Friday, May 3, 2013

பருவமழை முன்கூட்டியே வர அதிக வாய்ப்பு : கோடை மழையால் மக்கள் நிம்மதி


சென்னை: வானிலை மாற்றத்தால், தமிழகத்தில் பல மாவட்டங்களில், கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வழக்கமாக மே மாத இறுதியில் துவங்கும் தென்மேற்கு பருவமழை, முன்கூட்டியே பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், மே முதல் வாரத்தில், "கத்திரி' வெயில் துவங்கும் நிலையில், வேலூர், திருச்சி, மதுரை, பாளையம்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி, வெயில் வாட்டி எடுத்தது.

மகிழ்ச்சி : இந்நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில், சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால், கோடை உஷ்ணத்தால் அவதிப்பட்ட மக்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, கரூர், திருச்சி, நீலகிரி, தூத்துக்குடி, ஈரோடு, விருதுநகர், சேலம், நாமக்கல், கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில், கனமழை பெய்ததால், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைத்திருந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில், கோடை உக்கிரத்தின் தீவிரம் குறையவில்லை.

மழைக்கு காரணம் : ஏப்ரல், மே மாதங்களில், வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வலுவடைந்து புயலாக மாறுவதும், பல சமயங்களில் வலுவிழந்து போவதும் உண்டு. தற்போது, குமரிக் கடல் பகுதியில், வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் உருவான காற்றின் சுழற்சி காரணமாக, பல மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வடக்கு மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

முன்கூட்டியே துவங்கும் : பல மாவட்டங்களில் வெயில் கொளுத்திய போதும், தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை மற்றும் பருவ நிலை மாற்றத்தால், தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கலாம் என, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, ஜூன் முதல் தேதி துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே, 30ம் தேதி துவங்கியது. இதனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, முன்னதாகவே துவங்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக, அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தென்மேற்கு பருவமழை : தமிழக மாவட்டங்களை ஒட்டிய கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கினால் மட்டுமே, உள்மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையும். தென்மேற்கு பருவமழையால், தமிழகத்திற்கு பெரிய அளவு பயன் இல்லை. எனினும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, ஊட்டி, நாகர்கோவில், நெல்லை உள்ளிட்ட சில இடங்களில், அவ்வப்போது மழை பெய்யும். கேரளாவில் பருவமழை துவங்கினால், குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.

No comments:

Post a Comment