திறமை எப்படி உற்பத்தியாகிறது என்று தெரியுமா? அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்தக் கோணத்தில் எல்லாச் செயல்களையும் கவனிக்க வேண்டும்.
*******
பிறப்பாலும், வளர்ப்பாலும், பயிற்சியாலும், முயற்சியாலும் ஒருவர் திறமை பெறுகிறார். வளர்ப்பால் குடும்பமும், பயிற்சியால் பள்ளியும், பிறப்பால் கர்மமும், முயற்சியால் தானும் திறமையை ஒருவருக்கு அளிக்கின்றன
எது பலன் கொடுக்கிறதோ அதுவே திறமை எனப்படும். பலனில் முடியாததை, திறமை என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டாம். படிப்பு பட்டத்தில் முடிய வேண்டும். ஒரு விசேஷம் நடத்தினால் அது பூர்த்தியாக வேண்டும். வீடு கட்டினால் பழுதின்றியிருக்கவேண்டும். வேஷ்டியைத் துவைத்தால், அது சுத்தமாக இருந்தால் வேலை பலன் தந்ததாகப் பொருள்.
தன் செயலை முறைப்படுத்தி பலன் தரும் வகையில் செயல்படுத்துவது (organise) அவசியம். படிக்கும் மாணவன் தன் புத்தகம், நோட்டு, பேனா, ஆகியவற்றைக் கவனமாக வைத்துக் கொண்டு, தன் நேரத்தை மற்ற கடமைகளுடன் சரி செய்து, பாடங்கள் அனைத்தையும் படிக்கும்படி அமைப்பது (organisation)) அவனை முறையாகச் செயல்பட வைப்பதாகும்.
அதற்கு முன் அவனுடைய சக்தி (force) முழுவதும் படிப்பின் பக்கம் திருப்பப்பட்டால்தான் சக்தி படிப்புக்கு உதவும்.சக்தியைக் (force) குறிப்பிட்ட பக்கம் திருப்பினால் அது energy பலன் தரும் சக்தியாகிறது.
உடலிலும், மனத்திலும் தெம்பு energy இருந்தால் தான் அடிப்படையாகப் படிக்க முடியும். மேலும் படிக்க வேண்டும் என்ற கருத்து எண்ணமிருந்தால் தான் தெம்பு energy சேர்ந்து force பலன் தர முடியும். உடலுக்குத் தெம்பு கொடுப்பது உணவு. மனத்திற்குத் தெம்பு கொடுப்பது ஆர்வம்.
படிப்பில் திறமை இருக்கிறது எனில் அது எழ நல்ல உணவு, படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அடிப்படை. அது தெம்பை (energy) உற்பத்தி செய்யும். படிப்பது அவசியம் என்ற நோக்கம் இருக்கும் தெம்பைப் படிப்புப் பக்கம் செலுத்தும்பொழுது அது force படிக்கக்கூடிய சக்தியாகிறது. தன்னையும், தன் சூழ்நிலையையும் organise முறைப்படுத்திக் கொண்டால் அந்தச் சக்தி force, படிப்பைத் தரும் சக்தியாக power ஆக மாறுகிறது. Power பலனைத் தருகிறது. இவை திறமையின் பகுதிகள்.
Energy --> force -->power -->capacity
தெம்பு --> படிக்கக்கூடிய சக்தி--> பலன் தரும் சக்தி--> திறமை
இவற்றிற்குத் தேவையானவை,
உணவு ஆர்வம் -->நோக்கம் --> முறைப்படுத்தும் சூழ்நிலை --> திறமை
இந்தக் கண்ணோட்டத்தில் நாம் செய்யும் காரியங்களைக் கவனித்தால் நமக்குத் திறமையிருக்கிறதா, எப்படி அது வந்தது, திறமையில்லையா, எதனால் இல்லை என்று புரியும்.
பயிற்சி பலன் தரும். அடுத்த பட்டம், உயர்ந்த அனுபவம், அடுத்த உயர்ந்த இலட்சியத்தை நாடுதல் மனித நிலையை உயர்த்தும்.
*******
பயிற்சி என்பது தானே நெடுநாளில் நடக்கக் கூடியதைக் குறுகிய காலத்தில் பெற்றுத் தரக்கூடியது. தானே நடக்க முடியாததை, நடத்தித் தரவல்லதும் கூட.பெய்யும் மழை தானே ஏரியில் சேர்ந்து, பயிருக்கு வேண்டும்பொழுது கிடைக்கப்போவதில்லை. நாமே முயன்று ஏரியையும், வாய்க்காலையும் ஏற்படுத்தினால்தான் அது நடக்கும். சென்னையில் பேப்பர் போடும் பையன் தானே படிப்பும், பட்டமும் பெறப் போவதில்லை. அவனை எடுத்து பயிற்சி அளித்தால் நடக்கும். டெல்லியில் தங்கியிருந்தால் 2, 3 வருஷத்தில் ஹிந்தி பேச வரும். பாண்டியில் தங்கியுள்ள வடஇந்தியர் 10, 15 ஆண்டுகளில் தமிழ் கற்றுக் கொள்வதில்லை. பயிற்சியால் 10 மாதத்தில் கற்றுக் கொள்ளலாம்.
இதுவே குமாஸ்தாவுக்கும், அதிகாரிக்கும் உள்ள வித்தியாசம். குமாஸ்தாவுக்கு யாரும் பயிற்சி அளிப்பதில்லை. தானே (rank promoted) பயின்று 20 ஆண்டுகளில் மேலே வருவார்கள். அதிகாரி பயிற்சி மூலமாக முதல் ஆண்டு முடிவில் அதைப் பெறுகிறார்.
தானே கிடைக்காத பயிற்சியை நாமே பெறலாம். நாமே பெற அதிக ஆர்வம், உயர்ந்த முயற்சி வேண்டும்.கல்லூரிக்குப் போகாதவன், தானே அறிவு பெற எடுக்கும் முயற்சி பெரிது.தானே பட்டம் பெற எடுக்கும் முயற்சியும் சிரமமானது.
வீட்டில் கற்றுக் கொடுக்காத நல்ல பழக்கங்களை நாமே முயன்று பெறலாம். பிறவியில் இல்லாத நல்ல சுபாவத்தைப் பெறுவது பூரண யோகம்.முயற்சி மேலே போகப் போக அதிகம் தேவைப்படும். physical skill கைவினை எளிது. பழக்கம் அடுத்தது. படிப்பு உயர்ந்தது. இலட்சியம் அதற்கும் அடுத்தது. சுபாவம் கடைசியானது.
நிலை
|
முயலும் பகுதி
|
முயல்வது
|
Physical skill கைவினை
|
உடல்
|
உழைப்பு
|
நல்ல பழக்கம்
|
உயிர்(பிராணன்)
|
மன உறுதி
|
அறிவு
|
மனம்
|
புத்தி
|
இலட்சியம்
|
உயர்ந்த மனம்
|
Mental decision
மனத்தின் முடிவு
|
சுபாவம்
|
சைத்தியபுருஷன்
|
சமர்ப்பணம்
|
புதியதாக ஒரு நல்ல குணத்தை ஏற்றுக்கொள். உதாரணமாக இனிமையான உணர்வை உண்மையான புன்னகையால் வெளிப்படுத்த முயலலாம்.
******
விஞ்ஞான ஆராய்ச்சி biology உடல் நூலில் முதிர்ந்து, அது உள நூலைத் psychology தொடும் இடத்தில் நடந்த பல ஆராய்ச்சியின் முடிவுகளில் ஒன்று: புன்னகை இன உணர்வை வெளிப்படுத்துகிறது.
விலங்கினம் பெட்டையைத் தேடும் பொழுது (mating call) குரல் கொடுக்கும். நாகரீகம் வளர்ந்து இக்குரல் புன்னகையாயிற்று என்பது ஆராய்ச்சி.
ஆன்மீக ரீதியாக ஆன்மா மலரும்பொழுது முகத்தில் அது புன்னகையாக வெளி வருகிறது. சிரித்த முகமாகவே உள்ளவர் பலர், சிரித்தறியாதவர் சிலர். ஒருவரைக் காணும்பொழுது உளம் நிறைந்து, அகம் மலர்ந்து, உள்ளம் பூரித்து, அவரை நாம் கண்டதால் மகிழ்ந்தோம் என அறிவிக்கும் புன்னகையை எவர் ஏற்றாலும், அது ஆன்மாவின் மலர்ச்சிக்கு உதவும்.
ஒரு புத்தகம் கடன் வாங்க ஒருவர் வருகிறார். நாம் அதைக் கொடுக்கிறோம். வாங்கிக் கொண்டு, நிமிர்ந்து பார்க்காமல் போய் வருகிறேன் என்றும் சொல்லாமல் போய் விடுகிறார். இவர் thank you என்று சொல்லப் பழகினால் இவருக்கு இது முன்னேற்றம்.
அழையாத வீட்டிற்குப் போய், அதை அனுதினமும் செய்து, வாராதே என்று அவர்கள் சொல்லும்வரை போகிறவர் "மதியாதார் தலைவாசல்'' மிதிக்க மாட்டேன் என்ற பழக்கத்தை மேற்கொள்ளுதல் பலன் தரும்.
பரீட்சைக்குப் போகும் மாணவன் இதுவரை தன்னிடமில்லாத ஒரு நல்ல பழக்கத்தை மேற்கொண்டு முதல் நாளே ஹால்டிக்கெட், பேனா, ஸ்கேல், நோட்ஸ் இவற்றை எடுத்து வைத்து, செருப்பு, சைக்கிளுக்கு ரிப்பேரிருந்தால் ரிப்பேர் செய்தால், அது நல்லது.
வீட்டிற்கு வந்த விருந்தாளியை மறந்து சாப்பிட உட்கார்ந்த பின், நீங்களும் சாப்பிட வாருங்கள் என்று கூப்பிடுபவர், வந்தவர்களை முதலில் சாப்பிடச் சொல்லும் பழக்கத்தை எடுத்துக் கொள்ளலாம்.
தனியாக உட்கார்ந்திருக்கும் பொழுது, தம் பெருமை, தமக்கு உலகம் இழைத்த கொடுமை, தம் குடும்பம் தம்மை அலட்சியம் செய்தது, தம் நண்பர்கள் செய்த துரோகம் ஆகியவற்றை நினைவு கூர்பவர், எப்பொழுதும் தம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் சுயநலமி என்பதால் இனி தனியே இருக்கும் பொழுது தம் சம்பந்தப்பட்டவற்றை நினைப்பதில்லை என்று முடிவு செய்தால் நல்லது.
எத்தனையோ வீடுகளில் - நம் வீடும் அதனுள் அடங்கலாம் - காப்பி சாப்பிட்ட டம்ளரை உடனே கழுவினால் அது புதிய நல்ல பழக்கமாகும்.
பிறர் கூறுவதை மறுத்துப் பேசாமலிருப்பது நல்லது. மனத்தால் மறுத்து நினைக்காமலிருப்பது உத்தமம்.
காலைக் கடன், எழுத்து, பேச்சு போன்ற வழக்கமான செயல்கள் செய்வதைச் சற்றுத் துரிதப்படுத்து.
******
இதைச் செய்தால் முழுச் சோம்பேறியும், சுறுசுறுப்பாகி விடுவான். எவரும் தம்மை சுறுசுறுப்பாக்கிக் கொள்ளும் முறை இது. வழக்கமாக ஆபீஸுக்குப் போய்ச் சேர 9 நிமிஷம் ஆகும் என்பவர் அதை 8 நிமிஷமாகவோ, 8 ½ நிமிஷமாகவோ - அவசரப்படாமல் - மாற்ற முயன்றால் அது 5 நிமிஷமாகும்.தினசரி 5 மணிக்கு முடியும் ஆபீஸ் வேலை 3 ¾ க்குத் தானே முடிவதைக் காணலாம். செய்யும் வேலை சற்றுச் சிறப்பாக இருக்கும்.அதிகமாக எழுத்து வேலையுள்ளவர்கள் ஒரு பக்கம் எழுத எத்தனை நிமிஷமாகிறது என்று கண்டால், அது 37 நிமிஷமானால், அதை 34 நிமிஷமாக்க வேண்டும் என்று முடிவு செய்து பல நாள் முயன்ற பிறகு கணக்குப் பார்த்தால் அது 23 நிமிஷமாகியிருக்கும். இச் சுறுசுறுப்பு எல்லாக் காரியங்களிலும் சற்றுத் தெரியும்.
நம் அன்றாட வேலைகள் அனைத்தையும் இதுபோல் சுறுசுறுப்பாக்கினால் பிரமோஷன் வரும், தற்செயலாக வீடு மாறி பெரிய இடம் அமையும், நம்மை விட உயர்ந்தவர்கள் நண்பராவார்கள், வாழ்க்கை ஒரு சிறிது உயரும்.
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஒன்று. சுறுசுறுப்பு வேறு, அவசரம் வேறு. சுறுசுறுப்பு வேலையைச் சீக்கிரம் முடிக்கும். அவசரம் வேலையை நடக்க விடாது. சுறுசுறுப்பு திறனை வளர்க்கும். அவசரம் திறமையைக் குறைக்கும். இந்தத் தவறு செய்தல் கூடாது. (dynamic people are serious; silly people hurry) பெண்கள் இம்முறையை மேற் கொண்டால் சமையல் சீக்கிரம் முடியும். சமையல் வழக்கத்தைவிட ருசியாக இருக்கும். வீட்டில் தனியாக இருப்பது எரிச்சலாக இருக்கிறது என்பவர்கட்கு, எரிச்சல் குறையும்.
வந்த விருந்தினர்கள் வீட்டுப் பெண்மணிக்கு உதவி செய்ய ஆரம்பித்து, தினமும் சமையல் மற்ற வேலைகளைச் செய்து 9 ½ மணிக்கு முடித்தனர். ஆயாசமாகி விடும் அவர்கட்கு. இரு நாள் கழித்து வீட்டுப் பெண்மணி அதைச் செய்தார். 8 ½ மணிக்கு முடிந்தது. எல்லா வேலைகளும் எப்படி 1 மணி முன்னதாக உங்களால் செய்ய முடிகிறது? என்று அவர்கள் நினைத்தனர். மனம் செயலில் ஈடுபட்டால் காரியம் சீக்கிரம் நடக்கும், சிறப்பாக நடக்கும். மனமும் அமைதியுறும். It needs increased concentration செயலில் மனம் லயித்தால் வேலை சீக்கிரம் முடியும்.
சிறு வயதிலிருந்து அளவை மீறிப் போய் பிரச்சினையை வளர்ப்பது உனது பழக்கமானால், அளவோடு பழகி, அளவுகடந்த பலன் பெறலாம்.
*******
செயல் தெம்பு உள்ளவரை நீடிக்கும். அளவை ஏற்படுத்துவது மனம். பேசும்பொழுது, அளவு மீறினால் சண்டை வரும். ஆனால் பேசத் தெம்பு இருக்கும்வரை பேச்சு எழும். அதை மனம்தான் தடுக்க முடியும். சாப்பாடு நன்றாக இருந்தால் ருசி தொடர்ந்து சாப்பிடச் சொல்லும், ஆசையுள்ளவரை சாப்பிடலாம். அது பிரச்சினையை ஏற்படுத்தும். மனம் குறுக்கிட்டு ஆசையைத் தடுக்க வேண்டும்.
சிறு பிள்ளைகள் லீவு நாளில் காலையிலிருந்து மாலைவரை விளையாடிவிட்டு அடுத்த நாள் எழுந்திருக்க முடியாமல் சிரமப்படுவதுண்டு.
இது போன்ற நிலை சிலருக்குத் தானிருக்கும். இவர்கள் ஆரம்பநிலை (elementary level) வளர்ச்சியிலிருப்பவர்கள். இவர்கள் வாழ்வு மிக எளியதாக இருக்கும். இவர்களுக்கு மனம் வளர்ந்திருக்காது. மனவளர்ச்சியைப் பயிற்சியால் பழக்கமாகப் பெறலாம். பெற்றால் வளர்ச்சி அதிகமாகும்.
இப்படிப்பட்டவர்கள் சிறு தொழில் செய்து கொண்டிருப்பார்கள். நல்ல தொழிலிலிருந்தால் தாழ்ந்த நிலையிலிருப்பார்கள். பயிற்சியால் சுயக்கட்டுப்பாட்டைப் பெற்றால் சிறு தொழிலிலிருந்து நல்ல நிலைக்கு வருவார்கள். நல்ல தொழிலில் தாழ்ந்த நிலையிலிருந்தால் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். பெட்டிக் கடைக்காரன் நகைக் கடை வைத்தது போன்ற மாற்றம் ஏற்படும்.முன்சீப் கோர்ட் வக்கீல் ஹைகோர்ட் வக்கீலானது போலிருக்கும். நெடுநாள் தொண்டன் MP ஆனதுபோல் மாறும்.
எப்படி இது முடியும் எனலாம்?
சமூகம் வளர்ந்துவிட்டதால், நாம் சமூகத்தில் நல்ல நிலைமைக்கு நம் திறமையால் உயர்ந்தவரானாலும், கட்டுப்பாடில்லாததால், கீழ் மட்டத்திலிருக்கிறோம். திறமையும், தகுதியும் இல்லாதவருக்கு இந்த வாய்ப்பில்லை. திறமையும், தகுதியும் இருந்தும் மட்டமான பழக்கத்தால் தாழ்ந்த நிலையிலிருக்கிறோம். வளர்ச்சியடையாத சமூகத்தில் இந்த வாய்ப்பில்லை. வளர்ந்த சமூகம் நாம் மாறினால் நம்மை ஆதரிக்கத் தயாராக இருக்கிறது. எனவே நாம் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டால், நமக்குரியது வந்துவிடும்.
இதுபோல் அடிமட்டத்திலிருந்து உயர் மட்டத்திற்கு வந்தவருண்டு. ஆனால் அதிகம் பேரில்லை. இத்தெளிவை உலகம் அறிந்து முனைந்தால் முனைபவர் அனைவரும் பலன் பெறமுடியும். அந்நோக்கத்தோடு நான் இந்நூலை எழுத ஆரம்பித்தேன்.
பிறரைப் புண்படுத்தி வேலையைக் கெடுக்கும் பழக்கம் உடையவர், பயிற்சியால் அப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம்.
*****
எவரும் வேலை செய்யக்கூடாது என்பதே உனது இலட்சியமானால், அந்த இலட்சியம் உனக்குத் தாழ்வு மனப்பான்மையால் ஏற்பட்டிருந்தால், தினமும் 19 மணி நேரம் வேலை செய்யும்படிப் பயிற்சியால் மாறலாம்.
******
பட்டம் பெற்றபின் தாம் பிறந்த சூழ்நிலையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், தகப்பனார், தாயார் பிறர் வீட்டு வேலைகள் செய்ததை நினைத்து மனம் புண்பட்டு, "எவரும் வேலை செய்யக் கூடாது'' என்ற கருத்தை ஆழ்ந்து மனத்தில் இருத்திக் கொண்டார் ஒருவர். தம் எண்ணத்தைப் பரிசீலனை செய்யும் நேரம் வந்தது. மனத்தை மாற்ற படிப்பையும், பயிற்சியையும் ஏற்றுக் கொண்டார். பலன் கிடைத்தது. தாமே முன் வந்து அதிக நேரம் வேலை செய்யும் வாய்ப்பை கேட்டுப் பெற்றார். தினமும் 19 மணி வேலை செய்தார். வேலை சிறப்பாகச் செய்வதில் உயர்வு பெற்றார்.
தாழ்வு மனப்பான்மையால் வந்தது, எப்படிப் போகும் என்பதில்லை. அறிவை விசாலப்படுத்திக் கொண்டால், தாழ்வு மனப்பான்மையின் அஸ்திவாரம் போய்விடும். அதைச் செய்யும் முன் பயிற்சி பலிக்காது. அதன்பின் வேலையைத் தானே செய்து, வேலையை ஆனந்தமாகக் காண முயல்வதே பயிற்சி.அதைக் கண்டபின் பழைய "இலட்சியம்'' மறந்து போகும். சிறப்பு வெளிவரும்.
பிறரைப் புண்படுத்துபவர், தம்மை விடப் பண்புள்ளவரிடையே வாழும் பொழுது காலம் தள்ள முடியும். தம்மையொத்தவருடனிருந்தால், ஓயாமல் சண்டை வரும். தனக்கும் குறைந்த பண்புள்ளவரிடையே வாழ்ந்தால், இவரைச் சண்டை போடவே அனுமதிக்கமாட்டார்கள். ஒரேயடியாக மண்டையில் அடித்து மட்டம் தட்டி ஒரு முறையும் வாயைத் திறக்க முடியாதபடிச் செய்துவிடுவார்கள்.
அவர் பழக்கத்தை விட முயன்று பயிற்சி பெற விரும்பினால் தாமே தமக்கு அப் பயிற்சியை அளித்துக் கொள்ள வேண்டும்.
தம்மையும், தம் போலில்லாதவரையும் கவனிக்க வேண்டும். புண்படப் பேசுவது ஒரு பழக்கமா, நம்பிக்கையா, கட்டுமீறி எழும் சுபாவமா என்று புரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையானால், மாற்றிக் கொள்ள வேண்டும். பழக்கமானால், எதிரான பழக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். சுபாவம் மாறாது. சுபாவம் மாற வேண்டுமானால் அன்னைக்குப் பிரார்த்திக்க வேண்டும்.
உன் சிறந்த திறமையை இருமடங்காக்கலாம். அடுத்த கட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த உண்மை விளங்கும்.
காலம் மாறும் பொழுது நடைமுறை மாறுகிறது. 5 அல்லது 10 வருஷம் கழித்துப் பார்த்தால், பழைய டிரஸ், சாப்பாடு, வீட்டமைப்பு (home-setting), கடையில் விற்பனை தோரணை (display), விசேஷங்களுடைய தரம், ஆகியவை அளவுகடந்து உயர்ந்துவிட்டது, மீண்டும் பழையபடி நம்மாலிருக்க முடியாது என்று அறிகிறோம். புத்தகம் அச்சிடுவது, திருமண அழைப்பிதழ் முதற்கொண்டு தரமாக மாறி விடுகின்றன.
காலம் அடுத்த கட்டத்தைச் சேர்ந்ததால் இந்த மாற்றம். இன்று நாம் ஒரு ஆபீசிலிருக்கிறோம். வீட்டில் குடியிருக்கிறோம், தொழிலில் ஒரு சிறப்பைப் பெற்றுள்ளோம். இவற்றை நாம் அதிகபட்சக் கவனத்தோடு திறமையாகச் செய்துள்ளோம் எனில், அடுத்த கட்ட உயர்வைச் சேர்ந்தவர்களை இன்று கவனித்தால் நம்மைப்போல் இருமடங்கு உயர்வாக இருப்பார்கள். நம் நிலையிலிருந்து பார்த்தால் எது உயர்வாகத் தெரிகிறதோ, அது அடுத்த கட்டத்தில் பாதி என்பதால் நாமும் அந்த உயர்வைப் பெறலாம்.
தமிழ் மீடியம் 8வது மாணவன் சிறப்பானால், இங்கீலீஷ் மீடியம் 8வது மாணவனுடைய திறமை அதிகமாக இருக்கும். பாடங்களைப் பொருத்தவரை தமிழ் மீடியம் மாணவன் அந்தச் சிறப்பைப் பெற முடியும்.
பழைய விவசாயத்தில், முதன்மையானவர் புது விவசாயத்தில் பாதிப் பலனைத்தான் எடுப்பார். முன்சீப் கோர்ட்டில் திறமைசாலி எனப் பெயர் வாங்கியவர் - குமாஸ்தா, சிரஸ்தார், நாஜர் - ஜில்லா கோர்ட், ஹைகோர்ட்டில் உள்ள அதே உத்தியோகம் செய்பவர்களுடைய திறமையை எட்ட இருமடங்கு உயர வேண்டும்.
போட்டோ எடுப்பது, மேடைப் பேச்சு, டைப் அடிப்பது, விசேஷங்களை ஏற்பாடு செய்வது, எலக்க்ஷன் நடத்துவது, சமையல் செய்வது போன்ற எந்த வேலையிலும் சிலர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெருந்திறன் பெற்றிருப்பார்கள். அதையும் 100% உயர்த்த முடியும்.
முன்னேற்றத்திற்கு முடிவில்லை. வேலை பல கட்டங்களாகப் பிரிகிறது. நாம் ஒரு கட்டத்திற்குள் உள்ள முன்னேற்றத்தை எட்டி விடுகிறோம். அத்துடன் திருப்தியடைகிறோம். அடுத்த கட்டம் ஒன்று அதற்கு மேலிருப்பதால், முன்னேற்றம் முடிவற்றதாகும்.
ஜில்லா ஸ்போர்ட்ஸ்க்கும், மாநில ஸ்போர்ட்ஸுக்கும் உள்ள வித்தியாசம் இது.
செல்லம் கொடுத்து சுத்தமாக வீணாகப் போன குழந்தையானால், உன்னால் உன் வேலைகளையே செய்ய முடியாத அளவுக்கு வந்துவிட்டால், ஓர் அம்சத்தில் தீவிர முடிவெடுத்து அனைவரும் போற்றும் அளவுக்கு மாற முடியும்.
*****
செல்லம் கொடுத்தால் மட்டமான சூழ்நிலையில் குழந்தை வீணாகப் போகும். நல்ல சூழ்நிலையில் குழந்தையின் உள்ளே மறைந்துள்ள அனைத்துத் திறமைகளும் வெளிவரும் என்பது சட்டம். வீணாகப் போன குழந்தையின் வாழ்விலும் ஓரளவு மறைந்துள்ள திறமைகள் மலர்ந்திருக்கும். அதை எவரும் கவனிக்க மாட்டார்கள்.
15 அல்லது 18 வயதான பின் குழந்தையால் தன் வேலைகளைக் கூடச் செய்து கொள்ள முடியாத நிலைக்கு வந்த பின், அதைக் கவனித்தால் எந்த நல்ல அம்சம் இருக்கிறது என்று தெரியும். ஏதேனும் ஒன்றிருந்தால், அதைத் தீவிரமாகப் பயன்படுத்த இப்பொழுது குழந்தை முடிவு செய்தால், மாற்றம் ஏற்படும்.
15 வயதுவரை காலையில் எழுந்து சாப்பிடுவதற்கு "முடியாத'' குழந்தை மாதம் 10 நாள் பள்ளிக்கூடம் லேட்டாகப் போகும்.Home work எழுதும் பழக்கமே இல்லை. தினமும் ஒரு புஸ்தகமோ, நோட்டோ மறந்துவிடும். ஆனால் இனிமையாகப் பழகும்.பிறர் மீது பாசமாக இருக்கும். தன் குறையை அறிந்த குழந்தை, "என்னால் காலையில் எழுந்திருக்க முடியாது, பள்ளிக்கூடம் போக முடியாது, வீட்டில் பாடம் எழுத முடியாது, ஆனால் மற்றவரிடம் அன்பாகப் பழக முடியும். ஆதலால் அதையாவது முறையாக, முழுமையாகச் செய்கிறேன்'' என்று எடுத்த முடிவு அக்குழந்தைக்குப் பலன் தந்தது.
எல்லா ஆசிரியர்களும் இக் குழந்தையைப்போல் இப்பள்ளிக்கு 20 வருஷமாக ஒரு குழந்தை வரவில்லை. இது போன்று ஒரு குழந்தையை உற்பத்தி செய்தால் பள்ளி கட்டியதன் இலட்சியம் பூர்த்தியாகிறது என்றனர். எப்படி இக்குழந்தை இவ்வளவு உயர்ந்த முறையில் பழக முடிகிறது என்ற ஆராய்ச்சி பலர் மனதில் எழுந்தது.
முடிவு தீவிரமானால், அதன் மூலம் பெரிய குறையையும் நிறைவாக்க முடியும்.
உனக்குள்பட, நீ அனைவருக்கும் ஒரு தொல்லையாகி விட்டிருந்தால், சற்று மனதைக் கவனித்து, மாற முயன்றால், அனைவரிடமும் நல்ல பெயரெடுக்கும் அளவுக்கு மாறலாம்.
********
சுடு சொல் சொல்வதையே பழக்கமாகவும், அதை ஒரு ஆயுதமாகவும் கொண்டு நீ இதுவரை வளர்ந்திருந்தால், அதை மாற்ற வேண்டும் என்ற முடிவு உன் வாழ்வைத் தலை கீழே மாற்றி, இனிமையானவன் என்று பெயர் பெற முடியும்.
*******
நீ கேட்கும் சொற்பொழிவுகள், படிக்கும் புத்தகங்களிலிருந்து ஒரு நல்ல கருத்தைக் குறித்து வைத்துக் கொள். அதைப் பின்பற்று.
No comments:
Post a Comment