Sunday, January 20, 2013

நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் ?

நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று... நம் வாழ்வில் நடந்த. நடக்கின்ற
பெரும்பாலான அம்சங்கள் - இம்மாதிரி தான் அமைகின்றன. நினைக்கின்ற எதுவும் நடப்பதில்லை அல்லது நடக்கின்ற எதையும் நாம் நினைப்பதில்லை. 
இது விதி மட்டுமல்ல. வாழ்க்கையும் கூட. இந்த முரணே வாழ்க்கையாக உள்ளது. இந்த முரண்களுக்குள்ளேயே தான், நாம் வாழ வேண்டிய அவசியமும் உள்ளது.

சரி... எதற்கு இப்படி நிகழ்கிறது. இந்த முரணை களைய முடியுமா. நாம் எதை
வேண்டுமானாலும் நினைக்கலாம். நிச்சயம்- ஒரு விஷயத்தை நினைப்பதற்கு-

எப்போதும் எந்த தடைகளும் இருப்பதில்லை. ஒன்றை நினைப்பதற்கு யாரால் தடை போட முடியும்- நம்மை தவிர. அதை சாத்தியமாக்க முனைகிற போது தான் ஆயிரத்தெட்டு தடைகள் வருகிறது.

ஒன்றை செய்து விட நினைக்கிறோம். அவைகளில் எத்தனை சதவிதம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளன என்பதை சற்றே தொலை நோக்குணர்வோடு சிந்திக்கிறோமா... சிந்தித்தோமேயானால்- நினைப்பது,
நடப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும். நாம் அந்த வேலையை
பெரும்பாலும் செய்வதில்லை. நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என்கிற
பிடிவாத குணம் இருந்தால் மட்டும் போதாது.அதை சாத்தியப்படுத்த கூடிய
வல்லமையை பெற்றிருத்தல் வேண்டும்.

நினைப்பது நடப்பதற்கான வாய்ப்புகள் இரண்டு நேரங்களில் ஏற்படுகின்றன. நடக்கக்கூடியவைகளை மாத்திரமே நினைத்தல்... இது மிக மிக சுலபமானது. மற்றது நினைத்ததை சாத்தியமாக்கக் கூடிய மனநிலையை பெற்றிருத்தல்.

"நான்  நினைக்கிற எதுவுமே நடக்க மாட்டேங்குது" என்று சொல்கிறவர்களை நாம் நிறைய பார்க்கிறோம். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்- தப்பித்தவறி நாமே கூட சொல்லி இருந்தாலும் சொல்லி இருப்போம். சாதாரண சின்ன விஷயத்திலிருந்து மிகப் பெரிய விஷயம் வரை இந்த முரண் இருந்து கொண்டே இருக்கிறது. இதில் ஏற்படும் அனைத்து தவறுகளுக்கும் காரணமானவர்கள் நாமே

"நாளை வேலை அதிகம் இருக்கிறது. காலை விரைவாக எழுந்து
எல்லாவற்றையும் நேரத்துக்கு முடிக்க வேண்டும்" என்ற திட்டத்துடன்
படுக்கிறோம். இது சாதாரணமான மிக சிறிய விஷயம் தான். ஆனால் காலையில் வழக்கம் போல, தாமதமாகவே எழுந்திரிக்கிறோம். "முதல் கோணல் முற்றும் கோணல் " என்பார்களே. அப்படி தான் அன்றைய தினத்தில் நாம் செய்ய நினைத்த எதையும் முழுமையாக செய்ய முடியாமல் முடிவுக்கு வரும்.

கடைசியாக இப்படி சொல்லுவோம். "இருபத்தி நான்கு மணி நேரம் பத்த மாட்டேங்குது." என்று. பார்ப்பவர்கள் நம்மை பற்றி பெருமையாக நினைக்கக் கூடும். "ரொம்ப  பிஸியானவர் " என்று. ஆனால் எதையும் முறைப் படுத்தி செய்யவில்லை என்றால் நமக்கு நாற்பத்திஎட்டு மணி நேரமும் போதாது. "நினைக்கிறது ஒண்ணு... நடக்கிறது ஒண்ணு..." என்று சொல்லி கொண்டிருக்க வேண்டிய நிலை தான் தொடரும்.

மனித வாழ்வில் எல்லாமே சங்கிலி தொடரை போல் - ஒன்றையொன்று கவ்வி கொண்டு, பின்னிக் கொண்டு தான் வரும். இயல்பிலேயே திட்டமிடுதல் என்கிற
குணாதிசயத்தை, ரத்தத்தில் ஊறிய குணமாக அமைய பெற்று விட்டால் - அனேகமாக "நாம் நினைப்பதை எல்லாம் அமைய " பெறுவோம். திட்டமிடுதல், தொலை நோக்கு போன்ற வார்த்தைகளுக்கு எல்லாம் - நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அவை நம்மை ரசிக்கக்கூடிய வார்த்தைகள்.

சில பேர் எரிச்சலுடன், "அதென்னங்க. எப்ப பார்த்தாலும் தொலை நோக்கு, தொலை நோக்குன்னு தொல்லை பண்ணுறிங்க" என்று கேட்கக்கூடும். நிச்சயம் அவர்களால், அந்த எரிச்சல் அகற்ற பட வேண்டிய ஒன்று. தொலை நோக்கு என்பது மிக மிக அவசியமான வார்த்தை. தோல்வியடைந்த நிறைய பேரின் தோல்விக்கு காரணமாக இருப்பது, தொலை நோக்கற்ற சிந்தனையே. அதன் அவசியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொலை நோக்கும் அம்சம் நம்மிடம் இருந்து விட்டால், ஒரு நாளும் "நினைத்தது ஒண்ணு... நடந்தது ஒண்ணு..." என்று சொல்ல வேண்டிய அவசியம் வராது. மனிதர்களின் குணாதிசயத்திற்கும், அவர்கள் பெறுகின்ற வெற்றிக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. பொதுவாக- ஏன் வெற்றியாளர்களின் நூல்களை படிக்க விரும்புகிறார்கள். அந்த நூல்களை படிப்பதன் மூலம் அவர்களின் குணாதிசயங்களை பெற்று விட மாட்டோமா என்பதற்காக தான்.

மனிதர்களின் தோல்விகளுக்கும், அவர்களின் குணாதிசயத்திற்கும் கூட நிறைய, நிறைய தொடர்பிருக்கிறது. தோல்வி அடைந்தவர்களை சற்றே எட்டி நின்று பாருங்கள். அவர்கள் எதனால் எல்லாம் தோற்றார்கள் என்ற காரணம் பிடிபடும். உங்களின் தோல்விகளுக்கும் அந்த காரணங்கள் பொருந்தி வருகிறதா என்று பாருங்கள்.

சாதாரணமாக நம் தோல்வியை ஆராய நமக்கு மனம் வராது. எல்லாமே சரியாக தானே செய்தேன் என்றே மனம் நினைக்கும். சம்பந்தமே இல்லாத மனிதனாக இருந்து பார்த்தால் பலவீனங்களை உணர முடியும். தோல்வியை விரட்ட நினைப்பவர்கள்- தங்கள் குணங்களில் தேவையான மாற்றங்களை நிச்சயம் செய்ய வேண்டும். சரியாக அந்த மாற்றங்களை செய்து விட்டோமேயானால் "நினைப்பது ஒன்று... நடப்பது ஒன்று..." என்று சொல்ல மாட்டோம்.

No comments:

Post a Comment