Sunday, January 20, 2013

வென்றவர் வாழ்க்கை நாச்சிமுத்து கவுண்டர்


இன்று அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் என்று அழைக்கப்படும் தொழிலதிபர், 50 ஆண்டுகளுக்கு முன் அஆப மகாலிங்கம் என்றுதான் அறியப்பட்டார். அஆப என்பது ஆனைமலை பஸ் ட்ரான்ஸ்போர்ட்.

அந்த பார்ஸல் சர்வீஸ் கம்பனி இந்த அளவு பல கிளைகள் விரித்து வளர்ந்துள்ளது என்றால் அதை விதைபோட்டு வளர்த்தவர், அவரது தந்தையார் நாச்சிமுத்துக் கவுண்டர்தான்.சிறுவயது முதலே தம் சிந்தையெல்லாம் நிறைந்திருக்கும் தொழில் எதுவோ அதிலேயே வெற்றி பெறவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்ததுதான் பார்ஸல் சர்வீஸில் அவர் மகத்தான வெற்றிபெறக் காரணமாயிற்று.

9. 11. 1902 ஆம் ஆண்டு பழனிக்கவுண்டர் செல்லம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். வாரந்தோறும் வியாழனன்று பொள்ளாச்சி சந்தைக்கு வரும் பொதிசுமந்த மாட்டு வண்டிகளையும் குதிரை வண்டிகளையும் பார்த்துக் கொண்டிருப்பார். தாமும் இது போல் சரக்குகளை ஏற்றி நீண்ட தூரம் கொண்டுபோய் சந்தைகளுக்குப் போட்டு வரவேண்டும் என்று தான் நினைப்பார்.

1920க்கு முன் பஸ்கள், லாரிகள் கிடையாது. அரசாங்கத்தின் தபால் போக்குவரத்தே குதிரை வண்டி மூலம்தான் நடக்கும். அந்த வண்டிக்குக் ‘கெடிவண்டி’ என்று பெயர். அவரது தந்தையார் பழனிக்கவுண்டர் கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு, பொள்ளாச்சியிலிருந்து பழனிக்கு என குதிரைவண்டிப் போக்குவரத்தில் சம்பாதித்துத் தான் பாப்பங்காடு என்னும் இடத்தை வாங்கினார். அந்தக் காடுதான் இன்றைய மகாலிங்கபுரம்.

அதுபோலவே போக்குவரத்தில் சாதனை புரிய வேண்டும் என்று நினைப்பார் நாச்சிமுத்து.மாட்டு வண்டிகளில் பொதிகளை ஏற்றி வால்பாறைக்கு போக்குவரத்தை நடத்தினார் அவர். இவரைப்போல் கையில் ஓரளவு காசுள்ள குடும்பத்தினர் எல்லாம் அன்றைக்கு நெசவாலை தொடங்கினார்கள். இவரையும் தொடங்கச் சொன்னார்கள். இன்னும் சிலரோ பூமி வாங்கிப் போடலாம் என்றார்கள்.பஸ்களும் லாரிகளும் அப்போதுதான் வரத் தொடங்கியிருந்தன. எனவே மற்ற யோசனைகளை மறுத்துவிட்டு அந்த சமயத்தில் அவர் அஆப பார்ஸல் சர்வீஸ் தொடங்கினார்.

1931 ஆகஸ்டு 28ஆம் தேதி, 25 பங்குதாரர்களோடு 19 ஆயிரம் ரூபாயைக் கொண்டு தொடங்கிய அஆப பஸ் போக்குவரத்துக் கம்பனிக்கு 1940 ஆம் ஆண்டுக்குள் 100 பஸ்களும் லாரிகளும் சொந்தமாகின.பஸ் கட்டுமானப்பணி, பெட்ரோல் சப்ளை, பயிர்களைப் புதுப்பித்தல், கார் பாட்டரிகளுக்கு டிஸ்டில் வாட்டர் தயாரித்தல் எனப் பல்வேறு தொழில்களாகப் பெருகி அவரது நிறுவனங்கள் இன்றும் விரிவடைந்து கொண்டே வருகின்றன.

கடுமையான உழைப்பாளியான அந்த முதலாளி, மிகுந்த பொறுமைசாலி யும் கூட.ஒரு முறை தமது நெருங்கிய நண்பர் ஒருவரின் வீட்டுக்கு ஒரு முக்கியமான விஷயமாகக் காரில் போனார். அவர் போன நேரம் நள்ளிரவு. நண்பர் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் இப்போது எழுப்ப முடியாது எனவும் கூறி வாட்ச்மேன் அவரை உள்ளே விட மறுத்துவிட்டார்.’நான் யார் தெரியுமா?’ என்று ஆவேசப்படாமல், காரை கேட் ஒரமாக நிறுத்தி விட்டு அதில் படுத்துக் கொண்டார், நாச்சிமுத்து.

பனி பெய்யும் இரவில் சினிமா முடிந்து வந்த நண்பரின் தம்பி, இவர் காரில் தூங்கும் காட்சியைப் பார்த்து பதைபதைத்துப் போனார். நடந்ததைச் சொன்ன நாச்சிமுத்துக் கவுண்டர் வாட்ச்மேன் மீது தவறில்லை, அவரை தண்டிக்க வேண்டாம் எனக் கூறிவிட்டார்.வெள்ளையர் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும் பின்னாளில் கம்யூனிஸ்ட் தலைவருமான ஜீவானந்தத்தை கையில் விலங்குமாட்டி போலீஸார் அழைத்துப் போனதைக் கண்ட அவர், போலீûஸத் தடுத்து தமது வீட்டுக்குள் அழைத்துப் போனார்.

ஜீவானந்தத்துக்குக் கைவிலங்கு போடுவது சரியல்ல. விலங்கைக் கழற்றி அழைத்துப் போங்கள் என்று நிதானமாகப் பேசி விலங்கைக் கழற்றச் செய்தார்.
1950 ஆம் ஆண்டில் ஒருநாள் அவரது மைத்தானர் அழகப்பன் மரணமடைந்தார். அந்தத் துயரம் மறையும் முன்பு அந்த நாளிலேயே அவரது தாயார் செல்லம்மாளும் காலமானார். அதிர்ச்சி தாளாமல் ஒரே நாளில் இரண்டாவது முறையாக சுடுகாட்டுக்கு நடந்தார் நாச்சிமுத்து. அதன் விளைவாக ரத்தக் கொதிப்புக்கு ஆளானார்.

சிறுவயதில் தாம் வால்பாறைக்கு ஓட்டிப் போன மாட்டுவண்டியிலிருந்து சரிந்த கனமான மூட்டை ஒன்றுக்கு முதுகைக் கொடுத்து பாரம் வாங்கிக் கொண்டபோது முதுகுவலி ஏற்பட்டது. அது தொடர்ந்து அவரை இம்சித்துக் கொண்டே தான் இருந்தது.

விஞ்ஞானி ஆர்க்கிமிடீஸ் முகம்பார்க்கும் கண்ணாடியைக் கண்டு பிடித்தது 75 ஆவது வயதில். தத்துவஞானி பிளாட்டோ கிரேக்க மொழி கற்றுக் கொண்ட போது அவருக்கு வயது 80. எந்த வயதிலும் எதையும் சாதிக்கலாம் என்பவர் நாச்சிமுத்துக் கவுண்டர்.

புதியதைக் கற்றுக் கொள்வதில் தீராத ஆர்வமுடைய அவர் காலமானபோது வயது 52. ரத்தக் கொதிப்பும் முதுகுவலியுமே அவரை மரணத்தின் அருகே இழுத்துச் சென்றது.எத்தகைய பாதிப்பு வந்தபோதும் நாம் தேர்வு செய்த லட்சியப்பாதையிலிருந்து விலகாமல் நடந்தால் வெற்றிமேல் வெற்றி வரும் என்பதில் உறுதியாய் இருந்த நாச்சிமுத்துக்கவுண்டர் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

No comments:

Post a Comment