Saturday, January 19, 2013

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? / ஏன் வேண்டும் உற்சாகம்?


பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

குடும்ப கஷ்டங்கள் தெரிந்தால் குழந்தைகள் வாடி விடுவார்களோ? என்று பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. இதனால் மிடில் கிளாஸ், லோயர் கிளாஸ், அப்பர் கிளாஸ் என்று எந்த ஒருவித்தியாசமுமில்லாமல் எல்லா குழந்தைகளும் பணத்தின் அருமை தெரியாமலே வளர்கிறார்கள்.

கேட்டது கிடைக்கவில்லையென்றால் குழந்தையின் பிஞ்சு மனம் பாதிக்கப் பட்டுவிடுமோ? என்று நடுத்தர வர்க்கத்தினர் கஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்து விடுகிறார்கள், வசதி உள்ளவர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக்கொடுத்து விடுகிறார்கள். விளைவு, குழந்தைகளுக்கு பொருட்கள் மட்டுமே தெரிகிறது. அதை வாங்க பெற்றோர்கள் படும் கஷ்டம் தெரிவதில்லை. அதற்காக குழந்தைகளிடம் பஞ்சப்பாட்டு பாட வேண்டும் என்பதில்லை. இது எதிர்மறை உணர்வை ஏற்படுத்திவிடும். தாழ்வு மனப்பான்மையும் விரக்தியும் உற்சாகக் குறைவும் ஏற்பட்டுவிடும்.

என் சகோதரி போல ஆகிவிட்ட ஒரு பெண்மணி தன் குழந்தை, பொறுப்பே இல்லாமல் நடந்து கொள்வதாக வருத்தப்பட்டார். உங்கள் கஷ்டங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டிருந்தால் நிச்சயம் அவள் இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டாள் என்றேன். அன்றிரவே தன் குழந்தையை கூப்பிட்டு தான் படும் சிரமங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டார். விளைவு மறுநாள் ஸ்கூல் போகமாட்டேன் என்று ஒரே அழுகை. உனக்கு இவ்வளவு பிரச்சனை. உன்னை தனியே விட்டுவிட்டு நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன். நீ ஆபீஸையும் பார்த்துக் கொண்டு வீட்டையும் பார்த்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறாய். இனிமேல் ஸ்கூலுக்கு போகல. உன் கூட இருந்து உனக்கு உதவக் போறேன் என்பதுதான் அழுகைக்கு காரணம்.

குடும்ப கஷ்டங்களை விளக்கும்போது நீ என்ன புரிந்து கொண்டாய்? என்று கேட்டு தவறாகப் புரிந்து கொண்டிருந்தால், அதை உடனே எடுத்துச் சொல்லி அவர்களை தெளிவாக்கிவிட வேண்டும். மேலும் குடும்ப வருவாய் என்ன? அது எப்படியெல்லாம் செலவழிக்கப்படுகிறது? என்பது புரிய வைக்கப்படும்போது குழந்தைகளுக்கு புதுத்தெளிவும் பொறுப்பும் ஏற்படும். பற்றாக்குறை நிலை இருந்தால்கூட அதையும் தாராளமாக குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டு, அதை மாற்ற உன்னால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கையை நாம் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.

குடும்ப கஷ்டம் என்பதற்கு குடும்பத்தில் உள்ள பணக்கஷ்டங்கள் அதாவது பற்றாக்குறை பற்றி புரிய வைக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டாம். பணம் சம்பாதிப்பதில் உள்ள கஷ்டம் என்ன என்பதையும் சேர்த்தே கற்றுத்தரலாம்.

நீங்கள் டாக்டராக இருந்தால், நாள் முழுவதும் பேஷண்டுகளோடு இருக்கும் நிலையை விவரியுங்கள். ஓய்வின்றி வேலை பார்ப்பதன் சிரமங்களை உணரும்போதுதான் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறீர்கள். அதை விரயம் செய்யக் கூடாது என்று உணர்வார்கள். இல்லையென்றால் அப்பாதான் நிறைய சம்பாதிக்கிறாரே, கொஞ்சம் செலவு செய்வதால் என்ன ஆகிவிடப்போகிறது என்று தோன்றிவிடும்.

சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் கொடைக்கானல் சம்மர் கேம்ப்பில் மாணவர்களுக்கு உலகை எதிர்கொள்ள பழக்க வேண்டும் என்பதற்காக சில வித்தியாசமான அசைன்மென்ட்கள் வழங்கப்படுவது வழக்கம். பணத்தின் அருமையை அறிவுரைகளின் மூலம் அல்ல – நல்ல அனுபவங்களின் மூலமே நம் குழந்தைகளுக்கு உணர்த்த முடியும் என்பதற்கு, பின் வரும் நிகழ்ச்சி உதாரணம்.

கொடைக்கானல் லேக்கில் உள்ள டூரிஸ்ட்களிடம் சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் சம்மர் கேம்ப் பற்றி எடுத்துச் சொல்லி ப்ரவுச்சர்கள் வழங்கப்பட வேண்டும். மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதை விட தனக்கு குறைவான சவால் உள்ள வேலையே வழங்கப்படுகிறது என்று ஆதங்கத்தோடு கிளம்பிய அம்மாணவர் கடைசியில் ஒருவரைக்கூட கன்வின்ஸ் செய்து முகவரி வாங்க முடியவில்லை என்று வருத்தத்தோடு வந்து நின்றார். அன்றைய நாள் அனுபவங்களை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் நேரத்தில் அந்த மாணவர் சொன்னார் இத்தனை நாள் என் அப்பா ஆபீஸ் போறாரு வர்றாரு என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். இன்றுதான் தெரிந்தது. அவர் நடத்துகிற தொழிலில் மார்கெட்டிங் செய்ய, ஆர்டர்கள் வாங்க எவ்வளவெல்லாம் சிரமப்படுகிறார் என்று. இதெல்லாம் தெரியாமல் எவ்வளவு தூரம் அவரை நான் கஷ்டப்படுத்தியிருக்கிறேன், என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கண்கள் கலங்கிவிட்டன.

அன்று அவன் பணத்தின் அருமையை மட்டுமல்ல, அப்பாவின் அருமையையும் புரிந்து கொண்டு விட்டான்.

இந்த மாத ஹோம் ஒர்க்: உங்கள் குழந்தைகளை வீட்டு பட்ஜெட்டை தயாரிக்க வையுங்கள். என்ன வரவு, எதற்கெல்லாம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று குறிப்புகள் மட்டும் கொடுங்கள். பிறகு அவர்கள் போட்ட பட்ஜெட்டை சரி செய்து கொடுங்கள். உங்கள் பட்ஜெட்டோடு ஒப்பிட்டு விளக்குங்கள். உங்களைவிட சிறப்பாக திட்டமிட்டிருந்தால் இனிமேல் நான் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை என்று பாராட்டுங்கள்.

உங்கள் வீட்டிலும் உருவாகட்டும் ஒரு நிதியமைச்சர்.

ஏன் வேண்டும் உற்சாகம்?
வாழ்வில் உற்சாகமாய் இருங்கள் என்று சுயமுன்னேற்ற நூல்கள் சொல்கின்றன. சூப்பர்வைஸரும் சொல்லுகிறார். நண்பர்களும் சொல்கிறார்கள். நடிகர்களும் சொல்கிறார்கள். யார் சொல்கிறார்களோ இல்லையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி
தொகுப்பாளினிகள் தவறாமல் சொல்கிறார்கள்.

சொல்பவர்கள் சொல்லட்டும். முதலில் நீங்கள் முடிவெடுங்கள்.

நீங்கள் உற்சாகமாகவும் நம்பிக்கையோடும் இருக்க வேண்டியது யாருக்காக? உங்கள் ஊக்கத்தைத் தூக்கி நிறுத்துவது யாருக்காக?
நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஆதாயத்திற்காகவா?
உற்சாகமாய் நீங்கள் சொல்லும் ஜோக்குகளால் உங்களுடன் இருப்பவர்களுக்கு செலவில்லாமல் பொழுது போகவா?
உங்கள் உற்சாகம் யாருக்காக? இதற்கு உண்மையான பதில்…
உங்களுக்கே உங்களுக்காக!!

உங்களுக்கு உங்களின் தகுதிகள், திறமைகள், ஆரோக்கியம், செல்வாக்கு எல்லாம் புரிகிறபோதெல்லாம் நீங்கள் உற்சாகமாகிறீர்கள். .

நடுத்தர வயதை எட்டும் போதும் வேகவேகமாய் நடக்கும்போதும் மூச்சிரைக்காமல் இருக்கிறதா? உங்களையும் அறியாமல் உற்சாகம் வரும். மற்றபடி, தெரு முனையில் இருக்கும் கடையில் கொத்தமல்லி வாங்கக்கூட பைக் சாவியைத் தேடுபவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் வியர்க்க விறுவிறுக்க ஒரு மணிநேரம் நடந்துவிட்டு வரும்போது மறுநாள் வாக்கிங் நேரம் வருகிறதா என்று மனசு ஏங்குகிறதே…. ஏன்?

விஷயம் நடைப்பயிற்சியில் இல்லை. உங்களால் நடக்க முடிகிறது என்பதில் உங்களுக்கு வருகிற உற்சாகம்தான் அது.

ஒவ்வொரு மனிதனும் தன் பலங்கள் புரியப் புரிய உற்சாகமாகிறான்.

அதற்கு அடிக்கடி வாய்ப்பளித்துக் கொள்பவர்கள் வளர்கிறார்கள். அது மற்றவர்களுக்கும் பயன்படுகிறது.

சிலசமயம் நாட்கள் நகர்வதே பெரிய விஷயமாய் இருக்கும். “அட! இன்றைக்கு சனிக்கிழமையில்லையா? வியாழக்கிழமைதானா?” என்று சலித்துக் கொள்கிறீர்களா? அப்படியானால் அந்த வாரம் நீங்கள் அதிகமாக செயல்படவில்லை என்று அர்த்தம்.

ஒவ்வொரு வாரமும் எட்டுவதற்கென்று ஏதேனும் இலக்குகளை வகுத்துக் கொண்டு அதற்கேற்ப இயங்கினால் நாட்கள் நகர்வதே தெரியாது. இது உண்மையில் மிகவும் எளிது. இயங்கிக் கொண்டேயிருப்பவர்களுக்கு இயக்கம் என்பது பழக்கமாகவே படிந்துவிடும். தொடக்கத்தில் இயங்குவதற்கு சோம்பலாகவும் அயர்வாகவும் இருந்தால், நம்முடைய காரணங்களை நாமே முன்னிறுத்த வேண்டும். இயங்காததால் கிடைக்கும் விமர்சனம் நம் உந்துசக்தியாக இருக்கக்கூடாது. இயங்குவதால் கிடைக்கும் பாராட்டுதான் நம் உந்துசக்தியாக இருக்க வேண்டும்.

“ஒவ்வொரு நாள் விடியலிலும் படுக்கையை விட்டு எழும்போதே அந்த நாள் புலர்ந்ததற்கான காரணம் உங்களுக்குப் புலப்பட வேண்டும்” என்றார் ஓர் அறிஞர்.

நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதன் வசதிகள்கூட அப்புறம்தான். உங்கள் ஆரோக்கியத்தை மற்றவர்கள் வியப்போடும் விருப்பத்தோடும் பார்க்கிறபோது கிடைக்கிற உற்சாகத்திற்காகவே நீங்கள் ஆரோக்கியத்தைப் பேணலாம். இரண்டாவதாய் உங்களை சார்ந்திருப்பவர்களுக்கு, வாழ்க்கை பற்றிய நம்பிக்கை உங்கள் ஆரோக்கியத்தால் கிடைக்கிறது. என்ன விலை கொடுத்தாலும் அவர்களுக்கு நீங்கள் தரமுடியாத பரிசல்லவா அது!!

நீங்கள் இப்படி எத்தனையோ காரணங்களால் உற்சாகமாக இருக்கிறபோது, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மற்றவர்கள் உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த ஈர்ப்பு உங்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கிறது.
சோதனையான காலங்களிலும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்கிறார்களே. அதுவும் உங்களுக்காகத்தான். அப்போதும் நம்பிக்கையாக செயல்படுவதன் மூலம் நடக்கிற சம்பவத்திலிருந்து பாடம் பெறுகிறீர்கள்.

எந்தச் சூழலில் எப்படி செயல்பட்டால் நல்லது என்கிற அனுபவம் உங்களுக்குக் கிடைக்கிறது. அந்த அனுபவம் உங்களை மேலும் உறுதிமிக்கவர் ஆக்குகிறது.
உங்கள் உற்சாகத்தாலும் உங்கள் நம்பிக்கையாலும், உங்கள் குடும்பம், உங்கள் நிறுவனம், உங்கள் சமூகம் அனைத்தும் பயன்பெறும் என்பதுதான் உண்மை. ஆனால் எல்லோரை விடவும் முதலில் முழுமையான பயன் உங்களுக்குத்தான். ஒவ்வொரு செயலும் உங்களை உங்களுக்கே அறிமுகம் செய்கிறது, எனவே எப்போதும் உற்சாகமாயிருங்கள்….. உங்களுக்காக!!

No comments:

Post a Comment