Saturday, January 19, 2013

வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!

தோல்வியில் துவண்டு விடாதீர்கள், தன்னம்பிக்கை இழந்து விடாதீர்கள், முயற்சியை நிறுத்தி விடாதீர்கள் என்று எல்லாம் பலர் அறிவுரை சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு யாரும் அதிகம் அறிவுரை சொல்வதில்லை. காரணம் வெற்றி பெற்றவர்கள் அறிவு மிக்கவர்கள், நல்ல உழைப்பாளிகள், எல்லாம் தெரிந்தவர்கள் என்ற அபிப்பிராயம் பலர் மனதிலும் இருப்பது தான். அதெல்லாம் மற்றவர்கள் மனதில் இருந்தால் பரவாயில்லை. வெற்றி பெற்றவர்கள் மனதிலேயே அந்த அபிப்பிராயம் உறுதியாகத் தோன்றும் போது அது எதிர்கால ஆபத்திற்கு அஸ்திவாரம் போடுகிறது. 

வெற்றி எப்பேர்ப்பட்டவரையும் ஏமாற்ற வல்லது. அது மூன்று குணாதிசயங்களை வெற்றியாளர்களிடம் ஏற்படுத்த வல்லது.

1) கர்வம்

2) அலட்சியம்

3) எந்த அறிவுரையும் கேளாமை

முதலாவதாக, வெற்றி ஒருவரிடம் “என்னை மிஞ்ச ஆளில்லை” என்ற கர்வத்தை ஏற்படுத்தலாம். கர்வத்தைப் போல வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் ஒரு குணாதிசயம் வேறொன்று இருக்க முடியாது. புராணங்களில் அரக்கர்கள் கடவுளிடம் வரம் பெற்று பெரும் சக்தி பெறுவார்கள். பெரும் சக்தி பெற்ற அவர்களது கர்வம் அவர்களை சும்மா இருக்க விடாது. பலரைத் துன்புறுத்த முனைவார்கள், எங்களை எதிர்க்க யாரிருக்கிறார்கள் என்று அறைகூவல் விடுப்பார்கள். முடிவு அவர்கள் அழிவு தான் என்பதை நாம் புராணங்களில் படித்து இருக்கிறோம்.

புராணங்களில் மட்டுமல்லாமல் வரலாறிலும் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களைப் பார்க்க முடியும். ஹிட்லர், முசோலினி, நெப்போலியன் போன்றவர்கள் பெற்ற ஆரம்ப வெற்றிகள் சாதாரணமானதல்ல. அது அவர்கள் மனதில் தாங்கள் யாராலும் வெல்ல முடியாதவர்கள் என்ற கர்வத்தை ஏற்படுத்தியது. கர்வம் ஒரு மனிதனை உள்ளதை உள்ளது போல் பார்க்க விடாது. அறிவுக் கண்ணை அது அழகாக மறைக்க வல்லது. நன்மைகளை செய்ய கர்வம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. தான் செய்வதே சரி என்கிற எண்ணம் ஒருவரை எதையும் சீர்தூக்கிப் பார்க்க வைப்பதில்லை. அதன் விளைவு அவர்களை பெரும் வீழ்ச்சி காண வைக்கிறது. 

உலக வரைபடத்தில் உகாண்டா என்ற ஆப்பிரிக்க நாட்டை சிரமத்திற்கு இடையே தான் கண்டு பிடிக்க முடியும். அத்தனை சிறிய நாட்டில் சர்வாதிகாரியாக இருந்த இடி அமீன் சென்ற நூற்றாண்டில் தன்னை கிட்டத்தட்ட கடவுளாகவே நினைத்துக் கொண்டு நடந்து கொண்ட விதத்தை வரலாற்றின் பார்வையாளர்கள் மறந்திருக்க முடியாது. 

இன்றைய கால கட்டத்திலும் அரசியலைக் கூர்ந்து பார்ப்பவர்களுக்கு இதற்கு எத்தனையோ சான்றுகளைக் காண முடியும். சில இமாலய வெற்றி பெற்றவர்கள் தங்களை நிரந்தர தலைவர்களாக தாங்களாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு அடுத்த தேர்தலில் காணாமல் போவது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது அல்லவா? 

இரண்டாவதாக, வெற்றி அலட்சியத்தையும் உண்டு பண்ணக் கூடியது. அதுவும் தொடர்ந்து சில வெற்றிகள் கிடைத்து விட்டால் தங்களை ஒரு அபூர்வ மனிதராக ஒருவர் நினைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம். இனி எனக்கு தோல்வியே கிடைக்க முடியாது என்று ஒருவன் நினைக்க ஆரம்பிக்கும் போது அவனுடைய முயற்சிகள் தரத்திலும் அளவிலும் குறைய ஆரம்பிக்கின்றன.

சிறு வயதில் நாம் படித்த முயல், ஆமைக் கதை இந்த உண்மையை மிக அழகாகச் சொல்வது நினைவிருக்கலாம். முயலை எக்காலத்திலும் ஆமை வெல்ல முடியாது என்று நாம் நினைத்தாலும் முயல் தூங்கி விடுமானால், ஆமை விடாமல் முயற்சி செய்து வருமானால் ஆமை வெற்றி பெறுவது நடக்கக் கூடியதே. பள்ளி, கல்லூரிகளில் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்கி பிரகாசித்து நிஜ வாழ்க்கையில் கோட்டை விட்ட எத்தனையோ பேரை நான் அறிவேன். அதே போல் படிக்கையில் சாதாரணமான மதிப்பெண்களே பெற்று வந்த எத்தனையோ பேர் தங்கள் திறமைக் குறைவை உணர்ந்து உழைப்பால் அதை ஈடுகட்டி பின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதையும் நான் பார்த்திருக்கிறேன். முன்னவர்களின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தோல்விக்குக் காரணம் வெற்றிகளால் அவர்கள் அடைந்திருந்த அலட்சியமே என்ற பதில் தான் கிடைத்தது. 

இதை விடப் பெரிய விஷயங்களில் எல்லாம் வெற்றி பெற்றிருக்கிறேன், இது என் திறமைக்கு முன் எம்மாத்திரம் என்ற எண்ணத்தோடு இறங்கி சிறிய விஷயங்களில் தோற்று மூக்குடைந்த மேதாவிகளை நாம் அனைவரும் பார்த்திருக்க முடியும். 

மூன்றாவதாக, வெற்றி பெற்றவர்களுக்கு யாருடைய அறிவுரையும் தேவை இல்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்க வாய்ப்பு உண்டு. ஒருவன் எத்தனை தான் புத்திசாலியானாலும் அவன் அறிந்திராதவையும் எத்தனையோ இருக்கக் கூடும். அந்த அறிந்திராத விஷயங்கள் அவனுடைய எதிர்கால வெற்றிக்கு முக்கியமானவையாக இருக்கக் கூடும். ஆனால் எல்லாம் எனக்குத் தெரியும், தெரியாமலா இத்தனை வெற்றிகள் கண்டிருக்கிறேன் என்று நினைக்கிற சில வெற்றியாளர்கள் அறிவுரை கூற வருபவர்களை ஏளனமாகப் பார்க்க முற்படுகிறார்கள். அவர்களுக்கு அறிவுரை வேம்பாகக் கசக்கிறது. 

எனவே அவர்கள் தங்களைச் சுற்று துதிபாடிகள் இருப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். உள்ளதை உள்ளபடி சொல்பவர்களை அவர்கள் ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள். யாரானாலும் சரி மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறதா என்று கூட சிந்திக்க மறுக்கும் போது, புதியனவற்றை அறிந்து கொள்ளத் தவறும் போது தோற்கவே ஆரம்பிக்கிறார்கள். 

எனவே தோல்வி அடையும் சமயத்தை விட அதிகமாய் வெற்றி அடையும் சமயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். தோல்வி அடையும் போது இருப்பதை விட அதிகமாய் வெற்றி அடைகையில் அடக்கமாய் இருங்கள். கர்வமும், அலட்சியமும், அடுத்தவர்களைத் துச்சமாய் நினைக்கும் தன்மையும் உங்களை அண்ட விடாதீர்கள். அப்படி கவனமாய் இருந்தால் மட்டுமே வெற்றியை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவதும் அப்படி இருக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்.

No comments:

Post a Comment