Sunday, January 20, 2013

வாழ்வின் வெற்றி - தன்னம்பிக்கை முனை

நேர்மைக்கு அடுத்தபடியாக நேரந்தவறாமை மிக முக்கியம். அடுத்தவருக்கு கொடுத்த  வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிக முக்கியம். அதை கொடுத்த காலக்கெடுவுக்குள்  முடிப்பதும் அவசியம். அடுத்தவர் நமக்கு கெடு விதிக்குமுன்பே நமக்கு நாமே கெடு  விதித்துக் கொள்ள வேண்டும். அந்தக் கெடுவிற்குள் குறித்த செயலை முடிப்பேன் என்று  உறுதி கொள்ள வேண்டும். உண்மையில் அடுத்தவர் 10 நாட்களில் ஒரு செயலை முடிக்க கெடு  வைத்தால் நமக்கு நாமே வைக்கும் கெடு 7 அல்லது 8 நாட்களாக இருக்கலாம். அப்படி நமது  கெடுவிற்குள் காரியத்தை முடித்து விட்டால் மிச்சப்படும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நமக்கு நிம்மதியாக இருக்கும். அல்லது முன்கூட்டியே முடித்ததற்கான பாராட்டு கிடைக்கும். இதற்கு மாறாக பத்து நாளில் முடிக்க வேண்டிய வேலையை 12 நாட்களோ 15  நாட்களோ நீட்டினால் மேலதிகாரி, அல்லது வாடிக்கையாளரிடமிருந்து வரும் மோசமான  விமர்சனங்களை தாங்கிக் கொள்ள வேண்டும். அது மேலும் மனதை தளர்ச்சியுறச் செய்யும். 

அதுவரை உழைத்த உழைப்பும் அதில் கிடைத்த வெற்றியும் தாமதம் என்ற ஒரே காரணத்தினால்  அங்கீகரிக்கப் படாமல் போகலாம்.

பள்ளியில் தாமதமாக வரும் மாணவனோ, மாணவியோ பாடங்களை ஒழுங்காக படிக்க முடியாது. பல பாடங்கள் அவர்களின் நோட்டுப் புத்தகங்களில் வெற்றிடமாக இருக்கும். கடைசியில் தேர்வுத் தாளிலும் பல கேள்விகள் விடையற்றதாக இருக்கும்.

பணிக்குத் தாமதமாக வரும் பணியாளரின் பணிக்குறிப்பேட்டில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கும். அவரது பதவி உயர்வுகள் பல ஆண்டுகள் தாமதமாகலாம். அவருக்குக் கீழேயுள்ள பலர் அவரைக் கடந்து மேலே செல்லலாம்.

அடுத்தது வாக்குத் தவறாமை. அடுத்தவருக்கு ஒரு வாக்குறுதி கொடுக்குமுன் நன்றாக யோசித்துத் தான் கொடுக்க வேண்டும். அரசியல் வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் இந்த வகையில் சேராது. அவர்கள் மக்களின் மறதியை நம்பி ஏராளமான வாக்குறுதிகளை வழங்குகின்றனர். மக்களும் அதை நம்பி ஓட்டுப் போட்டு விடுகின்றனர். வாக்குறுதி கொடுத்த அரசியல்வாதியோ அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பதவி சுகத்தை அனுபவித்து விட்டு அடுத்த  தேர்தலின் போது மட்டுமே மீண்டும் தலைகாட்டுகிறார். மீண்டும் அதே பழைய வாக்குறுதியை  புதிய வாக்குறுதியாக மீண்டும் அளிக்கிறார். இவர்களும் மறுபடி வாக்குகளை வழங்குகின்றனர். இந்த வாக்குறுதிகளில் எந்த உண்மையும் இல்லை. 

No comments:

Post a Comment