Tuesday, October 1, 2013

மனித வாழ்க்கை சுமையில்லாமல் இருக்க…

பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் இரு பக்கங்கள். இதனிடையே எத்தனையோ மாற்றங்கள் தோன்றுகின்றன. பிறந்தோம், வளர்ந்தோம், உழைத்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இந்த மனித வாழ்க்கை ஒரு சக்கரம் போல சுழலுகிறது. ஒரே பாதையில் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரம் திடீரென்று மாற்றங்களைச் சந்திக்க நேரிடும் போது தடுமாறுகிறது. இந்த தடுமாற்றத்தை நீக்கி மனப் பக்குவத்தோடு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு திறமையாக வாழ்க்கைச் சக்கரத்தை தடம் புரளாமல் ஓட்டும் மனிதன், வாழ்க்கையைச் செம்மையாகப் புரிந்து கொண்டு வாழ்கிறான் என்று சொல்லலாம்.

வாழ்க்கையைக் காலத்தோடு ஒப்பிடும் போது வாழ்க்கை அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றவில்லை. எத்தனையோ காலங்கள் ஓடி விட்டன. இன்னும் எத்தனையோ காலங்கள் ஓட வேண்டும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையேயுள்ள காலத்தில் இந்த மனிதனின் வாழ்க்கை எத்தனை வகையில் மாறுபடுகின்றன. மனிதன் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெறுகிறான். இந்த அனுபவம் அவனுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பாடமாக அமைந்து விடுகிறது.

இந்த இரண்டு காலச் சக்கரங்களுக்கிடையே மனிதன் அகம்பாவம், கோபம், கெட்ட அதிர்வலைகள் போன்ற குணங்களுக்கு அடிமையாகிறான். அகம்பாவம் மனிதனின் சுயரூபத்தை அழித்து அவனை தனிமையாக்குகிறது. “தான்” என்ற எண்ணம் கொண்ட மனிதன் என்றும் வாழ்ந்ததில்லை என்ற பாடலின் வரிகள் இன்றும் நினைவுக்கு வருகின்றன. அகம்பாவத்தால் மனிதன் மகிழ்ச்சியைத் தொலைக்கிறான். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களில் இனியதாகவும் இருக்கிறது. கெட்டதாகவும் நடக்கிறது. இரண்டையும் மனிதன் ஒன்றாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையை சாதாரணமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மட்டும் நிகழ்ந்து கொண்டிருந்தால் வாழ்க்கை அவ்வளவு சுவையாகத் தோன்றாது. அவ்வப்போது பிரச்சனைகளும் தோன்றினால்தான் வாழ்க்கையில் அதனை சமாளிக்கும் தன்மையும் மனிதனுக்குள்ளே பிறக்கும்.

நேற்று என்ன நடந்தது? என்கிற கடந்த கால நினைவுகளிலும், நாளை என்ன நடக்கும்? என்கிற எதிர்ப்பார்ப்புகளிலும் மனிதன் பெரும்பான்மையான நேரங்களை வீணாகக் கற்பனையிலேயே செலவிட்டு நிகழ்கால வாழ்க்கையை மறந்து விடுகிறான். கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனை நம்மைச் செயல்பட விடாமல் முடக்கிப் போட்டு விடுகிறது. வருங்கால வாழ்க்கையை பற்றிய அதிகமான சிந்தனை மனிதனின் வாழ்க்கையை ஒரு போராட்டமாக்கி விடுகிறது. நிகழ்கால வாழ்க்கையின் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தொலைத்து, இந்த வாழ்க்கையை ஒரு சுமையாகவே சுமக்கத் துவங்கி விடுகிறான்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியை சொல்லிக் கேட்டிருப்போம். மனிதனின் மனம் தெளிவாகயிருந்தால், அதனுடைய மகிழ்வுகள் முகத்தில் தோன்றும். மனம் நொந்து போயிருந்தால், முகம் வாடி வதங்கித் தோன்றும். ஒரு மனிதனின் மகிழ்ச்சி அவனைச் சார்ந்திருப்பவர்களையும் மகிழ்ச்சி அளிப்பதுடன் அவர்களுக்கு தன்னம்பிக்கையும், தெம்பையும் கொடுக்கிறது. இது தெரியாமல் மனிதன் சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் கொண்டு முகத்தைச் சுருக்கி மனதை கனமாக்கி தனிமையைத் தேடுகிறான். உடனிருப்பவர்களையும் கவலைக் கடலில் ஆழ்த்தி விடுகிறான். மனிதனின் மனம் வாழ்க்கைப் போராட்டத்தால் உளைச்சல் அடைந்தால் அமைதியைத் தேடி அலைகிறது. இந்த அமதியைத் தியானம் தருகிறது. இது உடல் நலம், அமைதி, அச்சமின்மை, போன்றவற்றை அளிக்கிறது.

ஊக்கமில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை இல்லை. வாழ்க்கையின் மீது மனிதன் நாட்டம் கொண்டு வாழ்க்கையின் ஒவ்வொரு பொழுதையும் மகிழ்ச்சியாகக் கழிப்பவன் தன்னுடன் சுற்றுச் சூழலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறான். மற்றவரின் செயலை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவரின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இந்தச் சின்ன மாற்றம் மற்றவர்களின் அன்பையும், பாசத்தையும் அவனுக்குப் பெற்றுக் கொடுக்கிறது.

மனிதன் முதலில் தேவையற்ற நிகழ்வுகள் வீண் வம்பை வளர்க்கும் நிகழ்வுகள் போன்றவற்றைத் தவிர்க்கப் பழக வேண்டும். நம்மை விட அதிகமான கருத்துகள் தெரிந்தவராயிருந்தால், அவர் தம்மை விட எளிமையானவராகவோ அல்லது வயது குறைவானவராகவோ இருந்தாலும் கூட அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள முன் வர வேண்டும். இது போல் நமக்குத் தெரிந்த கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும்.

காலத்தோடு தோன்றும் மாற்றங்களை மனிதன் மனப்பக்குவத்தோடு, மனம் திறந்து ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும். ஒரே மாதிரியான வாழ்க்கையினால் மனிதன் அவ்வப்போது சலிப்படைகிறான். இதனால் அவ்வப்போது மனிதன் அதற்கேற்ற மாற்றங்களை உருவாக்கிக் கொள்வதுடன் வாழ்க்கையில் வரும் எந்த மாற்றங்களையும் வரவேற்கப் பழகிக் கொள்ள வேண்டும். மாற்றம்தான் ஏமாற்றத்தைத் தவிர்க்கும். இந்த மனித வாழ்க்கையும் சுமையில்லாமல் சுகமாய்த் தோன்றும்

No comments:

Post a Comment