Sunday, January 20, 2013

வெற்றியின் மனமே

நெடுஞ்சாலையில் அதிக வேகமாக ஓட்டுற டிரைவர்களைப் பிடித்து தண்டனை கொடுக்க ஒரு  டிராபிக் போலீஸ் சாலையின் ஓரத்தில் இருந்தார். ஒரு டிரைவர் 40 கி.மீ. வேகத்தில் போய்க்கிட்டிருந்தான். “அடடே இவனென்ன இப்படிப் போறான்? இது ரொம்ப வேகமாகப் போறவனைவிட ஆபத்தாச்சேன்னு” ஜீப்பில் போய் டிரைவரைப் பிடித்தார். டிரைவருக்கு ஒரே குழப்பம். “சார் நான் சரியான வேகத்திலதானே காரை ஓட்டினேன். ஏன்  என்னை புடிச்சீங்கன்னு எனக்குப் புரியல” என்று கேட்டான்.

போலீஸ் சொன்னார். “நீ வேகமா போகல, குறிப்பிட்ட அளவு ஸ்பீடு போகாம மெல்லப் போனா மத்த டிரைவர்களுங்களுக்கு ஆபத்து, அதனால உனக்கு ஃபைன் போடறேன்” “சார் நானா மெல்ல ஓட்டுறேன். இங்க பாருங்க; மீட்டருல சரியா 40 கி.மீன்னு ரெக்கார்டு  ஆயிருக்கு. நான் போர்டுல போட்டுள்ளபடி 40 கிலோ மீட்டர் வேகத்துலதான் ஓட்டினேன்.”

உடனே போலீஸ் சொன்னார் “நாற்பதுன்னு போர்டுல போட்டிருக்கறது ஸ்பீடு இல்ல. சாலை நெம்பர்.” “ஐயய்யோ! அப்படியா சமாச்சாரம்? முன்னாடி ஒரு ரோட்டுல நூத்தி அறுபதுன்னு போட்டிருந்துச்சு. நானும் 160 கி.மீ வேகத்தி வந்துட்டேனே!” டிரைவர். “அப்படின்னா உனக்கு ரெண்டு பினால்டி போடணும்” -போலீஸ்.

இதிலிருந்து இரண்டு கருத்துக்களை அறியலாம். ஒன்று, கால – வேகம் பற்றியது. காலவேகம் என்பது எப்போதும் உள்ள ஒன்று. நாமும் அதற்கேற்ப வகமாகச் செய்படவேண்டும். இல்லையேல்  காலத்தின் வேகத்தினால் பாதிக்கப்படுவோம்.

இரண்டு வாழ்க்கையைத் திட்டமிடுதல் பற்றியது. மேன்மேலும் திட்டமிட்டுச் செயல்படுவது பற்றி பலரும் தவறான எண்ணங்களால் தடுமாறுகிறோம். அதற்குச் சில நடைமுறைகளைப் பார்ப்போம்.

“மனுசன்னா திருப்தி வேணும் லோ.. லோன்னு… அலையக்கூடாது.”
“எனக்கு பேராசையே இல்லை. இருப்பதே போதும்.”
“வாழ்க்கை பூரா போராடிப் பார்த்துட்டேன். இனிமே எதுவும் முடியாது.”
“எனக்கு பெருசா எதுவும் வேண்டாம். மூணு வேளையும் நிம்மதியா சாப்பிட்டா போதும்.”
“பெருசா சாதிக்கிறதுன்னு போய் சிக்கல்ல மாட்டிக்க விரும்பல.”
“நிரந்தரமான வேலை இருக்குது. போதுமான வருமானம் இருக்குது. எதுக்கு மேலும் கஷ்டப்படணும்.”
“என்னதான் கஷ்டப்பட்டாலும் ஒட்டறுதானே ஒட்டும்”

இப்படி, பலரும் பேசுவதைக்கேட்கிறோம். இவையெல்லாம் அடிப்படையில் அவரவருக்குள்ள  இயலாமை, ஏமாற்றம் சோம்பேறித்தனம், அறியாமை, சவால்களை எதிர்கொள்ள இயலாமை, பய உணர்வு,  உயர் லட்சியம் இல்லாமை போன்றவைகளின் வெளிப்பாடுகள்தான்.

மேலும் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

இரண்டு பேர் காட்டில் போய்க்கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு புலி  அவர்களை நோக்கிப்  பாய்ந்து வந்தது. இதைப்பார்த்த இரண்டு பேருமே பயந்தனர். இருவரும் தப்பி ஓடினர்.  புத்திசாலி ஒருவன் செருப்பை கழட்டிவிட்டு ஓடினான். மற்றவன் கேட்டான், “செருப்பை கழட்டிவிட்டு இன்னும் வேகமாக ஓடினால் மட்டும்  புலியைவிட வேகமாக ஓட முடியுமா?” அதற்கு அவன் சொன்னான் “புலியை விட வேகமாக ஓடனுன்னு  எனக்கு அவசியமில்ல. ஆனா உன்னவிட வேகமாக ஓடனாவே நான் தப்பிசிறுவேன்.” இதுதான் வாழ்க்கையின் சவால், வாழ்க்கையே ஒரு ஓட்டப்பந்தயம்தான். பந்தயத்தில் ஓடாமல்  யோசித்துக் கொண்டிருந்தால் பலபேர் முன்னால் ஓடிவிடுவார்கள். நாம் ஒதுக்கப்படுவோம். ஒரு கப்பல் பயணத்தை  எடுத்துக்கொண்டால், அந்தக் கப்பலை ஓட்டும்போது புயலில் எவ்வளவு  போராடினாய் என்பதைவிட, அதைச் சரியாக கரையை சேர்த்தாயா? எபது தான் முக்கியம்.அதைப்போல, வாழ்க்கைப் பயணத்தில் இறுதிவரைக்கும் சரியான பயணம்தான் நமக்குத் தேவை. இந்த இடத்தில் திருப்தி, முன்னேற்றம் பற்றிய தெளிவு நமக்குத்தேவை.

திருப்திக்கு ஒரு பழமொழி சொல்வார்கள்.

“எனக்கு காலுக்கு செருப்பில்லையே என்ற அதிருப்தி, காலே இல்லாதவனைப் பார்த்தபோது  மறைந்துவிட்டது.” காலே இல்லாதவனைப் பார்த்து நம்மை சமாதானப்படுத்திக்கொள்வது திருப்தியின் முக்கிய  அம்சம். ஆனால், அதற்கு அடுத்த கட்டம், இருக்கின்ற காலின் முள் குத்தாமலிருக்க செருப்பைத் தேட வேண்டும். அல்லது அந்த முயற்சி பலிக்காத போது முள்குத்தாமல்  நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

நான் சொல்ல வந்தது இதுதான். “காலில்லாதவனை பார்த்து சமாதானமடைவது திருப்தி. அடுத்தாக காலுகுச்செருப்பைத் தேடுவது முன்னேற்றம்.” நமக்கு வாழ்கையில் திருப்தியும் வேண்டும் முன்னேற்றமும் வேண்டும்.

ஒரு சிந்தனையாளன் சொன்னார் “ஆசை- பேராசை எல்லாம் மயக்கமான வார்த்தைகள். உணர்வுகள்  என்பதுதான் உண்மை.” நமது அவசியத் தேவைகளை நமது உணர்வுகள் தான் பிரதிபலிக்கும். மது  தேவைகளின் மீதும் நியாயமாக லட்சியத்தின் மீதும் ஈடுபாட்டுடன் இருப்பது தவறே அல்ல. 

அதைப் பேராசை என்று முத்திரை குத்துவது நம் நியாயாமான உணர்வுகளை அழுத்துவதாகும். இது போன்ற நியாயமான உணர்வுகளை பேராசை என்று முத்திரையிட்டு அழுத்தினால் அங்கே டென்ஷன் உருவாகிவிடும்.

பல சாதைனகளைப் படைத்த ஒரு மனிதரிடம் “உங்கள் சாதனைகளிலேயே மிகச்சிறந்த சாதனை எது?” எனக்கேட்டார்கள்.

“இனிமேல் சாதிக்க போவதுதான்” என்று பதில் வந்தது அவரிடமிருந்து. இப்படிச் சொல்வதால் அவருக்கு திருப்தியில்லை என்று அர்த்தமல்ல. மேலும்  முன்னேறுவதுதான் அவருடைய திருப்தி என்பதே பொருள். இந்த இடத்தில் சிலருடைய அங்கலாய்ப்புக்களைப் பாருங்கள். “ஆனால் அந்த காலத்திலேயே  எஸ்.எஸ். எல். ஸி.யில் ஸ்டேட் ரேங்க் வாங்கினவன்.”

“நான் அந்தக் காலத்துல தினமும் இருபது மணி நேரம் உழைச்சேன்.”
“நான் தொழில் செய்தபோது லட்சலட்சமா பார்த்தவன்”
“என்னோட திறமைக்கு, அப்பவே தங்கப்பதக்கம் வாங்கினேன்.”
“எங்க குடும்பம், பரம்பரை பரம்பரையா ஊருக்கே தானம் செஞ்சவங்க.”

இதெல்லாம் சரிதான். இப்ப உங்க தகுதி என்ன? இது தான நம்முள் உள்ள முக்கிய கேள்வி. அதற்குச் சரியான பதில் என்னவென்றால் ஒரு வெற்றியைப் பெற்றதும் வாழ்க்கை நிறைவு பெற்றதாகிவிடாது. மேன் மேலும் வெற்றிபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான உயிரோட்டமான வாழ்க்கையாக இருக்கும். நகர்ந்து கொண்டே இருந்தால்தான நதிக்கு அழகு.

முன்னேறிக்கொண்டே இருந்தால்தான் மனித வாழ்க்கைக்கு அழகு. வெற்றி என்பது முடிவல்ல; அது ஒரு தொடர் பயணம்.

No comments:

Post a Comment