Saturday, January 19, 2013

அருமையான தலைமைக்கு ஆறுமுகங்கள்


தலைமைக்குத் தேவை ஆறு முகங்கள்:

உயர்வு பெற்ற ஒவ்வொரு மனிதரிடமும் உள்ளது – ஒரு முகம் என்றா நினைக்கிறீர்கள்? – இல்லை – ஆறு முகங்கள்!

அந்த ஆறுமுகங்களை நாமும் பெறுவோம். ஆளுமை நிறைந்த அற்புத வாழ்வை வாழ்வோம்.

ஆறுமுகங்களாவன:

1. முன்னிற்க ஒரு முகம்
2. முன்மொழிய ஒரு முகம்
3. முடிவெடுக்க ஒரு முகம்
4. முடிச்சவிழ்க்க ஒரு முகம்
5. முத்திரை பதிக்க ஒரு முகம்
6. முன் மாதிரியாய்த் திகழ ஒரு முகம்

தேவை: ஆறு முகம்
தீர்வு : ஏறு முகம்!
முன் நில்:

முன்னிற்கத் தேவை துணிவு. துணிவு பெறத் தேவை நம்பிக்கை! நம்பிக்கை பெறத்தேவை ஊக்கம்! ஊக்கத்தை – உள்ளிருந்தும் பெறலாம், வெளியிலிருந்தும் பெறலாம். ஊக்கம் பெற்ற மனிதர்களால் மட்டுமே மேலும் ஆக்கம் புரிய முடியும்.

பார்க்க பார்க்க, கேட்கக் கேட்க … கவனிக்கக் கவனிக்க மெல்ல மெல்ல ஊக்கம் பிறக்கும்…. மேலும் மேலும் உற்சாகம் கிடைக்கும். பிறகென்ன….

நம்பிக்கை “தானே” வரும். நம்பிக்கையைப் பற்றிக் கொண்டால் துணிவு பிறக்கும். துணிவு பிறந்தால் துணைக்கு வேறேதும் தேவையில்லை.

துணிவு பெற்று, முன்னிற்க வேண்டியது தான். பொறுப்புக்களை ஏற்பதில் முன்னிற்பதே – தலைமை ஏற்பதற்கான முதல் தகுதி. அதுவே முதல் அழகு. அதற்கொரு முகம்… அதுவே ஒரு தலைவனுக்கான முதல் முகம்!

முன்மொழி:

முன்மொழியத் தேவை வெளிப்பாட்டுத் திறன்! வெளிப்படத் தேவை உள்ளத்தில் தெளிவு. தெளிவு பெறத் தேவை, தீராத தேடல்! தேடலைத் தொடங்கத் தன் தேவையை உணர்தல் வேண்டும்! வெளிப்படுவதற்கான தேவையை உணர்ந்து விட்டால் பேச்சாற்றலுக்கான பயிற்சி பெறலாம். பயிற்சி பெறுதல் முயற்சியின் முதல்படி! பயிற்சி பெற்று, கிடைக்கும் வாய்ப்புக்களிலெல்லாம் தயங்காமல் முன்னின்று அதைப் பயன்படுத்திப் பழகி வந்தால் அந்தத் திறன் கூர்மை அடைந்து விடும்.

முயற்சி செய்தால் முடியாததில்லை… முறையாக முன்மொழியலாம்… (பேசலாம்). முன் மொழியப் பழகிவிட்டால் – அத்தனையும் ஒருநாள் பொன் மொழியாகலாம்! பின் என்ன? பொற்காலம் காணலாம். மொழியாமல் (Communication) முன்னேற்றம் இல்லை.

சிக்கல்களை, தீர்வுகளை, தீர்மானங்களை முன்மொழிதலே – ஒரு தலைவனுக்கு

இரண்டாம் அழகு! முன்மொழியத் தேவை அந்த இரண்டாம் முகம்!

முடிவெடு:

முடிவெடுக்கத் தேவை, ஆராயும் மனம், தேவை எது?- எனத் தீர்மானிக்கும் திறன்! விருப்பம் எது?- எனத் தேர்ந்தெடுக்கும் திறன்! தீர்வின் திசைகளைக் கண்டெடுக்கும் திறன்! பயணிப்பதற்கான பாதையை நிச்சயிக்கும் திறன்! முடிவெடுக்கத் தேவை, உள்ளத்து உறுதி! உறுதியான மனமெடுக்கும் முடிவு இறுதியானதாய் இருக்கும். குழப்பமின்றி, கலக்கமின்றி விரைவாய், சரியாய் முடிவெடுத்தல் – ஒரு தலைவனுக்கு – மூன்றாம் அழகு… முடிவெடுக்கும் முகம் மூன்றாம் முகம்!

முடிச்சு அவிழ்:

முடிச்சை அவிழ்க்கத் தேவை… சிக்கல் தீர்க்கும் திறன்… சிக்கல் தீர வேண்டுமெனில் அதன் ஆணிவேரைக் கண்டுபிடிக்க வேண்டும்! சிக்கலின் “மூலமே” – அதன் ஆணிவேர் தான்!

ஆணிவேரைக் கண்டு அசைத்துவிட்டால் அவிழா முடிச்சும் தானே அவிழ்ந்துவிடும்! ஆக்கப்பூர்வமான மனமிருந்தால் ஆணிவேர் சீக்கிரமாய் அகப்பட்டு விடும். இல்லையெனில் அலைபாய நேரும்…

முடிச்சவிழ்க்க முடியாது போனால்… முனகும், புலம்பும்… மனம் கவலையில் மூழ்கும்! கவலையில் மூழ்கினால் முன்னேற்றம் ஏது? எனவே, முடிச்சவிழ்த்தல் என்பது – ஒரு தலைவனின் நான்காம் அழகு! அதுவே அவனது நான்காம் முகம்! முடிவெடுக்கத் தேவை ஆக்கப்பூர்வமான பார்வை. அந்தப் பார்வையே எந்தச் சிக்கலுக்கும் தீர்வுகாணவல்ல புதியபார்வை. நான்முகன் – ஒரு புதிய பார்வைக்காரன். எனவே தான் அவன் படைப்பாளியாகத் திகழ்கிறான். ஒரு தலைவன் என்பவன் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் படைப்பாளிதானே!

முத்திரை பதி:

முத்திரை பதிக்கத் தேவை “தனித்தன்மை.” ஆளுக்கு ஆள் அந்தத் தனித்தன்மை வேறுபடும். அறிந்து கொண்டால் அற்புதங்கள் கூடிவிடும்! தனித்தன்மையே அவரவர் அடையாளம்! அடையாளத்தைக் கண்டு கொண்டால், பிறகு தடையேதும் இல்லை. வினாக்களெல்லாம் விடை பெற்றுவிடும். அசத்தலாம் – அனைவரையும் வசப் படுத்தலாம். தனித்தன்மை அறிந்து வடம் பிடிக்கலாம். வடம் பிடித்து வாழ்வில் முத்திரை பதிக்கலாம். முத்திரை பதித்தல் ஒரு தலைவனின் ஐந்தாம் அழகு! – அதுவே ஐந்தாம் முகம் தரும் அற்புதம்.

பரம்பொருள் எனப் போற்றப்படும் சிவனுக்கு ஐந்துமுகம் எனப் புராணங்கள் கூறுகின்றன! ஒரு செயலில் முத்திரை பதிக்கத் தேவை மனஉறுதி (Will)! அந்த மனஉறுதிக்குத் தேவை ஐந்தாம் முகம்!

முன்மாதிரியாய் இரு:

முன் மாதிரியாய் திகழத் தேவை பயன்பாடு! பயன்பட வேண்டுமெனில் பக்குவப்பட வேண்டும்! பக்குவப் பட்டவனே முன்மாதிரி. பக்குவப்பட்டவனின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவையாகும். ஏனெனில் அவை பண்பட்டவையாய் இருக்கும். ஆதலால் பக்குவப்பட்டவனே முதன்மையானவன்! மதிப்பு மிக்கவன்! மதிப்புமிக்கவனே உலகின் முன் மாதிரி! முன்மாதிரியாதல் – ஒரு தலைவனுக்கு ஆறாம் அழகு! அதுவே முகந்தரும் பொலிவு!

கிடைக்க வேண்டிய மாம்பழம் கிடைக்கவில்லை என்பதற்காக வருத்தப்பட்டு நியதிகளை உடைக்காமல் ஆக்கப்பூர்வமான சிந்தனையோடு தனக்கென்று ஓர் இடம் தேடி குன்றிருக்கும் இடமெல்லாம் குடிகொண்ட வணக்கத்துக்குரியவனாய் கருதப்படும் தமிழ்க்கடவுள் முருகனின் – குறியீடாய் ஆறுமுகங்கள் அமைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆறழகும் ஓரழகாய், ஆறுமுகமும் ஒரு முகமாய் தோன்றிவிட்டால் அதுவே பேரழகாய் ஒளிரும் – அல்லவா! போற்றுதலுக்குரிய தலைவர்களிடம் – இந்த ஆறுமுகங்களும் இருக்கும், அலசிப்பாருங்கள். புலப்படும்.

நமக்கும் ஆறுமுகம் வாய்த்து விட்டால் – எந்த நிலைமைக்கும் தலைமை ஏற்று – வளமைக்கு வித்திடும் ஆளுமையை நிலைநாட்டலாம்!

No comments:

Post a Comment