சீன ஞானம் – வாழ்க்கை வெளிச்சம் என்ற டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் நூலில் இருந்து..
போல் யூலியஸ் வான் ராய்டர்
01. மனம் எங்கோ சென்று எதனுடனோ தொடர்பு கொண்டு சரியான வழியை கண்டு பிடிக்கிறது. அதற்கு விடையை கண்டு பிடிக்க அவகாசம் கொடுங்கள். எது உண்மை ? எது சரியானது என்பதை உள்ளுணர்வு காட்டும். மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டைன் தனது இரண்டு மாபெரும் கண்டு பிடிப்புக்களை தனது உள்ளுணர்வு காட்டியே கண்டு பிடித்ததாகக் கூறுகிறார். அமெரிக்காவில் வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் எல்லாம் உள்ளுணர்வு காட்டிய பாதையில் சென்றே வெற்றி பெற்றதாகக் கூறுகிறார்கள்.
02. பிரபஞ்சம் பிறர் உரிமைகளில் தலையிடுவதில்லை, அத்துடன் எதையும் எதிர்பாராமல் செயற்படுகிறது. அதன் மூலமே அது நிலைபேறும் பெறுகிறது. தலைமை தாங்குவோர் இதை உணர வேண்டும். வலிமைக்கு பதில் மென்மை – கோபத்திற்கு பதில் அன்பு – பகைமைக்கு பதில் உறவு – அதிகாரத்திற்கு பதில் எளிமை என்பதை உணர வேண்டும்.
03. நாம்தான் குழந்தைகளை உருவாக்குகிறோம் அவர்கள் நமது உடமைகளல்ல. நாம் மற்றொரு மனிதப் பிறவியை திருமணம் செய்கிறோம் அதுவும் நமது உடமையல்ல. எதுவுமே வாங்குவதும் விற்பதும் போன்ற உடமைப் பொருட்களல்ல. அனைத்து ஜீவராசிகளும் தனித்தன்மையும் சுதந்திரமும் கொண்ட மனித ஆத்மாக்களே.
04. வாக்களித்தால் நன்மை கிடைக்குமென்று பலர் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஓட ஆரம்பித்தார்கள். இப்படியாக வாக்களித்தால் நன்மை கிடைக்குமென பல நூற்றாண்டுகளாக மக்கள் ஓடுகிறார்கள். ஓட்டங்கள் தொடர்கின்றன, நன்மைகள் மட்டும் கிடைக்கவில்லை.
05. எதையும் வீணாக்காதீர்கள், மற்றவர்களையும் வீணாக்காதீர்கள். அதிக ஆசைப்பட்டு அநாவசியமான பொருட்களை வாங்காதீர்கள்.
06. தனித்து நில், உன் சுதந்திரத்தை பறி கொடுக்காதே ! ஊர் உலகம் சொல்கிறதே என்று எண்ணி அதை நம்பி ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. அறிவு.. சுதந்திரத்துடன் பிரபஞ்சத்தை ஆராய்ந்துபார் .. எந்தக் கொள்கைக்கும் உன்னை விற்றுவிடாதே.
07. ஒரு பக்கம் சாய்ந்து நிற்பது தனிமனித வாழ்வையும், சமுதாய அமைப்பையும் சீர் குலைக்கிறது. வித்தியாசமான கருத்துகளால்தான் உலகம் முன்னேறுகிறது. வித்தியாசமாக சிந்திப்போர் காதில்தான் வருங்காலத்தின் குரல் ஒலிக்கிறது.
08. இயற்கையை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முதலில் வீட்டில் மனைவியை மதியுங்கள், கணவனை மதியுங்கள். குழந்தைகளை மதியுங்கள், பெற்றோரை மதியுங்கள். ஒவ்வொன்றும் ஓர் ஆத்மா. இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொருவரும் ஒரு பணியை செய்ய வந்துள்ளவையே.
09. இன்றைய சமுதாயத்தில் புற்றுநோய், எயிட்ஸ், மாரடைப்பு போன்ற நோய்கள் அதிகமாகின்றன என்றால் மனிதன் தன் சூழ்நிலையிலோ உணவிலோ தன் எண்ணங்களிலோ இயற்கை விதியை மீறுகிறான் என்பதுதான் அர்த்தமாகும்.
10. அது செய்யாதே, இது செய்யாதே என்று தடைகளை சொல்லி ஓயாது குழந்தைகளைக் கண்டித்துக் கொண்டிருந்தோமேயானால் ஒரு கட்டத்தில் குழந்தைகள் எல்லாவற்றுக்குமே தடை வருகிறதென முடங்கிவிடும்.
11. அரசாங்கம் என்பது தேவையான இடைஞ்சல் என்றார் தத்துவஞானி ஒருவர். ஆகவேதான் மக்கள் வாழ்வில் எதற்கெடுத்தாலும் அரசு குறுக்கிடக்கூடாது.
12. தண்ணீர் பலவீனமானதுதான், ஆனால் அதுவே பாறைக்குள் நுழைந்து, பனியாக உருகி அதை இரண்டாகப் பிளந்துவிடுகிறது. ஆகவேதான் எவரையும் பலவீனமானவராகக் கருதக்கூடாது.
13. வெப்பம் வந்தால் ஆவியாகி, குளிர் வந்தால் பனியாகி தண்ணீர் எப்படி மாற்றத்தை உணர்ந்து வாழ்கிறதோ அதபோல காலத்தையும் சூழலையும் உணர்ந்து வாழ வேண்டும்.
14. தடைகளை தண்ணீர் உடைப்பதில்லை கரைக்கிறது. அதுபோலத்தான் தடைகளை குறை கூறாமல் தண்ணீர்போல கரைப்பதே அவசியமாகும்.
15. போரில் வெற்றி என்பதை வன்முறை மூலம்தான் பெற வேண்டுமென நினைனக்கக் கூடாது. போர் என்பது நிரந்தரப் பகையையும், உயிர் நஷ்டத்தையும் இரு தரப்பிற்குமே ஏற்படுத்தும். வன்முறைப் போர்கள் உண்மையில் பயனற்ற செயல் என்பதற்கு உலகில் பல உதாரணங்கள் உண்டு.
16. பிரச்சனை வரும்போது அந்தப் பிரச்சனையில் மூழ்கிவிடக் கூடாது. பிரச்சனை ஏன் ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது, இதன் விளைவுகள் என்ன ? இது தேவையா ? என்று பிரச்சனைக்கு வெளியே நின்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
17. போட்டி ஆணவத்தை வளர்க்கிறது, ஆணவம் சுயநலத்தையும், பொறாமையையும், வஞ்சகத்தையும் வன்முறையையும் வளர்க்கிறது.
18. குழந்தையை வளர்க்க எத்தனையோ தியாகங்களை செய்கிறாள் தாய். அவள் எதை எதிர்பார்த்து செய்கிறாள் எதையும் எதிர்பார்க்கவில்லை. தன்னலமில்லாது வாழும் உள்ளத்தை இறைவன் ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை மூலம் கொடுக்கிறாள்.
19. இன்னொருவரின் குழந்தை வீணாகிவிடக் கூடாது என்பதற்காக கல்வி கற்பிக்கும் போதுதான் ஆசிரியன் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் இடம் பிடிக்கிறான். ஆடைகட்டி ஆசிரியராக வலம் வருவது தமக்கு புகழ் தருமென்று எண்ணி ஆசிரியராக வலம்வருவோர் இந்த வரிசையில் இருப்பதில்லை.
20. குழந்தைகளைக் கௌரவம் கொடுத்து வளருங்கள். அப்போது, அவர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பெரிய மனிதர் போல உயர் குணங்களுடன் நடந்து கொள்கிறார்கள்.
21. மக்களின் சுய கௌரவத்தை இழக்கச் செய்யும் காரியங்களை ஒரு தலைவன் செய்யக்கூடாது. மக்களையும் உலகையும் பாதுகாக்கும் பொறுப்பை பெற்ற தலைவர்கள் மக்களை இழிவுபடுத்தினால் அதே அவலத்தை அவர்களும் அடைய நேரிடும் என்பதால், தலைவர்கள் இதைச் செய்தல் கூடாது.
22. நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்மை நாமே கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படிக் கண்காணிப்பது சுலபமல்ல, ஏனெனில் தவறைக்கூட நம் மனம் நியாயப்படுத்தி, தவறான பாதையில் நம்மை இழுத்துச் சென்றுவிடும்.
23. புளிய மரத்தை வெகு எளிதில் புயல்கூட சாய்த்துவிட முடியாது. காரணம், அதன் வேர் ஆழமாகப் பூமிக்கு உள்ளே போயிருக்கிறது. அதுபோல படிக்கும்போது ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொண்டால் அந்தக் கல்வி நம்முடன் வந்துவிடும். உங்களின் உள்ளே இருப்பது நன்றாக இருந்தால் புளிய மரம்போல எதுவும் அசைக்க முடியாது.
24. இவ்வுலகையே நமக்கு அறிமுகப்படுத்துவது, நம்மை வளர்ப்பது எல்லாமே நம் மனம்தான். எனவே நம் மனதை நாம் கேட்கலாம், கேட்பதன் மூலம் கேள்வியின் பதிலை அறியலாம்.
25. எவ்வளவுக்கு எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு எளிமையோடு வாழும்போதுதான் நாம் மன நிறைவுடன் வாழ முடியும். காந்தி, காமராஜர், லால்பகதூர் சாஸ்த்திரி போன்றவர்கள் எளிமையின் வடிவமாகவே இருந்தார்கள்.
26. வாழ்வின் முக்கியமான உண்மைகள் இரண்டு. முதலாவது திறந்த மனது இரண்டாவது தவறை திருத்திக் கொள்ளுதல். இந்த இரண்டையும் இயக்குவதே மனப்பக்குவமாகும்.
27. தீப்பற்றும்போது அதன் மீது மேலும் தணலைக் கொட்டினால் என்னவாகும், தீ குறையுமா ? இல்லை நீரைக் கொட்ட வேண்டும். அதுபோலத்தான் பகை மீது அன்பை சொரிய வேண்டும்.
28. இந்தப் பகை எண்ணம்தான் நம்மை அழிக்கிறது. பகை என்று போனால் நாம் ஒன்று செய்ய, பதிலுக்கு அவன் ஒன்று செய்ய இந்த நச்சு வட்டம் தலைமுறை தலைமுறையாக தொடரும்.
29. காரியங்கள் தாமாக நிகழ்வதில்லை, முன் கூட்டியே நாம் திட்டமிட வேண்டும். முதலில் மனக்கண்ணால் பார்க்க வேண்டும். பின் தாளில் எழுத வேண்டும். அப்போதுதான் செய்ய வேண்டிய காரியங்கள் தென்படும்… தெளிவுபடும்.
30. வெற்றி கைக்குள் வந்துவிட்டது என்று எண்ணும்போதே அது உன்னை விட்டுப் போய்விடும் நீ அதைக் கண்காணிக்காவிட்டால்.
போல் யூலியஸ் வான் ராய்டர்
நீங்கள் படிக்கும் செய்திகளை ராய்டர் செய்திகள் என்று பல ஊடகங்களில் படிப்பீர்கள். இதுதான் இன்று உலகில் மிகப்பெரிய செய்தி நிறுவனம். உலகில் 100ற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செய்திகளை அனுப்புவது இந்தத் தாபனம்தான். இலண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த ராய்டர் செய்தித் தாபனத்தை உருவாக்கியவர்தான் போல் யூலியஸ் வான் ராய்டர். இவர் மேற்கு ஜேர்மனியில் கெஸ்லே என்ற இடத்தில் பிறந்தவராகும். 1849 ம் ஆண்டு தான் இருந்த வீட்டிலிருந்து ஒரு செய்தி ஏஜென்சியை நடாத்தி ஜனநாயகம் குறித்த செய்திகளை வெளியிட்டார்.
அரசுக்கு விரோதமாக செயற்படுவதாகக் கூறி நாடு கடத்தப்பட்டார். பின் 1851 ல் இலண்டன் வந்து அங்கிருந்து தந்தி மூலம் செய்திகளை அனுப்பி வந்தார். தந்தியோடு தந்தியாக வளர்ந்து, செய்திகளை விற்பனை செய்து பெரும் பகழடைந்தார். தந்தி செயற்படாத நாடுகளுக்கு புறாக்கள் மூலமாக செய்திகளை அனுப்பி வைத்தார். இவரிடம் 40 புறாக்கள் இருந்தன செய்திகளை அனுப்புவதற்கு. கடலுக்கு அடியால் கேபிள்கள் அமைக்கப்பட்ட பின்னர் சகல கண்டங்களுக்கும் செய்திகளை இலகுவாக அனுப்பினார்.
இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையை இந்தியாவில் இருக்கும் கவர்னர் ஜெனரலுக்கு அன்று மாலையே தந்தி மூலம் அனுப்பியது ராய்டர் நிறுவனம். 1865 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் இலிங்கன் சுடப்பட்டபோது அதை முதலில் உலகிற்கு அறிவித்தது ராய்டர் செய்தி சேவைதான். மிகப்பெரும் மூலதனத்துடன் இயங்கிய ராய்டர் செய்தியின் நிர்வாக இயக்குநராக 1878ல் பதவியேற்றார். 1881 ம் மாசி 25 மரணித்தார்.
உன்னுடைய சேவையை உனது இனமும், உனது நாடும் மதிக்கவில்லையே என்று கவலைப்படாதே. உலகில் எங்கோ ஒரு இடத்தில் உனக்கான மதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள் என்பது இவரது வாழ்க்கைத் தத்துவமாகும். உங்கள் வெற்றிக்கு சாத்தியமான களத்தை தேடுங்கள் அதற்கு ராய்டரின் வாழ்க்கையை ஒரு தடவை பாருங்கள்.
No comments:
Post a Comment