Sunday, January 20, 2013

உங்கள் வாழ்க்கை உங்கள் வழியில்

நம்முடைய வாழ்க்கை நாம் விரும்புவதுபோல் நடக்கிறபோது வாழ்க்கையும் சுகமாய் இருக்கிறது. வெற்றியும் வசமாய் ஆகிறது. உங்கள் வாழ்க்கையை உங்கள் வழியில் நடத்திச் செல்லத் தடையாய் இருப்பவை என்ன என்று யோசியுங்கள். “தயக்கம்”என்று தான் பதில் வரும்.

ஒருவேளை நாம் கேட்டிருந்தால் ஒன்று நமக்கு மாற்றித் தரப்பட்டிருக்கும். ஒரு கப் காபி சூடாக இல்லை என்றாலும்கூட, “விதியே” என்று விழுங்கிவிட்டு வருபவர்கள் சில பேர். வாதிட்டு வேறு கப் காபி கொண்டுவரச் செய்பவர்கள் சிலபேர். “ஒரு கப் காபி கூட நம்ம விருப்பத்துக்குக் கிடைப்பதில்லை” என்று சலிப்பதால் எதுவும் நடப்பதில்லை.

தயக்கத்துக்கு மாற்றாக நாம் உருவாக்க வேண்டிய விஷயம் உறுதி. நமக்கென்ன வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கும்போது அதனை நம்மால் அடை முடியும்.

நம் வழியில் வாழ்க்கை நடக்கிறது என்ற உற்சாகத்தை எது தருகிறது? சில தீர்மானங்களை நாம் எடுக்கிறபோது உற்சாகம் வருகிறது. நீங்கள் வழக்கமாகப் பயணம் செய்கிற பாதையில் ஏதோ ஒரு பேரணி நடப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கார் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுகிறது. இப்போது, இது உங்கள் வழியா? இன்னொருவரின் நிர்ப்பந்தத்தால் நீங்கள் செலுத்தப்படுகிற வழியா? இந்தக் கேள்வியை கொஞ்சம் அலசிப்பாருங்கள்.

யாரோ சொன்னதால் நம் வழியை மாற்ற வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக்கொண்டு உங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லலாம். அல்லது அந்தப் பேரணில் போய் மாட்டிக் கொள்ளாமல் விரைவாக வேறுவழியில் போய்விடலாம் என்று சந்தோஷத்தில் போகலாம்.

ஒரு வேளை, இந்தப் பேரணி பற்றி முன் கூட்டியே தெரிந்திருந்தால் இந்த மாற்று வழியை நீங்களாகவே யோசித்திருப்பீர்கள். எனவே, எந்த வழி நமக்கு உகந்த வழி என்பதற்கு முக்கியத்துவம் தருகிறபோது, இப்போது போகிறபாதை  நிர்ப்பந்தத்தினால் என்ற நிலைமாறி, அதிகபட்ச நன்மை தருகிற மாற்றுவழி - “பட்ங் ய்ங்ஷ்ற் க்ஷங்ள்ற் ர்ல்ற்ண்ர்ய்” என்று புரிந்து கொள்கிறீர்கள்.

நாம் நம்முடைய இலக்கை நோக்கிப் போகிறபோது காலம் இப்படியாய் சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கக்கூடும். அவை சரியாய் இருக்கிறபட்சத்தில் அவற்றிலிருந்து பயன்தரும் விஷயங்களை மனதார ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

நம் வழியில் நம்முடைய வாழ்க்கை நடக்க வேண்டுமென்றால் நமக்குத் தெளிவாகத் தெரியவேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு. “நமக்கென்ன வேண்டும்” என்பதுதான் அது. அந்த வரையறையை நாம் வகுத்துக் கொள்கிறபோது, வேறு பாதைகளில் போயிருக்கலாமோ என்கிற ஏக்கமோ, நாம் மற்றவர்கள் போல் வாழ்க்கையை வகுத்துக் கொள்ளவில்லையோ என்கிற கலக்கமோ ஏற்படாது.

அதே நேரம், நாம் போகிற பாதை சரியானதுதான் என்பதை உறுதிசெய்துகொள்ள சில அளவுகோல்கள் அவசியம். நாம் செய்கிற வேலையால் அனைத்துவிதமான நிறைவுகளும் ஏற்படுகின்றனவா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்படுகிறோமா, மனநிறைவு வரும் விதமாய் செயல்படுகிறோமா, போதிய அளவு பணவரவு இதில் வருகிறதா - இப்போது இல்லையேல் இனிமேலாவது இந்த முழுமையான வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிறதா? - இவைதான் அந்த அளவுகோல்கள்.

இதில் நீண்ட காலத் திட்டங்கள் என்று சிலவற்றை நம்முடைய வாழ்வில் வகுத்திருப்போம். ஆனால் நிகழ்கால வாழ்க்கையை நடத்திக் கொண்டே போகிறபோது, அந்த நீண்ட கால இலட்சியத்தை எங்கே தொடங்குவது என்று தெரியாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே சிலர் போவதுண்டு. தொலைநோக்குத் திட்டம் என்ற பெயரில் தள்ளிப் போடுகிறோமா என்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமில்லையா?

நம்முடைய வழியில் விரைவாக, உற்சாகமாக செல்லவேண்டும் என்றால், வேண்டாத மூட்டை முடிச்சுகளை சுமந்து கொண்டு போகக்கூடாது. பழைய பகையின் நினைவுகள், பழைய தோல்வியின் பதிவுகள் இனிமேல் சரிசெய்ய முடியாதபடி கடந்த காலத்தில் கண்ட வீழ்ச்சிகள் - இஹ்ற்றை மனதில் சுமந்துகொண்டு போகிறவர்கள், வேண்டாத பாரங்களைக் கழுதைபோல் சுமக்கிறார்கள். வாழ்க்கையை ஒரு பயணமாகக் கற்பனை செய்துகொள்கிறபோது, அந்தப் பாதையைப் போலவே பயணமும் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். சாலையில் நீங்கள் செல்லும்போது, கடந்து போகிற வாகனங்களில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள்? சாலைவிதிகளை மதிப்பவராக, சந்தோஷமான மனிதராக, மற்றவர்கள் தெரியாமல் செய்யும் சின்னச் சின்னப் பிழைகளை மன்னிப்பவராக இருக்க வேண்டும். அப்போதுதான் பதட்டமில்லாமல் பயணம் நிகழும். பாதையில் அனைவரும் பொறுப்புணர்ந்து தங்கள் வாகனங்களைச் செலத்துகிறார்கள் என்பதே எவ்வளவு சந்தோஷமான விஷயம்!

அத்தகைய சந்தோஷத்தை வாழ்க்கை என்னும் நெடிய பயணத்தில் நம் சக பயணிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய கடமை மட்டுமல்ல - உரிமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இதற்கு முக்கியமான விழிப்புணர்வு நம் அன்றாட உறவாடல்களிலும் உரையாடல்களிலும் இருக்கிறது. பைசா பெறாத விஷயம் ஒன்றைப் பொழுது போக்காகப் பேசத் தொடங்கியிருப்போம். போகப்போக அதில் பதட்டமான விவாதங்களில் இறங்கிவிடுவோம். முக்கியமே இல்லாத விஷயத்தைக் கூட மூச்சுமுட்டவிவாதித்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு போவதால் நம்முடைய சக்தி வீணாகிறது. நம்மை நேரடியாக பாதிக்காத விஷயங்கள் குறித்து பலமான சர்ச்சையில் இறங்குவதை விழிப்புணர்வோடு தவிர்த்துவிடவேண்டும்.

பாராளுமன்றத் தேர்தலில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று முடிவு தெரிவதற்கு முப்பது நிமிஷங்கள் முன்னால் விவாதித்த நண்பர்கள் அந்த விவாதம் காரணமாகவே விரோதிகள் ஆகிவிட்டார்கள். ஆனால் அந்தத் தேர்தலில் எதிர்த்து நின்ற கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டுவிட்டன. உறவுகள் வளர்வதற்கும் வளப்படுத்துவதற்கும் தானே தவிர, வேண்டாத சர்ச்சைகளில் விரிசல் விடுவதற்கல்ல. 

நாம் போகிற வழி பற்றிய நம்பிக்கையும் உற்சாகமும் நம்மிடம் குறைந்தால் அந்த அடையாளம் முதலில் உடலில் தெரியும், தலைவலி, சோர்வு, சோம்பல், தள்ளிப்போடும் மனோபாவம் போன்றவை, செய்கிறவேலையில் ஊக்கம் குறைவதன் அடையாளங்கள், அந்த மாதிரியான நேரங்களில் நாம் தேட வேண்டியது தலைவலி மாத்திரையை அல்ல. தட்டிக் கொடுக்கும் உற்சாகத்தைத்தான் தேட வேண்டும். நமக்குப் பிரியமானவர்கள், நம்முன்னோடிகள் போன்றவர்களிடமிருந்து அதனைப் பெறமுடியும். எல்லாவிதங்களிலும் நிறைவடைந்த வாழ்க்கை நீங்கள் வாழ்கிறபோது உலகின் மிக உற்சாகமான மனிதராய் உன்னதமான மனிதராய், உயர்ந்த மனிதராய் நீங்கள் உருவெடுப்பீர்கள். உங்கள் வழியில் போவதன் மூலமாகவே உங்கள் வாழ்வின் கனவைச் சென்றடைவீர்கள்!!

No comments:

Post a Comment