"வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்கிறது முதுமொழி. "கோமாளி ஒரு தலைவலி மாத்திரைக்கு ஒப்பானவன். ஒரே வித்தியாசம் என்னவெனில் அவன் இருமடங்கு வேகமாகச் செயல்படுவான்" என்கிறார் க்ரூசோ மார்க்ஸ் என்ற அறிஞர்.
உடல் வலியைக்குறைப்பதிலும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் சிரிப்பு அதிகப் பங்கு வகிக்கிறது.
நல்ல நகைச்சுவை சிரிப்பலைகளைப் பரவ விடுகிறது. சிரிப்புகூட ஒரு தொற்றுநோய்தான். ஆரோக்கியமான தொற்று. கொட்டாவி, இருமல், தும்மலை விட வேகமாகப் பரவக்கூடியது சிரிப்பு. ஒருவருடன் சிரித்துப் பேசுகையில் நெருக்கம் அதிகரிக்கிறது. சிரிப்பு ஒரு நல்ல பாலம். அது மனிதர்களை இணைக்கிறது. மனத்தை லேசாக்குகிறது.
மட்டுமல்ல... அது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை (Immunity) அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் ஆற்றலை மேம்படுத்துகிறது. வலியையும் இறுக்கத்தையும் (Pain and Stress) குறைக்கிறது.சிரிப்பும் உடல் நலமும்:வாய்விட்டு சத்தமாகச் சிரிப்பது உடற்பயிற்சிக்கு ஒப்பானது என மருத்துவர்கள் கருதுகின்றனர். நீங்கள் சிரிக்கும்பொழுது உங்கள் உடல் தசைகள் இறுக்கம் குறைந்து தளர்வடைகின்றன. நன்கு வாய்விட்டு மனம் விட்டுச் சிரித்தபின் கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் வரை உங்கள் உடல் இறுக்கமின்றிக் காணப்படுமாம்.
சிரிக்கும்பொழுது, மனச்சோர்வையும் இறுக்கத்தையும் உண்டாக்கும் ஹார்மோன்கள் சுரப்பது குறைவடைகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி தூண்டப்படுகிறது.எண்டார்பின் என்ற திரவம் உடலில் வலியைக் கட்டுப்படுத்தவும், நல்ல மனநிலையை உண்டாக்கவும் வல்ல ஒன்று.
சிரிப்பு இந்த எண்டார்பின் திரவம் சுரப்பதை அதிகம் தூண்டுவதால், மனம் மகிழ்ச்சியாக இருப்பதுடன், வலி குறைந்தது போன்ற உணர்ச்சியும் தோன்றுகிறது.சிரிக்கின்ற பொழுது, நமது இரத்தக்குழாய்களின் வேலைத்திறம் அதிகரிக்கிறது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மாரடைப்பு போன்ற அறிகுறி தோன்றுகையில் அதிக சத்தமாக வாய்விட்டுச் சிரித்தால் (சிரிப்பதுபோல் செய்தால்) இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் சீரடைந்து மாரடைப்பு தவிர்க்கப் படும் என்றும் மருத்துவ உலகம் கருதுகிறது.எப்படி நடக்கிறது இந்த மாயவித்தை? சிரிக்கின்றபொழுது நமது உடல் தசைகள் விரிவடைகின்றன. நமது நாடித்துடிப்பும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கின்றன. நம் மூச்சு வேகமாகவும் ஆழமாகவும் இழுக்கப் படுகிறது. எனவே நமது உடலில் உள்ள திசுக்கள் அதிக அளவு ஆக்சிஜனைப் பெறுகின்றன.
வில்லியம் ஃப்ரை என்ற ஆராய்ச்சியாளர் பத்து நிமிடப்பயிற்சியால் ஏற்படும் பலனும் ஒரு நிமிடம் வாய்விட்டு, மனம்விட்டுச் சிரிப்பதால் ஏற்படும் பலனும் சமம் என்கிறார். அது மட்டுமல்ல பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் சத்தமாகச் சிரிக்கின்ற பொழுது சுமார் ஐம்பது கலோரிகள் எரிக்கப் படுவதாகவும், உடல் எடைக்குறைப்பிலும் சிரிப்பதன் பங்கு உள்ளது எனவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தவும் சிரிப்பு உதவுகிறதாம். ஏறத்தாழ ஒரே அளவு பாதிப்புள்ள 20 சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரே விதமான உணவு அளிக்கப் பட்டபின் பாதிப்பேரை நகைச்சுவைத்திரைப்படம் பார்க்கும்படியும், மீதிப்பேரை ஒரு சலிப்பூட்டும் உரையைக் கேட்கவும் செய்தபின் அவர்களது உடலின் சர்க்கரை அளவு கணக்கிடப்பட்டதாம். இதில் நகைச்சுவைப் படம் பார்த்தவர்களின் உடலில் இருந்த சர்க்கரை அளவு, மற்ற குழுவினரின் சர்க்கரை அளவைவிடக் கணிசமாகக் குறைந்திருந்ததாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனநலம் காக்கும் சிரிப்பு:
நல்ல நகைச்சுவைக்கதைகளைப் படிக்கின்ற பொழுதும், நகைச்சுவைப்படங்களைப் பார்க்கின்ற பொழுதும் கவனியுங்கள். உங்கள் மனதில், பதட்டம், கோபம், வெறுப்பு, துயரம் போன்ற உணர்ச்சிகள் அண்டவே அண்டாது.சிரிப்பு உங்கள் மன இறுக்கத்தைத் தளர்த்துகிறது. உங்கள் மனத்தை ஒருநிலைப்படுத்துகிறது. வேலை செய்யும் ஆற்றலை அதிகப்படுத்துகிறது. நல்ல மனநிலையுடன் செய்யப்படும் வேலைகள் பொதுவாக வேகமாகவும் தவறின்றியும் செய்யப்படும் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.நல்ல தூக்கத்தையும் நகைச்சுவை தூண்டுகிறது.
தீவிரமான முதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்த நார்மன் கசின்ஸ் என்பவர், தாம் நகைச்சுவைத் திரைப்படங்கள் மற்றும் சிரிப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பார்த்தபின் வலி குறைந்து நன்கு தூங்க முடிவதை உணர்ந்தார். கிட்டத்தட்ட பத்து அல்லது பதினைந்து நிமிடச்சிரிப்பு நிகழ்ச்சி அவருக்கு ஏறத்தாழ இரண்டு மணி நேரத்தூக்கம் பெற உதவியது. இதைத் தொடர்ந்து அவர் எழுதிய Anotomy of an Illness' என்ற புத்தகமே, சிரிப்பு மருத்துவம் குறித்த ஆராய்ச்சிக்கே வித்திட்டது எனலாம்.சிரிப்பு நமது இனிமையான வாழ்வுக்கும் உதவி புரிகிறது. நல்ல நகைச்சுவை உணர்ச்சியுள்ளவர்கள் பலரையும் வசீகரிக்கிறார்கள்.
சிரித்த முகமாக இருப்பதும், (பிறரைப் புண்படுத்தாத) நகைச்சுவையும் நிறைய நண்பர்களைப் பெற்றுத் தரக்கூடியவை. நகைச்சுவை உணர்வுடன் ஒரு பிரச்னையை அணுகும்பொழுது அது எளிதில் தீர்க்கப்படுகிறது. பிணக்குகளும் சண்டை, சச்சரவுகளும் குறைகின்றன. குழு மனப்பான்மை வளர்கிறது. எந்த ஒரு கடினமான வேலையையும், சிரித்துப் பேசியவாறே செய்கையில் அதனை எளிதாக முடிக்க முடிகிறது.பேச்சில் இனிமை கூடுகிறது.சிரிப்பதும் ஒரு பழக்கம்தான். இதுவரை நீங்கள் இறுக்கமானவராக, உம்மணாமூஞ்சியாக இருந்திருக்கலாம். இன்று முதல் மாறலாமே! முதல் கட்டமாக நல்ல நகைச்சுவைத் துணுக்குகளைப் படியுங்கள். அது இணையத்தில் இருந்தாலும் சரி, புத்தகத்தில் இருந்தாலும் சரி. சில துணுக்குகளை மனப்பாடம் செய்துகொண்டு உங்கள் நண்பர்களுடனான பேச்சுக்கிடையில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். (ஒரே நாளில் வரிசையாகப் பத்துப் பதினைந்து ஜோக் சொல்லவேண்டிய அவசியமில்லை. அவ்வப்பொழுது சொன்னால் போதும்.) மற்றவர்கள் சொல்வது நீங்கள் ஏற்கனவே படித்த அரதப் பழசான அல்லது மிகச்சாதாரணமாக துணுக்காக இருப்பினும் அதை அனுபவித்துச் சிரிக்க முயலுங்கள். 'Ten time you fake it; Eleventh time you will make it' என்கிறது ஒரு ஆங்கிலச் சொற்றொடர். இயல்பாகவே நன்கு சிரித்துப் பழகும் நபர்களுடன் அதிக நேரத்தைச் செலவழியுங்கள். தீவிரமான, வன்முறை, அடிதடி, சோகம் நிறைந்த திரைப்படங்கள், புத்தகங்களைத் தவிர்த்து லேசான, நகைச்சுவை கலந்த படங்கள் புத்தகங்களை அதிகம் தேர்ந்தெடுங்கள்.
உங்கள் அலுவலகத்தில் அல்லது நண்பர்கள் வட்டத்தில் சிரிப்பொலி கேட்கும்பொழுது நீங்களும் 'அது என்ன' என்று கேட்டு அவர்களுடன் இணைந்து சிரிப்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் மாற்றத்தை உணர்வீர்கள்.சிரித்து வாழ வேண்டும்...ஏனென்றால் சிரிப்புடன் கூடிய வாழ்வுதான் சிறப்பான வாழ்வு.
No comments:
Post a Comment