Thursday, May 2, 2013

பாரதி வாழ்க்கை வரலாறு!


1882 : டிசம்பர் 11 திங்கள் இரவு 9.30 மணி சித்திரபானு, கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் பாரதி ஜனனம். பிறப்பிடம் எட்டயபுரம் ஜமீன். தந்தை; சின்னச்சாமி அய்யர்; தாய்; லட்சுமி அம்மாள். இளமைப் பெயர் சுப்பிரமணியன். செல்லப் பெயர்; சுப்பையா.

1887 : தாய் மரணம். சுப்பையாவுக்கு வயது 5.

1889 : தந்தை மறுமணம்; சுப்பையாவுக்கு உபநயனம். இளைஞன் அருட்கவி பொழிகிறான்.

1893 : 11 வயதுச் சுப்பையாவை எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பெருஞ் சபையில் சோதித்து, வியந்து, பாரதி (கலைமகள்) என்ற பட்டம் அளிக்கின்றனர்.

1894 முதல் 1897 : திருநெல்வேலி ஹிந்து காலேஜில் ஐந்தாம் படிவம் வரை படிப்பு. தமிழ்ப் பண்டிதருடன் சொற்போர்கள்.

1897 : ஜூன். 14 1/2 வயது பாரதிக்கும் 7 வயதுச் செல்லம்மாவுக்கும் திருமணம்.

1898 : ஜூன்; தந்தை மரணம். பெருந்துயர், சஞ்சலம்.

1898 முதல் 1902 : காசியில் அத்தை குப்பம்மாளுடன் வாசம். படிப்பு அலகாபாத் ஸர்வ கலாசாலையில் பிரவேசப் பரீட்சையில் தேர்வு. காசி இந்து கலாசாலையில் ஸமஸ்கிருதம், ஹிந்தி பயின்றார். கச்சம், வால் விட்ட தலைப்பாகை, மீசைப் பழக்கம்.

1902 முதல் 1904 : எட்டயபுரம் வாசம். மன்னருக்குத் தோழர். விருப்பமில்லா வேலை. மதுரை விவேகபாநுவில் தனிமை இரக்கம் என்ற முதல் பாடல் அச்சேறுகிறது.

1904 : ஆகஸ்ட் - நவம்பர்; மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தற்காலிகமாகத் தமிழ்ப் பண்டிதர்.

1904 : நவம்பர்; சென்னை சுதேச மித்திரன் உதவியாசிரியர். ஜி. சுப்பிமணிய அய்யரிடம் சிட்சை. சக்கரவர்த்தினி மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பு.

1905 : வங்கப் பிரிவினை. சமுக சீர்திருத்தவாதி பாரதி அரசியல் தீவிரவாதியாகிறார். காசி காங்கிரஸ் சென்று திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியைச் சந்தித்து, ஞான குருவாக ஏற்றல்.

1906 : ஏப்ரல்: சென்னையில் புரட்சிகரமான இந்தியா வாரப் பத்திரிகை உதயம். பாரதி பொறுப்பாசிரியர். மண்டயம் ந. திருமலாச்சாரி, எஸ். ஸ்ரீநிவாஸாச்சாரி, சா. துரைசாமி அய்யர், வி. சக்கரைச்செட்டி, வ.உ.சி நட்பு. விபின சந்திரபாலர் சென்னை விஜயம். பால பாரதா ஆங்கில வாரப் பத்திரிகை ஆரம்பம்.

1907 : டிசம்பர்; சூரத் காங்கிரஸ், திலகரின் தீவிரவாத கோஷ்டிக்கு ஆதரவு. வ.உ.சி., மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியுடன் சென்னைத் தீவிர இளைஞர் கோஷ்டியைச் சூரத் அழைத்துச் செல்கிறார். காங்கிரஸில் பிளவு. திலகர், அரவிந்தர், லஜபதி, பாரதி சந்திப்பு.

1907 : அரசியல் எதிரி, பழுத்த மிதவாதி வி. கிருஷ்ணசாமி அய்யர் பாரதியின் தேசிய கீதங்களில் மோகித்துப் போகிறார். சுதேச கீதங்கள் என்ற தலைப்பில் மூன்று பாடல்கள் கொண்ட நாலு பக்கப் பிரசுரம் நிறைய வெளியிட்டு, இலவசமாய் விநியோகிக்கிறார் கிருஷ்ணசாமி அய்யர்.

1908 : சென்னை தீவிரவாதிகள் கோட்டை. சுயராஜ்ய தினம் சென்னையில் பாரதியாலும், தூத்துக்குடியில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, சுதேசி பத்மநாபய்யங்கார் முதலியோராலும் கொண்டாடப்படுகிறது. பின்னர் மூவர் கைது; வ.உ.சி., சிவாவுக்குத் தண்டனை, சிறை வாசம், வழக்கில் பாரதி சாட்சியம் சொல்கிறார்.

1908 : சுதேச கீதங்கள் என்ற கவிதைத் தொகுதியைப் பாரதி வெளியிடுகிறார். முதல் நூல்.

1908 முதல் 1910 : இந்தியாவும் புதுமை வந்து, பிரெஞ்சிந்திய எல்லைக்குள்ளிருந்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது நெருப்பு மழை பொழிகிறது. பத்திரிகையின் செல்வாக்கு அதிகரிப்பது கண்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் நுழையாதபடி, பிரிட்டிஷ் சர்க்கார் தடுக்கின்றனர். இந்தியா நின்று போகிறது.

1909 : ஜன்மபூமி என்ற இரண்டாவது கவிதைத் தொகுதி வெளியீடு.

1910 : விஜயா தினசரி, சூர்யோதயம் வாரப் பதிப்பு, பாலபாரத ஆங்கில வாரப்பதிப்பு, கர்மயோகி மாதப் பதிப்பு - யாவும் நின்று போகின்றன. சித்ராவளி ஆங்கில - தமிழ் கார்ட்டூன் பத்திரிகைத் திட்டம் நிறைவேறவில்லை.

1910 : ஏப்ரல் : பாரதி ஏற்பாடு செய்ய, அரவிந்தர் புதுவை வருகிறார். வேதநூல் ஆராய்ச்சி.

1910 : நவம்பர் : கனவு என்ற ஸ்வயசரிதை முதலிய பாடல் அடங்கிய மாதா மணி வாசகம் நூல் வெளியீடு. வ.வே.சு அய்யர் வருகை.

1911 : மணியாச்சியில் கலெக்டர் ஆஷ் கொலை. புதுவைத் தேச பக்தர்கள் மீது சந்தேகம். போலீஸ் கெடுபிடிகள்; புதுவையிலிருந்து தேச பக்தர்களை வெளியேற்ற முயற்சிகள். பாரதியின் சிஷ்யகோடிகள் பெருகுகின்றனர்.

1912 : உழைப்பு மிக்க வருடம். கீதை மொழி பெயர்ப்பு, கண்ணன் பாட்டு, குயில், பாஞ்சாலி சபதம் எழுதப் பெறுகின்றன. பாஞ்சாலி சபதம் முதல் பாகம் பிரசுரம்.

1913 முதல் 1914 : சின்னச் சங்கரன் கதை கையெழுத்துப் பிரதி மறைந்து போகிறது. சுப்பிரமணிய சிவத்தின் ஞானபாநு பத்திரிகைக்கு விஷயதானம். தென் ஆப்பிரிக்கா நேடலில் மாதா மணிவாசகம் நூல் பிரசுரம். முதல் மகாயுத்தம் ஆரம்பம். புதுவைத் தேச பக்தர் தொல்லைகள் அதிகரித்தல்.

1917 : கண்ணன் பாட்டு முதல் பதிப்பை பரலி சு. நெல்லையப்பர் சென்னையில் வெளியிடுகிறார்.

1918 : நெல்லையப்பர் சுதேச கீதங்களை நாட்டுப்பாட்டு என்று வெளியிடுகிறார்.

1918 : புதுவை வாசம் சலித்துப்போய், புதுவையை விட்டு நவம்பர் 20 ஆம் தேதி பாரதி கிளம்புகிறார். கடலூர் அருகே கைது. ரிமாண்டில் 34 நாள். முடிவில், வழக்கில்லையென விடுதலை. நேரே மனைவியின் ஊர் கடயத்துக்குச் செல்கிறார்.

1918 முதல் 1920 : கடயம் வாசம். திருவனந்தபுரம், எட்டயபுரம், காரைக்குடி, கானாடுகாத்தான் போய் வருகிறார். எட்டயபுர மன்னருக்குச் சீட்டுக் கவிகள் பயனில்லை. தாகூருடன் நோபல் பரிசுக்காகப் போட்டியிட விருப்பம்; நடைபெறவில்லை.

1919 : மார்ச்; சென்னைக்கு விஜயம். ராஜாஜி வீட்டில் காந்திஜி சந்திப்பு.

1920 : டிசம்பர் : சென்னையில் சுதேசமித்திரனில் மீண்டும் உதவியாசிரியர் வேலை. ஏ. ரங்கசாமி அய்யங்கார் ஆசிரியர். பாரதி கட்டுரைகள் நிறைய எழுதுகிறார்.

1921 : ஜூலை - ஆகஸ்ட்; திருவல்லிக்கேணி கோயில் யானை ஒதுக்கித் தள்ள, யானை காலடியில் கிடக்கிறார். குவளை காப்பாற்றுகிறார். அதிர்ச்சியால் நோயுறுகிறார் கவிஞர்.

1921 : செப்டம்பர்; யானை அதிர்ச்சியால் ஏற்பட்ட நோயிலிருந்து குணமடைந்தாலும் வயிற்றுக் கடுப்பு நோய் பீடிக்கிறது.

1921 : செப்டம்பர் 11; நோய்க்கடுமை. மருந்துண்ண மறுப்பு.

1921 : செப்டம்பர் 12; நள்ளிரவு தாண்டி, காலை 1.30 மணி சுமாருக்கு மறைவு. வயது 39 நிறையவில்லை.

No comments:

Post a Comment