Saturday, January 19, 2013

உண்மையான தலைவன்

அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் போரில் காயமடைந்து சிகிச்சை பெறும் சிப்பாய்களைக் காண அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்வார். மருத்துவர்களிடம் அவர்களுடைய உடல்நல முன்னேற்றத்தைக் கேட்டு அறிந்து கொள்வார்.

அப்படி ஒரு முறை ஒரு மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் பேசிய போது ஒரு மருத்துவர் ஒரு சிப்பாய் மரணத் தறுவாயில் இருப்பதாகச் சொன்னார். உடனே ஆப்ரகாம் லிங்கன் அந்த சிப்பாயின் அருகில் சென்று அமர்ந்தார். உற்றார் உறவினர் யாரும் அருகில் இல்லாமல் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த சிப்பாயிடம் ஆப்ரகாம் லிங்கன் “உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்டார்.

அந்த சிப்பாயிற்கு ஜனாதிபதியை அடையாளம் தெரியவில்லை. ”என் தாயிற்கு ஒரு கடிதம் எழுத முடியுமா?” என்று கேட்டான்.

சம்மதித்த ஆப்ரகாம் அவன் சொல்லச் சொல்லக் கடிதம் எழுதினார். எழுதி முடித்த பின்னர் “தங்கள் மகனுக்காகக் கடிதம் எழுதியது ஆப்ரகாம் லிங்கன்” என்று கடைசியில் எழுதியதைப் பார்த்த பிறகு தான் அந்த சிப்பாயிற்குத் தனக்காகக் கடிதம் எழுதியது ஆப்ரகாம் லிங்கன் என்பது தெரிந்தது.

வியப்புடன் அந்த சிப்பாய் கேட்டான். “நீங்கள் ஜனாதிபதி தானே?”

“ஆம்” என்று அன்புடன் சொன்ன ஆப்ரகாம் லிங்கன் “தங்களுக்கு வேறெதாவது நான் செய்யக்கூடியது இருந்தால் சொல்லுங்கள்” என்றார்.

அந்த சிப்பாயின் மனநிலையை சொல்ல வேண்டியதேயில்லை. உற்றார் உறவினர் என்று யாரும் அருகில் இல்லாத போது அன்பைக் காட்டி அருகில் அமர்ந்திருப்பது ஜனாதிபதி என்கிற போது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

கடைசி மூச்சின் நேரம் வந்து விட்டதை உணர்ந்து கொண்ட அந்த சிப்பாய் அவரிடம் வேண்டிக் கொண்டான். “தாங்கள் என் கைகளைப் பிடித்துக் கொண்டால் அது என் வாழ்வின் முடிவைப் பெருமையுடன் சந்திக்க உதவியாக இருக்கும்”

ஆப்ரகாம் லிங்கன் அவன் கையைப் பிடித்துக் கொண்டதும் அல்லாமல் அவனிடம் அன்பான இதமான வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்க அந்த சிப்பாயின் உயிர் அமைதியாகப் பிரிந்தது.

நாட்டிற்காக உயிரையே தியாகம் செய்த ஒரு போர் வீரனுக்கு அந்தத் தலைவர் காட்டிய அன்பையும் மரியாதையையும் பாருங்கள்.

உயர் பதவி கிடைத்து விட்டால் தங்களை ஏதோ தனிப் பெருமை வாய்ந்தவர்களாக நினைத்துக் கொள்ளும் தலைவர்கள் இருக்கும் காலக்கட்டத்தில் இது போன்ற உயர்ந்த உள்ளம் படைத்தவர்களும் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே நமக்கு வியப்பாக இருக்கிறதல்லவா?


அரசியலிற்கப்பாற்பட்ட இன்னொரு தலைவரைப் பார்ப்போம். இந்தியாவின் Atomic Energy and Space Commission தலைவராக இருந்த பேராசிரியர் சதீஷ் தவான் 1973ல் டாக்டர் அப்துல்கலாம் அவர்களுக்கு முதல் விண்கலம் அமைக்கும் பணியைத் தந்தார். அப்துல் கலாம் தலைமையில் ஆயிரக்கணக்கான பொறியியல் வல்லுனர்கள், சுமார் பத்தாயிரம் ஊழியர்கள், வேலையாட்கள் அந்த விண்கலத்திற்காக கடுமையாக உழைத்தனர். ஆகஸ்ட் 17, 1979 அன்று விண்கலம் விண்ணிற்கு ஏவப்பட்டது. ஆயிரக்கணக்கான பாகங்கள், கம்ப்யூட்டர் ப்ரோகிராம்கள் கொண்ட அந்த விண்கலம் கிளம்பிய ஒருசில நிமிடங்களில் பழுதடைந்து வங்காள விரிகுடாவில் விழுந்தது.

அன்று சதீஷ் தவான் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அந்தத் தோல்விக்கு Atomic Energy and Space Commission தலைவர் என்ற நிலையில் தானே பொறுப்பேற்றுக் கொண்டார். மிக அருமையான திட்டம் அது என்றும் சில எதிர்பாராத சிறு குறைபாடுகளால் தோல்வியடைந்தது என்றும் அவை சரி செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குள் மீண்டும் வெற்றிகரமாக செலுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். அப்துல் கலாம் அவர்கள் தான் அந்த விண்கலப்பணிக்கு இயக்குனர், எல்லா வேலைகளும் அவர் மேற்பார்வையில் தான் நடந்தது என்ற போதிலும் சதீஷ் தவான் தோல்வியை ஏற்றுக் கொண்டார்.

மறுபடியும் விண்கலம் பழுதுகள் நீக்கப்பட்டு வெற்றிகரமாக ஜுலை 18, 1980ல் விண்ணில் ஏவப்பட்டது. வெற்றியை அறிவிக்க பேராசிரியர் சதீஷ் தவான் டாக்டர் அப்துல் கலாமையே சென்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கச் சொன்னார். தோல்விக்குத் தான் பொறுப்பேற்று வெற்றிக்கான பேரையும் புகழையும் அதற்கென உழைத்தவருக்கே விட்டுக் கொடுத்த பெருந்தன்ன்மையைப் பாருங்கள். இவரல்லவோ உண்மையான தலைவர். இந்தச் செய்தியை அப்துல் கலாம் அவர்களே பல மேடைகளில் சொல்லித் தன் தலைவருக்கு உரிய புகழைச் சேர்த்திருக்கிறார்.

உண்மையான தலைவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருப்பார் என்ற அடையாளமே மறந்து போய் விட்ட காலக்கட்டத்தில் இருக்கிறோம் நாம். காமிராக்களுக்கு முன் மட்டுமே காட்டும் மனித நேயம், மேடைகளில் மட்டுமே காட்டும் வீரம், தன் புகழையும், சொத்தையும் வளர்க்க எதையும் யாரையும் செய்யும் தியாகம் என்ற பண்புகளுடன் இன்று புற்றீசலாகப் பெருகி வரும் தலைவர்கள் எல்லாம் உண்மையான தலைவர்கள் அல்ல. உண்மையான தலைவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதற்கு ஆப்ரகாம் லிங்கனும், சதீஷ் தவானும் மனதைத் தொடும் சிறந்த உதாரணங்கள்.

No comments:

Post a Comment