Sunday, January 20, 2013

மனிதனின் வெற்றி அவன் மனோபாவத்தில்!

Please read "மனப்பான்மை என்பது என்ன?" and "மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது?".

வெற்றியை விரும்பாதவர்கள் இல்லை. வெற்றியைப் பற்றி சிந்திக்காதவர்கள் இல்லை.  வெற்றியின் அடிப்படை பற்றிப் பேசாதவர்கள் இல்லை. வெற்றியின் இரகசியத்தை அலசாதவர்கள்  இல்லை. வெற்றிக்கு வழிதனைத் தேடாதவர்கள் இல்லை. வெற்றியின் பாதையை  விவாதிக்காதவர்கள் இல்லை. வெற்றியை விரும்புபவர்களிடமிருந்து வெற்றி தொடுவானம் போல விலகிச் செல்வதையும் கண்கூடாகக் காண்கிறோம்.

இலக்கு - உயர்ந்த இலக்கு!
உழைப்பு - கடின உழைப்பு!!
நம்பிக்கை - தன் நம்பிக்கை!!!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் அல்லவா?

வள்ளுவர் வாக்கில்,

வெள்ளத்து அனையதுமலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது அல்லவா?

உயர்ந்த இலக்கை நிர்ணயித்துக் கொண்டு விட்டால் மட்டும் வெற்றி கிட்டிவிடுமா? அது  ஒரு படிக்கல் அவ்வளவே. அதற்கு அடுத்த படிக்கல் அந்த இலக்கை அடைவதற்குத் தேவையான  உழைப்பு - கடின உழைப்பு. உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் - உலக நியதி. உழைப்பு  அர்த்தமுள்ள உழைப்பாக இருக்க வேண்டியது இன்றி அமையாதது. அர்த்தமற்ற உழைப்பு  விழலுக்கு இறைத்த நீராகப் பொருளற்றுப் போகக்கூடும்!

வள்ளுவர் வாக்கில்

தெய்வத்தான் காது எனினும் முயற்சிதன்
மெய் வருத்தக் கூலி தரும்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு 
இன்றித் தாழாது உஞற்றுபவர்

அல்லவா?

நல்ல உழைப்பை நல்குதற்கு அடிப்படைத் தேவை 'என்னால் முடியும்' என்ற நம்பிக்கை - தன்  நம்பிக்கை. இருவருக்கு நல்ல நம்பிக்கையை அளிப்பது அவரது ஆழ்ந்த அறிவு, தூய சிந்தனை,  நல்லொழுக்கம், உண்மையான இறைப்பற்று, நற்பண்புகள் ஆகியவை.

வெற்றிக்கு மூன்று படிகளான 'இலக்கு - உயர்ந்த இலக்கு, உழைப்பு - கடின உழைப்பு,  நம்பிக்கை - தன் நம்பிக்கை' இவற்றைக் கடப்பது ஒரு மனிதனது மனப்பான்மையில்தான்  அடங்கியுள்ளது. 

எனவேதான் "ஆளுமை வளர்ச்சி"ப் பயிற்சியில் 'மனப்பான்மை' பற்றிய பாடம் இன்றி  அமையாததாக இருக்கிறது. ஆங்கிலத்தில் (Attitude) 'ஆடிட்யூட்' எனப்படும் மனப்பான்மை  பற்றிய கருத்துக்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

'மனப்பான்மை'யைப் பற்றி விளக்கும் முன் ஒரு நிகழ்ச்சியை நினைவிற்குக் கொண்டுவருவோம்.

ஒரு தொழிலதிபர் 'காலணிகள்' தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை ஓரிடத்தில் நிறுவத்  திட்டமிட்டார். திட்டத்தைச் செயல்படுத்துமுன், அங்கு தொழிற்சாலை நிறுவ முடியுமா?  வெற்றிகரமாக நடக்குமா? விற்பனை வாய்ப்பு எப்படி? என்பதைக் கண்டறிய ஓர் ஆய்வு  நிகழ்த்துவதற்காக ஒரு மிகச்சிறந்த வணிகப் பள்ளியில் முதுகலைப் பட்டப் படிப்பில்,  முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரைத் தேர்ந்தெடுத்து ஆய்வுப் பணியை ஒப்படைத்தார். 

அந்த இளைஞரும் அந்த இடத்தைச் சுற்றியுள்ள பல ஊர்களுக்குச் சென்று மக்களது பழக்க  வழக்கங்கள், நிதி நிலை ஆகியவற்றை ஆராய்ந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு ஓர்  அறிக்கையைக் கொடுத்தார். அந்த அறிக்கையின்படி அங்குள்ள மக்களுக்கு காலணி அணியும்  பழக்கமே இல்லாத காரணத்தால் அங்கு நிறுவ இருக்கும் தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்த இயலாது, அங்கு காலணி விற்பனை செய்யமுடியாது என்பது முடிவு. 

இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட தொழிலதிபர் விற்பனையில் முதுகலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்ற ஒருவரை அதே ஆய்வைச் செய்யும்படி பணித்தார்.  முன்னவரைப் போன்றே அந்த இடத்தையும், சுற்றியுள்ள ஊர்களையும் பார்வையிட்டு மக்கள்   எவரும் காலணி அணியும் பழக்கமில்லாததைக் கண்டு, சிலருடன் பேசி நான்கு நாட்களிலேயே  திரும்பி வந்து அவரது அறிக்கையைத் தொழிலதிபரிடம் கொடுத்து விவரித்தார். அவரது  அறிக்கைப்படி அந்த இடத்திலும், அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும், காலணி அணியும்  பழக்கமில்லாத காரணத்தினால், காலணி அணிவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்து,  விழிப்புணர்ச்சியைத் தூண்டி விட்டால் மிகச்சிறந்த வெற்றியை அடையலாம்.அதே இடத்தில்  மிகப்பெரிய காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து, நாட்டிலேயே மிகச்சிறந்த  தொழிற்சாலையாக மாற்றினார் அத்தொழிலதிபர்.

நினைத்துப் பாருங்கள். அதே இடம், அதே மக்கள், அதே பழக்க வழக்கங்கள், ஆய்ந்தவர்கள்  இருவருமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரிகள்!

வேறுபாடு - அவர்களது மனப்பான்மை தான். அந்த 'மனப்பான்மை' அளித்த நேர்மறை  பார்வைதான்!

அவ்வாறே சரியான மனப்பான்மை படைத்தவர் பாதி கண்ணாடி டம்ளரில் இருக்கும் தேனீரைக்  கண்டு 'பாதி டம்ளர் தேனீர் இருக்கிறது' என்று மகிழ்வர். எதிர்மறை மனப்பான்மை  படைத்தவர் 'பாதி டம்ளர் வெற்று டம்ளர்' என வேதனை அடைவர்!

மனப்பான்மை என்பது என்ன?

வெற்றிக்கு இட்டுச் செல்லும் 
சிந்தனை வழிமுறை 
பிறரொடு பழகும் வழிமுறை
நிகழ்வுகளை ஏற்கும் வழிமுறை
எண்ண ஓட்டம்
சிந்தனைச் சிதறல் 
மன நிலை
மனப்பாங்கு
மனோபாவம்.

சுருங்கக் கூறின் "ஆளுமையின் ஓர் இன்றி அமையாத பரிமாணம்!

மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது?

பரம்பரையாய் அமையும் பண்பா?
விதியா? ஊழ்வினைத் தாக்கமா?
முயன்று பெறும் பண்பா?

பரம்பரைப் பண்பா?

தாய் தந்தையர், பாட்டனார் வழி வழியாக ஒருவருக்கு மனப்பான்மை உருவாகுமா என்ற  வினாவிற்கு மனோதத்துவ மருத்துவ வல்லுனர்கள் அவ்வப் பொழுது செய்து வரும் ஆய்வின்  விளைவாக 'இல்லை' என்ற விடையையே தருகின்றனர். ஒருசில உடல் நோய்களும், உளவியல்  நோய்களுமே பரம்பரையாய் அமைவது - எண்ண ஓட்டங்கள் அல்ல. எனவே ஒருவரது மனப்பான்மை பரம்பரையாய் அமையும் பண்பல்ல.

ஊழ்வினைப் பயனா?

மின்னொடு வானம் தண்துளி தலைஇ னாது கல்பொழுது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர் வழிப் படூஉம் புணைபோல், ஆர் உயிர் முறை வழிப்படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்
என்னும் கணியன் பூங்குன்றனாரையும்

ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தாம் முந்துறும்

என்னும் திருவள்ளுவரின் கூற்றையும் தத்துவார்த்தமாக ஏற்றுக் கொண்டாலும், ஒருவரது மனப்பான்மை ஊழ்வினையால் உருவாகிறது என்பதை ஏற்பதற்கில்லை.

முயன்று பெறும் பண்பா?

உண்மையில் ஒருவரது 'மனப்பான்மை' அவரால் உருவாக்கப்பட்டு, ஏற்கப்பட்டு, அவரது  பண்பில் ஒன்றாக அமைந்து விடுகிறது. அவ்வாறு பண்பில் ஒன்றாக அமைவதற்குச் சில  துணையாக்கக் கூறுகள் துணை நிற்கின்றன. 

'மனப்பான்மை'யை உருவாக்கும் துணையாக்கக் கூறுகள்:

அ) சுற்றுப்புறச் சூழ்நிலை
ஆ) அனுபவம்
இ) கல்வி
ஈ) நம்பிக்கைகளும் மதிப்புமிகு கோட்பாடுகளும்.

அ) சுற்றுப்புறச் சூழ்நிலைகள்

ஓருவனது மனப்பான்மை அவன் வளர்ந்து, வாழ்ந்த, வாழும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளைப்  பொறுத்து உருவாகிறது. மகிழ்வான, ஆக்கபூர்வமான, அறிவார்ந்த, அமைதியான, உயர்ந்த, நல்ல சூழ்நிலை நேர்மறை எண்ணத்தை உருவாக்குகிறது. எதிர்மறை சூழ்நிலை எதிர்மறை எண்ணத்தை உருவாக்குகிறது. எனவே, நேர்மறை மனப்பான்மை நாடுவோர் நல்ல சூழ்நிலையைத் தேர்ந்தெடுத்து வளர, வாழ முற்பட வேண்டும்.

ஆ) அனுபவம்

வாழ்க்கையில் நல்ல அனுபவங்களைப் பெறக் கூடிய வாய்ப்புக்களை அடைந்தவர்கள் நேர்மறை  மனப்பாங்கையும், அவ்வாறு அடையாதவர்கள் எதிர்மறை மனப்பாங்கை உருவாக்கிக்  கொள்ளுவதையும் கண் கூடாகக் காணமுடியும்.

இ) கல்வி

ஒருவனது மனப்பாங்கை உருவாக்குவதில் அவரது கல்வி மிக முக்கியப் பங்காற்றுகிறது.  பொருள் பொதிந்த கல்வி பெறுபவர்களது மனப் பாங்கு நேர்மறையாக அமைகிறது.

ஈ) நம்பிக்கையும் மதிப்புமிகு கோட்பாடுகளும்

ஒருவரது மனப்பாங்கு உருவாவதில் அவரது தனி, தன் நம்பிக்கையும், கொள்கைகள்,  கோட்பாடுகளும் பெரும் பங்காற்றுகின்றன. நேர்மறை மனப்பாங்கை உருவாக்கிக் கொள்ள  விழைவோர்கள் உயர்ந்த நம்பிக்கைகளையும், மதிப்புமிகு கோட்பாடுகளையும் முயன்று  மேற்கொள்ள வேண்டும்.

'நேர்மறை மனப்பாங்களன்' இனம் காண்பதெப்படி?

No comments:

Post a Comment