Saturday, January 19, 2013

தன்னம்பிக்கைக்கு ரோல் மாடல் தாமோதரன்தாமோதரன்

காட்சி-1
ஆண்டு: 1997
இடம்: கள்ளக்குறிச்சியை ஒட்டியுள்ள கச்சிராயபாளையம்.

‘‘கணக்கு மட்டுந்தான் போயிருக்கு. அட்டம்ட் எழுதி பாஸ் பண்ணிருவேன்…’’ – தலையைக் குனிந்தபடி தந்தை முனியனிடம் சொன்னார் தாமோதரன்.

முனியனுக்கு கண்கள் சிவந்துவிட்டன… ‘‘பத்தாவது வரை உன்னை படிக்க வச்சதுக்கு ரெண்டு எருமை வாங்கியிருந்தா பத்து லிட்டர் பாலாவது கறக்கும். நீ கிழிச்ச லட்சணத்தைப் பாத்தாச்சு… கேரளா பக்கம் செங்கல்சூளைக்கு ஆளெடுக்கிறாங்களாம்… போயி நாலு காசு சம்பாதிக்கப் பாரு…’’

கேரளாவுக்கு கிளம்பிவிட்டார் தாமோதரன். சுட்டெரிக்கும் வெயிலில் நாளொன்றுக்கு மூவாயிரம் செங்கற்களை சுமந்து சென்று காயவைக்க வேண்டும்.

காட்சி-2
ஆண்டு: 2009
இடம்: வாஷிங்டன், மேரிலேண்ட் யுனிவர்சிடி

பேராசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்போடு அமர்ந்திருக்கிறார்கள். நடுவில், தாமோதரன். ஆம்… நம் கச்சிராயபாளையம் தாமோதரன்தான். ஒரு பேராசிரியர் கேட்கிறார், ‘‘குழந்தைகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்த நீங்கள் உருவாக்கிய கல்வித் திட்டத்தை எங்களுக்குப் புரியும்படி விளக்கமுடியுமா?’

கடகடவென பொழியும் தாமோதரனின் ஆங்கிலத்தில் கட்டுண்டு கிடக்கிறது மேரிலேண்ட்.

‘‘அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிங்க. மாடுகணக்கா உழைச்சாலும் சாப்பாட்டுக்கு சனப்புக்கீரையும், சோளக்கூழும்தான் மிஞ்சும். புறம்போக்குல சின்னதா வீடு. எங்கூர் பக்கத்தில மலைவாழ் மக்கள் உண்டு உறைவிடப் பள்ளி இருக்கு. அதுலதான் பத்தாவது வரைக்கும் படிச்சேன். அப்பாவும் அம்மாவும் போட்டுக்கிற சண்டையில வீட்ல படிக்க முடியாது. லைட்டு கம்பத்துக்குக் கீழே படிக்கலாம்னா, அது பாதி நாளைக்கு எரியாது. இந்தச் சூழல்ல பத்தாவது வந்ததே சாதனைதான்…’’ – சிரிக்கிறார் தாமோதரன்.

‘‘எங்க மக்கள் யாருக்கும் பெரிசா நிலபுலன்கள் கிடையாது. மழைக்காலத்தில நடவு, நாத்துப்பறியல்னு ஊர்ல வேலை கிடைக்கும். கோடையில கேரளா செங்கல்சூளைகளுக்குப் போயிருவாங்க. முன்பணமா ஒரு தொகையைக் குடுத்து லாரியில ஏத்திக்கிட்டுப் போவாங்க. ஒரு நாளைக்கு ஆண்களுக்கு ரூ. 70ம், பெண்களுக்கு ரூ. 50ம் கூலி. பெரிய இயந்திரங்கள் மண்ணைக் குழைச்சு செங்கல் அறுத்துத் தள்ளும். அதைத் தூக்கிட்டுப் போய் காய வைக்கணும். கிட்டத்தட்ட கொத்தடிமை வாழ்க்கை.

திடீர்னு அப்பாவுக்கு வயித்துல கட்டி வந்திருச்சு. அவரால வேலைக்குப் போக முடியலே. அம்மாவோட வருமானம் மட்டும்தான். அந்த நிலையிலதான் நான் கேரளா போனேன். சின்னப்பையனா இருந்ததால முதல்ல எனக்கு பெண்கள் சம்பளம்தான் கொடுத்தாங்க. காலையில 8 மணிக்கு ஆரம்பிச்சா நைட்டு 7 மணி வரைக்கும் கல் சுமக்கணும். சாப்பாட்டு நேரம்தான் ஓய்வு.

தலையில செங்கல்ல சுமந்தாலும் மனசுல படிக்கணும்ங்கிற கனவை சுமந்துக்கிட்டுத்தான் இருந்தேன். பள்ளிக்கூடம் போற பிள்ளைகளைப் பாக்கிறப்போ ஏக்கமா இருக்கும். கல்லும் மண்ணுமா ரெண்டு வருஷம் ஓடுச்சு. ஊருக்கு வந்தப்ப, ‘ஃபெயிலான பாடத்தை திரும்பவும் எழுதுறேன், இடைப்பட்ட நேரத்துல கரும்பு வெட்டப் போறேன்’னு அப்பாகிட்ட சொன்னேன். அவரு திரும்பவும் எகிறிக் குதிச்சாரு. அம்மாதான், ‘நீ படிடா… நான் பாத்துக்கறேன்’னு சொல்லி அப்பாவுக்குத் தெரியாம பணம் குடுத்துச்சு.. இடையிடையே கிடைக்கிற வேலைக்குப் போய்க்கிட்டே படிச்சு பத்தாவது பாஸ் பண்ணினேன். முன்னாடி படிச்ச அதே பள்ளிக்கூடத்தில பிளஸ் 1 சேந்தேன். ஈடுபாட்டோட படிச்சேன். பிளஸ் 2ல நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்…’’ – விழிகள் மின்னப் பேசுகிறார் தாமோதரன்.

‘‘கல்லூரிக்கு அப்ளிகேஷன் வாங்கறது எப்படின்னு தெரியலே. வழிகாட்டக்கூட யாருமில்லை. அந்தச் சூழல்ல மாடு தள்ளிவிட்டு அம்மா இறந்துட்டாங்க. அடிமேல அடி. தம்பிங்க ரெண்டு பேரும் சின்னப்பசங்க. உடம்பு முடியாத அப்பா வேற… சமைக்கக்கூட ஆளில்லை. எல்லாத்தையும் நானே பாக்கவேண்டிய சூழ்நிலை. ஒரு வருஷம் அப்படியே இருந்துட்டேன். மறுவருஷம் அப்பாகிட்ட போய், ‘காலேஜுக்குப் போறேன்’னு சொன்னேன். ஒரு பொட்டிய திறந்து 10 ஆயிரம் ரூவாயை எடுத்த அப்பா, ‘இது வரைக்கும் நீ சம்பாரிச்சுக் கொடுத்த பணம். உனக்காகத்தான் வச்சிருந்தேன். இதை வச்சு படிச்சுக்கோ’ன்னு அனுப்பி வச்சார். சென்னை வந்து புதுக்கல்லூரியில பி.எஸ்சி. சேந்தேன். ஹாஸ்டல் கிடைக்கலே… தரமணியில வாய்க்கால் கரையோரம் ஒரு குடிசையெடுத்து நானும் நண்பர் முத்துவேலும் தங்கினோம்.’’

‘எய்டு இந்தியா’ தொண்டு நிறுவனம் குடிசைவாழ் குழந்தைகளுக்கு ஒரு இரவுப்பள்ளியை நடத்தியது. தாமோதரனும் முத்துவேலுவும் ஓய்வுநேரத்தில் அங்கு பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினர்.
‘‘முதல்ல பொழுதுபோக்காதான் ஆரம்பிச்சோம். போகப்போக அந்த சூழ்நிலையும், அந்தக் குழந்தைகளுக்கு உள்ள பிரச்னையும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திச்சு. 5ம் வகுப்பு படிக்கிற குழந்தையால நாலு வரி கதையை முழுசா வாசிக்க முடியலே. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு பிரச்னை. மதியம் 1 மணியோட எனக்குக் கல்லூரி முடிஞ்சிடும். மற்ற நேரங்கள்ல அந்த பிள்ளைகளோடவே இருந்து அவங்க பிரச்னைகளைப் புரிஞ்சுக்கிட்டேன். பாடங்களை அப்படியே அவங்களால படிக்க முடியல. அதனால, வாசிக்கிறதுக்கான புதிய வழிமுறைகளை கண்டுபிடிச்சுக் கத்துக் கொடுத்தேன். கற்றல் உபகரணங்கள், கருவிகள் மூலமா மூணே மாதத்தில கற்றல், வாசிப்புத்திறனை மேம்படுத்துற மாதிரி ஒரு திட்டத்தை உருவாக்கினேன். எல்லாப் பணிகளுக்கும் ‘எய்டு இந்தியா’ பின்புலமா இருந்துச்சு.
அடுத்தகட்டமா ‘மக்கள் பள்ளி இயக்கம்’ அமைப்பைத் தொடங்கினோம். நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள்ல அந்த இயக்கத்தை வழிநடத்தினேன். அதன் விளைவுகளைப் பார்த்த அரசே 175 பள்ளிகள்ல அந்தத் திட்டத்தை செயல்படுத்துச்சு. அடுத்து ‘படிப்பும் இனிக்கும்’, ‘அறிவியல் ஆனந்தம்’னு பல திட்டங்கள் தொடங்கினோம். எல்லாம் குழந்தைகளை கல்வியை நோக்கி ஈர்க்கிற திட்டங்கள்…’’ – வியக்க வைக்கிறார் தாமோதரன்.


இதற்கிடையில் எய்டு இந்தியாவின் உதவியோடு எம்.ஏ., எம்.பில். முடித்த தாமோதரன், அந் நிறுவனத்தி லேயே பணியில் இணைந்தார். தாமோதரனின் வாசிப்புத் திட்டத்தைப் பாராட்டி பல விருதுகள், பாராட்டுகள் குவிந்தன. மும்பையில் இயங்கும் ‘பிரதம்’ அமைப்பு தேசிய அளவிலான விருது வழங்கியது. அமெரிக்க இந்திய மாணவர்களால் நடத்தப்படும் ‘அசோசியேஷன் ஆஃப் இந்தியன் டெவலப்மென்ட்’ அமைப்பு, ‘7000 பள்ளிகளில் 7 லட்சம் மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தியதற்காக’ தாமோதரனை அமெரிக்காவுக்கே அழைத்து விருது வழங்கியது.

‘‘வாசிப்புத் திட்டம், இந்தியாவோட கல்விச்சூழல் பற்றி அமெரிக்காவில 25 மாநிலங்கள்ல பேசினேன். நியூஜெர்சியில ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் படித்த கல்லூரி, சியாட்டல்ல மைக்ரோசாப்ட் அலுவலகம், மேரிலேண்ட் யுனிவர்சிடின்னு கற்பனைக்கெட்டாத பல இடங்கள்ல பேசக் கிடைச்ச வாய்ப்பை இப்பவரை நம்பமுடியலே…’’ – அடக்கமாகப் பேசுகிறார் தாமோதரன்.

இப்போது எய்டு இந்தியா நடத்தும் ‘யுரேகா சூப்பர் கிட்ஸ்’ இயக்கத்தின் திட்ட இயக்குனராகப் பணிபுரிகிறார் தாமோதரன். மனைவி கோமதி, எய்டு இந்தியாவில் நிதித்துறை இயக்குனர். காதல் திருமணம். அன்பின் அடையாளமாக 7 மாத சஹானா. ‘‘கேரளத்து செங்கல்சூளையில வெந்து முடிஞ்சிருக்க வேண்டிய நான் நாலு பேர் பார்வைபடுற அளவுக்கு வந்திருக்கேன்னா பாலாஜிசம்பத், சந்திரா, ரவிஷங்கர், மு.முருகேஷ் மாதிரி நிறைய நல்ல உள்ளங்களோட பின்புலம்தான் காரணம். நன்றி சொல்லி அவங்களைத் தனிமைப்படுத்த விரும்பல’’ என்று கண்கள் பனிக்கக் கூறி விடைகொடுக்கிறார் தாமோதரன்.
தன்னம்பிக்கைக்கு வேறு பெயர் வைக்கச் சொன்னால், தாராளமாக தாமோதரன் என்று வைக்கலாம்!


No comments:

Post a Comment