Thursday, May 2, 2013

சாதனை மந்திரங்கள்



புரியவே புரியாத புதிய துறையில், மற்றவர்களை நம்பி
அகலக்கால் வைப்பதைவிட தெரிந்த துறையில்
நிதானமாகவும் உறுதியாகவும் முன்னேறுவதே புத்திசாலித்தனம்.

உள்ளதே உறுதி

கனவுகளைத் தொடர்வது என்பது வேறு. கானலைத் தொடர்வது என்பது வேறு. உங்கள் கனவுகளை எட்டும் வலிவு, எட்டத் தகுந்த

தெளிவு இரண்டும் இருந்தால் உங்கள் வாழ்வில் ஏமாற்றங்களுக்கு இடமேயில்லை. பலரும் கானலை கனவுகள் என்று கருதி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்ல வேண்டிய மந்திரம்தான், உள்ளதே உறுதி.

இருக்கிற சின்னஞ்சிறிய முதலீட்டை சவாலான முதலீடுகளுக்குத் தருவதைவிட அளவான வட்டிக்கு வங்கியில் போட்டு வைப்பது புத்திசாலித்தனம். இருக்கிற ஒரே சொத்தை அவசரத்திற்கு விற்பதைவிட அதன் மதிப்பு பல மடங்கு பெருகும்வரை பொறுத்திருப்பதே புத்திசாலித்தனம்.

புரியவே புரியாத புதிய துறையில், மற்றவர்களை நம்பி அகலக்கால் வைப்பதைவிட தெரிந்த துறையில் நிதானமாகவும் உறுதியாகவும் முன்னேறுவதே புத்திசாலித்தனம்.


எட்டக்கூடிய கனவுகளை வரித்துக் கொண்டு படிப்படியாய் வளர்த்துக் கொண்டு வருபவர்கள் வாழ்க்கையின் போக்கை விளங்கிக் கொண்டவர்கள். ஒருநாள் அதிசயம் நிகழும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையைவிட, ஒவ்வொரு நாளும் அதிசயம் என்ற எதிர்பார்ப்புடன் உச்ச கட்ட உற்சாகத்துடன் ஒவ்வொரு நாளையும் எதிர் கொள்ளுங்கள். குறைந்தபட்ச திறமையோ, செல்வமோ, தொடர்புகளோ எதுவாயினும் அவற்றை அடித்தளமாக்கி உங்கள் களங்களை விரிவு செய்து கொண்டேயிருங்கள்… உள்ளதே உறுதி!!

தயக்கம் துடை

வாழ்வில் மிகப்பெரிய இடங்களை எட்டிய பிறகும் சின்னச்சின்ன மனத்தடைகளால் சிலர் தேங்கி விடுகிறார்கள். ஐ.டி.துறையில் பெரிய பொறுப்பில் இருந்த இளம்பெண் இந்தத் தொந்தரவால் தன் இலக்குகளை எட்ட முடியாமல் தவித்தார். மனிதவள மேம்பாட்டு அலுவலரின் பரிந்துரை காரணமாக மனநல நிபுணர் ஒருவரை சந்தித்தார்.

அந்தப் பெண்ணின் குழந்தைப் பருவத்தில் அவருடைய பெற்றோர், “நீ ஒண்ணுத்துக்கும் ஆகமாட்டே” என்று ஆசீர்வதித்ததும், ஆசிரியர் ஒருவர், “நீ வீடு கூட்டிதான் பொழைக்கப் போறே” என்று வாழ்த்தியதும் ஆழ்மனதில் தங்கிவிட்டதை அறிய முடிந்தது. அந்த விமர்சனங்களே வளர்ந்த பிறகும் வேகத்தடைகளாய் வந்து வந்து வளர்ச்சிக்குத் தடை போடுகின்றன.

நேற்றைய சுமைகளைவிட இன்றைய வெற்றிகளே நம் இப்போதைய நிலையின் அடையாளம். தன்னுடைய தகுதி தனக்கே தெரியாத அளவுக்கு தடுமாற்றம் வரும்போது, நம் மனதுக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டிய விஷயம்தான், “தயக்கம் துடை”.

தரையில் தெரியாமல் எதையாவது கொட்டிவிட்டால் உடனே துடைக்கத் தெரிகிற நமக்கு மனதில் ஒட்டிக் கொள்ளும் தயக்கத்தைத் துடைக்க ஏன் தாமதமாகிறது?

கேட்க வேண்டியதை, கேட்கக் கூடியவர்களிடம் கேட்பதில் தயக்கம். செய்ய வேண்டியதை செய்வதில் தயக்கம், தடுக்க வேண்டியதைத் தடுப்பதில் தயக்கம்… இவைதான் வெற்றியை நெருங்க விடாமல் நெட்டித் தள்ளுபவை. தீர யோசித்து, பின் தயங்காமல் இறங்குவதே வெற்றிக்கு வழி.

உன்னை உணர்த்து

ஒவ்வொருவரும் தனக்கிருக்கும் தகுதிகளை உலகுக்கு உணர்த்திக் கொண்டே இருப்பது முக்கியம். “ஒரு முறை ஜெயித்தாயா? ஒவ்வொரு முறையும் ஜெயித்து உன் தகுதியை நிரூபித்துக் கொண்டேயிரு!” என்று தன் பிறந்தநாள் விழாவில் குறிப்பிட்டார் கவிப்பேரரசு வைரமுத்து. வாய்ப்பு வந்த பிறகு தன் ஆற்றலை கூர்ப்படுத்த நேரமிருக்காது. எப்போதும் கூர்மையாக இருப்பவர்கள் வாய்ப்பு வந்ததும் வெளிப் படுகிறார்கள்.

நாம் எந்தத் துறையில் இருக்கிறோமோ அந்தத் துறை சார்ந்த தகவல்களை முழுமையாக அறிந்து வைத்துக் கொள்வதும், அன்றாட மாற்றங்களைத் தெரிந்து கொள்வதும் மிகவும் அவசியம். ஓரளவு புகழ்பெற்ற பிறகு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் இன்னும் சரியாகப் பயன்படுத்துபவர்கள் சீராகவும் பிறர் நம்பிக்கையைப் பெற்றும் வளர்வார்கள்.

உணர்த்துவது என்பது திறமையை உணர்த்துவது பற்றி மட்டுமல்ல. நம் குணங்கள் கொள்கைகள் இவற்றையும் உணர்த்துவது நேரந் தவறாமை, வார்த்தை தவறாமை, நேர விரயத்தை அனுமதிக்காமை என்று பலவற்றையும் உணர்த்துவது நம் தனித்தன்மையை வெளிப் படுத்தும்.

“தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா” என்ற கண்ணதாசனின் வரிகள் சொல்லிக் கொடுப்பது இந்த சூத்திரத்தைத்தான். நாம் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோமோ, அப்படித்தான் உலகம் நம்மைப் புரிந்து கொள்ளும். நம்மை நாம் உணர்வதும் உணர்த்துவதும் நம்மை நம்பிக்கையாளராக மற்றவர் முன் நிலைநிறுத்தும்.

இன்னும் இயங்கு

நடைப்பழக்கம் உள்ளவர்கள் ஒரு நுட்பத்தை உணர்வார்கள். நடக்கத் தொடங்கி சில நாட்களிலேயே நடப்பதன் சுகத்தைக் கால்கள் கண்டுணரும். ஓரளவு வேகமாக நடக்கத் தொடங்கும் போது, நடப்பவர்களின் முயற்சியையும் மீறி, புதிய வேகம் கால்களுக்கு வசப்படும். தன்னையும் மீறிய தாளகதியில், வீசப்பட்ட பந்தின் விசையில் கால்கள் நகரும் லாவகம் நடப்பவர்களுக்கே வியப்பைக் கொடுக்கும்.

நடையில், நீச்சலில் எல்லாம் இயங்கத் தொடங்கிய பிறகு இன்னும் கூடுதல் இயக்கம் தானாகவே நிகழ்வதை உணர்வீர்கள். எந்தச் செயலிலுமே இது சாத்தியம். ஒரு நாளின் பணி நேரத்தை மெதுவாகக் கூட்டிக் கொண்டே போக வேண்டும் என்றுகூட இல்லை. அதே வேலை நேரத்தில்கூட தீவிரவாக இயங்கும் கால அளவைக் கூட்டினால் போதும்.

உங்கள் செயல்திறன், எந்த நேரத்தில் உச்சத்தில் இருக்கிறது என்பதை முதலில் கண்டறியுங்கள். அந்த நேரத்தில் மிக முக்கியமான வேலைகளை, அதீத பயன் தரக்கூடிய வேலைகளை விருப்பமாய் விறுவிறுப்பாய் செய்யுங்கள். வேலையின் உற்சாகம் உங்களைத் தொற்றிக் கொள்ளும் போதே, “இன்னும் இன்னும்” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டேயிருங்கள். பதட்டமில்லாமல் பரவசமாக சலிப்பில்லாமல் சந்தோஷமாக, வேலைகளை உற்சாகமாக செய்யச் செய்ய சராசரி அணுகுமுறை மாறி சாதிக்கும் மன நிலை உங்கள் இயல்பாகவே மாறிவிடும்.

மாற்றமே மலர்ச்சி

ஒரு மனிதன் தன்னைத்தானே எடை போட்டுக் கொள்வதற்கான எடைக்கற்கள் ஏராளம். அவற்றில் முக்கியமானது மாற்றங்களுக்கு மகிழ்ச்சியோடு தயாராவது. சிலர் வழக்கமாகப் போகும் ஊர்களில் ஒரே தங்கும் விடுதியில் தங்கவே விரும்புவார்கள். அதுவும் அதே அறையாக அமைய வேண்டும். எதிர்வரிசை அறை அமைந்தால்கூட எரிச்சல் வரும். புதிய அனுபவங்களை விரும்பாத மனநிலைக்கு இது ஓர் அடையாளமாகக்கூட இருக்கலாம்.

தொழிலில், சந்தைச் சூழலில் ஏற்படுகிற மாற்றம் தயாரிப்புகள் உற்பத்தியில் புறப்பட்டுக் கொண்டேயிருக்கும் புதுமைகள், வாடிக்கை யாளர்களின் விருப்பங்களில் விளைகிற புதிய தேவைகள், இவை அனைத்துக்கும் ஈடு கொடுக்கும் போதே வெற்றி சாத்தியமாகிறது.

புறச்சூழ்நிலைகள் பாம்பு மாதிரி சட்டை உரித்துக் கொண்டேயிருக்கையில் அதை சட்டை செய்யாமல் இருப்பது சாத்தியமா என்ன? “அந்தக் காலத்துலே” என்று பேச்சை ஆரம்பிக்கும் பலரும் கால மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள விரும்பாதவர்களாகவே இருப்பார்கள். சிந்திக்கும் முறை, செயல்படும் விதம், வெளிப்படுத்தும் பாங்கு என்று எல்லாவற்றிலும் மாற்றங்களே மலர்ச்சியைத் தரும்.

“மாற்றம் என்பது மானிட தத்துவம்! மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!” என்றார் கண்ணதாசன். மாற்றம் என்பதை மகத்துவம் என்று உணர்ந்தவர்கள் ஜெயிக்கிறார்கள். தங்கள் துறையைக் கண்டடையும் முன் சாதனை யாளர்கள் எத்தனையோ துறைகளில் முட்டி மோதி, புகுந்து புறப்பட்டதுண்டு. அவர்கள் மாற்றத்திற்குத் தயாராகியிருக்காவிட்டால் மலர்ச்சி கண்டிருக்கவே முடியாது.

சவாலா? சமாளிக்காதே!!

சவாலே சமாளி என்றொரு படம்கூட வந்திருக்கிறது. எப்போது சமாளிப்போம்? ஒரு கேள்விக்கு பதில் தெரியாத போது எதையாவது சொல்லி சமாளிப்பது வழக்கம். சவால்களை சமாளிப்பது சரக்கில்லாதவர்களின் வேலை. சவால்களை ஜமாய்ப்பதுதான் சாதனையாளர் களின் லீலை!

சவால்கள், நம்மை நாமே நிரூபிக்க வழங்கப்படுகிற வாய்ப்புகள். தன்னை மிகச்சரியாக மதிப்பிட சவால்களை எதிர்கொள்ளும் முறையே சரியான அளவுகோல். எதிராளியின் பலம், பலவீனம் ஆகியவற்றைவிட, நம்முடைய பலமும் செயல்திறனும் எவ்வளவு துல்லியமாய் வெளிப் படுகிறது என்பதே ஒவ்வொரு சவாலிலும் நிரூபிக்கப்படுகிறது.

எல்லோருக்குள்ளும் ஒரு போராளி எப்போதும் இருக்கிறான். தன்னுடைய ஆயுதங்களை அவன் ரகசியமாக சாணை பிடிக்கிறான். தன் கவசங்களை யாருமறியாமல் கெட்டிப்படுத்துகிறான். சவாலான சந்தர்ப்பங் களில் அவன் துள்ளியெழுந்து வாளேந்தும் முன்பாக உள்மனம் சமரசமாய்ப் போக சொல்லிக் கொடுக்கிறது. இல்லை… சொல்லிக் கெடுக்கிறது!!

விடுக்கப்பட்ட சவாலை கூர்மையாய் எதிர் கொண்டு களத்தில் இறங்கச் சொல்லி உள்ளே ஒரு குரல் கேட்கும். அதுதான் உங்களுக்குள் இருக்கும் மாவீரனின் குரல். அந்தக் குரலை அலட்சியப் படுத்தி, “எதற்கு வம்பு” என்று பணிந்து போனால், உங்களுக்கு நீங்களே துரோகம் செய்தவர் ஆவீர்கள். சவால்களை தவிர்ப்பதன் பெயர்தான் சமாளிப்பு. சவால்களை சமாளிக்காதீர்கள். ஜமாய்த்துக் காட்டுங்கள். நீங்கள் யாரென்று உங்களுக்கும் ஊருக்கும் உணர்த்துங்கள்.

No comments:

Post a Comment