வாழ்க்கை தருகிற எல்லாவற்றுக்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருங்கள்.
நாளின் தொடக்கத்திலும் முடிவிலும் தியானமும் பிரார்த்தனையும் இடம்பெறட்டும்.
எட்டக்கூடிய இலக்குகளையே வகுத்துக் கொள்ளுங்கள். வகுத்துக் கொண்ட இலக்குகளை எட்டிவிடுங்கள்.
குறித்த நேரத்தில் எதையும் முடிப்பதில் உறுதியாய் இருங்கள். எதற்கும் திட்டமிடும்போது கூடுதலாக அரைமணி நேரத்தை சேர்த்தே திட்டமிடுங்கள்.
யாருக்காவது எதையாவது செய்து கொடுப்பதாகச் சொன்னால் எப்பாடு பட்டாவது செய்து கொடுங்கள். அது, உங்கள் வார்த்தைக்கு நீங்களே தரும் மரியாதை.
சுவாரசியமான விஷயங்களைப் படிக்கவும் சுகமான சங்கீதத்தைக் கேட்கவும் நேரம் ஒதுக்குங்கள்.ஓய்வு நேரங்களிலோ இடைவெளியிலோ படிக்க ஏதேனும் புத்தகம் வைத்திருங்கள்.
வாரம் ஒருநாள் ஓய்வுக்கும், உங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் ஒதுக்குங்கள்.
உற்சாகமாய் இருங்கள். வாய்விட்டு சிரியுங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாய் வைத்திருங்கள்.
தீப்பிடித்தால் எவ்வளவு வேகமாக அணைக்க முயல்வீர்களோ, பதட்டம் ஏற்பட்டால், பதட்டத்தை தணிக்கவும் அதே அளவு வேகம் காட்டுங்கள்.
நேரம், உணர்வுகள், படைப்பாற்றல், நல்லெண்ணம் ஆகியவையே வெற்றியின் ஊற்றுக் கண்கள். அந்த ஊற்றுக் கண்கள் அடைபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டுமென்று விரும்பாதீர்கள். உங்கள் மனசாட்சியை திருப்திப்படுத்த மறக்காதீர்கள்.
சிக்கல்களை, சிக்கல்கள் என்று நினைக்கும்போது அவை பெரிதாகத் தோன்றும். சிக்கல்களை சவால்கள் என்று கருதும்போது, எதிர்கொள்ளும் உந்துசக்தி உருவாகும்.
சந்திப்புகளும், உரையாடல்களில் தானாக வரும் சில வழிகாட்டுதல்களும் எதிர்பாராமல் கிடைக்கும் வரங்கள். உங்கள் உள்ளுணர்வைக் கூர்மைப்படுத்தினால் அவற்றை தினம் தினம் உங்களால் அடையாளம் காண முடியும்.
உங்கள் இலட்சியங்கள், உங்கள் கனவுகள் மட்டுமல்ல, உங்களுக்கான கடமைகளும் கூட, அவற்றை தள்ளிப் போடவோ தவிர்க்கவோ முயலாதீர்கள்.
எதை அனுமதித்தாலும் எதிர்மறை எண்ணங்களை அனுமதிக்காதீர்கள்.
உடல் – மனம் இரண்டும் உங்களுக்குத் தரப்பட்ட வரங்கள். இரண்டையும் முக்கிய விருந்தினர்களாய் மதித்து மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருங்கள்.
இல்லத்திலும் அலுவலகத்திலும் அமைதியான சூழலை ஏற்படுத்துங்கள்.
மிகையான கோபம், போலியான புகழுரைகள் போன்றவற்றைத் தவிர்த்து இயன்றவரையில் இயல்பாய் இருங்கள்.
உங்கள் சுயமரியாதையை விட்டுத் தராமல் இருங்கள். அதே நேரம் எளிமையாகவும் பணிவாகவும் இருங்கள்.
மனிதர்களை நீங்கள் மதிப்பதை அவர்கள் உணரும்படி செய்யுங்கள். எல்லோரும் முக்கியம் என்பதை ஏதேனும் ஒரு தருணத்தில் வெளிப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment