Saturday, January 19, 2013

சாதனையாளர்களின் 3 குணங்கள்


வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பது எல்லோருடைய மனதின் தாகம் எனலாம்.

படிப்பதில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பலர், வாழ்க்கையில் சாதனையாளர்களாக முடிவதில்லை.

கடினமாக உழைக்கும் பலர் பெரியதாக எதையும் சாதிக்காமல் அப்படியே வாழ்கிறார்கள்.

பணவசதி படைத்தவர்களில் பலரும் சாதனைகளில் பின்தங்கி விடுகிறார்கள்.
அப்படியாயின், சாதனையாளர் ஆவதற்குத் தேவையான மூலக்காரணங்களைப்பற்றிய தெளிவு தேவை.

பொதுவாக, சாதனையாளராவதற்கு, மூலமாக விளங்குவது:
1. எண்ணங்கள்
2. சொற்கள்
3. செயல்கள்

இம்மூன்றையும் சரிவர செயலாக்கும்போது சாதனையாளர் உருவாகிறார்.

எண்ணங்கள்

எண்ணங்களை உருவாக்குவது மனமே. ஒவ்வொருவருக்கும் இரண்டு வகை மனங்கள் உண்டு. ஒன்று வெளிமனம் (Conscious mind); மற்றொன்று உள்மனம் அல்லது ஆழ்மனம் (Subconscious mind). பிறரிடம் உரையாடும்போது, வெளிமனம் தான் செயல்படுகிறது.

நம்முடைய சொற்கள், செயல்கள் மற்றும் தோற்றம் எல்லாம் உள் மனத்தின் பிரதிபலிப்பு எனலாம். நம் வாழ்க்கையில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவமும், அதனால் உண்டான பிரதிகிரியை (Reaction)களும், பதிவேடுகளாக உள்மனதில் அமைகின்றன. அவைகளுக்கேற்ப நம் எண்ணங்கள் உருவாகின்றன.

மனத்தின் சக்தி மிக அபூர்வமானது. அதில் நம்பிக்கையான ஆக்க பூர்வ எண்ணங்களை புகுத்தி நடைமுறைப்படுத்தினால், பிரமிக்கத்தக்க பலன்களை உருவாக்கலாம். அதைவிடுத்து, எதிர்மறை எண்ணங்களர் (பயம், கவலை, கோபம், பொறாமை, வெறுப்பு, ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை) நிரப்பி செயல்படும்போது உண்டாகும் விளைவுகள் சாதனைகளின் தடைகளாகின்றன. உதாரணத்திற்கு, ஒரு விபத்து நடந்தது என்று கேட்டவுடன் வீட்டை விட்டு வெளியில் சென்ற கணவனுக்கு அந்த விபத்து நடந்தது போல, அடிபட்ட அவன் இரத்த வெள்ளத்தில் உயிர் ஊசலாடுவது போல, அதை பிணமாக ஆம்புலன்ஸில் கொண்டுவந்து தம் முன் வைப்பதுபோல ஒரு மனைவி எல்லா கற்பனைகளையும் கூட்டி, வெளியில் சென்ற கணவனை புதைக்குழி வரை கற்பனையில் பய உணர்வினால் பார்க்கிறாள்.

தான் காதலித்த பெண், சிறு விஷயத்திற்காக கோபித்தவுடன் காதலே அழிந்துவிட்டது போல, அதனால் தற்கொலை செய்து கொள்வது போல எதையெதையோ கற்பனை செய்கிறான். அதன் விளைவாக நடைமுறையில் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறான். பிறகு, அதை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகும்போது, அதே பெண்ணிடம் குற்றவாளியாக நிற்கிறான்.

இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களால் பாதிக்கப்படும்போது சாதனைகள் தடைபடுகின்றன. அதனால் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்போதெல்லாம் ‘பெரிய சாதனையாளர் இப்படியெல்லாம் நினைப்பாரா?’ என்ற கேள்வியை கோட்டு அவைகளை உடனே அப்புறப்படுத்துதல் அவசியம். அதன்பின் நம்பிக்கை எண்ணங்களை புகுத்தி, சிந்தனை செய்தால், தெளிவான எண்ணங்கள் உருவாகும். சாதனையாளர்களின் முதல் வழி அதுதான்.

சொற்கள்

நாம் பேசும் சொற்கள் தான் நம் மனத்தின் வெளிப்பாடு எனலாம். பலர், சில சொற்களை பேசியதால் பாதிக்கப்படுகிறார்கள். சிலர், பேச வேண்டிய நேரத்தில் பேசாததால் பாதிக்கப்படுகிறார்கள். ஆக பேசுவதற்கு அளவுகோல் தான் என்ன?

நாம் எதை நினைக்கிறோமோ, எதை விரும்புகிறோமோ அதையெல்லாம் பேசலாம். அதுதான் சுதந்திர மனப்பான்மை அதில் முக்கியமென்னவெனில் சொற்கள் நல்லவைகளாக அமைய வேண்டும். மற்றவரின் நியாய உரிமைகளை பாதிப்பதாக இருக்கக்கூடாது. இதுதான் அதன் அளவுகோல்.

பொதுவாக மனிதர்கள், தாம் விரும்புவதையெல்லாம் சொல்பவர்கள், எல்லாரிடத்திலும் தம் கருத்தை கூறுபவர்கள், பிறருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, தன் விருப்பு வெறுப்புகளை வெளிகாட்டுபவர்கள், பிரச்சினைகளே இதில் தான் ஆரம்பமாகிறது. ஏனெனில் பிறரும் இதே மனப்பான்மையைத் தான் கொண்டிருக்கிறார்கள். அதனால் சொற்களால் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி வருகிறது.

சாதனையாளர்கள் சொற்களை சரிவர பயன்படுத்துகிறார்கள்.

அதனால் நாம் பேசும்போது நல்ல விஷயங்களை தேர்ந்து பேச வேண்டும். உதாரணத்திற்கு ஆக்கபூர்வமான வார்த்தைகளை அடிக்கடி புகுத்த வேண்டும். இதுவரை எதை பேசியிருந்தாலும், இனிமேல் “முடியாது, இல்லை” என்று சொற்களைத் தவிர்த்து “முடியும், அடுத்து” என்ற நம்பிக்கை வார்த்தைகளை எல்லா இடங்களிலும் எல்லா நிலையிலும் பயன்படுத்த வேண்டும்.

எல்லா சூழ்நிலைகளிலும் நல்ல சொற்கள் உரையாடல்களாக அமைய பார்த்துக் கொள்ளல் அவசியம்.

செயல்கள்

எந்த மனிதராயினும், எத்தகைய திட்டமாயிருப்பினும் இறுதியில் சாதனையாளராக உருவாக்குவது அவருடைய செயல்கள் தான்.

சிலர் எல்லா விவரங்களையும் தெரிந்திருப்பார்கள். ஆனால் செயல்படுத்துவதில் திறமை குறைந்திருப்பார்கள்.

சிலர் புதிய திட்டங்களைத் தொடங்குவார்கள். தடைகள் தோன்றினால், தளர்வடைந்து அத்துடன் நின்றுவிடுவார்கள். சாலையில் பயணம் செய்யும்போது வழி அடைக்கப்பட்டிருந்தால், மாற்று வழியை தேடுகிறோம். குறிக்கோளை செயல்படுத்தும்போது, தடைகள் வரும்போது மாற்று வழிகளை ஆராய்வதுதான் விவேகம்.

இன்னும் சிலர் செயலை செய்ய தொடங்கிவிட்டு, கவனத்தை வேறுபக்கம் திருப்பிவிட்டு, என்ன குறிக்கோள் என்பதை மறந்து எதையெதையோ செய்து கொண்டிருப்பார்கள்.

சாதனையாளராவதென்றால், எந்த செயலை செய்யும்போதும் ஒரு முக்கிய கேள்வியை எல்லா நேரமும் கேட்டுக் கொண்டே செயல்பட வேண்டும். “இந்த செயல் நம்முடைய குறிக்கோளை அடைய உதவுமா?” என்பதுதான். ஆம் என்றால் தொடரலாம்.

செயலில் இறங்கும்போது ஒவ்வொரு படியாக செயல்படலாம். அதற்காக தாமதிக்கவோ தள்ளிப்போடவோ வேண்டியதில்லை. பெரும் அடுக்குமாடி கட்டிடங்களும் ஒவ்வொரு செங்கற்களாக கட்டப்பட்டது தான். பெரிய நிறுவனங்களும் சிறிய அளவில் தோன்றி வளர்ந்தவைகள் தான். எந்த சாதனைகளும் திடீரென முனைத்துவிடுவதில்லை.

ஆகவே, நல்லெண்ணங்கள், நல்ல சொற்கள், திறமையான செயல்கள் இவைகளே சாதனையாளர்களின் முக்கிய குணங்கள்.

No comments:

Post a Comment