உங்களுடைய ஒரு மணி நேரத்திற்கான மதிப்பென்ன? என்று சிலரிடம் கேட்டால் அவர்கள் அதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்?
கேள்வி அதேதான் என்றாலும், இந்தக் கேள்விக்கான பதில் நபருக்கு நபர் மாறுபடும்.
ஆட்டோ ஓட்டுனராக இருப்பவர் ரூ. 25 அல்லது 30 என்று சொல்லலாம். வங்கியிலோ வேறு ஏதாவது அலுவலகத்திலோ பணிபுரிபவர், (மாத ஊதியம் 15,000 என்றால்) ரூ. 50 அல்லது 60 என்று சொல்லலாம். ஒரு திரைப்பட நடிகர் அல்லது நடிகை, அவருடைய ஒரு மணி நேரத்தின் மதிப்பு சில ஆயிரங்கள் என்று சொல்லலாம். சில பெரிய வியாபாரிகள், தொழில் அதிபர்கள் சிலர் லட்சங்கள் என்றும் சொல்லலாம்.
ஆக, இதற்கான பதில், சொல்லுபவர் யார்? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பதைப்
பொறுத்தது.
மணிக்கு இவ்வளவு ரூபாய் என்பது நேரத்தின் பணமதிப்பு. ஆட்டோ ஓட்டுனர், ஒரு நாள் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று வண்டியை எடுக்காவிட்டால், ரூபாய் இருநூறோ, 250-தோ இழப்பார், வங்கிப்பணியாளர், இல்லாத விடுப்பினை எடுக்க நேர்ந்தால், அவர் “லாஸ் ஆப் பே” முறையில் ஒரு நாள் ஊதியத்தினை தவறவிட நேரிடும். ஒரு வியாபாரி, சந்தையில் இருக்கும் தன்னுடைய கடையை, ஏதோ காரணங்களுக்காக ஒரு சில மணி நேரங்கள் திறக்க முடியாமல் போனால், அந்த நேரம் நடக்கக் கூடிய வியாபாரத்தினையும், அதனால் கிடைக்கக்கூடிய முழு லாபத்தினையும் இழப்பார்.
இப்படியாக தன்னிடம் இருக்கும் நேரம் என்கிற வளத்தின், பொருள் மதிப்பினை கணக்கிடுவது ஒரு முறை, இதை சிலர் செய்கிறார்கள். அவர்கள் நேரத்தின் மதிப்பு தெரிந்தவர்கள். நேரத்தினை வீணாக்க மாட்டார்கள்.
மாறுபடும் மதிப்பு
அதே நபர். அதே அளவு நேரம். ஆனால் நேரத்தின் மதிப்பில் மாறுபாடுகள் உண்டு. எப்படி என்கிறீர்களா?
அதே ஆட்டோ ஓட்டுனர். அன்று ஆட்டோக்கள் வேலை நிறுத்தம். அவர் விரும்பினாலும் வண்டி ஓட்ட முடியாது. நேரத்தின் மதிப்பு மாறுபடும். அதாவது குறையும். அதே ஓட்டுனர், அன்றும் வேலை நிறுத்தம்தான். ஒரு சின்ன வேறுபாடு. அது, ஆட்டோக்கள் வேலை நிறுத்தம் இல்லை. பேருந்துகளின் வேலை நிறுத்தம். ஆட்டோ ஓட்டுனரின் நேர மதிப்பு என்ன? பலமடங்கு கூடுதல் அல்லவா?
சூழ்நிலைகளைப் பொறுத்து நேரத்தின் மதிப்பு கட்டாயம் மாறும். ஒரு மாணவனின் மூன்று மணி நேரத்தின் மதிப்பென்ன? தேர்வுக்கு முந்தைய காலம் இப்போதுதான் பள்ளி தொடங்கியுள்ளது. தேர்விற்கு இன்னும் ஒரு முழு ஆண்டு நேரம் இருக்கிறது. அப்போது ஒரு 3 மணி நேரத்தின் மதிப்பென்ன? ஒன்றும் பெரிதல்ல. சாதாரணம். தேர்வு நெருங்குகிறது. இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. இப்போது கிடைக்கும் மூன்று மணி நேரத்தின் மதிப்பு கூடுதலானது.
தேர்வு தினம். காலையில் எழுந்தாயிற்று. தேர்வு தொடங்க இன்னும் மூன்று மணி நேரமே இருக்கிறது. அதன் மதிப்பு! தேர்வு தொடங்கியாகிவிட்டது. மூன்று மணிநேரத் தேர்வு. அந்த தேர்வு எழுதும் குறிப்பிட்ட மூன்று மணி நேரத்தின் மதிப்பு எவ்வளவு! அது “2 தேர்வு என்றால், கேட்கவே வேண்டாம். அதுதானே மீத வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடிய நேரம்.
தேர்வுகளுக்கு மட்டுமா இந்த அணுகுமுறை? தேர்தல், திருமணம், திருவிழா, வார மாத, தினசரி பத்திரிகைகள் முடித்து அச்சடிக்க அனுப்ப வேண்டிய நேரம் என்று இப்படி கெடு இருக்கிற எல்லா நிகழ்வுகளின் உச்ச கட்ட நேரங்களின் மதிப்பும் நேரமாக நேரமாக உயர்ந்து கொண்டேதான் போகும்.
கோல்டன் அவர்ஸ்
விபத்திற்குப் பிறகு உடனடியாக இருக்கும் நேரங்களை கோல்டன் அவர்ஸ் என்பார்கள். தாமதம் செய்யச் செய்ய, இருக்கும் நேரத்தினை வீணாக்க வீணாக்க பெரிய நட்டம் தான். “சே! ஒரு பத்து நிமிடம் முன்பாக வந்திருந்தால் இவரைக் காப்பாற்றியிருக்கலாமே!” என்பார் மருத்துவர். போயிற்று. ஆப்பர்ச்சூனிட்டி லாஸ்ட். இழந்த சந்தர்ப்பம். பத்தே நிமிடம்தான். ஆனால் அந்த விபத்திற்குள்ளானவரைப் பொறுத்தவரை, அந்த பத்து நிமிடங்களின் மதிப்பு என்ன? அவருடைய உயிரின் மதிப்பு!
ஆப்பர்ச்சூனிட்டி காஸ்ட்
நேரமேலாண்மையில் இன்னொரு கட்டமும் இருக்கிறது. அது, தன்னிடம் இருக்கும் நேரத்திற்கு என்ன என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொண்டு, அதில் மிக சிறந்ததை தேர்ந்து பயன்படுத்துவது.
வியாபார மேலாண்மையில் “ஆப்பர்டூனிட்டி காஸ்ட்” என்று ஒரு பதம் உண்டு. அதனை “வாய்ப்பின் விலை” என்று தமிழில் சொல்லலாம்.
ஒரு வீட்டிற்குப் போகிறோம். வரவேற்கிறார்கள். அமரச் சொல்லுகிறார்கள். “காபியா? காபி என்று சொல்லலாம். சொன்னால் காபி கிடைக்கும். பருகலாம். சுவையை ரசிக்கலாம். இது ஆப்பர்சூனிட்டி. வாய்ப்பு. அதே சமயம், காபி என்று சொல்லுவதன் மூலம், டீ பருகும் வாய்ப்பினை தவற விடுகிறோம். இது இழப்பு. தவறவிடுவதால் விலைக்கு ஒப்பு.
கான்ஃபிரன்ஸ் போகிறோம். தேநீர் இடைவேளை. “அட! எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்!” தேநீர் அருந்துகிற நேரமா அது! மீட்டிங் டைம் அல்லவா? முக்கியமானவர்களை சந்திக்கிற நேரமல்லவா? யார் யாரோடு பேசுகிறோம்?
கூட்டம் முடிகிறது. உடன் சாப்பாடு. சிலர் சாப்பிட விரைவார்கள். வேறு சிலர் மேடையில் பேசியவரை சந்திக்க, தனியாக ஒன்றிரெண்டு வார்த்தைகள் பேச விரைவார்கள். அங்கேதான் அவரைப் பார்க்கலாம். அது ஒரு அரிய சந்தர்ப்பம். ஆனால் அதற்கு விலை, தாமதமாக சாப்பிடப்போய், சில உணவு வகைகளை தவறவிட நேரிடும்.
எது வாய்ப்பு அல்லது எது விலை என்பது நபருக்கு நபர் சூழ்நிலைக்கு சூழ்நிலை மாறுபடும். எதனை வாய்ப்பாக பார்க்கலாம். எதனை (தெரிந்து மகிழ்ச்சியுடன்) விலையாக கொடுக்கலாம் என்பதை தேர்ந்து முடிவு செய்யலாம்.
“இதோ இவர், சின்ன வயதில் நிறைய திரைப்படங்கள் பார்த்தார்.”
“ஓகோ! அப்படியா! சரி அதனால் என்ன?”
“அவருக்கு நிறைய நட்டம்”.
திரைப்படங்களுக்கு கட்டணமாக கொடுத்த பண நட்டமோ!”
“பணம் மட்டுமா? அவர் திரைப்படங்கள் பார்ப்பதில் சிலவிட்ட நேரம் எல்லாம், அவர் செய்திருக்கக்கூடிய வேறு சிலவற்றை செய்யாமல் விட்ட நட்டம். ஆமாம். அதேதான். ஆப்பர்சூனிட்டி லாஸ்ட்……”
படிக்காமல் விடுவது மட்டுமல்ல இழக்கிற சந்தர்ப்பம் என்பது. எதைச் செய்கிறோம் என்பதிலும் அப்படிப்பட்ட, பற்றிக்கொள்ளுகிற வாய்ப்புகளும், சந்திக்கிற இழப்புகளும் இருக்கின்றன.
” “2 விற்குப் பிறகு என்ன படிப்பில் சேர்ந்து படிக்கலாம்?
” பொறியியல்”
“எவ்வளவு ஆண்டுகள்?”
” நான்கு ஆண்டுகள் ”
அப்படி என்றால், அதே நேரம். கல்லூரியில் சேர்ந்து படிக்கக் கூடிய மருத்துவம் அல்லது விஞ்ஞானம் அல்லது தத்துவம் அல்லது மொழியியல் என்று வேறு சிலவற்றை படிக்க முடியாமல் போகிறது.
எல்லாவற்றையும் தேர்வு செய்ய முடியாது. ஒன்றைத்தான், சிலவற்றைத்தான் என்பனவே சாத்தியம். அப்படி என்றால், தேர்வினை சரியாக செய்யவேண்டும்.
நேரத்திற்கு மதிப்பு உண்டு. அது, இடம் பொருள் சூழ்நிலைகள் பொறுத்து மாறும். நம்முடைய ஒரே அளவு நேரத்திற்கே பலவிதமான வாய்ப்புகள் உண்டு. அதனைப் பொறுத்து அதன் மதிப்பு மாறுகிறது. சில வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும்போது, அதனைக் காட்டிலும் மதிப்புமிக்க வாய்ப்புகள் இருக்கின்றனவா என்று தெரிந்துகொண்டு நேரத்தினை சிலவிடவேண்டும்.
No comments:
Post a Comment