நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பல தடைகளைச் சந்திக்கின்றோம். மேலும் பல்வேறு பட்ட சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நமது வாழ்வில் நிறையவே ஏற்படுகின்றன. இவ்வாறான தடைகளுக்கும், சவால்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமைக்கான முக்கிய காரணமாக விளங்குவது தன்னம்பிக்கையின்மையாகும்.
பொதுவாகப் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நம்பிக்கை குறைந்தவர்களாகவோ அல்லது நம்பிக்கையற்றவர்களாகவோ இருப்பதை நடைமுறையில் கண்டுகொள்ள முடிகின்றது. பொதுவாக தன்னம்பிக்கை குறைந்தவர்கள் அல்லது தன்னம்பிக்கை அற்றவர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலான நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குவதனை அவதானிக்க முடியும். மனிதர்கள் அடிப்படையாகவே மகிழ்வாகவும், உளத்திருப்தியுடனும் இருப்பதற்கே விரும்புகின்றனர்.
அவ்வாறு மகிழ்ச்சி உளத்திருப்தியை நோக்கியதான நகர்வுகளின் போதெல்லாம் முட்டுக்கட்டைகளையும், இடர்பாடுகளையும் சந்திக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் நமது வாழ்வில் நிறையவே ஏற்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியும் உளத் திருப்தியும் மனிதனை விட்டு துரத்தியடிக்கப்படுகிறது. இதற்கான அடிப்படைக் காரணம் நம்பிக்கையீனம் என அடையாளப்படுத்தப் படுகிறது.
தன்னம்பிக்கை குறைவதற்கான அடிப்படைக் காரணம்
தன்னைப்பற்றியுள்ள தாழ்வு மனப்பான்மை
உள நோய்கள்
சமூக, கலாசார மற்றும் சூழல் தாக்கங்கள்
தொடர்ச்சியான தோல்விகள்
சாராய, சிகரட் மற்றும் ஏனைய போதைப் பொருட்களின் பாவனை
தோல்வி மனப்பான்மை.
வாழ்க்கையில் அன்றாடம் இடம்பெறுகின்ற செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது நேர்முகப் பரீட்சையாக இருக்கலாம். அல்லது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சவாலாக இருக்கலாம். இவற்றுள் தோல்வி ஏற்பட்டவுடனேயே நம்பிக்கை வீணடிக்கப்படுகிறது. உதாரணமாகப் பரீட்சையை எடுத்துக்கொண்டால் பரீட்சை என்றபொழுது தன்னையறியாத ஒருவகையான பயம் மனதில் ஏற்படத்துவங்குகின்றது.
இத்தகைய பய உணர்வானது அதிகமான சந்தர்ப்பங்களில் தோல்வியை நோக்கியே கொண்டு செல்கின்றது. இவ்வாறானவற்றுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருப்பதே காரணமாக அமைகின்றது. நவீனகால உளவியலாளர்கள் குறிப்பிடுவதுபோல ஒவ்வொருவருடைய வெற்றிக்கும், தோல்விக்கும் இடையில் தன்னம்பிக்கையென்ற விடயமே காணப்படுவதாகவும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்போது வெற்றிக்கான பண்புகள் அதிகரிப்பதாகவும்இ தன்னம்பிக்கை குறையும்போது தோல்விக்கான பண்புகள் அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சுருக்கமாகக் குறிப்பிடுவதானால் தன்னம்பிக்கை என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் காப்புறுதியாக அமைகின்றது. எந்தவொரு இலக்கையும் அடைவதற்கு அல்லது ஒரு வெற்றியாளனாக மாறுவதற்கு முதலில் இருக்கவேண்டியது மன உறுதியென அடையாளப்படுத்தப்படுகின்ற தன்னம்பிக்கையாகும்.
குறிப்பாக ‘எந்தவொரு செயலிலும் வெற்றிபெறுவோம்’ என்ற உறுதியான நம்பிக்கையானது வாழ்க்கைக்குப் பாதுகாப்பைத் தருகிறது. அத்தோடு எந்தவொரு காரியத்தையும் அடைவதற்கு முன்பும் ‘வெற்றி பெறுவேன்’ அல்லது ‘வெற்றிபெறுவோம்’ என்ற மனப்பான்மயை வளர்த்துக்கொள்வது மிக மிக முக்கியமானதொன்றாகும்.
மேலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமாயின் அவ்விலக்கை அடைவதற்கு மாத்திரம் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்து உழைக்க வேண்டும். குறிப்பாகக் கூறுவதானால் தன்னிடமுள்ள எதிர்மறை எண்ணக் கருக்களை நேர் எண்ணக் கருக்களாக மாற்றியமைத்துக் கொள்வது இன்றியமையாதது.
சிலர் எவ்விடயத்தையெடுத்துக் கொண்டாலும் நேர் எதிராக சிந்திப்பதனையே பழக்க மாக்கிக் கொண்டுள்ளனர். எத்தகைய தொரு செயலை எடுத்தாலும் என்னால் முடியாது அல்லது இச்செயல் எனக்குக் கடினமாக இருக்கிறது என்ற நம்பிக்கையீனமாகவும் தோல்வியுணர்வு படைத்தவராகவும் கருத்துக்களை வெளிப்படுத்துவதனை அவதானிக்க முடிகிறது. எந்த சூழ்நிலையிலும் தோற்றுவிடுவேனோ என்று சிந்திக்காதீர்கள்.
நான் ஒரு வெற்றியாளன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது கடினமான விடயமாக இருந்தாலும் பிரச்சினைக்குரியவிடயமாக இருந்தாலும் தடைகளை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்ல வழிபிறக்கும். குறிப்பாகக் கூறுவதானால் தன்னம்பிக்கைக்கும் வெற்றிக்கும். இடையில் பெரியதொரு தொடர்பு காணப்படுகிறது. உலகில் அரிய பல சாதனைகளைப் படைத்தவர்கள் சாதனை படைத்தது அவர்களது வலிமையினாலல்ல. அவர்களைச் சாதனையாளர்களாக மாற்றியது அவர்களது கடின உழைப்பும் விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் என்பதனை யாரும் மறுக்க முடியாது.
நாம் எந்தப் பணியை மேற்கொள்கிறோம் என்பது முக்கியமில்லை. அந்தப் பணியில் நம்முடைய ஆற்றலை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம் நமக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி வளர்த்துக்கொள்வதென்பது நம்முடைய ஆர்வத்தையும், முயற்சியையும், நம்பிக்கையையும் பொறுத்தே அமைகிறது.
குறிப்பாக நாம் விரும்பியது கிடைக்கவில்லையெனில் கிடைத்ததை வைத்து விரும்பக்கற்றுக்கொள்ளவேண்டும். பொதுவாக நமக்குள்ளே ஏற்படுகின்ற நம்பிக்கையீனமானது தாழ்வு மனப்பான்மை, அச்சம், சந்தேகம், எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை போன்றவற்றுக்கு வித்திடுகிறது. இதன் விளைவாக நம்மிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போகின்றது.
வெற்றியை நோக்கிப் பயணிப்பவர் எப்பொழுதும் தனது பணிகளைப் பின்போடுவதனைவிட்டும் தவிர்த்துக்கொள்வதோடு தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக்கொள்வார். தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள்.
வெற்றியையும், தோல்வியையும் சமமாக பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள்.
எச்சூழ்நிலையிலும் உங்களது திறமைகளைப் பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை நினைத்து சோர்வு கொள்ளாதீர்கள்.
தடைகள் அனைத்தும் வெற்றியின் முதற்படி என்ற மனப்பாங்கை மனதில் வளர்த்துக்கொள்ளுங்கள்.
எதுவும் தன்னால் முடியும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
நாம் அடைய எண்ணும் இலக்குத் தொடர்பாகத் தெளிவையும் நிதானத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
எந்தவொரு செயலிலும் உறுதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
உடற் பயிற்சி செய்வதனைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
நாம் எப்போதும் எம்மை ஒரு வெற்றியாளனாக அடையாளப் படுத்திக்கொள்வதோடு எந்த வொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை முதன்மைப்படுத்திக்கொள்வது முக்கியமாகும். அப்போது தான் நாம் தன்னம்பிக்கையாளராக மாற முடியும்.
No comments:
Post a Comment