Sunday, January 20, 2013

கார்ப்பரேட் ஆகும் விவசாயம்! - கலக்கும் புரொபஷனல்கள்


கார்ப்பரேட் ஆகும் விவசாயம்!

கலக்கும் புரொபஷனல்கள்


விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆபீஸில் பியூன் வேலை கிடைத்தாலும் அடித்துப் பிடித்து ஓடியது அந்தக் காலம். லட்ச ரூபாய் சம்பளம் தரும் ஐ.டி. வேலையைக்கூட அசால்ட்டாக விட்டுவிட்டு விவசாயம் செய்ய ஓடி வருவது இந்தக் காலம். டாக்டர்கள், என்ஜினீயர்கள், கலைஞர்கள், ஃபைனான்ஸ் துறை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள் என பலரும் இன்றைக்கு விவசாயம் செய்ய கிராமங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். முழுநேரமாக விவசாயத்தில் ஈடுபட முடியாத பிஸினஸ்மேன்கள் 'வீக் எண்ட்’ விவசாயிகளாகி, சைடு வருமானமாக பல லட்சங்களை சம்பாதிக்கிறார்கள். ஆக, விவசாயத்தை விட்டொழிக்க என்று நினைத்தவர்களின் இன்றைய பெஸ்ட் சாய்ஸ் விவசாயமாக மாறிவிட்டது. பெரிய பெரிய படிப்புகளை எல்லாம் படித்து விட்டு இன்றைக்கு விவசாயத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் சிலரை பற்றி இனி:
பிஸியோதெரபி டு ஆடு வளர்ப்பு!
டாக்டர் படிப்பு, பந்தாவான வாழ்க்கை, கையைப் பிடித்தோமா ஓரளவுக்குப் பையை நிரப்பினோமா என சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கலாம் விழுப்புரம் மாவட்டம், திருநந்திபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன். காரணம், அவர் படித்தது பிஸியோதெரபி. ஏறக்குறைய அரை டாக்டர். அப்படிப்பட்ட வேலையை உதறிவிட்டு, கலப்பின ஆடு வளர்ப்பில் கலக்கி எடுத்துக் கொண்டிருக்கிறார். ம்மேம், ம்மே என ஆடுகள் விதவிதமாக கத்திக் கொண்டிருக்க, உற்சாகமாக பேச ஆரம்பித்தார் அவர்.  
''பிஸியோதெரபி முடிச்சிட்டு, வேலை பார்த்தப்ப மாதம் 20 ஆயிரம், 30 ஆயிரம் வருமானம் வந்துச்சு. இதைவிட அதிகமா சம்பாதிக்கிறதுக்கு என்ன செய்யலாம்னு யோசனை செய்தப்பதான் ஆடு வளர்ப்பு பத்தி தெரிஞ்சுகிட்டேன். அது சம்பந்தமான விஷயங்களைத் தேடிப் பிடிச்சு படிச்சேன். உடனே 100 தலைச்சேரி பெட்டையும், 2 போயர் கிடா, 18 போயர் பெட்டைன்னு மொத்தம்
25 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆட்டுப்பண்ணை ஆரம்பிச்சேன்.  இப்ப எங்கிட்ட மொத்தம் 236 ஆடுகள் இருக்கு'' - சில ஆண்டுகளிலேயே அவர் கண்ட வளர்ச்சியை பெருமை பொங்க எடுத்துச் சொன்னார் வெங்கடேசன்.
வளர்ப்பது ஆடு என்றாலும் கம்ப்யூட்டரும் கையுமாகத்தான் இருக்கிறார் இவர். தான் வளர்த்து வரும் ஆடுகள் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த கம்ப்யூட்டரில் போட்டு வைத்திருக்கிறார்.
''கொட்டில் முறையிலதான் ஆடு வளர்க்கிறேன். தாய் ஆடு, குட்டியாடு, சினையாடுன்னு எங்கிட்ட இருக்கிற ஆடுகளை மொத்தம் ஏழு வகையா பிரிச்சி வளர்க்கிறேன். 150 தாய் ஆடுகள் மூலமா... ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை, சராசரியா 900 குட்டிங்க கிடைக்குது. வருஷத்துக்கு சராசரியா 450 குட்டிகள் விற்பனை செய்றேன். ஆறு மாதம் வளர்ந்த ஆட்டை உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்னு விக்கிறேன்'' என்று தன் பிஸினஸ் பற்றி புட்டு புட்டு வைக்கிறார் வெங்கடேசன்.
ஆடு வளர்ப்பில் உங்களுக்கு அப்படி என்ன லாபம் கிடைத்து விடும் என்று தெரியாத்தனமாக கேட்டுவிட்டோம். ''சராசரியா ஒரு ஆட்டுக்கு 5,000 ரூபாய்னு வச்சிக்கிட்டாலே வருஷத்துக்கு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடுது. பராமரிப்பு, அடர் தீவனம், சம்பளம்னு எல்லாச் செலவும் போக வருஷத்துக்கு 16 லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்குது. ரெண்டு வருஷத்துல முதலீடு கைக்கு வர்றதோட, லாபமும் வர ஆரம்பிச்சுடும். ஆடு வளர்ப்புல இறங்கினா, முதலீட்டுக்கேத்த அளவுக்கு கண்டிப்பா வருமானத்தைப் பார்க்க முடியும்'' என்று சொல்லிவிட்டு, ஆடுகளுக்குத் தண்ணீர் வைக்க புறப்பட்டார் வெங்கடேசன்.

ஹெச்.ஆர். டு எண்ணெய் தயாரிப்பு!
பி.டெக்., எம்.பி.ஏ. என்று படித்துவிட்டு, சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் மனிதவளத் துறையில் அதிகாரியாக மாதம் 40ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் சாந்தி. அந்த வேலையை உதறித் தள்ளி விட்டு தனது குடும்பத் தொழிலான ஆயில் மில்லை வெற்றிகரமாக நடத்துகிறார் அவர்.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியைச் சேர்ந்த சாந்தியை சந்தித்தோம்.
ஹெச்.ஆர். டு எண்ணெய் தயாரிப்புக்கு வந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தார். ''எங்க குடும்பத்திற்குச் சொந்தமான ஆயில் மில் இது. இங்கு எள் எண்ணெய் என்று சொல்லக்கூடிய நல்லெண்ணெய் உற்பத்தி செய்து வர்றோம். அப்பாதான் மில்லை பார்த்துகிட்டார். கவலை இல்லாமல் படிச்சு பட்டம் வாங்கினேன். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் சென்னை கிளையில் மனிதவள துறையில் அதிகாரியா வேலை. மாதம் 40ஆயிரம் ரூபாய் சம்பளம். திருமணமும் ஆனது. கணவருக்கும் இதே துறையில்தான் வேலை. கொஞ்ச நாளில் வெளிநாட்டில் போய் நிரந்தரமா செட்டிலாகும் யோசனை எங்களுக்கு இருந்தது. அதற்கான ஆயத்தமும் நடந்துச்சு.
ஆனால், ஆயில் மில்லை நடத்திக் கொண்டிருந்த என்னோட அப்பா திடீர்னு இறந்திட்டார். கூட பிறந்தவங்க பொண்ணுகதான் மூணு பேரு. அவுங்க வெளியூர்ல செட்டிலாகிட்டாங்க. கடைசி பொண்ணான நானே ஆயில் மில்லை நடத்த வேண்டிய சூழல். அப்பா நடத்தின மில்லை விற்கவும் மனசில்லை. நானே மில்லை நடத்திட முடிவு செய்தேன்'' - சாந்தி பேசப் பேச அவர் மனஉறுதி தெரிந்தது.  
''எம்.பி.ஏ. படிப்பு கொடுத்த ஊக்கம் நிர்வாகத்தை நானே கையில் எடுத்து நடத்த ஆரம்பிச்சேன். மூட்டை மூட்டையா எள் வாங்கி அதை செக்கில் போட்டு ஆட்டி டின்களில் அடைச்சுதான் கடை கடையா கொண்டு போய் விற்பனை செய்து வந்தார் அப்பா. நான் நிர்வாகத்தைக் கையில் எடுத்த பின்பு, எம்.பி.ஏ. படிப்பு என்னை மாற்றி யோசிக்க வைத்தது. அப்பாவின் பழைய வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் டின் எண்ணெய் கொடுத்து வந்தோம். அது ஓரளவு வருமானத்தைதான் கொடுத்தது. இன்று காலம் மாறிவிட்டது.
வியாபார யுக்திகளையும் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். எங்கள் எண்ணெய்யின் தரத்திற்காகவே, பரவலான வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தோம். வியாபாரத்தைப் பெருக்க வேண்டும். அதற்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க வேண்டும். புதிய வாடிக்கையா ளர்களை ஈர்க்க ஒரே வழி மில்லை நவீனமாக்கினேன். தரத்திற்கு நான் முக்கியத்துவம் தந்ததால்தான் என்னால் பிஸினஸில் ஜெயிக்க முடிந்தது'' என்றார் சாந்தி.
''எண்ணெய் தயாரிப்பு பிஸினஸை இன்னும் விரிவாக்க பல திட்டங்களைக் கையில் வைத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் இயற்கை விவசாயத்திலும் இறங்கி, பல வகையான காய்கறி உற்பத்தி செய்யப் போகிறேன்'' என்றவர், ''ஹெச்.ஆர். வேலையில் இருந்ததைவிட பல மடங்கு அதிகமா சம்பாதிக்கிறேன், சந்தோஷமா இருக்கேன்'' என்று சொன்னபோது அவர் பேச்சில் தெரிந்தது முழுமையான மனநிறைவு.
பி.மணிசங்கர், தலைவர், தமிழ்நாடு ஃபிளாட் புரமோட்டர்ஸ் அசோசியேஷன்
''தமிழக ரியல் எஸ்டேட் நிலவரத்தைச் சென்னையிலிருந்து கொண்டே தரமாக கொடுத்து வருகிறது நாணயம் விகடன். இதுபோன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான முதலீட்டு திட்டங்களை விரிவாக அளிப்பது சிறப்பு..!''
மெரைன் என்ஜினீயர் டு அக்ரி மார்க்கெட்டிங்!

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகேயுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்த ரூசோ, ஒரு மெரைன் என்ஜினீயர். கடல் ஆறு மாதம், கரை ஆறு மாதம் என வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த இவருக்கு மாதச் சம்பளம் 1.10 லட்ச ரூபாய். சில ஆண்டு காலம் வேண்டா வெறுப்பாக இந்த வேலையைச் செய்து வந்தவர், பிறகு அந்த வேலையை தூக்கிப் போட்டுவிட்டு, இன்று விவசாயம் செய்ய வந்துவிட்டார்.
''என் அப்பா இயற்கை விவசாயத்துல நெல்லி, மா, சப்போட்டா, தேன் மாதிரியான பொருட்களை உற்பத்தி செஞ்சிகிட்டு இருந்தாரு. என்னோட சகோதரிகளும் அதே வேலையைத்தான் செஞ்சிகிட்டு இருந்தாங்க. ஆனா, அவங்க இயற்கை முறையில உற்பத்தி செஞ்ச பொருட்களை சந்தைப்படுத்த முடியாம தவிச்சாங்க. அதே நேரத்துல சென்னை மாதிரியான நகரங்கள்ல இயற்கை விளைபொருட்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்குன்னு புரிஞ்சுகிட்டேன். உற்பத்தி பண்றவங்களுக்கு கன்ஸ்யூமர் யாருன்னு கண்டுபிடிக்க முடியலை; கன்ஸ்யூமருக்கு புராடக்ட் எங்க கிடைக்கும்னு தெரியலை.  - தொழில் மாறிய கதையை முதலில் சொன்னார் ரூசோ.
''முதல்ல சென்னையில சின்னதா ஒரு ஆர்கானிக் ஷாப் ஆரம்பிச்சேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. இயற்கை விவசாயத்துல விளையிற அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், தேன் மாதிரியான பொருட்களை சந்தைப்படுத்தினேன். இப்ப சென்னையில நீலாங்கரை, திருவான்மியூர், கோவை, நாகர்கோவில்னு மொத்தம் நாலு கிளைகளை திறந்திருக்கேன். பத்துக்கு பத்து ரூம்ல ஆரம்பிச்ச என்னோட நிறுவனம் இன்னிக்கு பிரைவேட் லிமிடெட் கம்பெனியா வளர்ந்திருக்கு. இப்ப ஒவ்வொரு கடையிலேயும் மாசம் 5 லட்ச ரூபாய்க்கு பிஸினஸ் நடக்குது'' என்றார் மகிழ்ச்சி பொங்க.
''சென்னையில வீட்டுத் தோட்டம் அமைக்குறதைப் பத்தி பயிற்சி தர்றோம். நாங்களே போய் அமைச்சும் கொடுக்குறோம். என்னைப் பொறுத்தவரை, இந்த தொழில் மூலமா கை நிறைய சம்பளம், மனசு நிறைய சந்தோஷம் ரெண்டுமே கிடைக்குது'' என்றார் ரூசோ.
சி.கே.ரங்கநாதன், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், கவின்கேர்.
''உடனடியாக பிஸினஸில் இறங்க வேண்டும் என்ற விதையை ஏராளமானோருக்கு விதைத்த பெருமை நாணயம் விகடனுக்கே உண்டு. இதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே பிஸினஸில் இருப்பவர்களின் பிரச்னைகளுக்கும் தீர்வுகளை கொடுத்து வருகிறது. நாணயம் சிறந்த வழிகாட்டி.''
சிவில் என்ஜினீயரிங் டு இயற்கை விவசாயம்!

திண்டுக்கல்லைச் சேர்ந்த செந்தில் ஒரு சிவில் என்ஜினீயர். ஆனால், இன்றைக்கு அவர் செய்வதோ ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்.
''விவசாயம் எங்க குலத்தொழில். நான் பி.இ. படிச்சு முடிச்சதும் வேலைத் தேடாம சொந்த ஊர்லயே கான்ட்ராக்ட் ஒர்க் எடுத்து பார்க்க ஆரம்பிச்சேன். இதுக்கு இடையில திண்டுக்கல்லுக்கு வெளியே 33 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்குனேன். அந்த இடத்தை சமன் செஞ்சி, 10 ஏக்கர்ல சப்போட்டா, 8 ஏக்கர்ல ஏற்றுமதி வாய்ப்புள்ள அல்போன்சா, பங்கனப்பள்ளி மாதிரியான மா செடிகளையும், 10 ஏக்கர்ல நெல்லியையும் நட்டு 'ஜீரோ பட்ஜெட்’ இயற்கை விவசாய முறையில சாகுபடி செய்றேன்.
இந்த பயிர்களுக்கு அதிக பராமரிப்புத் தேவையில்லை. ஆட்கள், செலவு எதுவும் அதிகமா தேவைப்படாது. அதே நேரத்துல நல்ல வருவாயும் கிடைக்கும்'' - சடசடவென சொல்லிக் கொண்டே போகிறார் செந்தில்.
''ஒரு ஏக்கர் நெல்லி மூலமா வருஷத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் நிச்சயம் கிடைக்கும். ஒரு ஏக்கர் மா மூலமா வருஷத்துக்கு 50 ஆயிரம், சப்போட்டா மூலமா வருஷத்துக்கு 30 ஆயிரம் கிடைக்கும். அந்த வகையில 10 ஏக்கர் நெல்லி மூலமா 6 லட்சம், 8 ஏக்கர் மா மூலமா 4 லட்சம், 10 ஏக்கர் சப்போட்டா மூலமா 3 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். ஆக மொத்தம் 13 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானமா கிடைக்கும். இதுல 3 லட்ச ரூபாயை செலவு கணக்குல வச்சுகிட்டாலும் 10 லட்ச ரூபா லாபமாக கிடைக்கும். இந்த லாபம் அடுத்தடுத்த ஆண்டுகள்ல அதிகரிக்கும்'' - கச்சிதமாக கணக்கு போட்டு காட்டினார் செந்தில்.
பரம்பரையாக விவசாயம் பார்த்துவந்த குடும்பத்தினரின் வாரிசுகள் ஐ.டி. கம்பெனிகளை பார்த்து கிளம்பிவிட, புதிய புரொபஷனல்களின் வருகையால் விவசாயத் துறை கார்ப்பரேட் பிஸினஸ் போல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.
கூடிய விரைவில் நாமும் விவசாயம் செய்யக் கிளம்ப வேண்டியதுதான்!

No comments:

Post a Comment