[ 100 முறை சிந்தனை செய்யுங்கள். ஒரே ஒரு முறை மட்டுமேமுடிவெடுங்கள். மிக எளிமையான பயிற்சிகளின் மூலம் யார் வேண்டுமானாலும் அட்டகாசமாக முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். ]
முடிவெடுக்கும் திறன் படைத்தவர்கள் வாழ்வின் எல்லா தடைக்கற்களையும் எளிதாகக் கடந்து செல்வது நிதரிசன உண்மை.
உலகில் சாதனையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், சாமானியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பது ஏன்? சாதனையாளர்கள் எல்லோரும் வானத்திலிருந்து குதித்தா வந்தார்கள்? ஏன் நம்மாலும் சாதிக்க முடியாது?
அதே இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், காதுகள், ஒரு வாய், ஒரு மூக்கு, ஒரு மூளைதானே?
ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பதும் அனைவருக்கும் பொதுவானதுதானே?
அப்புறம் எப்படி ஒரு சிலரால் மட்டும் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்க முடிகிறது? பெரும்பாலானவர்களால் முடிவதில்லை? காரணம் இதுதான்.
சாதனையாளர்கள் சரியாக முடிவெடுப்பவர்களாக இருக்கிறார்கள். எந்தப் பிரச்னைக்கு, எப்போது, என்னமாதிரியான தீர்வுகள் சரி என்று துல்லியமாகக் கணிக்கிறார்கள்.
மிக எளிமையான பயிற்சிகளின் மூலம் யார் வேண்டுமானாலும் அட்டகாசமாக முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும்.
ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருங்கள்! உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நல்லது கெட்டதுக்கும் நீங்கள், நீங்கள் மட்டுமே காரணமாக இருக்கிறீர்கள். ஆகவே, உங்களின் சிறப்பான, மிகப்பெரிய வெற்றிகளையும் (இறைவனின் துணை கொண்டு) நீங்களேதான் தீர்மானிக்கிறீர்கள்.
அந்த வெற்றிகளை உங்களுக்குக் கொண்டுவந்து சேர்ப்பது, உங்களுடைய முடிவெடுக்கும் திறன் தான்.
அணு சக்தியைவிட ஆற்றல் வாய்ந்தது, முடிவெடுக்கும் திறமை! சரியான நேரத்தில், மிகச் சரியாக எடுக்கப்படும் முடிவுகள்தான் வெற்றியாளர்களின் இரகசியம் எனச் சொல்லலாம். ஒரு மாணவன் தான் எந்தத் துறையில் செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கிறானோ அந்தத் துறையில் கால் பதித்தால் அவனால் முத்திரை பதிக்க முடியும்.
உலகிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டவர்கள், கற்றுக் கொள்கின்றவர்கள் சராசரி மனிதர்கள். எந்த மனிதரிடமிருந்து உலகம் பாடங்களைக் கற்றுக் கொள்கின்றதோ அவர் சாதனை மனிதர். நம்முடைய எதிர்பார்ப்புகள் வேண்டுமானால் நமக்கு ஏமாற்றங்களைத் தரலாம். ஆனால் காத்திருப்புகள் எந்தக் காலத்திலும் கவலை தருவதில்லை. ''காத்திருக்கப் போகிறேன்'' என்ற முடிவும்கூட சரி என்று தான் சொல்ல வேண்டும்.
நம்மிடம் இருக்கின்ற சில வேண்டாதவற்றை விட்டுவிட்டால் போதும், வெற்றி நம்மைத் தேடி வரும். நம்மிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை என்கிற இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ், தான் என்கின்ற ஆணவம் சேர்ந்த சுப்பீரியாரிடி காம்ப்ளக்ஸ் விட்டு விட்டாலே போதும். அசையா சொத்தாக ஒரு மல்ட்டி டிரேடிங் காம்ப்ளக்ஸ் கட்டிவிடலாம். பலருக்கு பிரச்னையே ''நம்ம பாவம்'' என்கின்ற ஒரு எண்ணம். நம் மீது நாம் கொள்கின்ற சுயபச்சாதாபம் விட்டொழிக்கின்ற நாளே நமக்குத் திருநாளாகும்.
தான் (சேர்ந்த) சார்ந்த தொழிலில் திறமையுடையவனாக இருப்பது என்பது வெற்றிக்கான அடிப்படைத் தகுதி ஆகும். எந்தச் செயலில் நம் திறமை வெளிப்படுகிறதோ அந்தச் செயல்தான் நமக்குத் தொழிலாக மாறிவிடுகிறது. ஒரு கோட்டைக்குத் தலைவனாக இருப்பதைக் காட்டிலும் சிறந்தது, செயல், தொழில் இரண்டிலும் திறமையாக இருப்பது. நம் உழைப்பும் நேர்மையும் வெற்றியைத் தருகின்றது என்று சொன்னால், அந்த வெற்றி நிலைத்திருப்பது நம்முடைய தீர்க்கமான முடிவுகள் எனலாம்.
வெற்றி என்பது நமது வாடிக்கைகளாக இருந்தால் முயற்சிகளும் பயிற்சிகளும் நமக்கு வேடிக்கைகளாகவும், பழக்கங்களாகவும் மாறிவிடும்.
100 முறை சிந்தனை செய்யுங்கள். ஒரே ஒரு முறை மட்டுமே முடிவெடுங்கள்
No comments:
Post a Comment