Thursday, January 24, 2013

பிரச்னையை எளிதாகக் கையாள வழிமுறைகள்


பொதுவாக பெண்களுக்கு நிறைய விஷயங்கள் பிரச்னையாகவோ, சிக்கலாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றை சில முறைகளைக் கையாண்டால் நிச்சயம் நீங்கள்தான் வெற்றியாளராக இருப்பீர்கள்.

1.சாதனையாளர்களை பின்பற்றுவோம்...

சாதனையாளர்கள் எல்லாருமே சாதனையாளர்களாகவே பிறப்பதில்லை. அவர்களும் எத்தனையோ தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்துத்தான் சாதனையாளர்களாக உருமாறுகிறார்கள். எனவே, நீங்கள் அடையும் ஒவ்வொரு தோல்விகளையும், சறுக்கல்களையும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2. தவறை ஒப்புக் கொள்வோம்..

நண்பர்களுக்குள்ளோ, உறவினர்களுக்குள்ளோ, தம்பதிகளுக்குள்ளோ எந்த விதமான சண்டையோ கருத்து வேறுபாடோ ஏற்பட்டால், அது பெரிய பிளவை ஏற்படுத்த விடாமல் தடுக்க வேண்டியது அவசியம். பல நேரங்களில் நாம் அதனை தடுக்காமல் விட்டுவிடுகிறோம். தவறு என் பக்கம் இருந்தால் மன்னித்துவிடு என்று பிரச்னையை அதோடு நிறுத்திவிடுங்கள். மன்னிப்புக் கேட்பது மட்டும் நீங்களாக இருக்க மாட்டீர்கள், உறவிலும், அன்பிலும் வெற்றி பெறுவதும் நீங்களாகவே இருப்பீர்கள்.

3. வடிகாலை ஏற்படுத்திக் கொள்வோம்...

பெண்கள் ஏதேனும் பிரச்னையில் இருக்கும் போது அதனை மற்றவரிடம் கூறுவதால் அவர்கள் மன நிம்மதி அடைகின்றனர். இதற்கு அவர்களின் ஹார்மோன்களே காரணம். இது பெண்களின் பலவீனமல்ல. பலம்தான். இதனால், அவர்கள் ஒரு பிரச்னையை சரியாக அணுக வழி வகை செய்கிறது. எனவே, நமக்கே நமக்கு என்று ஒரு வடிகாலை, சரியான தோழியை, நண்பரை பெற்றுக் கொள்வோம். எதையும் மனம் திறந்து ஒருவரிடம் பேசும் போது நமது குற்றம் குறைகளை நாமே உணர வழி ஏற்படும்.

4. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்போம்..

பொதுவாக ஒருவரை நாம் புரிந்து கொள்ளாமல் போவதற்கு, அவர்கள் மீதான வெறுப்பு தான் காரணமாக இருக்கும், அவர்களை வெறுக்கக் காரணமே அவர்களை நாம் புரிந்து கொள்ளாமல் போவதுதான். எனவே, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம். அவர்கள் நிலையில் இருந்து ஒரு பிரச்னையை ஆராய்ந்து பார்க்க முயற்சிக்க வேண்டும். இதுவே ஒரு பிரச்னையை எளிதாகக் கையாள சரியான வழியாக இருக்கும்.

5. பிரச்னையில் இருந்து வெளியே வந்து சிந்திப்போம்...

ஒரு பிரச்னைக்கு அதன் உள்ளேயே தீர்வு இருக்கிறது. ஆனால், பிரச்னைக்கு உள்ளேயே இருந்து கொண்டு நாம் தீர்வை தேடக் கூடாது. அதை விட்டு வெளியே வந்து அதற்கான தீர்வை தேடினால் விரைவில் அதனை தீர்த்துவிடலாம். எனவே, ஏதேனும் ஒரு மன குழப்பம் ஏற்பட்டால், உடனடியாக அதைப் பற்றியே சிந்தித்து மூளை குழம்பி போகாமல், அதில் இருந்து விடுபட்டு, சிறிது ஓய்வு எடுத்துவிட்டு பிறகு அதைப் பற்றி அமைதியாக சிந்தியுங்கள். உடனடியாக ஒரு ஐடியா தோன்றும். அதனை செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment