Tuesday, October 1, 2013

ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனம் கொண்டவர்களாக பிள்ளைகளை வளர்ப்பதுதான் பெற்றோருக்கு மிக கடினமாக இருக்கிறது

குழந்தை வளர்ப்பை இன்றைய பெற்றோர்கள் மிக நெருக்கடியான விஷயமாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஊட்டச்சத்துடன் கூடிய உடல் வளர்ப்பை எல்லா பெற்றோராலும் கொடுத்து விட முடிகிறது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனம் கொண்டவர்களாக பிள்ளைகளை வளர்ப்பதுதான் பெற்றோருக்கு மிக கடினமாக இருக்கிறது.

பெற்றோர் பணம் சம்பாதிக்கவும், பதவிகளைத் தேடவும், அன்றாட பிரச்சினைகளை சமாளிக்கவும் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். வீட்டிலும், வெளியிலும் அவர்கள் வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. அந்த கடுமைக்கு மத்தியில் குழந்தைகள் மன நிலையை புரிந்து கொண்டு செயல்படும் பொறுமை அவர்களிடம் இருப்பதில்லை.

குழந்தைகளுடைய செயல்பாடுகளை அருகிலிருந்து கவனித்து நன்மை தீமைகளை விளக்கி சொல்லும் மனப்பக்குவமும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இல்லை. குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிப்பது பொறுமை. அது சில பெற்றோரிடம் இல்லாததால் தான் குழந்தைகள் மனம் வருந்தி தவறான முடிவு எடுக்கிறார்கள்.

‘குழந்தைகள் நம்மை விட சிறியவர்கள். அவர்கள் நம்மை மதிக்கவேண்டும், நம்ப வேண்டும், அனுசரித்துப் போகவேண்டும், நம் வார்த்தைக்கு கட்டுப்பட வேண்டும்’ என்பன போன்ற பலவிதமான எதிர்பார்ப்புகளை சிறுவர்கள் மீது பெற்றோர் வைத்திருக்கிறார்கள்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது பெற்றோருக்கு ஏற்படும் மன உளைச்சலை கடுமையான வார்த்தையாகவும், அடி உதையாகவும் வெளிப்படுத்துகிறார்கள். அத்தகைய தண்டனைகளால் குழந்தைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களை திருத்துவதாக நினைத்துக் கொண்டு கொடுக்கும் தண்டனைகள் எதிர் மாறான விபரீதங்களை உருவாக்கிவிடுகிறது.

சமீபகால கணக்கெடுப்புகளில் சிறுவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குஜராத்தில் இந்த தற் கொலை மிகவும் அதிகரித்திருக்கிறது. தற்கொலை என்றால் என்னவென்று கூட முழுமையாக புரிந்து கொள்ளாத வயதில் இவர்கள் தற்கொலையில் ஈடுபடுவது இந்திய எதிர்காலத்தையே இருட்டாக்கும் விஷயம்.

பெற்றோரை பழிவாங்க வேண்டும் என்ற கோப உணர்ச்சி மேலோங்கிய நிலையில் இவர்கள் எடுக்கும் இந்த அவசர முடிவு குடும்பத்தையே கதிகலங்க வைத்து விடுகிறது. தற்கொலை செய்து கொள்வது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. உயிரின் மதிப்பையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் இவர்களுக்கு புரியவைக்க யாருமில்லை.

வாழ்க்கையில் ஒரு சின்ன அதிர்ச்சியை கூட தாங்க முடியாத பலவீனமானவர்களாக இன்றைய சிறுவர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களை மிக மென்மையாக நடத்தவேண்டிய கட்டாயத்தில் இன்றைய பெற்றோர்கள் இருக்கிறார்கள். தவறு செய்யும் சிறுவர்களை திருத்துவது பெற்றோர்களின் கடமை.

ஆசிரியர்களின் கடமையும் கூட. ஆனால் இன்று இந்த கடமைகளை நிறைவேற்ற முடியாத சூழலில் பெற்றோரும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எந்த நடவடிக்கைகள் எடுத்தாலும், விபரீத ஆயுதத்தை கையில் எடுப்பதுபற்றி சிறுவர்கள் சிந்திக்கிறார்கள். அதனால் பெற்றோரும், ஆசிரியர்களும் அச்சப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

அதனால் சிறுவர்- சிறுமியர்களை அப்படியே விட்டுவிட முடியுமா? அவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் தட்டிக்கேட்க கூடாதா? அப்படி விட்டுவிட்டால் அவர்களது எதிர்காலம் என்னவாகும்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ‘சிற்பிகள் உளியை பயன்படுத்த தயங்கினால், நல்ல சிற்பங்கள் கிடைக்காதே!’ அகமதாபாத்தில் சம்பத் பட்டேல் என்பவரின் மகன் தன் அம்மாவோடு குடும்ப திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல விரும்பினான்.

ஆனால் அம்மா அழைத்து செல்ல மறுத்தார். ‘பரீட்சை வர இருக்கிறது. நீ வீட்டிலே இருந்து படி. நிறைய மதிப்பெண் வாங்கவேண்டும். அடுத்த மாதம் இன்னொரு உறவினர் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கு உன்னை அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறிவிட்டு, கிளம்பி சென்று விட்டார். திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு, வீடு திரும்பிய தாய், தன் வீட்டு முன்னால் பெருங்கூட்டம் நிற்பதை பார்த்து பதறியபடி ஓடினார்.

அப்போதும் அவர் தன் மகன் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்திருப்பான் என்று நினைத்திருக்கவில்லை. ஏன்என்றால் அவன் அப்படிப்பட்ட சிறுவன் அல்ல. வீட்டுக்குள் வந்த பின்புதான் தெரிந்தது, அவன் தற்கொலை செய்திருப்பது. கடிதம் எழுதிவைத்து விட்டு இறந்திருக்கிறான். “என் ஆசையை நிராகரித்த என் அம்மா அழுது துடிக்க வேண்டும்” என்று அதில் எழுதி வைத்திருந்தான்.

சிறுவயதிலே பெற்றோர் மீது இவ்வளவு கொடூரமான எண்ணம் தோன்ற என்ன காரணம்? இந்த மாதிரி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இவர்களுக்கு எப்படி வந்தது. பெரும்பாலான விஷயங்கள் சினிமா, டி.வி போன்ற சக்தி வாய்ந்த மீடியாக்களிடமிருந்து வந்தது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

 முன்பு  ஒரு வீட்டில் ஏழெட்டு குழந்தைகள் இருந்தனர். அப்பா வாங்கிவரும் ஒரு பொருள் அப்போது எட்டாக, பத்தாக பிரிக்கப்பட்டது. அப்போது ஏமாற்றங்களும், ஏக்கங்களும் எவ்வளவோ இருந்தன. அதை எல்லாம் சகித்துக் கொண்டு வாழும் பக்குவம் அன்றைய சிறுவர்களுக்கு இருந்தது.

இன்று அதைவிட அறிவு வளர்ச்சி அதிகமுள்ளவர்களாக கருதப்படும் சிறுவர்கள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு இப்படி ஒரு முடிவை உடனே எடுத்துவிடுகிறார்கள்? என்பதுதான் பெரிய கேள்வி. ஒவ்வொரு பெற்றோரும் இன்று தம் பிள்ளைகள் வசதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அதற்காக உழைத்து பிள்ளைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில பிள்ளைகளின் எண்ணங்களில் வக்கிரங்கள் கலந்திருக்கின்றன. சிறிய ஏமாற்றத்தைக்கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை முடிவு எடுத்துவிடும் சிறுவர்களின் மனநிலையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த எவ்வளவோ தற்கொலை தடுப்பு மையங்களும், மனநல ஆலோசகர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் ஒருபுறம் தங்கள் கடமையை ஆற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்க்கும் பலன்கள்தான் உடனடியாக கிடைப்பதில்லை. முன்பெல்லாம் கூட்டுக்குடும்பங்கள் இருந்தன.  அதற்கு எப்படி வடிகால் தேடிக்கொள்ள வேண்டும் என்ற நேரடி அனுபவம் சிறுவர்களுக்கு அந்த கூட்டுக்குடும்பத்தில் இருந்து கிடைத்துக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு பிரச்சினையையும் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு அந்தந்த வீடுகளிலே கிடைத்தது. வீட்டில் அனுபவசாலியான முதியோர்கள் இருந்தார்கள். அவர்கள் அன்பையும், கண்டிப்பையும், அனுபவத்தையும், ஆறுதலையும், ஆலோசனையையும் தேவை அறிந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

அதனால் உணர்ச்சிவசப்படுதலும், தவறான முடிவுகள் எடுப்பதும் இல்லாமல் இருந்தது. கோபம் வந்தால் அழுவார்கள். எதையாவது போட்டு உடைப்பார்கள். சாப்பிட மறுத்து அடம்பிடிப்பார்கள். சக வயதினரை அடிப்பார்கள்...! இவைகள்தான் சிறுவர்கள் கோபத்தில் செய்த செயல்களாக இருந்தன.

ஆனால் இன்று எவ்வளவு விபரீதமான முடிவினை எடுக்கிறார்கள்?! குழந்தைகளை வளர்க்கும் விஷயத்தில் பெற்றோர்கள் செய்யும் தவறுகளும் இருக்கத் தான் செய்கின்றன. அவர்கள் வாங்கும் மதிப் பெண்ணில்தான் குடும்ப கவுரவமே இருக்கிறது என்ற மாயையில் பெற்றோர்கள் சிக்கியிருக்கிறார்கள். அதற்காக குழந்தைகளை உலுக்கி எடுப்பது, கடுமையாக குற்றம்சாட்டுவது, மட்டம்தட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அவைகள் சிறுவர்- சிறுமியர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது. அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அன்பாகப் பேசி இந்த அழகான வாழ்க்கையை புரிய வைக்க வேண்டும். அவர்களிடம் எப்போதும் இயல்பாக பழக வேண்டும் . அவர்களின் மனதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.

நல்லது கெட்டது எதுவானாலும் அவர்களுடன் கலந்து ஆலோசிக்கவேண்டும். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்பதை புரியவைக்க வேண்டும். புரிந்துகொண்டால் அவர்கள் விபரீதமான முடிவுகளை எடுக்கமாட்டார்கள். 

No comments:

Post a Comment