இந்தத் தகவல்களை மீண்டும் மீண்டும் படியுங்கள் வாழ்க்கை வெற்றி பெறும்…
01. அன்டோனியஸ் பயஸ் என்னும் ரோமானிய மன்னன் மரணப்படுக்கையில் இருக்கும்போது வாழ்வின் தத்துவத்தை ஒரேயொரு வார்த்தையில் சொல்லும்படி கேட்டான். அவனுக்கு வாழ்க்கைத் தத்துவம் பற்றிக் கூறப்பட்ட வார்த்தை ஈக்வானிமிடஸ் என்ற ரோமானிய சொல்லாகும்.
ஈக்வானிமிடஸ் என்றால் : சமத்துவம் ஓர் அமைதியான பொறுமை, வாழ்வின் சோதனைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கும் மேலாகச் செல்லது என்ற பொருள்தரும். ஆம் வாழ்க்கை என்றால் என்னெவென்று தேடுவோர்க்கு மிக எளிமையான விளக்கமே இதுவாகும்.
02. கலங்காதிருக்கும் தன்மை என்றால் என்ன ? எல்லாச் சூழல்களிலும் விழிப்புணர்வுடனும் அமைதியாகவும் இருப்பதுதான். புயல் வரும்போது அமைதி, மரண ஆபத்து வரும்போதுதெளிவாக முடிவெடுக்கும் திறன், அசையாத தன்மை இவைகளே கலங்காத தன்மையாகும். இது ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டிய ஆற்றலாகும்.
03. சாதாரண பிரச்சனைகளில் தளர்ந்து தள்ளாடும் ஒரு வைத்தியன் தனது நோயாளிகளிடம் பூரணமாக நம்பிக்கை இழக்கிறான்.
04. நல்ல குணமுள்ள சமமான தன்மையை அடைவதற்கு முதலாவது முக்கியமான ஒன்று உங்களோடு இருப்பவரிடம் அளவுக்கு அதிகமாக எதிர் பார்க்காமல் இருப்பதுதான்.
05. தோல்வி ஏமாற்றம் போன்றவற்றில் இருந்து உங்களால் தப்பிவிட முடியாது ஆகையால் மிக மோசமானவர்களையும் துணிவோடு எதிர்த்து நில்லுங்கள் வெற்றி வரும்.
06. தோல்வியின் வலியை சகித்துக் கொள்ள வேண்டும் அந்தச் சமயத்திலும் சந்தோஷமான சமநிலையுடன் இருப்பது அவசியம்.
07. ஆபத்து ஏற்பட்டு அழிவு வரும் என்றாலும் அதைத் தலை நிமிர்ந்து புன்னகையோடு எதிர் கொள்வது நல்லது. அது வரும்போது கெஞ்சுவதைவிட மேலானது. இலட்சியத்திற்காக நியாயத்திற்காக நீங்கள் போராடினால் தோல்வி நிச்சயம் என்றாலும் இலட்சியத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.
08. பொறுமையினால் இதயங்களை வெற்றி கொள்ளலாம் என்று கூறப்படுகிறது ஆனால் இந்தப் பொறுமை என்பதன் கருத்தே வாழ்வின் சோதனைகளை வெற்றி கொண்டு மேலெழும் சமநிலை என்பதுதான்.
09. உராய்வில்லாமல் இரத்தினங்கள் பளபளக்க முடியாது, சோதனையின்றி மனிதரைச் சரியானவராக்க முடியாது.
10. உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் பிறகு வருவதை எதிர் கொள்ளுங்கள். சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும்போது சுமை தெரிவதில்லை.
11. அன்பான கடவுளே மாற்ற முடியாத தன்மைகளை அன்போடு ஏற்றுக் கொள்ளும் வலிமையைத் தாருங்கள், அதுபோல மாற்ற வேண்டிய விடயங்களை மாற்றும் தைரியத்தையும் தாருங்கள். அவ்வாறே இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் ஞானத்தையும் தாருங்கள்.
12. வாழ்க்கை முக்கியமல்ல அதில் நீங்கள் காட்டும் மனோதிடம்தான் முக்கியம்.
13. நமது உடலில் குறிப்பிட்ட அளவு விஷத்தை ஏற்றி உடலில் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதுபோல இறைவன் வாழ்வில் எதிர்பாராத சோதனைகளை அனுப்புகிறான். அதை எதிர்கொண்டு முன்னேறுவதே வெற்றிகரமான வாழ்க்கை.
14. பொறுமையும் மனோதிடமும் எல்லாவற்றையுமே வெற்றி கொள்ளும்.
15. உன் தலையெழுத்தைத் தீர்மானிப்பவன் நீதான் உன் ஆன்மாவின் எஜமானனும் நீதான்.
16. ஒரு மனிதனின் நம்பிக்கை அவனுடைய பலவீனத்தை வெற்றி கொள்ளும்.
17. பல ஆறுகள், விண்ணில் இருந்து பொழியும் சுவையான மழை என்று எது சேர்ந்தாலும் கடலின் சுவை மாறுவதில்லை. அதுபோல தைரியமுள்ளவனின் மனதை சோதனையின் களம் தாக்குவதில்லை.
18. நீயும் கடவுளாக மாற வேண்டுமா ? பெரும் துன்பங்களுக்கு எதிராகப் போராடு, சித்திரவதை, எதிர்ப்பு, சிறை, சாவு, தூக்குமரம் எது வந்தாலும் கலங்காது நிதானமாக முன்னேறு.
19. பெரும்பாலான சோதனைகளின் முக்கிய அம்சம் நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதல்ல எவ்வளவு எதிர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
20. அவமானத்துடன் வாழ்வதைவிட அன்போடு சமாதியாகலாம்.
21. நீங்கள் எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல உங்களிடம் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
22. நீ இழந்த ஒவ்வொன்றுக்கும் ஈடான இன்னொன்றைப் பெற்றிருக்கிறாய்.
23. உனக்கு ஏற்பட்ட இழப்பை யோசிக்காதே.. என்ன மீதம் இருக்கிறது என்று பார் அதை வைத்து போராடு, அப்போதுதான் வெற்றி சாத்தியமாகும்.
24. ஏதோ ஒரு வழியில் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது நெருப்பினூடே சென்றுதான் தீர வேண்டும். நமது பலவீனங்கள், தோல்விகள் , குற்றங்களை நாம் வெற்றி கொள்ளாவிட்டால் நாம் அழிந்துவிடுவோம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
25. போரில் என் கரங்களை இழப்பேன் என்று நான் நினைக்கவில்லை. அவற்றை இழந்த பிறகு அவை இருந்திருந்தால் பெற்றிருக்க முடியாத பல விஷயங்களை நான் பெற்றிருப்பதாக கருதுகிறேன். – போரில் கைகளை இழந்த இளைஞன் ஹெராட் ரஸல்
26. நம்மை அர்ப்பணிக்காமல், இன்றைய முக்கிய வேலைகளில் இறங்காமல் தாமதித்துத் தாமதித்தே நம்மில் பலர் வாழ்வை வீணடித்து வருகிறார்கள்.
27. தோற்கடிக்கப்பட்டு, கீழே தள்ளப்பட்டு அழிவில் சிக்கிக் கிடந்தாலும் கவலைப்படாதே..! காரணம் நீ இன்னமும் உயிருடன் இருக்கிறாய்..! தன்னம்பிக்கையுடன் நின்றால் மீண்டும் வென்றுவிடலாம். உலகில் உள்ள மிக வலிமை உள்ள ஆயுதம் தன்னம்பிக்கைதான் அது உன்னிடம் இருக்கிறது கவலைப்படாதே.
28. நோயும் ஊனமும் உடலுக்குத்தான் தடை மனதிற்கு அல்ல என்பதைப் புரிந்து கொள்.
29. உங்களுக்குத் தரப்பட்ட வேடத்தை நடித்தாக வேண்டியது உங்கள் கடமை. அதைச் சிறப்பாக செய்யுங்கள் என்ன வேடம் என்பதை ஆண்டவன் தீர்மானிப்பான்.
30. என் ஊனங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில் அவற்றின் மூலமாகத்தான் என்னை, என் வேலையை, என் கடவுளை கண்டறிந்தேன். – கண்களை இழந்த ஹெலன் கெல்லர்.
No comments:
Post a Comment