Thursday, May 16, 2013

பலவீனத்தைப் பந்தாடு


ஒண்டிக்கு ஒண்டி மோதுவதாக இருந்தாலும், ஊருடன் ஊர் மோதுவதாக இருந்தாலும் சரி, பலவீனமான பகுதி எது எனத் தெரிந்து அதைத் தாக்குவதுதான் வெற்றிபெறுவதற்கான ஒரே வழி.

மிகவும் பலசாலியாக இருக்கிறவனுக்கும் ஒரு பலவீனம் கட்டாயம் இருக்கும். அதை அறிவதுதான் யுத்தத்திற்கான முதல்படி. அது தெரியாதவரை எதிரியை எதுவும் செய்ய முடியாது.

ஸ்டிக்ஸ் நதியில் நனையாமல் போன அக்கிலஸின் குதிகால் மட்டும் பலவீனமானது என்கிற நுண்ணிய தகவலை ஹெலன் மூலம் தெரிந்துகொண்ட பாரிஸ், அதை நோக்கி அம்பு செலுத்தி வீழ்த்துகிறான். கிரேக்கப்படைகள் அக்கிலஸை இழந்து தவிக்கின்றன.

துரியோதனனுக்கு காந்தாரி கண் கட்டவிழ்த்தபோது உள்ளாடை உடுத்தியிருந்த தொடைப்பகுதி மட்டும் பலவீனமாக இருக்கிறது. அதை இறுதி யுத்தத்தில் கிருஷ்ணர் சமிக்ஞையின் மூலம் உணர்த்த பீமன், யுத்தநெறிகளைத் தாண்டி அவன் தொடையை கதையால் தாக்கிக் கொல்கிறான்.

மற்றவர்களின் பலவீனமே நம் பலம் என்பது யுத்தநெறி. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏதேனும் ஒரு வகையில் பலவீனமற்ற மனிதன் அரிது.

சர்வதேசப் பயங்கரவாதம் என்பது எதிரியின் பலவீனத்தைக் குறிவைத்து இயங்குகிற கருத்தாக்கம். அது கொரில்லாத் தாக்குதலின் அடிப்படையிலே அமைந்த தந்திரம். ஆனால், இரண்டுக்குமான அடிப்படைவேறுபாடு ஒன்று உண்டு. பயங்கரவாதம் என்பது அந்நிய மண்ணில் நடக்கும் தாக்குதல். கொரில்லாத் தாக்குதல் சொந்த மண்ணில் நடப்பது. சர்வதேசப் பயங்கரவாதம் தாக்குதலையும், கொரில்லா யுத்தம் தற்காப்பையும் அடிப்படையாகக் கொண்டது.

பலவீனத்தை மையமாக்கி நடத்தும் போர் ஒழுங்கற்ற போர்முறை (Irregular Warfare). உலகளவில் எதிரியின் பலவீனத்தைத் தாக்கி, கடுமையான சேதத்தை விளைவித்து குறிக்கோளையடைந்ததற்கு மிகப்பெரிய சான்று, மாசேதுங் நடத்திய கொரில்லாப் போர். கொரில்லாப்போர் என்பது 4,500 ஆண்டுகள் பழைமையானதுதான். ஆரம்பக் கட்டங்களில் நாடோடியாகத் திரிந்தபோதும், நாகரிக வாழ்வைத் தொடங்கியபோதும் சரித்திரத்திற்கு முற்பட்ட நிகழ்வுகளிலும் இப்படிப்பட்ட போரே நிகழ்ந்தது. பழங்கால சுமேரிய, எகிப்திய நாகரிகங்களின்போது நடந்த போர்களும் இத்தன்மையதே.

கொரில்லா யுத்தம் ராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி போன்ற வீரப்புருஷர்களால் கையாளப்பட்ட நெறியென்றாலும் அதற்கு அறிவார்ந்த அடிப்படையையும், கருத்தாக்கத்தையும், வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தவர் மாவோதான். அவர், ‘சன்-சூ’ போர்க்கலைப் புத்தகத்தில் குறிப்பிட்ட அனைத்துக் கருத்துகளையும் நெசவு செய்து அணுகுமுறையை வடிவமைத்தார். அது எம்மாதிரியான மோதலுக்கும் பொருந்தும் என்றும், எல்லாப் போர்களுக்கும் ஏற்றது என்றும் அவர் நிரூபித்துக்காட்டினார்.

மாவோவின் முதல் நோக்கம் நேரடியான, சிறுசிறு தாக்குதல்களை எதிரிகளின் நகரம், தடவாளம், கிடங்கு, தகவல்தொடர்புச் சங்கிலி ஆகியவற்றின்மீது அடிக்கடி நிகழ்த்துவது. தாக்குதல்கள் பல இடங்களில் எதிர்பாராத நேரங்களில் நடக்கும். எதிரி தன்னுடைய பலத்தைப் பரவலாக்கி, முக்கிய இடங்களைப் பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும் அவை வலுவற்றுதான் இருக்கும். ஏனென்றால், எந்தப் பகுதியை மாவோவின் படை தாக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. எதிரியைக் குழப்பமடையச் செய்வதும், எப்போதும் பதற்றத்திலும், பயத்திலும், பாதுகாப்பின்மையிலும் தவிக்கும்படி செய்ய வேண்டும். அவர்கள் முற்றிலுமாக உற்சாகம் குறைய, காற்றுப்போன பந்து மாதிரியாகி விடுவார்கள். அது எதிரியின் பலத்தை நிர்மூலமாக்கிவிடும்.

பாரம்பரிய ராணுவ நெறியை மேற்கொள்ளாததால், எதிரியை நாடு முழுக்க அலைய வைக்க நேரிடும். எனவே, எந்தப்பக்கமும் எதிரியின் பின்புறமாகிவிடும். எனவே, கொரில்லா வீரர்கள் மக்களையே உணவு, உடை போன்றவற்றிற்கும் எதிரியின் நடமாட்டம் பற்றிய நுண்ணறிவுக்கும் நம்ப வேண்டியிருக்கும். விவசாயிகளின் ஒத்துழைப்பைப் பெறும் பொருட்டு, பெரிய நிலச்சுவான்தார்களின் தோட்டங்களைப் பறிமுதல் செய்து, அவற்றை ஏழை விவசாயிகளுக்கு அவர் பிரித்துக் கொடுத்தார்.

மாவோ வேகமாகவும், மின்னலைப்போலவும் தாக்கி கடுமையான சேதங்களை விளைவித்து, விரைவில் மறைந்துவிடும் உத்தியை கொரில்லா வீரர்களுக்குப் பயிற்றுவித்தார். இருபது ஆண்டுகள் பயிற்சி; போராட்டமே பயிற்சியானது. ராணுவமோ நாட்டின் முக்கியமான பகுதிகளைக் காப்பதிலேயே மும்முரமாக ஈடுபட்டது. கொரில்லாக்கள் அவர்களுக்கு உணவு வரும் வழிகளையெல்லாம் தடுத்து நிறுத்தினர். எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்கிற பயமே அவர்களை செயலிழக்கச் செய்தது.கொரில்லாவிற்கு எப்போதும் சாதகமான சூழல். அவர்கள் எந்த இடத்தைத் தாக்குவது என சுயமாகத் தீர்மானித்துக்கொள்ளலாம்.

தொடக்கத்தில் மாவோவுக்கு வெற்றி எளிதில் கிடைக்கவில்லை. சீனாவின் அதிபராக இருந்த ஹியாங் கேஷி, வெறிபிடித்துப்போய் ஏழு லட்சம் வீரர்களைக் கொண்ட ராணுவத்தை அனுப்ப… மாவோ உருவாக்கிய சிவப்பு ராணுவம் தப்பி ஓடியது. ஓராண்டு தொடர்ந்து ஓட்டம். ஆறாயிரம் பேர் மட்டுமே தப்ப, ஓட்டத்தில் மாசேதுங்கின் தம்பியும், குழந்தைகளும் கூட பலியானார்கள்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானோடு போரிட்டுப் போரிட்டுக் களைத்துப் போயிருந்த ஹியாங் கேஷியின் ராணுவத்தை நோக்கி சிவப்பு ராணுவம் அடிமேல் அடி வைத்துத் தாக்கியது. சீனாவின் ராணுவம் புறமுதுகு காட்டி ஓடியது. ஹியாங்கே, தாய்வான் தீவுக்குத் தப்பி ஓடினான்.

எதிரிகளின் பலவீனத்தைப் பந்தாடிய இன்னொரு வரலாற்றுச் சம்பவம் 1991ம் ஆண்டு நடந்த வளைகுடாப்போர். போர் நுணுக்கம் அறிந்தவர்கள் அதைப் ‘பாலைவனப் புயல்’ என்றே சிலாகிக்கிறார்கள்.

ஈராக் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று குவைத்தை ஆக்கிரமித்தது. விமானம் மூலமாகவும், தரைவழியாகவும் 1,50,000 ஈராக் சிப்பாய்கள் அதிரடியாக நுழைந்து, குவைத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். ஈராக் அதிபர் சதாம் உசேன் ஈரானோடு எட்டு ஆண்டுகள் நடத்திய கடுமையான யுத்தம் பலவகைகளில் அவருடைய நாட்டுக்குப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்திவிட்டது.

அவர், குவைத் போன்ற இதர வளைகுடா நாடுகளுக்குப் பெருமளவில் கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். குவைத்தைக் கையகப்படுத்தி அதை ஈராக்கின் பத்தொன்பதாவது மாநிலமாக அறிவிப்பதன் மூலம் அந்நாட்டுக்குச் செலுத்தவேண்டிய கடன் தொல்லையில் இருந்து மீள்வதுடன் குவைத்தின் வளமான எண்ணெய்க் கிணறுகளின் மூலமாக மற்ற நாடுகளுக்கு அளிக்க வேண்டிய கடனைச் சமாளித்துவிடலாம் என்பதுதான் அவருடைய திட்டம். இதனை அமெரிக்கா உட்பட 33 உலக நாடுகளின் கூட்டணி கடுமையாக எதிர்த்தது.

ஐந்து மாதங்கள் கழித்து ஈராக்கியத் துருப்புகளின் மீது விமானத் தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. ஈராக் அதைச் சமாளிக்க, ஐந்து லட்சம் துருப்புகளை குவைத்தில் குவித்தது. தரை மூலமாக தாக்குதல் நடத்தினால்தான் சமாளிக்க முடியும் என்கிற நிலைமை உருவானது. பல பத்திரிகைகள் குவைத்தை மறுபடி மீட்பதற்கு ஒருவாரம் தேவைப்படும் என்றும், 20,000 அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழக்க நேரிடும் என்று அனுமானித்து எழுதின. ஈராக்கியத் துருப்புகளோ பாதுகாப்பான இடங்களைப் பிடித்து, தாக்குதலைச் சமாளிக்கத் தயாராகியது.

ஈராக் ஐந்து மாதங்களுக்கு முன்பே உள்ளே நுழைந்து தங்களைப் பலப்படுத்திக்கொண்டு, சக்தி வாய்ந்த பாதுகாப்பு அரண்களை உருவாக்கிக் கொண்டார்கள். அது முதலாம் உலகப்போரை நினைவுபடுத்துகிறது என்றெல்லாம் எழுதினார்கள். ஈராக் அப்போதும் ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் சிப்பாய்களையும், நாலாயிரம் டாங்கிகளையும், ஆயிரக்கணக்கான பாதுகாப்பு வாகனங்களையும் நிறுத்தி வைத்திருந்தது. சிப்பாய்களோ எடுத்துச்செல்லக்கூடிய கான்கிரீட் பாதுகாப்புக் கூரைகளுக்கு அடியில் தாக்குதலைச் சமாளிக்கும் வகையில் குவித்து வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் அரண்வகுக்க ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று, ‘டைம்’ இதழ் போரைப்பற்றிக் கணித்துச் சொன்னது.

போர் விமர்சகர்கள் அமெரிக்கத் தளபதி நார்மன் ஷ்வார்ஜ்காஃப் வைத்திருந்த உத்தியைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவருடைய கமாண்டர்கள் குவைத்தை நேரடியாகத் தாக்கினால் இரண்டாயிரம் பேர் இறப்பார்கள், எட்டாயிரம் பேர் காயமடைவார்கள் என்று திட்டத்தை வகுத்துக்கொடுத்தனர். ஆனால், அதை அவர் நிராகரித்தார். விமானத்தின் மூலமாக குண்டுமழை பொழிந்து, ஈராக்கின் பலத்தைப் பாதியாகக் குறைப்பது என்றும் ‘இடது கொக்கி’ மூலமாக ரகசியத் தாக்குதல் நடத்துவது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உலகத்தின் ஒட்டுமொத்தக் கவனமும் குவைத்தின் தெற்குப்பக்கம் அமெரிக்கத் துருப்புகள் வருவதைக் கண்காணித்துக்கொண்டிருக்கும்போது ரகசியமாக 2,50,000 சிப்பாய்களை குவைத்தின் மேற்குப் பக்கம் மெதுவாக ஊடுருவச் செய்து, அங்கிருந்து வலது பக்கத்திற்குச் சென்று, காலியாக இருக்கும் தெற்கு ஈராக்கில் பாலைவனப்பகுதிகளை வசப்படுத்துவது என்று முடிவானது.

தரைவழியான தாக்குதல் தொடங்கியதும் இந்தப் படை வடக்கு நோக்கி நகர்ந்து, கிழக்குப் பக்கம் திரும்பி, இடது கொக்கியைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதன்மூலம் ஈராக்கின் பாதுகாப்புச் சப்பையை அடித்து நொறுக்க வேண்டும். அந்தத் திட்டத்தின்படி அமெரிக்க கடற்படை, குவைத்தின் வடக்குநோக்கி மெதுவாக நகரத் தொடங்கின. இது உண்மையிலேயே தாக்குதலுக்காக அல்ல, ஈராக்கின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக.

ஷ்வார்ஜ்காஃப்பின் உத்தி மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. தரைப் படைத் தாக்குதல் நூறு மணி நேரத்தில் முடிந்துபோனது. ஒரு மாத காலம் விமானத் தாக்குதல் நடத்தியதன்மூலம் ஒரே இடத்தில் குவிந்திருந்த ஈராக்கியத் துருப்புகள் பரவலாகச் சிதறவும் ஒரே இடத்தில் குவிந்திருக்காமல் செய்யவும் வழிவகுத்தன.

அவர்கள் தங்கள் பீரங்கிகளையும், டாங்கிகளையும் விட்டு விலகியிருக்கவும் செய்தன. விரைவாகவும், ஆக்ரோஷத்துடனும் டாங்கிகள், காலாட்படை, ஹெலிகாப்டர்கள், குண்டுபொழியும் விமானங்கள் ஆகியவற்றின்மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மிகவும் உக்கிரமாக இருந்தது. ஈராக்கிய சிப்பாய்கள் துணிவோடு போராடினார்கள். ஆனால், அவர்களால் வேகத்திற்கும், ஆக்ரோஷத்திற்கும் ஏற்றவாறு உபரிப்படையை நகர்த்தி சமாளிக்க முடியவில்லை.

அமெரிக்க கப்பற் படையினரோ ரசாயன ஆயுதங்களை ஈராக் பயன்படுத்தினால், இருபதிலிருந்து முப்பது சதவிகிதம் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அதைப் பயன்படுத்த சதாம் உசேன் ஆணை வழங்கவில்லை.

வேறுவழியின்றி பெரும்பான்மையான படைகள் சிதற… குவைத்தைவிட்டு ஈராக் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியது. அமெரிக்க சார்புடைய படைகளின் இழப்போ மிகவும் குறைவாக இருந்தது. ஷ்வார்ஜ்காஃப் முக்கியமான தாக்குதல், கடலின் வழியாக நடப்பதைப்போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கினார். அதை எதிர்பார்த்து ஈராக் காத்திருந்தபோது, அதன் பலவீனமான பகுதியை கடுமையாகத் தாக்கினார்.

அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகைகளும், குவைத்தின் தெற்குப் பக்கம் அமெரிக்கத் துருப்புகள் குவிக்கப்படுவதைப்போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்தின. பெரும்பான்மையான அமெரிக்கக் கமாண்டர்களுக்கு இது தெரியாது. சாதுர்யமாக ஈராக்கின் பலவீனத்தை நோக்கி அவர் நகர்த்தியதால், அமெரிக்கத் துருப்புகளுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் சொற்பமாக இருந்தது.

வாழ்விலும் நிர்வாகத்திலும் எதிரியின் பலவீனத்தை நோக்கியே நாம் காய் நகர்த்த வேண்டும். சிலர் புகழையே தங்கள் பலமாக நினைத்துக்கொண்டிருப்பார்கள். அதை நோக்கி குறிவைத்தால் ஆடிப்போய்விடுவார்கள். அதற்கு எந்தக் களங்கமும் விளையக்கூடாது என்பதற்காக எதையும் பறிகொடுக்கத் தயாராக இருப்பார்கள். பலவீனம் மற்றவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

பலவீனமில்லாத வாழ்க்கையை வாழ்வது எப்போதுமே பாதுகாப்பானது. ஆனால், அதற்கு எளிமையும் நேர்மையும் அவசியம். தனிப்பட்ட வாழ்க்கையில் இவற்றைக் கையாளுவது சிரமமல்ல. ஆனால், நிருவாகம் என்பது எண்ணற்றோருடைய கூட்டமைப்பு. அதில் எங்கேனும் ஓரிடத்தில் நிச்சயம் பலவீனம் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதை உணர்ந்து, அந்தப் பகுதியைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.

இரண்டு நிறுவனங்கள் ஒரே வாடிக்கையாளர்களைக் கவரும் போட்டியில் ஈடுபடும்போது மற்ற நிறுவனத்தில் எது பலவீனமானது என்பதைக் கண்டறிய வேண்டும். விலங்குகளை வீழ்த்துகிறவர்கள்கூட அவற்றின் எந்தப் பகுதியை அடித்தால் உடனே உயிர் போகும், அதிகச் சித்திரவதை இல்லாமல் அவை உயிரிழக்கும் என்பதை எதிர்பார்த்துத்தான் தங்கள் அசைவை முன்நிறுத்துகிறார்கள்.

வர்த்தகத்தில் எதிராளியின் பொருளில் எது குறைபாடு என்பதைத் தெரிந்துகொண்டு, அதைச் சரிசெய்யும் வகையில் ஆய்வை நடத்தி, தங்கள் நிறுவனத்தின் பொருளை மேம்படுத்துபவர்கள் விரைவில் சந்தையைப் பிடித்துவிடுகிறார்கள். ரியல் எஸ்டேட்டில்கூட மிக நல்ல நிலம் போவதற்கு வழியில்லாமல் நடுவில் மாட்டிக்கொண்டால், அடிமாட்டு விலைக்கு விற்க நேர்வதைப் பார்க்கலாம். தொடர்ந்து தன்னைப் பலப்படுத்திக்கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.

தலைசிறந்த நிர்வாகியாக இருக்கிறவர் பேச்சில், எழுத்தில், கூட்டங்களை நடத்துவதில், உடலசைவு மொழியில், உடைகளை உடுத்துவதில், கம்பீரமாக நடப்பதில், மிடுக்காக நடந்துகொள்வதில் தன்னை அச்சு அசலாக வெற்றிபெற்றவர்களைப்போல காட்டிக்கொள்ள முனையும்போது எதிராளிக்கு நடுக்கம் வந்துவிடுகிறது. வெகு எளிதில் அவனால் கவர்ச்சி ஒளிவட்டத்தை உண்டுபண்ணிவிட முடிகிறது.

அதற்குப் பிறகு அவன் கீழ் பணிபுரிபவர்கள் அவன் சொன்னதற்கெல்லாம் சொக்குப்பொடி போட்டதைப்போல மயங்கிவிடுகிறார்கள். சிலருக்கு பெரிய விஷயங்களில் பலவீனம் இருக்காது. ஆனால், சின்னவற்றில் பலவீனம் இருக்கும். தன்னுடைய பலவீனத்தை நண்பர்களிடமிருந்து கேட்டறிவதும், அவற்றைக் கவனமாக தவிர்க்க முயல்வதும் உறுதியான பலன்களை அளிக்கும். அப்போது வீழ்த்த முடியாத மனிதனாக வீறுகொண்டு எழலாம். ஒழுக்கமும், சுயக்கட்டுப்பாடும் கொண்டவர்கள் எந்த நேரத்திலும் நிமிர்ந்து நிற்கிறார்கள்.

No comments:

Post a Comment