செய்துகொள்ள வேண்டும். குறிக்கோளை நோக்கிய பயணத்தில் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்வதுடன் உங்கள் குழுவையும் உற்சாகப்படுத்திக் கொண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங்கும் ஒருமுகப்படுத்துதலும்:
அலைபாய்கிற எண்ண ஓட்டங்களை ஓரிடத்தில் குவிய வைத்து, உங்களுடைய குறிக்கோளை அடைய செய்யும் சக்தி ஒருமுகப்படுத்துதல். நீங்கள் ஒரு விஷயத்தின் மீது முழுகவனத்தை போதுமான அளவிற்கு செலுத்தும்போது உங்களது செயல்திறன் மேம்படுவதுடன் குறிக்கோளையும் அடைய முடிகிறது. திரு. லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங் தனக்கு ஏற்பட்ட புற்றுநோயை எதிர்கொள்ளவும், உலகின் மிகப்பெரிய சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெறவும் ‘ஒருமுகப்படுத்துதலின் சக்தி’ வழிவகுத்தது.
1999 முதல் 2005 வரை தொடர்ந்து ஏழு முறை பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி வாகை சூடிய ஆம்ஸ்ட்ராங் புற்றுநோயில் இருந்து மீண்டுவந்தவர். 1996ல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இனி ஓராண்டிற்குமேல் உயிருடன் இருக்க வாய்ப்புகள் இல்லை என்றேமருத்துவர்கள் கூறினர். ஆனால் லேன்ஸோ, தனது நோயைப்பற்றி சிந்திப்பதைத் தவிர்த்துவிட்டு தான் ஈடுபட்டுவந்த விளையாட்டில் வெற்றிகளை குவிப்பது ஒன்றின் மீதே மனதை ஒருமுகப்படுத்தினார். இடையில் மருத்துவச் சிகிச்சையையும் மேற்கொண்ட லேன்ஸ் நோயில் இருந்து விடுபட்டு, ‘நானே வெற்றி பெறுவேன்’ என்று சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
ஆம்ஸ்ட்ராங்கின் வெற்றியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்: நீண்ட நெடிய பயணமான வெற்றியை எட்டுவதற்குப் பல தடைகளைக் கடக்க நேரிடும். அதற்கு தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, நம்பிக்கையை இழக்காமல் உற்சாகமாக பயணத்தைத் தொடர வேண்டும். உங்களுக்குத் தேவையானதில் மனதை ஒருமுகப்படுத்துங்கள். வெற்றியைத் தேர்வு செய்யுங்கள்; ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள்.
திருபாய் அம்பானியும் செயலின் சக்தியும்:
உங்கள் எண்ணங்களுக்குத் தொடர் முயற்சிகளின் மூலமாக நிஜத்தில் வடிவம் கொடுப்பதே செயல். செயல் என்பது உங்கள் குறிக்கோளை அடைவதற்குரிய பணியைச் செய்வதைக் குறிக்கும். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்திற்கு சொந்தக்காரராகத் திகழ்ந்த திருபாய் அம்பானிக்கு ‘செயலின் சக்தி’ அவரை குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்த்தியது. கிராமத்து பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்த அம்பானிக்கு, 25 ஆண்டுகளுக்குள் உலகின் கோடீஸ்வர தொழில் அதிபர்களுள் ஒருவராக வலம்வர வேண்டும் என்று எண்ணினார். பெரிதாக யோசி, மாறுபட்டு யோசி, வேகமாக யோசி, முன்னோக்கி யோசி, சிறந்தவற்றிற்கு குறி வை என்றகொள்கையை நடைமுறைப்படுத்திச் சாதித்தார்.
திருபாய் அம்பானியின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்: இலக்குகளை அடையவும், கனவு நனவாகவும் செயல்களே வழிவகுக்கும். ஒருவரது சிந்தனையும், செயலும் பெரிதாக இருக்க வேண்டும். அதுவே கனவுகள் நிறைவேறஉறுதுணை புரியும். இலக்குகளை அடைவதற்கு ஒரு சிறு செயலின் மூலம் தொடங்கினாலே போதும். அந்தச் சிறு செயலே எண்ணங்கள் நிறைவேறபாதை அமைத்துத் தரும்.
ஏழுமுறை விழு. எட்டாவதாக எழு என்றஜப்பானிய மொழிக்கு ஏற்ப இதுவரை தோல்வியே கண்டிருந்தாலும் இவர்களைப் போன்று சாதிக்க நாமும் அவர்கள் பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றுவோம். நாளை உலகம் நமக்கானது.
No comments:
Post a Comment