Tuesday, October 1, 2013

முடியும் என்று நம்புங்கள்

ஆழ் மனதில் நுணுக்கமான, அறிவு பூர்வமான, ஆக்கப்பூர்வமான விஷயங்களை நாம் பதிய வைப்பதில்லை. நல்லதையே நினைத்திருந்தால் நல்லதே நடக்கும். நம்பிக்கைதான் ஆணிவேர். தீய எண்ணங்களால் ஆழ்மனதை நிரப்பினால் தீயவை தான் பிரதிபலனாகக் கிடைக்கும். நீங்கள் என்ன விதைகின்றீர்களோ, அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள். ஆக, கம்ப்யூட்டர் மாதிரி ஆழ்மனதில் பதியும் விஷயங்களுக்கேற்ப அதன் பலா, பலன்கள் அமைந்திருக்கும்.

யாராவது, ஏதாவது சொன்னால் ‘முடியாது’ என்றபதில் தான் வரும். இது மனிதர்களின் இயல்பு. “உன்னால் முடியும் தம்பி” என்று நம்புகிறவர்கள் எத்தனை பேர். ‘பிடிக்காது, வராது, முடியாது’ என்று ஏன் எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறீர்கள்.

எடுத்த எடுப்பிலேயே, முயற்சி ஏதும் செய்யாமலே, இது நம்மால் முடியாது என்று சொல்வீர்களானால், ஆழ்மனதில் அதன் தாக்கம் உரம்பெற்று, தீயபலனையே தரும். இது சிந்திக்கும் திறனைப் பாதிக்கிறது. முன்னேற்றத்தைத் தடுக்கிறது. முயற்சி மேற்கொள்ள இடம் தராமல் ‘ஸ்டிரைக்” செய்கிறது.

முயற்சி செய்து பார்ப்போம் என்று பிரயத்தனம் மேற்கொள்ளும் போது ஒரு முனைப்பு ஏற்படுகிறது. முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தருமன்றோ. முயற்சி பலன் தரும் என்றநம்பிக்கை லேசாக நம் மனதில் துளிர்விட ஆரம்பிக்கிறது. கடைசிவரை முயன்று பார்ப்போம் என்றஉறுதி ஏற்படுகிறது. பலன் கிட்டாவிட்டாலும் முயற்சியாவது செய்தோமே என்றமனநிறைவு ஏற்படுகிறது. முயற்சி திருவினையாகும்போது நல்ல பலனும் கிடைக்கிறது.

எண்ணிய எண்ணியாங் எய்துவர்
எண்ணியர் திண்ணியராகப் பெறின்

என்பது வள்ளுவர் வாக்கு. அந்த எண்ணம் வலிமையுடையதாக இருந்தால் அதனால் நிச்சயம் பலன் கிட்டுகிறது. எண்ணும் போதே எதிர்மறையான எண்ணங்களை எண்ணாமல் ஆக்கபூர்வமானதாக பயனுள்ளதாக, வெற்றிதரும் எண்ணங்களைத்தான் எண்ண வேண்டும்.

வருகின்ற வாய்ப்பினை தன் இறுகத் தாளிட்டுத் தடுத்து விடுகிறீர்கள். எதையும் செய்யும் துணிவை அது நசுக்கி விடுகிறது. மேலும் வெற்றி வாய்ப்பினைப் பறித்துவிடுகிறது.

மூளையின் சிந்தனைத் திறன் ஆளுமை ஆற்றல், எதையும் சாளிப்போம் என்றதைரியம், ஊக்கம், கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றஎண்ணம் எல்லாம் விரலுக்கு இறைத்த நீராய்ப் பயனற்றுப் போகின்றன.

செயல் திறன் கதவுகளை மூடாமல் நன்கு திறந்து வையுங்கள். உங்களுக்குச் சங்கடத்தைத் தரும், ஏமாற்றத்தைத் தரும் நம்பிக்கையைச் சிதைக்கும் எண்ணங்களைக் குப்பை எனத் தூரத் தள்ளுங்கள். வீட்டைக் கூட்டி குப்பையை வெளியே கொட்டினால் வீடு சுத்தமாவது போல, மனம் சுத்தமாகும், தெளிவாகும். சலனமின்றி இருக்கும். அமைதியான அந்த ஆழ்மனதில் நல்ல கனவுகளை நிரப்புங்கள். இன்பகரமான நினைவுகளை அசைபோடுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பயனுள்ள நல்ல விஷயங் களைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பாருங்கள். அந்த எண்ணம் வலுப்பெற்று ஊக்கமடைந்து, உயிர்ப்புடன் மலர்ச்சி அடையும்போது என்னால் முடியும் என்றஉறுதியான நம்பிக்கை வெளிப்படுவதைக் காணலாம்.

மெழுகுவர்த்தி லேசாக எரிந்து, இருளை அகற்றி, எங்கும் ஒளி வீசுவதுபோல உங்கள் உள்ளத்தில் ஒளி தோன்றுகிறது. வழி பிறக்கிறது, உற்சாகம் பெருகுகிறது. கம்ப்யூட்டர் பட்டனைச் சரியாகத் தட்டினால் நீங்கள் எதைப் பெற விரும்புகிறீர்களோ அது கம்ப்யூட்டர் திரையில் தெரிய ஆரம்பிப்பது போல, மனத்திரையில் செயல்திறன் உருவாகிறது.

உங்களுடைய தோல்வி மனப்பான்மை, மனச் சோர்வு, இயலாமை பற்றிய பயம் எல்லாம் விலகுகிறது. உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் துவங்குகிறீர்கள்.

ஆகவே, இனி “முடியாது” (Impossible) என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். அச்சொல்லை உங்கள் மன அகராதியிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். முடியாது என்பது முன்னேற்றத்திற்கான தடைக்கல்லாகும்.

முடியாது என்று ஒன்றுமே இல்லை என்று திரும்பத் திரும்ப நினைவு கூறுங்கள். பிரச் சனையை எப்படியும் சமாளித்தேயாக வேண்டும். நாம் கடுமையான முடிவுகளை மேற்கொள்ளத் தான் வேண்டும். லட்சியத்தை அடையும் வரை மனம் தளரக் கூடாது என்று உறுதியான சங்கல்பத்தை மேற்கொள்ளுங்கள்.

சரியான முடிவை மேற்கொள்ளும் ஆற்றல் என்னிடம் இருக்கிறது. சாத்தியக் கூறுகளைத் தெளிவாக ஆராய்ந்து முடிவு மேற்கொள்வதே எனது லட்சியம். அந்த லட்சியத்தை எப்படியும் அடைந்தே தீருவேன் என்று எண்ணுங்கள்.

நிச்சயம் என்னால் சிகரத்தை எட்ட முடியும். சாதனையாளர்களின் பட்டியலில் நானும் இடம் பெறுவேன். வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து முயற்சியை மேற்கொள்வேன் என்பதே ஆக்கபூர்வமான சிந்தனை.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த ஆக்கப்பூர்வமான சிந்தனையை வளர்த்துக் கொள்வதுதான். நம்பிக்கை தான் மன உறுதி. ஆழ்மனதில் இவற்றைஉறமிடுங்கள். பயிர் நன்றாக வளர்ந்து உயரிய மகசூலைத்தரும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment