Wednesday, January 23, 2013

விடாமுயற்சி! விஸ்வரூப வெற்றி!!

நான் பிறந்து வளர்ந்தது கோவைக்கு அருகில் உள்ள சுகுணாபுரம் ஊரில். என்னுடைய அப்பா திரு. ரங்கசாமி, அம்மா திருமதி. தனலட்சுமி. மதுக்கரையில் தான் என் பள்ளி வாழ்க்கை. 11ம் வகுப்பு வரை படித்தேன். மேற்கொண்டு படிக்க முடியாத வறுமை. பள்ளிக்கு மதிய உணவு எடுத்துச் செல்லக்கூட முடியாத வறுமை. வறுமையின் பிடி இருகியதால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஏதாவது வேலைக்குச் சென்றேஆக வேண்டிய சூழல். அப்போதும் என் குடும்பத்தினர் கஷ்டப்பட்டாவது நீ படி என்றுதான் என்னிடம் கூறினார்கள். ஆனாலும் எனக்கு மேலே படிக்க வேண்டும் என்றநினைப்பை விட வேலைக்குப்போய் சம்பாதித்து குடும்பத்தின் கஷ்டத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. இதனால் 11ம் வகுப்பில் இருந்து இடைநின்று வேலைதேட ஆரம்பித்தேன்.

அப்போது லேனா ஏஜென்ஸின் உரிமையாளர் திரு. லட்சுமணன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய நிறுவனத்திலேயே மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனை பிரதிநிதியாக பணியில் சேர்ந்தேன். திரு. லட்சுமணன் அய்யா அவர்களின் சரியான வழிகாட்டுதலும், நெறிப்படுத்தும் தன்மையும், நேர்மைத் தன்மையும் என்னை அந்தப் பணியில் சிறந்தவனாக மாற்றியது. எனக்கு கொடுக்கப்பட்ட பணியை விரைவாக செய்து முடித்துவிடுவேன்.

சில ஆண்டுகளிலேயே விரைவான வளர்ச்சியை அடைந்த நான் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று என் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த நெருப்பால் அப்போது கோவையில் முதல் வெளியீடாக வெளிவந்த தினமலர் நாளிதழை விற்பனை செய்யும் விற்பனை முகவராக சேர்ந்து கொண்டேன். அதிகாலை 4.30 மணியில் இருந்து தினமலரை கடைகளுக்கு கொண்டு சேர்க்கும் வேலையையும் கூடுதலாக ஏற்படுத்திக் கொண்டேன்.

முதல் வேலையில் எனக்கு கிடைத்த வெற்றி, என்னுடைய இரண்டாவது கட்டத்திலும் வெற்றியையே கொடுத்தது. தொடர்ந்து காஸ்மெட்டிக் பொருட்களை விற்பனை செய்வது, மருந்துப் பொருட்களுக்கான பிரவுன் கவர்களை விற்பனை செய்வது என்ற கூடுதலான பணிகளை விரும்பி ஏற்றுக்கொண்டு செயல்பட ஆரம்பித்தேன்.

அப்போதும் என் மனதில் சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் என்னை உறங்கவிடாமல் செய்துகொண்டே இருந்தது. சொந்தத் தொழில் தொடங்கும் அளவிற்கு பணம் என்னிடம் இல்லை. ஆனால் சாதிக்க வேண்டும் என்ற வெறி மட்டும் இருந்துகொண்டே இருந்தது.

இந்தச் சமயத்தில் ஒரு சம்பவத்தைக் கூறியே ஆக வேண்டும். 22 வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்த நிகழ்வுதான் என்னை இத்தனை தூரம் இழுத்து வந்திருக்கிறது. பேருந்துக்கு டிக்கெட் எடுக்க என்னிடம் 3 ரூபாய் இல்லாததால் 8 கி.மீ. தூரம் நடந்தே என் வீடு வந்து சேர்ந்தேன். அந்த வலியும், எதிர்காலத்தை நினைத்து ஏற்பட்ட பயமும் தான் என்னை சுயதொழில் தொடங்க வேண்டும் என்று தூண்டியது. விற்பனைப் பிரதிநிதியாக 11 ஆண்டுகள் பணியாற்றி முடித்திருந்த எனக்கு பணத்தை விட, படிப்பை விட, அனுபவம் தான் சிறந்தது என்பதை உணர்த்தியது.

அந்த உணர்வுடனே சுயதொழில் தொடங்க முயற்சிகளை ஆரம்பித்தேன். என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்த போது, என் உள்ளத்தில் உதித்தது மருந்துப் பொருட்களை மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்கலாம் என்ற எண்ணம். இதை என்னுடைய முதலாளியிடம் தெரிவித்ததற்கு அவர் மிகவும் சந்தோசப்பட்டு, நான் தொழிலிலும், வாழ்விலும் பெரிய வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி என்னை அனுப்பி வைத்தார்.

வேலையை விட்டு வெளியே வந்தபோது, கையில் போதிய பணம் இல்லை. 11 ஆண்டுகள் மார்க்கெட்டிங் அனுபவம் மட்டுமே இருந்தது. இந்த சமயத்தில் எனக்கு பெரிய பக்கபலமாக இருந்தவர்கள் என்னுடைய நண்பர்கள். குறிப்பாக நான் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தபோது கிடைத்த நட்புகள். 50 மருந்துக் கடையைச் சார்ந்த என்னுடைய நண்பர்கள் என்னிடமே மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். அதுவே என்னுடைய முதல் வெற்றியாகக் கொண்டு, ‘ஸ்ரீ கிருஷ்ணா ஏஜென்சீஸ்’ என்ற பெயரில் மருந்துகளை மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்கினேன்.

சரியான துறையைத் தேர்வு செய்துவிட்டாலே பாதி வெற்றி உறுதி என்பதை என்னுடைய அனுபவத்தில் அறிந்து கொண்டேன்.அப்போது எனக்கு அறிமுகமான நண்பர் ஒருவரின் தொடர் வற்புறுத்தல் காரணமாக ரூபாய் மூன்று லட்சத்தில் நிலம் வாங்கினேன். சில மாதங்களிலேயே என்னுடைய நிலத்தை 4 லட்சத்திற்கு மற்றொருவருக்கு விற்பனை செய்தபோது தான் உணர்ந்தேன் ரியல் எஸ்டேட் தொழிலில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை.
அப்போதுதான் தற்போது எங்கள் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு. கிருஷ்ணகுமாரின் அறிமுகம் கிடைத்தது. ஏற்கனவே அவர் ரியல் எஸ்டேட் தொழிலைச் சிறிய அளவில் செய்து கொண்டிருந்ததால் என்னையும் வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனாலும் தெரியாத தொழிலில் இறங்க ஒருவித பயமும், தயக்கமும் இருந்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் ரிஸ்க் எடுக்க முடிவு செய்தேன். நடப்பது நடக்கட்டும், எதுவாயினும் சந்திக்கும் திறன், ஆற்றல் நமக்குள் இருக்கிறது. சவால்கள் எதுவும் செய்துவிட முடியாது என்று எண்ணிக்கொண்ட அடுத்த விநாடியில் இருந்து தன்னம்பிக்கைச் சூரியனின் சுடரொளி என்னுள் பரவியது. வாழ்க்கை என்பது ஒரு நதி என்றால் அதில் எதிர் நீச்சல் போடுபவர்களே சாதனை படைக்கிறார்கள் என்பதை என் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினேன். அதன்பிறகு ஏற்பட்ட வளர்ச்சிதான் இப்போது அடைந்திருக்கும் வளர்ச்சி.

இப்போதும் எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன புதுத்தொழில்களை ஆரம்பிக்கலாம், மாற்றுத் தொழில்களுக்கு என்னென்ன வாய்ப்புக்கள் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டே இருக்கும்போது தோன்றியது தான் ‘வால் ஃபீட் டாட்காம்’ என்ற ஆன்லைன் மார்க்கெட்டிங். இது தற்போது வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது. இதன் வழியாக மிகவும் எளிமையான வழிமுறைகளில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நிலங்களை வாங்கவும், விற்கவும் முடியும். மற்றும் இந்தியாவின் எந்தவொரு மாநிலத்தின் ஆர்க்கிடெக்ட், சிவில் இன்ஜினியர், பில்டிங் மெட்டீரியல், வாஸ்து, இன்டீரியர் டெக்கரேசன் என்று அனைத்து தகவல்களையும் எங்களின் www.wallfeet.com-ல் தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய வெற்றிக்குத் என்னுடைய மனைவி திருமதி. புனிதா அவர்கள் பக்கபலமாக இருந்தது மட்டுமின்றி சோர்வுறும் நேரங்களில் தூண்டுகோலாய் இருந்து “ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்” என்ற உண்மையை மெய்ப்பித்திருக்கிறார். மேலும் முதன்முதலாகத் தொழில்தொடங்க உதவிய கோவை மெடிக்கல் திரு. சுந்தர்ராஜ் அவர்களுக்கும், என்னை நெறிப்படுத்திய ‘லேனா ஏஜென்சி’ திரு. லட்சுமணன் அய்யா அவர்களும் என்னுடைய நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இப்படி தன் பிஸினஸ் வெற்றிக் கதையைச் சொல்லி முடித்த திரு. சுரேஷ் அவர்களையும், அவரது இயக்குநர்களையும் சந்தித்து அவர்களை எது ஒருங்கிணைத்தது, எப்படி வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது, எதிர்கொண்ட சவால்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்,
.
என்னுடைய சொந்த ஊர் கோவை. என்னுடைய அப்பா திரு. பத்மநாபன், அம்மா திருமதி. மாதவியம்மாள். இரண்டு மூத்த சகோதரர்கள். யூனியன் ஸ்கூல் என்றழைக்கப்படும் வெரைட்டி ஹால் ரோட்டில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. பள்ளியில்தான் படித்தேன். இளங்கலைப் படிப்பை கோவை அரசு கலைக்கல்லூரியில் முடித்தேன். சுயதொழில் தொடங்க வேண்டும் என்றவிருப்பத்தை என் வீட்டில் சொன்ன போது மறுப்பே பதிலாகக் கிடைத்தது. அதனால் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் லிமிடெட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன்.

சுயதொழில் தான் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து என் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்த சமயத்தில் புதியதாக அறிமுகமாகி மிகுந்த வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்தது சேட்டிலைட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். எதிர்காலத்தில் இந்தத் துறையில் பலமான வாய்ப்புகள் இருக்கும் என்று கணித்து கேபிள் டி.வி. துறையில் இறங்க முடிவு செய்தேன். ஆனால் கையில் பணம் இல்லை.

இந்த சமயத்தில் தான் என்னுடைய அண்ணி திருமதி. சுதா பிரதீஷ் அவர்கள் தன்னுடைய நகைகள் அனைத்தையும் கொடுத்து தொழில் தொடங்குமாறு கூறினார். அந்த நகைகளை அடமானமாக வைத்துதான் கேபிள் டி.வி. தொழிலைத் தொடங்கினேன். என்னுடைய வெற்றிக்கு முதல்படியாக அமைந்தது இந்த கேபிள் டி.வி. தொழில்தான்.

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் எப்போதாவது அரிதாக சில எண்ணங்கள் தோன்றும். அத்தகைய எண்ணங்களை நாம் தவறவிடக்கூடாது. திடீர் என்று தோன்றும் அத்தகைய எண்ணங்களால் தான் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும். அப்படித்தான் எனக்கு ஏற்பட்ட எண்ணங்களும், என் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது கேபிள் டி.வி. தொழில் வடிவில்.

எந்தத் தொழில் அல்லது வேலையைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் தொழில் அல்லது வேலையில் வெற்றியைப் பெறமுடியும் என்ற பாடத்தை நன்றாக உள்வாங்கியிருந்ததால் என்னுடைய தொழிலில் முழுஈடுபாட்டுடன் இன்றுவரை செயலாற்றிக் கொண்டிருக்கிறேன். தற்போது கேபிள் டி.வி. ஒளிபரப்புபவர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக இருக்கிறேன் இந்த நிலைக்கு என்னை உயர்த்தியது என்னுடைய கடுமையான உழைப்பு தான்.

தொழிலில்வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அண்ணியுடன் இணைந்து மலுமிச்சம்பட்டியில் மருந்துக்கடையை ஆரம்பித்தேன். திருமணத்திற்குப் பிறகு எனது கேபிள் டி.வி. நண்பர் திரு. கருப்புசாமியும், ஆடிட்டர் திரு. ஜெயபிரகாஷ் அவர்களும் இணைந்து ‘மல்டிலெவல் மார்க்கெட்டிங்’ தொழிலைத் துவக்கினோம். ரியல் எஸ்டேட் துறையில் நுழைய அதை முதல்படியாக வைத்து முயற்சி செய்தோம். ஆனால் நடைமுறை சாத்தியமற்றுப் போனது.

இந்நிலையில் ஆடிட்டர் ஜெயபிரகாஷ் அவர்களுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலை சிறிய அளவில் செய்து கொண்டிருந்த நேரத்தில் சுரேஷின் எண்ணமும் ரியல் எஸ்டேட்டில் இருப்பதை அறிந்தேன். எதிர்வரும் காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் பலமான வாய்ப்புக்கள் இருப்பதை உணர்ந்தேன். திரு. சுரேஷ், எனது அண்ணி சுதா பிரதீஷ் ஆகியோரை இணைத்துக்கொண்டு ஸ்ரீ கருடா புரமோட்டர்ஸ் இந்தியா (பி) லிமிடெட் என்றநிறுவனத்தை 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினோம். தற்போது குறிப்பிட்ட அளவிலான வெற்றியைப் பெறமுடிந்திருக்கிறது. அதற்குக் காரணம் நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்கள் எங்களின் நிறுவனத்தில் தங்களை இணைத்துக்கொண்டு, எளிய, நடுத்தர மக்களுக்கு நம்பிக்கையான முதலீட்டை கொடுத்தது தான். மேலும் இந்த வளர்ச்சிக்கு என்னை இணைத்துக்கொள்ள பெரிதும் துணை நின்றவர் எனது மனைவி திருமதி. லட்சுமி மற்றும் என்னுடைய நண்பர்கள்.

இவர்களைத் தவிர 40 ஆண்டுகாலம் அரசு நில அளவைத் துறையில் நேர்மையாகப் பணியாற்றி தனக்காக ஒரு கைபிடி அளவு நிலத்தைக்கூட சொந்தமாக்கிக் கொள்ளாத, மறைந்த என் தந்தையின் வழிகாட்டலே இன்றுவரை என்னை வழிநடத்துகிறது. என்னுடைய அனைத்து வெற்றிகளையும் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.

என்னுடைய ஊர் கோயமுத்தூருக்கு அருகில் உள்ள மலுமிச்சம்பட்டி. என்னுடைய அப்பா திரு. ட. கோபாலன், அம்மா திருமதி. எ. விசாலாட்சி. இருவரும் அரசுப் பணியில் இருந்தவர்கள். என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு அக்கா, ஒரு அண்ணன். நான் நினைக்கக்கூடிய, செய்யக்கூடிய அனைத்து விசயங்களிலும் இவர்களின் உந்துசக்தி இன்றுவரை பக்கபலமாக இருக்கிறது. கோவையில் தான் என் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி.

எனது கணவர் திரு. பிரதீஷ் குமார் அவர்கள் அரசுப்பணியில் உள்ளார். அவர்களின் ஊக்கத்தால் கோவைக்கு அருகில் உள்ள மலுமிச்சம்பட்டியில் ஒரு பார்மஸியைத் தொடங்கினேன். என் கணவரின் வழிகாட்டுதல் மற்றும் ஒத்துழைப்பால் எங்களின் பார்மஸி நன்கு லாபகரமாக இயங்கியது. அதனால் என்னுடைய சகோதரிகளுக்கும் பார்மஸியை வைத்துக் கொடுத்தோம். அவர்களுடையதும் லாபகரமாகவே சென்று கொண்டிருக்கிறது

இந்நிலையில் எனது கணவருக்கு மேலும் பல தொழில்களில் ஈடுபட வேண்டும் என்றஆசை இருந்து கொண்டே இருந்தது. ஆனால் எனக்கு ரிஸ்க் எடுக்கத் தயக்கம். பார்மஸி வைக்கவே எனக்கு ஆரம்பத்தில் விருப்பம் இல்லை. எனது பெற்றோர்கள் அரசுப்பணியில் இருந்ததால் நானும் ஏதாவது பணியில் சேர்ந்து கொள்ளவே ஆசைப்பட்டேன். அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்திருந்த சமயத்தில் தான் திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து வேலைக்குச் சென்றால் நான் ஒரு ஊரிலும், கணவர் ஒரு ஊரிலும் இருக்க நேரிடும் என்ற எண்ணத்தினால் தான் பார்மஸி வைத்துக்கொள்ள உடன்பட்டேன். எனினும் பார்மஸி வைத்த பின்னர் உழைப்பைக் கொடுத்தோம். உள்ளம் மகிழும் வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.

இந்த நேரத்தில் எனது கணவரின் ஒத்துழைப்பைப் பற்றி கூறியே ஆக வேண்டும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பதை மாற்றி என் வெற்றிக்குப் பின்னால் எனது கணவரின் ஒத்துழைப்பு இருக்கிறது. வாழ்க்கையில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் எனது கணவரின் உறுதியான ஒத்துழைப்புதான் எனக்கான நம்பிக்கையைத் தந்தது. வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் தவறவிடலாம். ஆனால் உங்கள் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மட்டும் எந்தக் காலத்திலும் தவறவிடக்கூடாது என்பதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, என் கணவரின் நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பால் கடுமையாக உழைத்தேன். அதன் பலனாக, தொடர்ந்து வெற்றியைப் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் திரு. சுரேஷ் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. மருந்து பொருட்களை விற்பனை செய்யும் விற்பனைப் பிரதிநிதியாக அறிமுகமான அவர் என்னுடைய சகோதரராகவே மாறிவிட்டார். விற்பனைப் பிரதிநிதியாக இருந்து மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்கியவுடன் நாங்கள் அவரிடமே மருந்துகளைக் கொள்முதல் செய்தோம். அவரின் நேர்மை, விடாமுயற்சி, சாதிக்க வேண்டும் என்றஆற்றல் ஆகியவற்றால் கவரப்பட்ட எனது கணவர், அவருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கலாம் என்று ஊக்கப்படுத்தினார்.

ஒரு துறையில் பெற்றவெற்றி கண்டிப்பாக இன்னொரு வெற்றிக்கு உன்னை இட்டுச் செல்லும் இது மாற்றமுடியாத வெற்றி விதி என்று கூறியதுடன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட ஊக்கம் கொடுத்தார். மேலும் எனது கணவரின் தம்பியும், ஸ்ரீ கருடா புரமோட்டர்ஸின் இயக்குநர்களில் ஒருவருமான திரு. ட. கிருஷ்ணகுமாரின் உந்துதலும், அவரின் இலக்குகளும், நம்பிக்கைகளும் என்னை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுத்தியது. அவர்கள் இருவரின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை, அதை நோக்கி அழைத்துச் செல்லும் பாதை, அதற்கான விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை இன்றுவரை என்னை பிரமிக்க வைக்கிறது. நான் ஸ்ரீ கருடா புரமோட்டர்ஸின் இயக்குநராக சேர்ந்த அன்றிலிருந்து உயர ஆரம்பித்த என் வாழ்க்கை இன்று வரை சீரான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் எனது கணவருக்கு மேலும் பல தொழில்களில் ஈடுபட வேண்டும் என்றஆசை இருந்து கொண்டே இருந்தது. ஆனால் எனக்கு ரிஸ்க் எடுக்கத் தயக்கம். பார்மஸி வைக்கவே எனக்கு ஆரம்பத்தில் விருப்பம் இல்லை. எனது பெற்றோர்கள் அரசுப்பணியில் இருந்ததால் நானும் ஏதாவது பணியில் சேர்ந்து கொள்ளவே ஆசைப்பட்டேன். அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்திருந்த சமயத்தில் தான் திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து வேலைக்குச் சென்றால் நான் ஒரு ஊரிலும், கணவர் ஒரு ஊரிலும் இருக்க நேரிடும் என்ற எண்ணத்தினால் தான் பார்மஸி வைத்துக்கொள்ள உடன்பட்டேன். எனினும் பார்மஸி வைத்த பின்னர் உழைப்பைக் கொடுத்தோம். உள்ளம் மகிழும் வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.

இந்த நேரத்தில் எனது கணவரின் ஒத்துழைப்பைப் பற்றி கூறியே ஆக வேண்டும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பதை மாற்றி என் வெற்றிக்குப் பின்னால் எனது கணவரின் ஒத்துழைப்பு இருக்கிறது. வாழ்க்கையில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் எனது கணவரின் உறுதியான ஒத்துழைப்புதான் எனக்கான நம்பிக்கையைத் தந்தது. வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் தவறவிடலாம். ஆனால் உங்கள் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மட்டும் எந்தக் காலத்திலும் தவறவிடக்கூடாது என்பதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, என் கணவரின் நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பால் கடுமையாக உழைத்தேன். அதன் பலனாக, தொடர்ந்து வெற்றியைப் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் திரு. சுரேஷ் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. மருந்து பொருட்களை விற்பனை செய்யும் விற்பனைப் பிரதிநிதியாக அறிமுகமான அவர் என்னுடைய சகோதரராகவே மாறிவிட்டார். விற்பனைப் பிரதிநிதியாக இருந்து மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்கியவுடன் நாங்கள் அவரிடமே மருந்துகளைக் கொள்முதல் செய்தோம். அவரின் நேர்மை, விடாமுயற்சி, சாதிக்க வேண்டும் என்றஆற்றல் ஆகியவற்றால் கவரப்பட்ட எனது கணவர், அவருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கலாம் என்று ஊக்கப்படுத்தினார்.

ஒரு துறையில் பெற்றவெற்றி கண்டிப்பாக இன்னொரு வெற்றிக்கு உன்னை இட்டுச் செல்லும் இது மாற்றமுடியாத வெற்றி விதி என்று கூறியதுடன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட ஊக்கம் கொடுத்தார். மேலும் எனது கணவரின் தம்பியும், ஸ்ரீ கருடா புரமோட்டர்ஸின் இயக்குநர்களில் ஒருவருமான திரு. ட. கிருஷ்ணகுமாரின் உந்துதலும், அவரின் இலக்குகளும், நம்பிக்கைகளும் என்னை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுத்தியது. அவர்கள் இருவரின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை, அதை நோக்கி அழைத்துச் செல்லும் பாதை, அதற்கான விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை இன்றுவரை என்னை பிரமிக்க வைக்கிறது. நான் ஸ்ரீ கருடா புரமோட்டர்ஸின் இயக்குநராக சேர்ந்த அன்றிலிருந்து உயர ஆரம்பித்த என் வாழ்க்கை இன்று வரை சீரான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

ஸ்ரீ கருடா புரமோட்டர்ஸ் இந்தியா (பி) லிமிடெட்டின் நோக்கமும், இலக்கும் பற்றி… வாழ்நாள் கனவான சொந்தமாக ஒரு வீடு என்பதை நனவாக்க ஒவ்வொருவரும் படும்பாட்டை எழுத்தில் வடித்துவிட முடியாது. அப்படிப்பட்டவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டோம். குறைந்த விலையில், எல்லோருக்கும் வீடு என்றகுறிக்கோளை இலக்காக வைத்துதான் இந்த நிறுவனத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். குறைந்த விலையில், மனதிற்குப் பிடித்தமான பகுதியில், மக்கள் விரும்பிய அளவில் என்பதையே எங்கள் இலக்காக வைத்து இந்நிறுவனத்தைத் தொடங்கினோம் புரமோட்டர்ஸ் தொழிலில் பணபலம் மிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வந்தபோது தாங்கள் இதில் நுழைந்து வெற்றி பெறமுடியும் என்கிறநம்பிக்கை எப்படி ஏற்பட்டது?

எங்களுக்குப் பக்கபலமாக இருந்தது மார்க்கெட்டிங் தான். அதை நம்பியே களத்தில் இறங்கினோம். மார்க்கெட்டிங்கைத் தவிர எதுவும் அப்போது தெரிந்திருக்கவில்லை. அந்த பலத்தின் மூலமே பலவீனங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறோம். மேலும் எங்கள் முன் உள்ள மற்றநிறுவனங்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அனைத்தையும் எதிர்கொண்டு வெல்ல இயலும் என்றதன்னம்பிக்கை இருந்தது. எங்களுடைய இலக்கு சரியானது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். எக்காரணத்தைக் கொண்டும் அதைவிட்டுக் கொடுக்கக்கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டோம்.

எங்களைச் சுற்றி இருக்கும் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிப்பதற்கு மாறாக நாங்கள் எப்படி வெற்றி பெறுவது என்பதில் கவனம் செலுத்தினோம். இதுவும் எங்களால் முடியும் என்று நம்பினோம். வெற்றிபெறவேண்டும் என்றஆசை இருந்தும் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் எந்த காரியத்திலும் வெல்ல முடியாது. எத்தனை சோதனைகள் வந்தாலும் எங்களால் முடியும் என்று திடமாக நம்பியதால் தான் இன்று இத்தகைய வெற்றியை எங்களால் பெறமுடிந்திருக்கிறது.

கடினமான காலங்களை எப்படி கடந்து வந்தீர்கள்?
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் சில கடினமான காலங்கள் அமைய வேண்டும். அந்த கடுமையான காலங்கள்தான் மேன்மையடைய மிகமிகத் தேவையானதாகும். எங்களுக்கும் கடுமையான காலங்கள் அமைந்தன. அந்தக்காலங்கள் எங்கள் அனுபவங்களை வளப்படுத்தியது மட்டுமின்றி, எங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளித்தது. அந்தக்காலங்கள் எங்கள் முன் சவால்களை உருவாக்கி எங்களின் திறமைகளை வெளிக்காட்ட வைத்தது. எங்கள் சிந்தனைகளையும், எங்கள் பார்வைகளையும் விசாலமாக்கியதே எங்களுக்கு ஏற்பட்ட கடினமான காலங்கள் மூலம் தான். எங்களின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் மூலம் அக்காலத்தைக் கடந்து வந்தோம்.

வெவ்வேறு துறைகளில் இருந்த நீங்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்கள்?

முதலில் எங்களுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டோம். ஒத்த சிந்தனையை வளர்த்துக் கொண்டோம். அதன் மூலம் நல்ல புரிதல் ஏற்பட்டது. பிறகு வேலையைப் பகிர்ந்து கொண்டோம். இடைவெளியில்லாத தகவல் தொடர்பை வலிமையாக்கிக் கொண்டோம். குழு மனப்பான்மையுடன் இயங்குவதால் எங்களுக்கிடையே முரண்பாடுகள் தோன்றுவதில்லை. 

உங்கள் நிறுவனத்தின் வெற்றியின் ரகசியங்கள் என்று எதைக்கூறுவீர்கள்?

எங்களுடைய இத்தகைய வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. பல சின்னச்சின்ன வெற்றிகளின் தொகுப்பு தான் இன்றைய வெற்றி. பலவித பிரச்சனைகளுக்குள் இருந்த வாய்ப்புக்களை மிக நுண்ணியமாக கவனித்துப் பயன்படுத்திக் கொண்டதுதான் இந்த வெற்றிக்கு அடிப்படை.

மற்றொரு விசயம் எங்களுடைய கடின உழைப்பு. உழைப்பின் ஓட்டத்தை சரியான திசையில் தூண்டிவிடும்போது அபரிமிதமான சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியை வெற்றியாக மாற்றிக்கொண்டோம். அதேபோல் எங்களுக்கிடையே இருந்த ஊக்கப்படுத்திக்கொள்ளும் தன்மை. ஒரேநாளில் ஊக்கப்படுத்திக் கொள்ள முடியாது. அழகான சிற்பங்கள் ஒரே நாளில் செதுக்கிவிட முடியாது. அதைப்போலத்தான் எங்களுடைய பணியாளர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஊக்கப் பயிற்சியைக் கொடுத்து அவர்களுடைய மனப்பாங்கையும், எண்ணத்தையும் வெற்றியின் பக்கம் திருப்பினோம்.

மற்றொரு முக்கியமான விசயம் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டது. பல நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் நடுத்தர மக்களுக்காக அதுவும் தனி வீடாக, தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியுடன் செய்ய ஆரம்பித்தோம். அதுதான் எங்களின் தனித்துவமாக மாறியது. மக்கள் எங்களை நோக்கி வந்தார்கள். பயன்பாடு அடைந்தார்கள்.

மற்றொரு முக்கியமான விசயம் திட்டமிடல். ஏன் இந்த திட்டமிடலைக் கடைசியாகக் கூறுகின்றோம் என்றால் மேற்கூறியவை அனைத்தும் இருந்தால் தான் தெளிவான திட்டம் தீட்ட முடியும். அவை இல்லாமல் திட்டம் தீட்டுவது வெறும் பேப்பர் அளவிலேயே காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும். நாங்கள் எப்படி திட்டமிட்டோம் என்றால், முதலில் எங்களால் அடைய முடிந்த இலக்குகளைக் குறித்துக்கொண்டோம். பிறகு எந்தெந்த வழிகளில் அதை அடையளாம் என்பதை தெளிவாகக் குறித்துக் கொண்டோம். அவற்றினால் ஏற்படும் பிரச்சனைகளையும், அதைத் தீர்ப்பதற்கான தீர்வு முறையினையும் யோசித்துக் கொண்டோம். பிறகு அந்த இலக்கை அடைவதற்குத் தகுதியான நேர் சிந்தனை உடைய ஆட்களைத் தேர்வு செய்து செயல்பட ஆரம்பித்தோம். இடையிடையே செயல்களைக் கண்காணித்துக் கொண்டோம். எங்கேயாவது தவறு நடந்தால் சரிபடுத்திக் கொண்டோம். ஒரு வெற்றி கிடைத்தவுடன் மற்றொரு வெற்றிக்காகத் திட்டமிடத் தயாராகிக் கொண்டோம்.

இந்த வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?.

பல எளிய மக்களின் வாழ்நாள் கனவை நிறைவேற்றியதாக மகிழ்கிறோம். “கானிநிலம் வேண்டும்” என்று பாரதி சொன்னதை, இன்று அனைவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப விலையில் வீட்டு மனைகளை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. எங்களின் வெற்றி மூலம் நேர்மையாக, அதிக லாபமில்லாமல் இயல்பு லாபத்துடன் ஒரு துறையில் ஈடுபட்டால் வெற்றி என்பது நம்மைவிட்டு செல்லாது என்பதை உணர்கிறோம்.

இன்றைய இளைஞர்களைப் பற்றிய தங்களின் கண்ணோட்டம்…

இன்றைய இளைஞர்கள் சினிமாவில் ஒரே பாடலில் பணக்காரர்களான கதையைப்போல ஒரே இரவில் சாதித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. தொடர்ந்து உழைப்பைச் செலுத்தும்போது தான் வெற்றி நம்மை நோக்கிவரும். அதுவரை பொறுமையுடன் செயல்பட வேண்டும். அந்தப் பொறுமை இன்றைய இளைஞர்களிடம் இல்லை.
சிலர் இடைவிடாத முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். சிலர் அதேபோல முயற்சி செய்தும் தோல்வியடைந்து விடுகின்றனர். முதலாமவர் வெற்றி பெற்றதுக்கும் இரண்டாமவர் தோற்றதற்கும் என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். ஒரு முயற்சி செய்து தோல்வி அடைந்தவுடன் மீண்டும் அதே வழியில் முயற்சியை மேற்கொள்கிறார்கள். இப்படி மீண்டும் மீண்டும் முயற்சியைத் தொடர்ந்தாலும் அவர்களுக்குக் கிடைப்பதென்னவோ தோல்வி தான். இதில் கவனிக்க வேண்டிய பாடம் என்னவென்றால் அவர் செய்த முயற்சியில் குறையில்லை. செல்லும் பாதையில் தான் தவறு இருக்கிறது. எப்படியென்றால் முதல் முறையாக தோல்வியடைந்த போதே அவர் தன்னுடைய முயற்சியில் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை அறிந்து, தன்னுடைய பாதையை மாற்றியமைத்து முயற்சியைத் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் இன்று இளைஞர்கள் அப்படிச் செய்வதில்லை. முதல் முயற்சியில் தோல்வியடைந்தால் தொடர்ந்து அதே வழியில் முயற்சி செய்கிறார்கள் அல்லது முயற்சியை கைவிட்டு விடுகிறார்கள். இதனால் வெற்றி பெறும் திறமை அவர்களிடம் இருந்தும் சரியான வழிமுறைகளைப் பின்பற்றாததால் தோல்வியடைந்து வருகிறார்கள்.

அத்தகைய இளைஞர்களுக்குத் தாங்கள் சொல்ல விரும்புவது…

இந்த உலகம் ஒரு ஓட்டப்பந்தய மைதானம். அதில் மூச்சிறைக்க ஓடிக்கொண்டிருப்பவர்கள் மனிதர்கள். அதில் வேகமாக ஓடுபவர்களே வெற்றியையும், புகழையும் அடைகிறார்கள். அப்படிப்பட்ட வெற்றியைப் பெறஇளைஞர்கள் சில விசயங்களைத் தவறாமல் பின்பற்றவேண்டும். அதில் முதன்மையானது தன்னம்பிக்கை.

மனதில் அச்சம் குடிகொண்டிருந்தால் எதிலும் வெல்ல முடியாது. முதலில் அந்த அச்சத்தை மனதில் இருந்து வெளியேற்றுங்கள். அச்சத்தை வெளியேற்றும் ஆற்றல் தன்னம்பிக்கைக்குத்தான் உள்ளது. எனவே மனதில் தன்னம்பிக்கைச் சுடரை பரவ விடுங்கள்.

அடுத்து நாம் நமது செயல்திறனை அதிகமாக்க வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு செயல்திறன் குறையும்போது அவருடைய மனதில் தாழ்வு மனப்பான்மை தவழ்ந்து கொண்டிருக்கும். “நம்மால் இதை நன்றாகச் செய்ய முடியுமா?” என்றஅவநம்பிக்கையும் தலைதூக்கும். ஆகவே உங்களுடைய அறிவையும், செயல் திறனையும் அதிகமாக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அதற்கு முறையான பயிற்சியும், முழுமையான முயற்சியும் வேண்டும். அத்தகையது உங்களிடம் இருக்குமானால் நீங்கள் எதையும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். மேலும் உங்களுக்கு இருக்கும் திறமைகள் போதுமானதாக இல்லாவிட்டால் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளத் திட்டமிட்டு முயலுங்கள்

அடுத்து திட்டமிடக் கற்றுக்கொள்ளுங்கள். எதைச் செய்தாலும் திட்டமிட்டுச் செய்வதை உங்களுடைய பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஒரு செயலைச் செய்யும் முன் அச்செயலைத் திட்டமிட்டுக் கொண்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

தொடர்ந்து திட்டமிட்டதை செயலாற்றமுயற்சி செய்யுங்கள். தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். எப்போதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். புதிது புதிதாக எதையாவது அறிந்து கொண்டே இருங்கள். உங்களுக்கு எதில் விருப்பமோ அதைப்பற்றி அதிகமாக அறிந்து கொள்ள முன்வாருங்கள்.

லட்சியத்தை நோக்கி செல்லும் நீங்கள் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். எப்போதும் உங்களுடைய பார்வை லட்சியத்தை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படி லட்சியத்தைப் பார்க்கும் உங்களுடைய கண்களுக்கு அதன் வழியில் இருக்கும் தடைகள் புலப்படாது. லட்சியத்தை நோக்கிச் செல்லும்போது சில தவறுகள் ஏற்படலாம். அவற்றைத் திருத்திக்கொள்ளுங்கள். தவறுகளுக்காக எப்போதும் கவலைப்படாதீர்கள். சில நேரங்களில் தவறுகள்தான் பல நல்ல முடிவுகளை எடுக்க உதவி புரியும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

குழுவாக இயங்கும்போது உங்களது எண்ணங்களை, சிந்தனைகளை மற்றவர்களுடன் கலந்து பேசுங்கள். அவர்களையும் பேசச் சொல்லுங்கள். ஊக்கப்படுத்துங்கள். எப்போதும் யாரையும் ஏமாற்றாதீர்கள். நேர்மை, பொறுப்புடன் செயலாற்றுதல் போன்றவற்றைப் பின்பற்றுங்கள்.
இவற்றையெல்லாம் கடைபிடித்து, உங்களுக்கு சரியானது என்று தோன்றும்பட்சத்தில் அதை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் நிறைவேற்றுங்கள். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் வாழ்ந்ததற்கான சுவடுகளை ஏற்படுத்துங்கள்.
தன்னம்பிக்கை குறித்து…

எங்களுடைய இந்த வெற்றிக்கு தன்னம்பிக்கை மிக முக்கிய பங்களிப்பைத் தந்திருக்கிறது. 24 ஆண்டுகளாக ஒரு அற்புதமான சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இதழின் வாசகர்கள் என்ற முறையில் தன்னம்பிக்கை இதழ் தொடர்ந்து இத்தகைய பணியைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஒவ்வொரு தனிமனிதனின் வெற்றிகளையும், அந்த வெற்றிக்கு அவர்கள் பட்ட கஷ்டங்களையும் நேர்முகமாக அவர்களின் மூலமே சொல்ல வைப்பதால் உந்தப்பட்ட என்னைப்போல பல சாதனையாளர்கள் உருவானதற்கு தன்னம்பிக்கை மிக முக்கியக் காரணம் என்பதை பதிவு செய்கிறேன். வளரும் தலைமுறைக்குத் தேவையான கருத்துக்கள் உள்ள இந்த இதழை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment