“கோபத்துக்குக் கொள்ளி வைப்போம் ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !”
‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ.
ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.
‘எனக்குக் கோபமே வராதுங்க’ என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதிசயப்பிறவியாய் இருக்க வேண்டும்.
கோபம் தும்மலைப் போன்றது. சாதி மத நிற பேதமில்லாமல் எல்லோருக்குமே வரும். சிலரிடம் ‘நீங்க அடிக்கடி கோபப்படுவீங்களாமே?’ என்று கேட்டால் கூட ‘எவண்டா அப்படிச் சொன்னது?’ என கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள்.
இதில் சமர்த்துக் கோபம் ஒன்று உண்டு. ‘வரையறுக்கப்பட்ட, கட்டுக்குள் இருக்கக் கூடிய, நிலை தடுமாற வைக்காத’ கோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல் இல்லாமல் வளர்கிறது எனில் உங்களுக்குக் கோபம் எழும். அந்த கோபம் கத்தலாகவோ, சண்டையாகவோ இல்லாமல் வரையறுக்கப்பட்ட நிலையில் வெளிப்படும்போது வழிகாட்டும் அறிவுரையாய் மாறி விடுகிறது.
‘மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா. இன்னிக்கு வேலையை முடிக்கலேன்னா சிக்கல் பெரிசாயிடும்’ என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள்.
ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பேசும் கோபம் எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை.
கோபத்தை ஒரு மிகப்பெரிய கோடு கிழித்து இரண்டு பாகமாக பிரிக்கிறார்கள். ஒன்று வெளிப்படையான கோபம். `நீ… எப்படிய்யா என் மனைவியைப் பற்றி தப்பாப் பேசலாம்’ என நரம்புகள் புடைக்கக் கத்தும் கோபம். இதை `எக்ஸ்ப்ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.
இரண்டாவது உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம். இதே பிரச்சினையில் எதிராளி உயர் அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ இருக்கும்போது கோபத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கி விடுகிறோம். அது ஒரு கண்ணி வெடிபோல உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். இதை `இம்ப்ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.
எந்த வகைக் கோபமாக இருந்தாலும் அது நமது உடலையும் மனதையும் ஒரு கை பார்க்காமல் விடாது என்பது தான் உண்மை. சண்டை, அடிதடி, பிரிவுகள், தோல்வி, உடல் பலவீனம் எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இந்த கோபமே பதுங்கிக் கிடக்கிறது.
மாரடைப்பு, மன அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, உயர் ரத்த அழுத்தம், தோல் வியாதிகள், வலிப்பு என பல நோய்களுக்கும் கோபமே அடிப்படையாய் இருப்பதாய் மருத்துவம் நீட்டும் பட்டியல் எச்சரிக்கிறது.
அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இன்னும் ஒரு படி மேலே போய், நோய்கள், காயங்கள் போன்றவை குணம் அடையாமல் இருப்பதன் காரணமும் கோபமே என்கிறது.
கோபத்தின் கொடுமையான விளைவுகளைச் சிறைக் கைதிகளின் கதைகள் துயரத்துடன் பேசுகின்றன. ஏதோ ஒரு ஆவேசத்தில் தன்னிலை மறந்து யாரையோ தாக்கிவிட்டோ, கொன்று விட்டோ, பழி தீர்ப்பதாய் நினைத்துக் கொண்டோ பலரும் சிறைச்சாலைக்கு வந்து விடுகிறார்கள். பின் தங்களுடைய கோபத்தின் மீதே கோபம் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கண்ணீரின் கரைகளில் வாழ்ந்து முடிக்கிறார்கள்.
இருபத்து ஆறு ஆண்டுகள் சிறையில் வாடிவிட்டு வெளியே வந்தபோது நெல்சன் மண்டேலாவுக்கு சிறை அதிகாரிகளின் மீது கடுமையான கோபம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அதை அழித்து விட்டு, `சிறையின் கோபங்கள் சிறையுடனே போகட்டும்’ என வெளிச்சத்தை நோக்கி நடை போட்டாராம். இதை அவருடைய சிறை அனுபவக் குறிப்புகள் பேசுகின்றன.
உறவுகளுக்கு இடையே வரும் பிளவுகளும் கோபத்தின் குழந்தைகளே. `கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்’ என்றோ, ‘கொஞ்சம் நிதானமாய் நடந்திருக்க வேண்டும்’ என்றோதான் விவாகரத்துகளின் சோகக் கதைகள் புலம்பித் திரிகின்றன.
கத்துவது, அவமானப்படுத்துவது, அடுத்தவரை குற்றவாளியாக்குவது, பழி சுமத்துவது, நான் சொல்வதே சரியென பிடிவாதம் செய்வது, நீ எப்பவுமே இப்படித்தான் என பாய்வது…. என மண முறிவுக்கான காரணங்கள் எக்கச்சக்கம்.
அலுவலகத்தில் வெற்றியைத் தட்டிப் பறிப்பதும், புரமோஷனைக் கெடுப்பதும் பல வேளைகளில் இந்த பாழாய்ப் போன கோபமேதான். `கொஞ்சம் கோபப்படாம இருந்திருக்கலாம்…’, `மெயில் அனுப்பித் தொலச்சுட்டேன்…’ என்பது போன்ற உரையாடல்கள் அலுவலக வராண்டாக்களில் உலவித் திரிவதை அடிக்கடிக் கேட்க முடியும்.
மொத்தத்தில் கோபம் எனும் ஒரு கொலைக் கருவி வெட்டிப் புதைத்த வாழ்க்கையின் கணக்குகள் எண்ணிலடங்காதவை.
கோபமும், மன்னிப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. நான் செய்வதும் சொல்வதும் சரியானவை, மற்றவர்கள் செய்வது தவறு எனும் புள்ளியிலிருந்தே பெரும்பாலான கோபங்கள் புறப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் சுயநலமே கோபத்தின் அடிப்படை. மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொண்டால் கோபத்தின் தளிர்கள் காய்ந்து விடும். இதையே எல்லா மதங்களும், மகான்களும் போதித்துச் செல்கின்றனர்.
‘அவரு ‘வள் வள்’ன்னு எரிஞ்சு விழறார். காலைல வீட்ல சண்டை போட்டுட்டு வந்திருப்பார் போல…’ என்பது சர்வ சாதாரணமான ஒரு பேச்சு. இது கோபத்தின் மிக முக்கியமான ஒரு பண்பை வெளிப்படுத்துகிறது. கோபம் என்பது எங்கோ ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே முடிந்து விடுவதில்லை. அடுத்தடுத்த இடங் களில் அது தொடர்ந்து, அந்த கோபம் மறையும் வரை நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பு நேர்ந்து விடுகிறது என்பதே அது!
நான் ஒரு கோபக்காரன் என்பதைப் புரிந்து கொள்வது தான் கோபத்தை வெற்றி கொள்வதன் முதல் படி. எனக்கு நோயே இல்லை என்பவர்கள் குணமடைவதில்லை. கோபம் இருப்பதைப் புரிந்து கொண்டால், `இந்தக் கோபத்துக்குக் காரணம் நான் மட்டுமே. நான் நினைத்தால் இந்தக் கோபத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும்’ எனும் எண்ணத்தையும் மனதில் எழுதிக் கொள்ளுங்கள்.
கோபத்தைக் கட்டுப்படுத்த…
கோபத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை பலரும் பரிந்துரை செய்கின்றனர். வல்லுநர்களின் ஒருமித்த பார்வையின் அடிப்படையில் கிடைக்கும் சில பரிந்துரைகள் இவை…
1. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளப் பழகுங்கள். எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட்டத்தின்படியும் நடக்கப் போவதில்லை. வாழ்க்கையின் இந்த உண்மை நிலையைப் புரிந்து கொள்வது தேவையற்ற கோபங்கள் எழுவதைத் தவிர்க்கும்.
2. கோபத்தை அன்பினால் நிரப்பப் பழகுங்கள். ‘இன்னா செய்தாரை ஒறுத்தலும், நன்னயம் செய்தலும்’ உறவுகளுக்கிடையே நீண்டகால பந்தத்தை உருவாக்கும். `அடுத்தவர்கள் என்ன செய்யவில்லை’ எனும் பார்வையிலிருந்து, `நான் என்ன செய்தேன்’ என பார்வையை மாற்றுவதே இதன் அடிப்படை.
3. கோபத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரியாதீர்கள். கோபம் உடனுக்குடன் கரைவதே நல்லது. அப்படியே நீடித்தாலும் ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். இந்த நாள் புத்தம் புதுசு என்றே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள்.
4. கோபம் வந்தவுடன் அதை உணர்ந்து கொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, பார்வையை வேறு இடத்துக்கு மாற்றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கனவில் மூழ்குவது, நூறிலிருந்து ஒன்று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்கள். கோபம் தற்காலிகமாய் தள்ளி நிற்கும்.
5. பாசிடிவ் மனநிலையுள்ள மனிதர்களுடன் உங்களின் சகவாசத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.
6. நமக்குப் பிடிக்காதவர்களைப் பற்றிய சிந்தனைகளைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் இவற்றைப் பற்றியும் அடிக்கடி அசை போடுங்கள்.
7. சிரிக்கப் பழகுங்கள். நகைச்சுவை நூல்களை வாசியுங்கள். மற்றவர்களோடு சிரித்து மகிழ்ந்து இருப்பவர்களுடைய உடலில் கோபத்தைக் கிளறும் வேதியியல் பொருட்கள் அதிகமாய் சுரக்காது என்பது மருத்துவ உண்மை.
8. இப்போது கோபத்தைத் தூண்டிய இந்தச் செயல் சில ஆண்டுகள் கழித்தும் கோபம் கொள்ளச் செய்யுமா என யோசியுங்கள். டிராபிக்கில் கத்துவதும், வரிசையில் ஒருவர் புகுந்தால் எரிச்சலடைவதும் தேவையற்றவை என்பது புரியும்.
9. இந்தச் செயல் உங்கள் மீது திட்டமிட்டே செய்யப்பட்டதா? அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? இதே தவறை நீங்கள் செய்தால் உங்கள் மீதே கோபம் கொள்வீர்களா என யோசியுங்கள். பெரும்பாலான கோபங்கள் காணாமல் போய்விடும்.
10. மனதார மன்னியுங்கள். இந்த ஒரே ஒரு பண்பு உங்களிடம் இருந்தால் கோபத்தை மிக எளிதாக வெல்லவும் முடியும், வெற்றியை ஆனந்தமாய் மெல்லவும் முடியும்பிளாஸ்டிக் எமன் விழிப்புணர்வு தகவல் !!!
No comments:
Post a Comment