Wednesday, January 23, 2013

வெற்றிக்கு வழி அமைதி


மகிழ்ச்சியும், நிம்மதியுமே வாழ்க்கையின் லட்சியம். நாம் செய்யும் எல்லா செயல்களும் இதை நோக்கியே அமைந்திருக்கின்றன. இந்த இரு பண்புகளுக்கும் அமைதியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனெனில் நீங்கள் அமைதியை இழந்தால் இவை இரண்டுமே உங்களைவிட்டு தூரத்துக்கு சென்று விடும்.
உங்கள் அனுபவத்தில் இது நிகழ்ந்திருக்கலாம். பிறர் உங்களை காரணமின்றி திட்டுவதாகவும், குறை கூறுவதாகவும் உங்களுக்கு தோன்றி இருக்கலாம். அது உண்மையாகவோ அல்லது மாறாகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் சிக்கலான காலக்கட்டத்தில் அமைதியுடன் இருந்து பொறுமையாக சமாளியுங்கள். அப்போது அமைதியின் சக்தியை நீங்கள் உணருவீர்கள். பிறகு அதன் பலனை அனுபவிப்பீர்கள்.
ஆனால் எல்லா நேரத்திலும் அப்படி இருக்க முடியுமா? பேச வேண்டிய தருணத்தில் பேசாமல் இருப்பதுதான் மிகப்பெரிய பலவீனம். தமிழில் ஒரு பழமொழி உண்டு. `கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு’ என்பது அந்தப் பழமொழி. இதில் வரும் கொக்குபோல காத்திருப்பது அமைதிக்கு எடுத்துக்காட்டு அல்ல. அறிவீனத்தின் வெளிப்பாடு.
அமைதியை இழப்பதே கோபம். துன்பத்தின் ஆரம்பம். பலவீனமானவர்களுக்கே சீக்கிரம் கோபம் வரும் என்பது உண்மைதான். உங்கள் கருத்தை சாந்தமாகவே வெளியிடுங்கள். அப்படியும் மற்றவர், உங்களின் மீது கோபத்தை கொட்டுவதையே குறியாக இருக்கிறார் என்பதை உணர்ந்தால் அங்கே நீங்கள் கண்டிப்பாக அமைதியாகத்தான் இருக்க வேண்டும்.
எங்கே சரியான புரிதல் இருக்கிறதோ, அங்கே கோபம் குறைந்துவிடும். அமைதி சூழ்ந்து கொள்ளும். அமைதி கலையும் இடத்தை நன்றாக கவனித்துப் பாருங்கள். அங்கே எதிரெதிர் கருத்துக்கள் தோன்றியதாலேயே ஆட்சேபணை உருவாகி கோபம் கொப்பளிக்கும். அமைதி கெடும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் கருத்து சரியாகவே இருந்தாலும் அதை வலியுறுத்த வேறு தருணத்தை எதிர்பார்த்து நீங்கள் அமைதி காப்பதே அறிவுடைமை. “அறிவற்றம் காக்கும் கருவி” என்பார் தமிழ்ப்புலவன் வள்ளுவர்.
உங்களுக்கு கோபமூட்டும் தருணங்களில் நீங்கள் சரியான புரிதலோடு அமைதி அடைவீர்களானால், அந்த அறிவுடைமையானது உங்களது நெருங்கிய சுற்றத்தாரான மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நிலைத்திருக்க வைக்கும் என்று இங்கு பொருள் கொள்ளலாம்.
எனவே எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கமாக இருங்கள். அனைவரிடமும் அன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் கற்றுக் கொள்ளுங்கள். பிறர் உங்களை குறை கூறும்போது மவுனமாக இருங்கள். அவர்கள் மீது எந்த விதமான பகைமை உணர்ச்சியும் கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தை காட்டுவதைவிட இது மிகவும் மோசமானது. இது ஒரு மானசீகப் புற்றுநோய் எனலாம்.
மறப்போம், மன்னிப்போம். இது வெறும் லட்சியவாத மொழி அல்ல. கோழைச் செயலுமல்ல. உங்கள் அமைதியைப் பாதுகாக்கும் ஒரு வழிதான். அந்த வீண் பழிச்சொற்கள் பொய்யானவை என்பதை நீங்களே அறிவீர்கள். பிறகு ஏன் அதையே மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டும்? குழப்பிக் கொண்டால் உங்களுக்குத் தூக்கம் கெடும். படபடப்பு அதிகரிக்கும். நிம்மதி பறிபோகும். மகிழ்ச்சி மறைந்துவிடும். அமைதி காக்க கற்றுக் கொண்டால் அடக்கத்திலும், தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள்.
வாழ்வில் உங்களை தடுமாற வைக்கும் இத்தகைய சம்பவங்கள் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம். அப்போது உங்களுக்கு விருப்பமான செயலில் மனதை லயிக்கச் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதியும், திருப்தியும் கிடைக்கும்.
எந்த செல்வத்தை காட்டிலும் மன அமைதியே பெரிது. அதை நீங்கள் உணர்ந்தால் அமைதியை கெடுக்கும் கோபத்தை கைவிடுங்கள். இக்கட்டான நிலையில் சரியான புரிதலுடன் அமைதி காத்திடுங்கள். சாதகமான நேரத்தில் உங்களின் கருத்தை வெளியிடுங்கள். அமைதியின் சக்தியை உணருங்கள். உறுதி பலமடங்கு கூடும். எளிதில் வெற்றி காண்பீர்கள்.

No comments:

Post a Comment