தனிமனிதனின் மேம்பாடு மூன்று முக்கிய அம்சங்களையே பொறுத்து அமைகிறது.
1. அறிவு
2. திறமை
3. மனோபாவம்.
1. அறிவு என்பது (Knowledge) பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க, கவனிக்க கவனிக்க வளர்வது, பெருகுவது. அது தனிமனிதனின் வாழ்வை உயர்த்தும்.
2. “திறமை” என்பது (Skills) பழகப் பழக – மெருகேறிக் கூர்மையடைவது. திறமையை ‘கலை’ என்று கூறுவது மிகவும் பொருந்தும். ‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ – என்பர் முன்னோர். ஒரு மனிதன் பயிற்சி செய்து மெருகேற்றிக் கொண்டு தேர்ச்சி பெறுவதற்குப் பல கலைகள் உள்ளன. அதில் தேர்ச்சி காணும்போது அவன் சிறப்புப் பெறுகிறான்.
3. “மனோபாவம்” என்பது மனதின் தன்மையை, மனதின் பாங்கை, மனப்பான்மையைக் குறிக்கும் சொல்லாகும். ஆங்கிலத்தில் அற்ற்ண்ற்ன்க்ங் என்று குறிப்பிடுவார்கள். ஆனால், மனிதனின் செயல்பாடுகள் யாவும் அவனது மனோபாவத்தை அடிப்படையாகக் கொண்டவையேயாகும்.
ஓடுதளம் சிறப்பாக இருந்தால் ஒரு விமானத்தின் புறப்பாடு ஒழுங்காக அமையும். அது சரியில்லையெனில் புறப்பாட்டில் பாதிப்புக்கள் ஏற்படும். அதுபோலத்தான் மனோபாவமும். மனோபாவம் ஒழுங்காகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் அமையுமானால் செயல்பாடுகளும் சிறப்பாக அமையும்.
“மனோபாவம்” விரும்பத்தகுந்ததாகவும், ஆரோக்கியமானதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்துவிட்டால் மட்டுமே அறிவும் திறமையும்கூட விரிவடையும். அத்தகைய முக்கியத்துவமிக்க மனோபாவம் எப்படி உருவாகிறது? என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
மனோபாவமானது தாயின் கருவறையிலேயே உருவாகத் தொடங்கிவிடுகிறது. கருவுற்ற தாயின் மனநிலை கருவையும் பாதிக்கிறது. அன்பாகவும் அமைதியாகவும் இருக்கும் தாயின் மனநிலை கருவுக்கு இதமாக அமைகிறது. பதட்டமும், கோபமும், ஆத்திரமும் எரிச்சலுமான தாயின் மனநிலை குழந்தையை பாதிக்கிறது. கரு வளர்ந்து குழந்தையாக மண்ணில் பிரசவிக்கப்பட்டதும் அது உணரும் பசியும், வலியும் அதற்குக் கிடைக்கும் அன்பும், அரவணைப்பும், ஆதரவும், வளரும் சூழ்நிலையின் கதகதப்பும், படபடப்பும் குழந்தையின் மனதில் பதிவாகிவிடுகின்றன.
அந்தப் பதிவுகள் பின்னாளில் மறந்துபோக நேரிட்டாலும் கூட, அவற்றின் தாக்கம், என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு வழியில் செயலாக வெளிப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உண்டு. எனவேதான் மனித ஆளுமையானது ஆறு வயதிற்குள்ளேயே ஒரு மனிதரின் வாழ்வில் உருவெடுக்கத் தொடங்கிவிடுவதாக உளவியல் கூறுகின்றது.
இதுவரை கண்ட காரணிகளை வைத்துப் பார்த்தால் ஒரு மனிதனின் ஆளுமையை உருவாக்க மூன்று காரணிகள் உண்டென்பதை உணரலாம்.
(1) மரபு (பரம்பரை) (2) சூழ்நிலை (3) சந்தர்ப்பம்.
ஒரு மனிதன் குறிப்பிட்டதொரு சூழ்நிலையில் வெளிப்படுத்தும் செயல்பாட்டைத் தீர்மானிப்பதில் இந்த மூன்று காரணிகளுமே முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. மூன்றுமே மாற்ற முடியாதவை என்பது உண்மைதான். ஒருவரின் பரம்பரையை மாற்ற முடியாது. அவரது இளமைக்கால சூழ்நிலையை மாற்றிவிட முடியாது . நொடிக்கு நொடி அவருக்கு வாய்த்த சம்பவங்களையும் இனி மாற்றிவிடமுடியாது. அப்படியென்றால் ஒருவரின் மனோபாவத்தை மாற்றவே முடியாதா என்று கேள்வி எழுகிறதல்லவா? நியாயமான கேள்விதான்.
எப்பொழுது ஒருவன் தான் முன்னேற வேண்டும், தான் சிறக்க வேண்டும், தன்னால் இந்த மாநிலம் பயனுற வேண்டும், அதற்கு நான் என்ன செய்யவேண்டும்? என்னும் சுய சிந்தனைக்கு ஆட்பட்டு, அதன் விளைவாய் தன் சுயத்தின் மதிப்பை உணரத்தொடங்குகிறானோ அப்பொழுதே அவனது கடந்த காலமாய் அமைந்த அவனது பரம்பரை, சூழல், சந்தர்ப்பம் என்ற மூன்றின் கட்டுக்களிருந்தும் தானும் விடுபட்டு, பிறரையும் அவலம் நிறைந்த சூழலிருந்து விடுவிக்கும் முயற்சிகளை மேற்கொள்வான்.
அவனே எத்தகைய நிலையையும் மாற்றி ஏற்றமிகு புதிய சூழ்நிலையை உருவாக்கும் தலைமைக்குத் தகுதியானவனாய் காலத்தால் அடையாளம் காட்டப்படுகிறான்.
தாம் பிறந்த பரம்பரையை கடந்து, தாம் வாழ்ந்த சூழலைக் கடந்து, தாம் சந்தித்த சந்தர்ப்பங்களையெல்லாம் கடந்து “தான் யார்?” என்னும் கேள்விக்கு விடைகண்டு, தான் பிறந்த இந்த மனிதப் பிறவியின் பொருளுணர்ந்து, வாழ்வாங்கு வாழ்ந்து, காலத்தைவென்ற தலைவர்களாகத் திகழ்கிறார்கள். அப்படிப்பட்ட ஆளுமைக்கு அடிப்படை, அவர்கள் கொண்ட “மனோபாவம்” தான்.
அதே போலத்தான் உலக வரலாறு கண்ட தீவிரவாதிகள் மற்றும், பயங்கரவாதிகளின் செயல்பாடுகளுக்கும் அவர்களின் மனோபாவமே காரணம்.
ஒரு வேலையை ஒருவருக்குக் கொடுக்கிறீர்கள். அதை மேற்கொள்ளும் முன்பாக அவர் உங்களிடம், “முடியும் ஆனால் கடினம்” என்கிறார்.
அதே வேலையை மற்றொருவருக்குக் கொடுக்கிறீர்கள். அதை மேற்கொள்ளும் முன்பாக அவர் உங்களிடம் “கடினம் ஆனால் முடியும்” என்கிறார்.
இந்த இரு வாசகங்களில் உள்ள மாறுபட்ட மனோபாவம் புரிகிறதா?
முதலாமவர்: “முடியும் காரியத்தை கடினம் என்றபடி அணுகுகிறார்.”
இரண்டாமவர்: “கடினமான காரியத்தை முடியும் என்றபடி அணுகுகிறார்”.
ரயில்வே புக்கிங் கவுண்டரில் நின்று பாருங்கள். கடைசி நேரத்தில் வரிசையில் வந்து நிற்கும் ஒவ்வொருவரும் பரபரப்பாக நிற்பதையும். அதே நேரத்தில் பயணச்சீட்டு வழங்குபவர் சிறிதும் கவனம் சிதறாமல் நிதானத்தோடு பதில் சொல்லிக் கொண்டு நிலைமையை அலட்டிக்கொள்ளாமல் சமாளிப்பதையும் காண முடியும்.
பயணியின் மனம் பதற்றத்தில் இருக்கிறது.
சீட்டு வழங்குபவரின் மனம் நிதானத்தில் இருக்கிறது.
ஒரு தாசில்தார் அலுவலகத்தின் சிப்பந்திகள் நடந்துகொள்ளும் விதத்தையும்,
ஒரு பேருந்துப் பயணியின் கேள்வி கேட்கும் விதத்தையும், கண்டக்டரின் பதில் சொல்லும் முறையையும் உற்றுநோக்கினால் அவரவர் மனோபாவத்தை எளிதில் அடையாளம் காணமுடியும்.
நம்மைச் சுற்றி நடைபெறும் ஒவ்வொரு சம்பவத்தையும் உற்றுநோக்கினால் – சரியான மனோபாவத்தை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும்.
‘முடியும் என்னும் மனோபாவம்’ ஒவ்வொரு தனிமனிதனிடமும் வளர்ந்து விடுமானால் தேவையான மாற்றத்தை எளிதில் கொண்டுவர முடியும். ஒவ்வொரு புரட்சியின் போதும் உலகம் கண்டிருப்பது மனித மனோபாவ மாறுதலே ஆகும். தனிமனித மனோபாவ மாறுதலே சமூகத்தின் பண்பாட்டு கலாச்சார மாற்றத்தை நடத்திக் காட்டியிருக்கின்றன. எனவே ஆக்கப்பூர்வமான மனோபாவத்தை வளர்ப்போம், அழகிய பண்பாட்டை உருவாக்குவோம்!
No comments:
Post a Comment