Sunday, January 20, 2013

எதிரிகளைக் காதலிக்கிறேன்!

நான் இரண்டாவதோ , மூன்றாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கும் பென்சில் தகராறு. வெறும் அரைவிரல் நீளம் உள்ள பென்சிலை வைத்துக் கொண்டிருந்த நான் , அவனிடம் உள்ள புதிய பென்சிலைக் கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் அடாவடியாகக் கேட்டிருப்பேன் என நினைக்கிறேன். அவன் தரவில்லை. பிடுங்க முற்பட்டேன். எப்படி எனத் தெரியவில்லை , கவனம் சிதறிய ஒரு கணப்பொழுதில் அவனது பென்சிலின் கூர் முனை என் தொடையில் வந்திறங்கியது. பதிலுக்கு நானும் குத்தியதாக ஞாபகம். இன்றும் என் வலது தொடையில் இதன் லேசான அடையாளத்தைக் காணலாம்.

‘அழுதேன் , புரண்டேன்.. ஐயோ எனக் கதறினேன்’ என்ற விவரிப்புகளெல்லாம்
தேவையற்றது! ஆனால் அந்தச் சம்பவத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டது
ஏராளம்.

அந்த நண்பனிடம் நான் ‘டேய்... கொஞ்சம் பென்சில் குடுடா.. எழுதீட்டுத் தர்றேன்’ என்று கேட்டு அந்தப் பென்சில் ஆசையைத் தணித்துக் கொண்டிருக்கலாம். அதைச் செய்யாமல் அவனிடமிருந்து பிடுங்க முற்பட்டிருக்கக் கூடாது.

கேட்டதுகூட அன்பாகக் கேட்டிருக்கலாம். ஆணையிடும்படிக் கேட்டிருக்கக் கூடாது. ஆனால்.. அந்த வயசில் அது எங்கே புரிகிறது நமக்கு?

எந்தப் பென்சிலில் எழுதப்பட்டாலும், எழுத்தில் உள்ள தரத்திற்குத்தான் மதிப்பெண்களே தவிர... எழுதுபொருளுக்கா மதிப்பெண்கள்? ‘அவன் அரைப் பென்சிலில் எழுதினான்.. இவன் முழுப்பென்சிலில் எழுதினான்’ என்பதா அங்கே எடுத்துக் கொள்ளப்படும்? இல்லையே...

அன்றிலிருந்து பல நாட்களுக்கு, ஏன்.. பல வருடங்களுக்கு அவன் என்னிடம் சரியாகப் பேசவில்லை. ‘ச்சே.. ஒரு சின்னப் பென்சில் ஆசையால் ஒரு நல்ல நட்பை இழந்தோமே’ என்று நான் என்னையே கேவலமாக நினைத்துக் கொள்வதுண்டு.

அதனால்தான் முடிந்தவரை.. எதற்காகவும் நட்பை இழக்க மிகவும் பயப்படுகிறேன்.

அந்த நண்பன் என்னை விட வசதியானவன். தினமும் முழு பென்சில் கொண்டுவர அவனால் முடியும். என்னால் முடியாது என்ற இயலாமைதான் அன்று என்னைக் கோவப்படத் தூண்டியது. ‘முடியாது’ என்ற உண்மையை விடவும்.. ‘தேவையில்லை’ என்ற உண்மையை நான் உணர்ந்திருந்தால் அந்தக் கணத்தை நான் சுலபமாகக் கடந்திருக்கக் கூடும்.

இன்றைக்கும் பலரோடு எனக்கு சங்கடங்கள் , கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. அந்த ஒரு சம்பவம் எனக்குத் தந்த பாடத்தால்... பேசாமலே போய்விடுவேன். தவறு என்மீதாயினும் , என் மீது இல்லாவிட்டாலும்.

நானொன்றும் கடவுள் அல்லவே.. மனிதனாக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். இடையிடையே மிருகங்களுக்கு , மிருக பாஷையில் பேச முற்படும்போதெல்லாம் ‘டேய்.. நீ மனுஷண்டா... மறந்துடாத’ என்று என்னை வழிகாட்டும் நண்பர்கள் இருப்பதால் தப்பிக்கிறேன்!

நமது வாழ்வின் முரண் என்னவென்றால்... நாம் குறைவாகச் சம்பாதிக்கிறோம்.. நிறைய செலவழிக்கிறோம். பெரிய வீட்டில் வசிக்கிறோம். சின்ன குடும்பம்தான் இருக்கிறது. நிறைய வசதிகள் இருந்தாலும் , குறைவான நேரமே இருக்கிறது.  நிறைய படித்திருக்கிறோம்.. ஆனால் அறிவைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். நிறைய அறிவிருக்கிறது.. ஆனால் தவறான முடிவை எடுக்கிறோம். நிறைய வழிகாட்டும் நண்பர்களைப் பெற்றிருக்கிறோம்.. ஆனால் அதைவிட அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். நிறைய மருந்துகள்.. அதைவிட அதிகமான உடல்நலக்குறைவுகள்.. நிறைய குடிக்கிறோம் , நிறைய புகைபிடிக்கிறோம், நிறைய வேலை செய்கிறோம் , வேகமாக வாகனம் செலுத்துகிறோம். குறைவாக சிரிக்கிறோம் , தாமதமாக உறங்கச் செல்கிறோம்.. தாமதமாக எழுகிறோம். நிறைய உணவுகள்.. செரிமானம்தான் ஆவதில்லை!

நிறைய எழுதுகிறோம். குறைவாகக் கற்றுக் கொள்கிறோம். ஒருத்தர் மீது அன்பைச் செலுத்த அதிக நேரம் யோசிக்கிறோம். ஆனால் வெறுக்க..? ஒரு கணத்தில் வெறுக்கிறோம். மிகப் பெரிய மனிதர்கள்.. மிகச் சின்ன புத்திகள். முடிவு? அன்பைச் செலுத்துவதுதான். அன்பு ஒரு வட்டத்துக்குள் அடங்காதது. இவர் மீதுதான் அன்பு செலுத்த முடியும். இவர்மீதுதான் அன்பு செலுத்த முடியாது என்ற எந்த வரைமுறையும் அன்புக்குக் கிடையாது.

‘நீ என்னைப் பத்தி நல்லது சொன்னாத்தான் உன்னை எனக்குப் பிடிக்கும்’ என்பது அன்பல்லவே. ஆகவேதான் நான் எதிரிகளையும் காதலிக்கிறேன்!

எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை. கொஞ்சம் கர்வதோடு சொல்வதானால் எனக்கு எதிரியாகும் தகுதி இன்னும் எவருக்கும் இல்லை.. காரணம் என் அன்பைச் சோதித்து அதை அழிக்க எவனாலும் முடியாதென்பதால்! என் மீது கோபமெனும் , இயலாமை எனும் சேற்றை எவரும் வீசி , அதனால் நான் தூண்டப்பட்டு முட்டாள்தனமாய் அப்படி வீசியவரை எதிரியாக நினைப்பேனாயின்.. எனக்குள் இருந்த அன்பை நான்அழித்துவிட்டேன் என்றுதான் அர்த்தம். அப்போது எனக்கு எதிரி நான்தானேயன்றி வேறெவருமல்ல.

"யார் உன்னிடம் கோபத்தை ஏற்படுத்துகிறார்களோ அவர்களிடம் நீ தோற்றுப்போகிறாய். யாரிடமும் தோற்க நீ விரும்புகிறாயா?"

No comments:

Post a Comment