இறைவன் கொடுத்த வாழ்க்கையில் இனிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன அது போன்று கசப்பான சம்பவங்களும் நிகழ்கின்றன. கசப்பும் இனிப்பும் கலந்த வாழ்க்கையை மனிதன் அனுபவிக்கிறான். மனிதன் இதிலிருந்து தப்பிக்க இயலாது. கடவுள் மனிதனை படைக்கிறான். இவற்றில் ஒரு சிலரை ஏழையாகவும், வேறு சிலரை பணக்காரனாகவும், ஒரு சிலரை அழகாகவும், மற்றவரை குரூரமாகவும் என்று பல கோணங்களில் படைக்கிறான். இந்த வாழ்க்கை மனிதனின் வேண்டுகோளின்படி அமையவில்லை. முற்பிறவியில் செய்த கர்மாவின் படி மனிதனுக்கு வாழ்க்கை அமைகிறது.
வாழ்க்கை என்பது போராட்டம். மனிதனும் வாழ்க்கையில் சளைக்காமல் போராடுகின்றான். கடைசி மூச்சு வரை மனிதன் போராட்டங்களை எதிர் கொள்கிறான். இந்த போராட்டங்களைக் கண்டு மனிதன் மனம் தளர்ந்து விடவில்லை. மனிதன் மனப்பக்குவத்தோடு போராட்டத்தை சந்திக்கிறான். இவைகளில் சில போராட்டத்திற்கு தீர்வு காண்கிறான்.
வாழ்க்கை என்பது பந்தயம். இந்தப் பந்தயத்தில் ஜெயிக்கலாம், தோல்வியும் அடையலாம். வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் மாறி மாறி நடக்கின்றன. மனிதன் செய்யும் வியாபாரத்தில் லாபம் அடையலாம் அல்லது நஷ்டம் ஏற்படலாம். மனிதன் செய்யும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் இருக்கலாம். வாழ்க்கையில் இதுதான் நடக்குமென்று மனிதன் நிர்ணயிக்க முடியாது. வாழ்க்கையில் எந்த சம்பவம் வேண்டுமானாலும் நிகழலாம். ஏதையும் சந்திப்பதற்கு மனிதன் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தோன்றுகின்றன. அதனை மனப்பக்குவத்தோடு சமாளிக்க வேண்டும்.
மனிதப் பிறவியோடு முடிவாக மரணமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பிறவியொன்று இருந்தால் அதனோடு எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம் என்கிற நிலையும் இருக்கிறது. மூச்சிருக்கும் வரை மனிதன் வாழ்கையை வாழ்கிறான். இந்த வாழ்க்கையில் முக்கால் பங்கு கசப்பான சம்பவங்களை அனுபவிக்கிறான். வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறான். ஒரு சிலரோடு உறவையும் வளர்த்துக் கொள்கிறான். இவற்றில் ஒரு சில உறவுகள் நல்ல முறையில் அமைகின்றன. மற்றவை கண்ணாடி போல் உடைகின்றன. அப்படி உறவுகள் உடையும் போது அல்லது பிரியும் போது மனம் தவிக்கிறது. கஷ்டங்கள் சரமாரியாக சூழ்ந்து கொள்ளும் போது மனம் வேதனைப் படுகிறது. இப்படி வேதனையும் வலியும் ஏற்படும் மனிதனின் வாழ்க்கை போராட்டத்துடனே போகிறது. ஏதிர்பாராத சம்பவங்களால் வாழ்க்கையோடு போராடிப் போராடி, மனம் துவண்டு சலிப்படைந்து போகிறான். மனிதனுக்கு ஓட்டமும் நடையும் நின்று விடும் போது மனிதனை மரணம் தழுவிக் கொள்கிறது.
இந்த உண்மையான வாழ்க்கையை உணர்ந்து வாழுங்கள், உண்மையான வாழ்க்கையிலும் அதிகபட்சம் கசப்பான சம்பவங்களையே அனுபவிக்கிறான். வாழ்க்கையில் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருகின்றன. சந்தோஷமான தருணத்தில் உறவுகள் நம்மோடு சோந்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறது. துக்கமான சமயத்தில் மனிதன் ஒருவனே அனுபவிக்க நேரிடுகிறது. துக்கமான தருணத்தில் மனிதன் மனம் துவளாமல், மிரண்டு போகாமல் வாழ்க்கையை சலிப்பாக்கிக் கொள்ளாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை பெருக்கிக் கொள்ள வேண்டும். மனப்பக்குவத்தோடு பிரச்சனையை சந்திக்க வேண்டும். வாழ்க்கையில் பிடிமானத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பயம், பீதி, கெட்ட அதிர்வலைகள் அனைத்தையும் ஒதுக்கி விட்டு இறைவன் கொடுத்த வாழ்க்கையை நம்பிக்கையோடும், மனஉறுதியோடும் வாழ முயற்சி செய்ய வேண்டும். மனிதன் இறைவன் அமைத்த வாழ்க்கையை முழுமனதோடு உணர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும்.
No comments:
Post a Comment