உறவுகள் தான் வாழ்க்கை. உறவுகள் தான் உலகம். ஒரு மனிதனை சுற்றியுள்ள உறவுகளே அவனுக்கு பலம். அவனது வாழ்வில் மகிழ்ச்சியை அளிப்பதும் உறவுகளே. ஒரு மனித வாழ்க்கையின் வெற்றியே அவன் உறவுகளை கையாளும் விதத்தில் தான் உள்ளது. அப்படியானால் உறவுகளை போற்ற வேண்டியது எத்தனை முக்கியம்!
பெண்கள் உபசரிப்பின் நாயகிகள் என்ப தால் உறவுகளை போற்றுவதிலும் அவர்க ளுக்கு அதிக பங்கிருக்கிறது. திருமணத் திற்கு முன்பு பிறந்த வீட்டிலும், திருமணத் திற்கு பிறகு புகுந்த வீட்டிலும் உறவுகளை மதிப்பளித்து கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
உறவுகளின் அடித்தளமே அன்பு தான். ஒரு வரை ஒருவர் மதித்து நடப்பதோடு, விட்டுக் கொடுக்கும் பண்பு உள்ளவர்களுக்கு மட்டுமே உறவுகள் கைகூடும். உறவுகளை எத்துணை மேன்மையானதாக நினைக்கிறோமோ, அத் துணை முன்னேற்றம் நமக்கு உண்டு.
ஒவ்வொருவருக்கும் உறவுகளை மேம்படுத்தும் இலக்கணங்கள் கற்றுத் தர வேண்டும். சிறுபிள்ளை முதலே உபசரிப்பு பண்புகளை ஊட்டி வளர்ப்பதன் மூலம் உறவுகளை மேம்படுத்தலாம். குறிப்பாக பெண்களுக்கு உறவுகளைப் பற்றி சொல்லித் தர வேண்டும். பிறந்த வீட்டைவிட்டு, புகுந்த வீட்டிற்குப் போகும் பெண்களுக்கு புதிய உறவுகளின் மேன்மையை விளக்குவது மிகமிக அவசியம்.
பெண்ணின் வாழ்க்கை பிறந்த வீட்டில் தொடங்கினாலும் புகுந்த வீட்டில் தான் மலர்கிறது. அதனால் புகுந்த வீட்டின் உறவுகளை மதிக்கும் பண்பை கற்றிருந்தால் அதுவே பெண்ணின் வாழ்வை பெருமைப்படுத்தும். இது வெற்றி ரகசியமும் கூட. திருமணம் ஆன புதிதில் பெண்ணைப் பற்றி ஏற்படும் கருத்து வேறுபாடுகள் கூட அவள் உறவுகளை உபசரிக்கும் பண்பினால் நாளடைவில் மறக்கப்பட்டு வாழ்வை வசந்தமாக்கி விடும்.
காலத்திற்கேற்ப நாமும் மாற கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் பெண்கள் கல்வி கற்கிறார்கள். வேலை செய்கிறார்கள். உலகை அறிந்து கொள்கிறார்கள். நன்மை, தீமையை பகுத்தறிகிறார்கள். இது ஆரோக்கியமான மாற்றம்.
ஒரு காலத்தில் அம்மா-மகள் உறவு என்பதே ஏதோ தூரத்து உறவுபோலதான் பாவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு இருவரும் நெருங்காமல் இருந்தார்கள். இன்றோ தலைகீழ் மாற்றம். யார் அம்மா, யார் மகள் என்ற பாகுபாடு தெரியாத அளவுக்கு இரு வரும் தோழிகள் போல பழகுகிறார்கள். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது, பிரச்சினைகள், உணர்வுகளை பகிர்ந்துகொள்வது போன்றவை அவர்களின் இன்றைய மனவளர்ச்சியை காட்டுகிறது. இதுவும் ஆரோக்கியமான மாற்றம் தான்.
மாமியார் மருமகள் பிரச்சினை என்பது காலங்காலமாக இருந்துவரும் பிரச்சினையாக உள்ளது. ஆனால் பெண்கள் கல்வி கற்று வேலைக்குச் செல்லத் தொடங்கியபின் இந்த வழக்கம் வெகுவாக மாறிப்போய் விட்டது. ஏனெனில் பெண்களிடையே புரிதல் திறன் வளர்ந்திருக்கிறது.
பெண்கள் தங்கள் பங்குக்கு உழைக்கத் தொடங்கியதால் ஒரு பாதுகாப்பை உணர் கிறார்கள். இது தேவையற்று பயம் கொள் ளும் நிலையை தவிர்க்க வைத்திருக்கிறது. மற்ற உறவுகளை மதித்து சகஜமாக பழகும் ஆற்றலைத் தந்திருக்கிறது.
மருமகளை புதிதாக ஒருத்தரை பார்ப்பதுபோல இல்லாமல் இன்னொரு மகளாக பார்க்க மாமியார்கள் முற்படும்போது பிரச்சினைகள் குறைந்து விடும். தன்னை மகனிடம் இருந்து பிரிக்க வந்தவளாக ஆரம்பத்திலேயே ஒரு எண்ணம் வந்து மனதில் உட்கார்ந்து விடுகிறது. அதுவே போகப்போக மகனிடம் இருந்து தன்னை பிரித்து விடுவாள் என்ற பயத்துக்கு காரணமாகிறது. பிரச்சினைகளும் அதன்பிறகே வலுவாகிறது.
இதை தவிர்க்க என்ன வழி? மருமகளும் மாமியாரை இன்னொரு அன்னையாகவே கருதலாம். வயதைக் காரணம் காட்டி ஒதுக்காமல் தோழமையுடன் பழகலாம். சதா குறைகூறும் மாமியாரை, மருமகள்கள் விரும்புவதில்லை. அதேபோல வேலைக்குப் போகி றேன் என்று கூறி குடும்பப் பொறுப்புகளை தட்டிக்கழிப்பதை மாமியாரும், வீட்டிலிருப் பவர்களும் விரும்புவதில்லை. யாரும் யாரையும் கட்டுப்படுத்த நினைக்காமல் அவர்களின் போக்குப்படி விட்டுக்கொடுத்துப் போகும்போது பிரச்சினைகள் வருவதில்லை.
வெளியில் செல்லும் பெண்கள் பல தரப்பட்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். அதனால் மனித உணர்வுகளை புரிந்துகொள்ளும் ஆற்றலைப் பெறு கிறார்கள். அந்த அறிவை குடும்பத்தில் பயன்படுத்தும்போது உறவுகள் வசப்படும். நமக்கு நல்ல அறிவுத்திறன் இருக்கலாம். இருந்தாலும் நமது முடிவு சரிதானா? என்பதை மற்ற வரிடம் கருத்துக் கேட்டு செயல்படுத்துவது உறவுகளிடையே பிணைப்பை அதிகரிக்கும்.
அன்று கூட்டுக்குடும்பம், இன்று தனிக்குடும்பம். அன்று பெண்கள் வீட்டிலேயே இருப்பார்கள், இன்று வேலைக்குச் செல்கிறார்கள். வளர்ச்சிகள் அதிகமாக இருக்கும் போது பாதிப்புகளும் பெருகி விடுகிறது. அதனால்தான் முதியோர்கள் ஆதரவற்றவர் களாகிறார்கள்.
கால மாற்றத்தால் வீட்டிலுள்ள உறவுகளுடன் கலந்து பேசவோ, உபசரிக்கவோ, போதிய அவகாசம் இல்லாமல் போகலாம். ஆனால் என்றாவது ஒருநாள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வெளியில் போகலாம்.
தான் சம்பாதித்து குடும்பத்துக்கு பக்கபலமாக இருக்கிறோம், நமது தேவைகள் எல்லாம் நிறைவேறுகிறது. இனி நமக்கு யாரும் தேவையில்லை என்ற ஆணவப்போக்கு எப்போதும் தலைதூக்கக்கூடாது. தலைக்கனத்தால் தாழ்ந்து போனவர்கள் ஏராளம் உண்டு.
கருத்து வேறுபாடு ஏற்பட்டு முரண்பாடுகளால் முட்டிக் கொள்ளலாம். இருந்தாலும், `அடிச்சாலும் புடிச்சாலும்’ நீங்கள்தான் அவருக்கு உறவு, அந்த உறவு மாறாது என்பதை நினைவில் கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.
சூழல்கள், உறவுகள் சேர தடையாக இருக்கலாம். ஆனாலும் சிரமம் பாராமல் உறவுகளை பேண வேண்டும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாவிட்டால் நிச்சயம் வாழ்த்து அனுப்பி வையுங்கள். உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நாளில் அவர்களை நேரில் குடும்பத்துடன் சென்று சந்தித்து கலந்துறவாடி விட்டு வரலாம். அல்லது அவர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து உபசரிக்கலாம்.
நல்ல அஸ்திவாரத்தின் மீது கட்டப்படுவது தான் உறுதியான கட்டிடம். நல்ல உறவுகள் மீது அமைக்கப்படுவதுதான் நல்ல வாழ்க்கை. உறவுகளைப் பேணுங்கள். உயர்வு காணுங்கள்!
No comments:
Post a Comment